Headlines News :
முகப்பு » » இது பகைமறப்புக் காலம் - மல்லியப்பு சந்தி திலகர்

இது பகைமறப்புக் காலம் - மல்லியப்பு சந்தி திலகர்

 (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 14)

முள்ளுத்தேங்காய் தொடர் எழுதத் தொடங்கப்பட்டதன் பின்னணி குறித்து மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட சமூகம் அந்த தொழில்சார் நிரந்தரத்தன்மை பேணப்படாமலேயே சிதைவுக்குள்ளாகி வந்துள்ளனர், வருகின்றனர் என்கின்ற வரலாற்றை நினைவில்கொண்டு மாற்றுப்பொருளதார உத்திகளை வடிவமைத்து எஞ்சியிருக்கும் சமூகத்தின் இருப்பபைத்தானும் உறுதிப்படுத்திக்கொள்வது நமது அடுத்த அரசியல் இலக்காகக் கொள்ளப்படல் வேண்டும்.

களுத்துறை வாழ் மலையக மக்களில் ஆரம்பிக்கப்பட்டு வௌ;வேறு பிரதேசங்களில் வாழும் மக்களின் ஜீவனோபாயம் பற்றி மேலோட்டமான பார்வையாக மாறி வந்த நிலையில் களுத்துறையே இன்னும் முழுமையாக விரிவாக பேசப்படவில்லை என்பது எனது ஆதங்கம். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை 'கள்ளு' அந்த மாவட்டத்தில் வாழும்  தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. அந்த கள்ளு உற்பத்தி அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டாலும் தென்னை மரங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்தியாகும் அளவு கள்ளு என்பதை விட வேறு ஒரு வகை மதுசாரத்தை உற்பத்தி செய்யும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்ஷ்மன் விஜயமான்ன, அஜித் பெரேரா போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.

கலால் அதிகாரிகள் இதுதொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலால் திணைக்களத்துடனான குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நானும் சம்பந்தப்படுகின்ற  உயர்மட்ட கலந்துரையாடல். இதன் தொடர்ச்சிதன்மையை நான் அவதானித்து வரலாம். ஆனால், பிரச்சினை களுத்துறை மாவட்டத்தில் இந்த கள்ளுக்கு பழகிப்போயிருக்கும் நமது மக்களிடத்தில் அதனைத் தடுக்கும் நோக்கிலான பிரசார இயக்கத்தை யார் முன்னெடுப்பதுதான். என்னைத் தொடர்பு கொண்ட ஒரு சிலரும் 'அறநெறி பள்ளிக்கும்' கோவிலுக்கும் உதவி கேட்டே வந்தார்கள். இவை தேவையானதுதான். ஆனால், இன்று எரிந்துகொண்டிருக்கும் இனவழிப்பு மதுவிநியோகம் பற்றிய உடனடி சமூக இயக்கத்தின் தேவை பற்றிய கரிசனை களுத்துறை இளைஞர்கள், யுவதிகள் முன்வருதல் வேண்டும்.

மொனராகலை மாவட்டம் இன்னும் பல இன்னல்களை சந்தித்து வருவது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். களுத்துறை போல் அல்லாது மொனராகலையில் தமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு மாற்றுப்பரிகாரம் தேடும் இளைஞர் கூட்டம் அங்கே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் அங்கு திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியதும் நமக்கு முன் உள்ள சவால். இவ்வாறு கோகலை, குருநாகல் மாவட்டம் பற்றிய பார்வைகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அங்கே சமூக இயக்கங்களின் தேவையையே இங்கே வலியுறுத்திச் செல்கின்றேன். அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத அல்லது குறைவாக உள்ள மாவட்டங்களில் வாழும் மலையக மக்களில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்கு சமூக இயக்கங்களின் அவசியம் அதிகமாக வேண்டப்படுகின்றது. அது மதம் சார், அறநெறி பள்ளிசார் 'சமூகசேவைகளுக்கு' அப்பால் சிந்திக்கப்பட வேண்டியது.

இந்த கட்டத்தில் எதிர்பாராத திருப்பங்களுடன் பேசப்பட்ட விடயமாக மாறியது வன்னிவாழ் மலையகத் தமிழர்கள் பற்றியது. இந்த தொடரின் பெரும்பகுதி வன்னி வாழ் மலையகத் தமிழ் மக்களின் நிலைமைகள் பற்றி பேச நேரந்தது. அதே சமகாலத்தில் வடக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் ஒரு சமூக இயக்கமாக தமது பிரச்சினைகளை முன்வைக்கத்தொடங்கியது. இப்போது கரைச்சி பிரதேச செயலகம் வெளியிட்ட கரை எழில் சஞ்சிகையில் தமிழ்க்கவி எழுதிய கட்டுரை என்னும் பல எழுச்சிகளை உருவாக்கியிருக்கின்றது.

கடந்தவாரம் இந்தத் தொடர் கூட அதனையே மையப்படுத்தி எழுதப்பட்டது. சமகாலத்தில் தமிழ்க்கவியுடன் தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புகொள்ள முடிந்தது. அவரதும், கரைச்சி பிரதேச செயலகத்தினதும் வருத்தம் கோரும் கடிதங்கள், கட்டுரையை திரும்பப்பெறும் கடிதங்கள் வெளியாகியுள்ளன. அந்த கட்டுரைத் தொடர்பில் முகநூலிலும் அதற்கு வெளியிலும் பல்வேறு குரல்கள் வன்னி வாழ் மலையக மக்கள் தொடர்பில் எழுந்திருக்கின்ற நிலையில் இப்போது எழுந்திருக்கக்கூடிய அந்த கதையாடல் தமிழ்க்கவிக்கோ அல்லது கரைச்சி பிரதேச செயலகத்துக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக எழுந்து ஓய்ந்துவிடாமல் அது வன்னிவாழ் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறையாக மாற்றப்பட வேண்டியது நமது கடமையாகிறது. அதனை மேற்கொள்ள வேண்டியவர்களும் வன்னி வாழ் மலையகத் தமிழ் மக்களே.

தமிழக்கவி மூத்த போராளி. என்ற வகையில் அவர் வாழ்ந்த சூழல் மலையக மக்களுடன் ஆனது என்ற வகையில் பின்வருமாறு தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

ஃஃ பின்நாளில் பெரியாருடைய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு எனது தந்தையும் சாதி மதங்களைக் கடந்ததுமல்லாமல் என்னையும் அதேவழிக்குள் செல்ல வைத்தார். காந்தீயத்துடன பல குடியேற்றக்கிராமங்களில் வேலை செய்திருக்கிறேன். இந்த மக்கள் குடியேற்றத்தின் ஊடாகவும் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டனர் குடியுரிமையற்ற தம்மால் படித்து வேலைக்கு அதாவது அரசாங்க வேலைக்குப் போகவோ ஒரு வாகனத்தையோ நிலத்தையோ வாங்க முடியாதென்பதில் அவர்கள் வேதனைப்பட்டனர் பல குடும்பங்கள் பிரஜா உரிமைக்கு மனுச் செய்தன. பல குடும்பங்கள் பலவந்தமாக பிடித்து ஏற்றப்பட்டன. இதையெல்லாம் பார்த்து வளர்ந்தவள் என்பது மட்டுமல்ல எனது இருபத்தாறாவது வயதிலிருந்து சமூக சேவை செய்தும் வருகிறேன்.

கிளிநொச்சியின் இண்டு இடுக்கு சந்து பொந்தெங்கும் மலையக மக்களுடன் பழகியிருக்கிறேன். அவர்களுக்காக தலைவர்வரை சென்று வாதாடியிருக்கிறேன். நான் கொடுத்த தகவல்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன.; தகப்பன் பெயரில்லாத குழந்ததைகள் என்பதையும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் பொதுமைப்படுத்தி எழுதிவிட்டேன் எனகின்றனர் சிலர் 'இவர்களின் பெண்கள்' எனக்குறிப்பிட்டதால் நான் அதற்கு வெளியே நிற்கிறேன் என்பதே வாதம். அது சரியானதுதான்.

இந்த பொதுமைப்படுத்தல் மலையக மக்களுக்கே உள்ள பிரச்சினை. மலையக சமூகத்தின் பலம் பலவீனம் இரண்டுமே அது ஒரு 'கூட்டு சமூகம்' எனபதுதான். கூட்டாக அழைத்துவரப்பட்டு, கூட்டாக தங்க வைக்கப்பட்டு, கூட்டாக வேலைக்கு அமர்த்தி, கூட்டாக பிரச்சினையை எதிர்கொண்டு, கூட்டாகப் போராடி, கூட்டாக அடைவுகளைக் கண்டு, கூட்டாக அவமானம் சுமந்து என எல்லாமே கூட்டாகத்தான். இந்த கூட்டுக்கு வர்க்க அடையாளம், சாதி அடையாளம், அடிமை அடையாளம் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக ஒரு பொதுப்படைத்தன்மைக்கொண்டதாக இருக்கும். அதற்கு கரணங்களைப் பார்த்தால் அவர்கள் அழைத்துவரப்பட்ட முறையும், அமர்த்தப்பட்ட முறையும் நடாத்தப்பட்ட முறையும் என கண்டறியலாம்.

உதாரணமாக கொழும்பில் வீட்டு வேலைகளுக்கு பெண்களைத் தேடுவோர் இலகுவாக 'தோட்டப்பகுதிகளை' இலக்கு வைத்துத் தேடுவதும் எவ்வித கூச்சமும் இன்றி மலையகத்தவர் யாராயினும் (என்னிடமும்) கூட 'வீட்டுவேலைக்கு ஒரு ஆள் பார்த்துத் தர முடியுமா? என கேட்கும் நிலை எங்கிருந்து உருவாகிறது. நாம் தொழில் ரீதியாக நிரந்தரமற்றவர்கள். நமக்கென்று நிரந்தரமான இடமோ தொழிலோ இன்னும் அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் வெளிப்பாடே இது. இந்தக் 'கொழும்புக்கு வீட்டு வேலைக்குப்போகும்' கலாசரம் குறித்தே நாம் பல்வேறு விளைவுகளைச் சந்தித்து வந்துள்ளோம். சுமதி, ஜீவராணி போன்ற சகோதரிகளின் இறப்புகள் இலகுவாக மறக்கப்படக்கூடியதல்ல. இதனை நோக்கியெல்லாம் சமூக இயக்கங்கள் சிந்திக்கவும் செயற்படவும் தேவையிருக்கிறது.

வன்னி மலையக மக்கள் தொடர்பில் தமிழ்க்கவியின் பதில் கடிதத்துடன் அதனை நிறைவுறுத்தி புதியவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்ற மன நிலையில் இருந்து பணியாற்றும் பொறுப்பு நமக்கு முன்னால் இருக்கிறது. ஏற்கனவே இளைய எழுத்தாளரான சயந்தனின் 'ஆதிரை' பற்றி பேசியிருந்தோம். இப்போது எழுதிக்கொண்டும் செயற்பட்டுக்கொண்டும் இருக்கும் கிரிசாந் போன்ற இளை எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள். கிரிசாந்த் தனது முகநூலில் (ஏப்பிரல் 13) இவ்வாறு குறிப்பிடுகிறார் :

மலையகத்தமிழரும் ஈழத்தமிழரும்
தமிழக்கவியைக் கண்டிப்பது இருக்கட்டும், போன வருடம் என்று நினைக்கிறேன். 'சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்' என்ற புத்தக வெளியீடு, வெளியீட்டு நாளன்று யாழ். பல்கலைக்கழத்தில் வெளியிட தடை போடப்பட்டது. பின்னர் மறைக்கல்வி நிலையத்தில் வெளியிடப்பட்டது. நான்கு பேர் கத்திவிட்டு ஒன்றும் செய்ய முடியாமல் விட்டுவிட்டோம். யாருக்கும் அக்கறையில்லை.

மலையக மக்களை விடுவோம், இன்று வடக்கில் உள்ள மலையக மலையகத் தமிழர்களின்  விகிதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு என்ன உரித்து இருக்கிறது இந்த நிலத்தின்மேல். உதாரணத்திற்கு கிளிநொச்சியில் 45 சதவீதமான மக்கள் மலையகத் தமிழர்கள். ஆனால், அவர்களுக்கோ குளங்களில் உரித்தில்லை. கோயில்களில் உரித்தில்லை, அவர்களாகவே இன்று உருவாக்கியிருக்கும் சமூக அந்தஸ்தை விட தமிழ் மக்கள் என்று சொல்லப்படும் வடக்கை பூர்விகமாகக்கொண்ட மக்கள் அந்த மக்களை நவீன தீண்டாமையுடன் அணுகிறார்கள் என்பதே உண்மை.

'பன்னாங்கமம்' மக்கள் கொஞ்ச நாளைக்கு  முதல் காணி உரித்துக்கேட்டு வீதியிறங்கிப்போராடினர். மிகச்சிலரைத் தவிர நான் உட்பட யாரும் அங்கே அந்த மக்களிடம் செல்லவில்லை. அவர்களின் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த அந்த வாக்கியத்தை இப்பொழுது நினைவுபடுத்த விரும்புகிறேன். 'மலையகத் தமிழர்கள் என்பதால்தான் எங்கள் பிரச்சினை கவனிக்கப்படவில்லை என்று. இதற்கு என்ன சொல்லப்போகிறோம். எங்களின் அடியாழத்தில் அவர்களை எங்களுடைய மக்களாகக் கருதவில்லையா? குறைந்த பட்சம் சக மனிதனாகக் கூட அவர்களை நாம் கருதவில்லை என்பதன் வெளிப்பாடு தானே அந்த வாக்கியம்.

இனியாவது அந்த மக்களின் பிரச்சினைகளை முன்னுக்கு கொண்டு வந்து வடக்கில் வாழும் அவர்களின் உரிமைகளின் பொருட்டுப் பேசத்தொடங்குவோம்.

உண்மையில் கிரிசாந் போன்ற இளம் எழுத்தாளர்கள் செயற்பாட்டாளர்களின் இந்த முன்வைப்புகள் இறுகப்பற்றப்படல்வேண்டும். கிழக்கைத் தளமாகக் கொண்டு சமூக அரசியல் ஆய்வாளராகவும் செயற்பாட்டாளராகவும் இயங்கிக்கொண்டிருக்கும் தோழர் சிராஜ் மஷ்ஷுர் அண்மையில் வெளியிட்டிருக்கும் ஒரு நூலின் தலைப்பு இந்த சந்தரப்பத்தில் மிகப்பொருத்தமாக அமைகிறது.

 இலங்கை: இது பகைமறப்புக் காலம்.


 நன்றி - சூரியகாந்தி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates