1970இல் பதவியிலமர்ந்த சிறிமா அரசாங்கம் வரலாற்றில் மோசமாக மக்கள் அதிருப்தியை சம்பாதித்த ஒரு அரசாங்கம். வெறுமனே பொருளாதாரக் கொள்கையால் மாத்திரமல்ல. அது மேற்கொண்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் நீண்ட பட்டியலிடலாம்.
கூட்டரசாங்கத்தின் மிகவும் முக்கியமான சாதனைகளில் ஒன்று 1972ல் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியதேயாகும். இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் பிரித்தானிய முடியின் கீழேயே இலங்கை ஆட்சி செய்யப்பட்டது. இந்த அரசியலமைப்பின் மூலம் பிரித்தானிய முடியிடம் இருந்து விடுபட்டு இலங்கை இறைமையுள்ள சுதந்திர ஜனநாயக குடியரசாக ஆனது. ஆனால் மே 22 ஆம் திகதியை குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்ற போதும் தமிழர்கள் அதனை பொருட்டாக மதிப்பதில்லை என்பதுடன் அந்த நாள் ஒரு கரி நாளாகவே கொள்கின்றனர்.
இந்த அரசியல் அமைப்புச் சட்டம், பெளத்த மதத்தை அரச மதமாகவும் சிங்களத்தை தனி அரச மொழியாகவும் ஆக்கியது. முன்னைய யூ.என்.பி. அரசாங்க காலத்தில் 1965ல் தமிழ் மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்தும் விதத்தில் இயற்றப்பட்ட தமிழ் சிறப்பு விதிகளைக் செல்லுபடியற்றதாக்கியது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதனை சாட்டாக வைத்து தமது ஐந்தாண்டுப் பதவியை மேலதிகமாக இரண்டு ஆண்டுகளைச் சேர்த்து 7 ஆண்டுகள் ஆட்சிபுரியும் வகையில் சட்ட ஏற்பாடுகளை கொண்டு வந்தது சிறிமா அரசாங்கம். செல்வாக்கு குன்றிக்கொன்று போன நிலையில் இந்த குறுக்கு வழியில் தான் தனது ஆட்சியை மக்கள் தீர்ப்புக்கு எதிராக நீடித்துக்கொண்டது. ஆனால் வரலாற்றில் அந்த அணுகுமுறை அத்தோடு நிற்கவுமில்லை. ஜே.ஆர் இதிலிருந்து கற்றுக்கொண்டு தனது ஆட்சியில் இதுபோன்றே அராஜக வழியில் ஆட்சியை நீடித்தார்.
பீலிக்ஸ் டயஸ் எனும் சாத்தான்
நீதிமன்ற அமைச்சராக நியமிக்கப்பட்ட பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க சிறிமாவின் மருமகன் மட்டுமல்ல. நம்பிக்கைக்குப் பாத்திரமான உதவியாளராகவும் சிறிமாவின் பின்புல மூளையாகவும் செயல்பட்டார் பீலிக்ஸ். மேலும் பல அமைச்சுக்களை தன் வசம் வைத்திருந்தவர். ஜே.ஆர் பதவிக்கு வந்ததும் சிறிமாவினதும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவினதும் குடியியல் உரிமையையும் சேர்த்துத் தான் பறித்தார்.
அதிகாரத்துவத்தின் அவசியத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியவரும் கூட. வெசாக் தினத்தின் போது சகல அரச நிறுவனங்களும் பௌத்த கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பினார். இது பௌத்தரல்லாத சமூகத்தினரின் மீதும் திணிக்கப்படும் மதத்திணிப்பு என்று குற்றம் சாட்டியது. அதன் பின்னர் “அது கட்டாயமில்லை” என்று பீலிக்ஸ் கருத்து வெளியிட வேண்டிய ஏற்பட்டது. 1972 யாப்பில் ஒற்றையாட்சி அரசாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார் பீலிக்ஸ். அமைச்சரவை துணைக்குழுவில் அதனை முன்வைத்தபோது கொல்வின் ஆர் டீ சில்வா “அதற்கு அவசியமில்லை” என்று கடந்து விட்டார். ஆனால் அந்த சொற்தொடரை இறுதிநாளில் அந்த நகலில் இடம்பெற வைத்தார் பீலிக்ஸ்.
ஏற்கெனவே 1961இல் தமிழ் மொழி விசேட சட்டம் பற்றிய விடயத்திலும் சிறிமாவை சிங்கள இனவாத போக்கை நோக்கி வழிநடத்தியவர் அவர். இடதுசாரிக் கூட்டரசாங்கத்திலிருந்து இடதுசாரிகளை தனியாக பிளவுபடுத்தி அதிருப்தியாளர்களாக ஆக்கி ஓரங்கட்டியதும் அவர் தான். 1976 இல் என். எம்.பெரேராவை நிதியமைச்சு பதவிலிருந்து விலக்கியபோது அமெரிக்காவில் இருந்த பீலிக்ஸ் அங்கிருந்தபடியே அந்த நிதியமைச்சு பதவியை ஏற்று அமெரிக்காவிலிருந்தே சத்தியப்பிரமானமும் எடுத்துக் கொண்டார். இடதுசாரிகளை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியதில் அமெரிக்காவின் சதியும் கலந்திருக்கிறது என்று இன்று நம்பப்படுகிறது.
1972 யாப்பின் கீழ் பதவியேற்பு சத்தியப்பிரமாணம் - சிறிமா |
70ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கும் 13 எண்ணுக்கும் உள்ள உறவு பற்றி சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. 1970-1977 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 13 தேர்தல்கள் இடம்பெற்றன. அவற்றில் சுதந்திரக் கட்சி இரண்டு தேர்தல்களில் மாத்திரமே வென்றது.
1972 ஏப்ரலில், நீதிமன்ற அமைச்சர் பீலிக்ஸ், ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிரான நீதி நடவடிக்கைகள் எடுப்பதற்காக குற்றவியல் நீதி ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்குடன் குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த வழக்கில் விஜேவீரவை அசுப இலக்கமாக கருதப்படும் 13 ஆவது சந்தேக நபராக ஆக்கியது பீலிக்ஸ் தான்.
முன்னாள் யாழ் அரச அதிபரும், சிரேஷ்ட சிவில் சேவையாளருமான வீ.பீ.விட்டச்சி எழுதிய “இலங்கை: தவறிழைத்தது எங்கே?” என்கிற நூலில் குறிப்பிடுகையில் “சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து இழைத்த கெடுதல்களை விட தனி ஒருவராக கட்சியை நாசப்படுத்தியவர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க” என்கிறார். 1977 தேர்தலில் சுதந்திரக் கட்சி தோல்வியுற காரணமாக இருந்த சாத்தான் என்று அவரை அழைப்பார்கள்.
அப்பேர்ப்பட்ட பீலிக்ஸுக்கும் இந்த ஆட்சி காலப்பகுதியில் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு மிகவும் தொடர்பிருந்தது. 1972 அரசியலமைப்பை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தவரும் அவர் தான்.
பறிக்கப்பட்ட உரிமைகள்.
இந்த அரசியமைப்புக்கு தமிழர் தரப்பில் இருந்து நெருக்கடி தரக்கூடிய ஒரு வழக்கை சி.சுந்தரலிங்கம் மட்டுமே தொடுத்திருந்தார். அதற்கான தீர்ப்பை வழங்கிய ஜே.அலஸ், ஜே.சில்வா ஆகியோர் 1972க்கு முன்னர் சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது அதிகாரப் பரவலாக்கம் அல்லது அலகுகள் கொடுக்கக் கூடிய தகுதி அல்லது வலிமை இருந்தது என்றும் கூறியிருந்தனர்.
இந்த அரசியலமைப்பைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தமது எதிர்காலம் பற்றிய சோகத்துடன் ஆத்திரமாக கொந்தளித்துக்கொண்டிருந்தார்கள். இந்த அரசில் இனிமேல் வாழ முடியாது தனி நாடே ஒரு தீர்வு என இளைஞர்களும் தங்களுக்குல் சபதமெடுத்துக் கொண்டார்கள்.
சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட வேளை இனி இலங்கையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை எவரும் பெறப்போவதில்லை என்று சோல்பரி கருதியிருந்தார். அதையெல்லாம் பொய்க்கச் செய்தது இலங்கையின் இனவாத அரசியல் கள நிலைமை.
பேரினவாதிகளுக்கு உரத்தையும், உற்சாகத்தையும் ஊட்டிய தேர்தல் வெற்றி பேரினவாதத்தின் கூட்டுச் சிந்தனையை வலிமைப்படுத்தியது. அவர்களின் அபிலாசைகளுக்கு சட்ட வடிவத்தையும், நடைமுறை வடிவத்தையும் முழுமையாக்க காலம் கனிந்தது.
சோல்பரி அரசியல் யாப்பில் வழங்கியிருந்த குறைந்தபட்ச ஏற்பாடுகளையும் நீக்கி பேரினவாத அரசைப் பலப்படுத்துவது அவர்களின் இலக்காக இருந்தது. சோல்பரி அரசியல் யாப்பில் பெயரளிவிலேனும் இருந்த சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பேணும் உத்தரவாதங்களை நீக்கினார்கள்.
• 29 (2) பிரிவு
• செனற்சபை
• நியமன உறுப்பினர் முறை
• கோமறைக் கழகம்
• அரசாங்க நீதிச் சேவை ஆணைக்குழு
ஆகியவை பெயரளவுக்காவது சிறுபான்மையினரை பாதுகாக்கும் ஏற்பாடுகளாக இருந்தன. உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவற்றின் அடிப்படியிலேயே சட்ட ரீதியில் எதிர்கொள்ள வாய்ப்பு கிட்டியிருந்தன. இவை அனைத்தும் புதிய யாப்பில் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாக எந்த மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.
அரச மதம் பௌத்தம்
இந்த அரசியலமைப்பின் மூலம் முதன் முதலாக பௌத்த மதம் அரச மதமாக முதல் தடவை ஆக்கப்பட்டது. 6ஆம் பிரிவு பௌத்த மதத்தைப் பற்றி இப்படி கூறுகிறது.
“இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மைதானம் வழங்குதல் வேண்டும். ஏனைய மதங்களின் உருமைகளுக்கு உத்தரவாதமளிக்கின்ற அதே வேளை பௌத்த மதத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாதல் வேண்டும்.”
பல்லின, பல்மத நாட்டில் தனியொரு மதத்தை அரச மதமாக பிரகடனம் செய்தது மட்டுமன்றி ஏனைய மதங்களுக்கு அதன் மத உரிமைகளோடு மாத்திரம் மட்டுப்படுத்துகின்ற சதியை கச்சிதமாக முடித்தது இந்த யாப்பு.
சிங்கள மொழி
சிங்கள மொழிக்கு அதுவரை சட்ட ரீதியில் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவரை சிங்கள மொழி சட்டம் சாதாரண பெரும்பான்மையுடன் மாற்றும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் 9, 10, 11 ஆகிய சரத்துக்களின் மூலம் சிங்கள மொழிக்கு அரசியமைப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டதன் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்றி அந்த சிங்கள மொழி ஏற்பாட்டை மாற்றும் வாய்ப்பை இழந்தனர் தமிழர்கள். இதன் விளைவாக வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழ் மொழியில் தமது கருமங்களை ஆற்றும் உரிமைகளை இழந்தனர். அரச சேவைகள் நடைமுறையில் சிங்களமயப்பட இந்த யாப்பு முழு வாய்ப்புகளையும் கொடுத்தது.
சிங்கள மொழியில் உருவாக்கப்பட்டvatrai மட்டுமே சட்டமாக கொள்ளுதல் வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் இருந்தால் கூட சிங்களத்தில் உள்ள சட்டங்களே மேலானதாக கருதப்படும் என்றும் ஏற்பாடானது. தமிழ் மொழிக்கு வெறும் மொழிபெயர்ப்பு அந்தஸ்து மாத்திரமே வழங்கப்பட்டதால் சட்டபினக்குகளின் போது மொழிபெயர்க்கப்பட்ட சட்டங்கள் வலு குறைந்ததாகவே கருதப்பட்டது.
நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள், கட்டளைகள், சட்ட நிர்வாகச் செயல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருத்தல் வேண்டும் என்றும் ஏற்பாடானது. வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழில் நடாத்த முடியாத நிலை உருவானது. வடக்கு கிழக்கில் சில பிரதேசங்களில் மட்டும் விதிவிலக்கு இருந்தது.
சிங்கள – பௌத்தம்
சிங்கள மொழி ஏற்பாட்டின் மூலம் பன்மொழித் தன்மையை நிராகரித்தும், பௌத்த மதம் அரச மதம் என்பதன் மூலம் பன்மதத் தன்மையையு நிராகரித்ததன் மூலம் இந்த யாப்பு இலங்கை குடியரசை ஒரு “சிங்கள – பௌத்த” நாடாக பிரகடனப் படுத்தியது என்றே கூற வேண்டும்.
அரசாங்க சேவை, நீதிச்சேவை என்பனவற்றில் நியமனம், இடமாற்றம்,பதவி உயர்வு, பதவி நீக்கம் என்பவற்றை மேற்கொள்ளும் போது இன மத மொழி பாரபட்சம் காட்டுவதை தடுக்கு வகையில் அரசாங்க சேவை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, என்பன சோல்பரி யாப்பில் உருவாக்கபட்டிருந்தன. 1972 யாப்பில் அவற்றை மேற்கொள்ளும் பணிகளை அமைச்சரவைக்கு வழங்கியது. அந்த ஆணைக்குழுக்கள் வெறும் ஆலோசனை சபைகளாக மாற்றப்பட்டன. அரசியல் வாதிகளிடம் ஒப்படக்கப்பட்ட இந்த பணிகளால் என்ன நியாயம் கிடைத்திருக்கும்.
பல வருடங்களின் பின்னர் யுத்தமும் தொடங்கிவிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் கொல்வின் ஆர்.டீ.சில்வா “29(2)க்கு மாற்று ஏற்பாடு 1972 யாப்பில் இடம்பெறாத போதும் அந்த யாப்பில் கொண்டுவரப்பட்ட அடிப்படை உரிமை ஏற்பாடு மேலும் பாதுகாப்பை வழங்கக்கூடியது” என்றார். (1986 நவம்பரில் கார்ல் மாக்ஸ் நினைவு கூட்டமொன்றில் விரிவுரையாற்றிய போது) இந்த கருத்து எத்தனை அபத்தமான கருத்து என்பது அந்த அரசியலமைப்பு நடைமுறையிலிருந்த ஐந்தே ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த தமிழர்களுக்கு எதிரான அநீதிகளே சாட்சி.
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் இங்கு நினைவுகூர வேண்டும்
அடங்காத் தமிழனின் சாதிமத வெறி
29வது சரத்து தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் நுழைவதை அனுமதிக்குதாம். அதனால் அந்த சட்டத்தையே எடுத்து விடும் படி “அடங்காத் தமிழன்” சுந்தரலிங்கம் செய்த முயற்சிகள் பற்றி கொல்வின் இப்படி கூறுகிறார்.
'கீழ்சாதியினர் கோவிலுக்குள் வருவதை தடுங்கள் என்கிற முறைப்படுடன் சி.சுந்தரலிங்கம் உயர் நீதிமன்றத்துக்கு வருவார். எப்போதும் எனது மதிப்பிற்குரிய ஆசானாக இருந்தவர் அவர். ஒரு இந்துவாக எனது உரிமைகளின் மீது தலையிடுகிறீர்கள். எனவே 29வது சரத்தை எடுத்து விடுங்கள் என்றார் சுந்தரலிங்கம்.. அவர் அப்படிக் கூறியதை மறந்து விடக்கூடாது. "
1972 அரசியலமைப்பின் சிருஷ்டியான அவர்; அந்த யாப்பு சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பறிக்கவில்லை என்று நியாயப்படுத்தும் வகையில் ஒரு விரிவுரையை ஆற்றிய போது கூறியவை. 20.11.1986 அன்று மார்கா நிறுவனத்தில் ஆற்றிய விரிவுரையிலேயே அதனைத் தெரிவித்திருந்தார். அவரது அந்த உரை பின்னர் நூலாகவும் வெளியானது. (Safeguards for the Minorities in the 1972 Constitution - COLVIN R. de SILVA - A Young Socialist Publication).
அடிப்படை உரிமைகள் ஏற்பாடு
‘அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்” புதிதாக சேர்க்கப்பட்டதாக கொல்வின் மேற்படி கூறிய போதும் அது இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமே மட்டுபடுத்தப்பட்டிருந்தது. இதனால் நாடற்றவர்களாக இருந்த இலட்சக்கணக்கான இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்த அடிப்படை உரிமையை பெறுவதை தடுத்தது இந்த ஏற்பாடு.
இந்த அடிப்படை உரிமைகள் அவசரகால சட்டம் அமுலில் இருந்த காலங்களில் மட்டுப்படுத்தப்படலாம் என்று வரையறுத்தது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த அரசியலமைப்பு அமுலில் இருந்த ஐந்தாண்டுகளிலும் அவசரகால அமுலில் இருந்தது. சிறிமாவின் ஆட்சியில் “அடிப்படை உரிமைகள்” ஏற்பாட்டுக்கு எந்த வேலையும் எஞ்சியிருக்கவில்லை. குறிப்பாக இந்த காலப்பகுதியில் தமிழர்கள் மீதான அநீதிகளுக்கு சட்ட அங்கீகாரம் அந்த ஆட்சிக்கு கைகூடியது.
அரச வேலைவாய்ப்பில் ஏற்பட்ட இனப் பாரபட்சம், பல்கலைக்கழக தரப்படுத்தல், கைது, தடுத்து வைத்தல், கருத்துச் சுதந்திர மீறல் என்பவற்றை மேற்கொள்ள எந்தவித சட்டத் தடையும் இருக்கவில்லை.
அரசியலமைப்பு விடயத்தில் ஆய்வுகள் பலவற்றை செய்த சோதிலிங்கம் இப்படி கூறுகிறார்.
“பேரினவாதம் தமது அபிலாசைகளை அடைவதற்கான அரசியல் வியூகங்களை அரசியலமைப்பு ரீதியில் இப்படித் தான் மேற்கொள்கிறது.
அது ஏற்படுத்திய வழியில் தீர்ப்பது, அல்லது ஒட்டைகளினூடாக அடைவது, அதுவும் சரிவராது போது அரசியலமைப்பை மீறுவது, சிறுபான்மை தரப்பில் எடுக்கப்படும் வழிகளை அரச இயந்திரத்தின் மூலம் தடுத்து நிறுத்துவது.”
தமிழர்களின் எதிர்கால இருப்பை முற்றிலும் அழித்தொழிக்கவல்ல இந்த அரசியல் அமைப்பு வெளியிடுமுன்னரே அதனை எதிர்ப்பதற்காக செல்வநாயகம் அவர்களின் அழைப்பின் பேரில் தமிழ் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்ககள், மாணவர் இயக்கங்கள், கட்சிசாராத அமைப்புகள் என அனைவரும் திருகோணமலை நகர மண்டபத்தில் 14.05.1972 கூடினர். தமது வேற்றுமை மறந்து “தமிழர் கூட்டணி” என்கிற அமைப்பை உருவாக்கினர். செல்வநாயகம் அதன் தலைவராக தெரிவானார். கவிஞர் காசி ஆனந்தன், எஸ்.ஞானமூர்த்தி ஆகியோர் இணைச் செயலாளர்களாக தெரிவானார்கள்.
தமிழர் கூட்டணி சார்பில் அரசியலமைப்பை எதிர்த்து நிற்கும் வேலைத்திட்டம் தொடங்கியது. அரசியல் நிர்ணய சபையை 19 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பேர் பகிஷ்கரித்தனர். அந்த பகிஷ்கரிப்பதால் மட்டும் பலனில்லை என்கிற முடிவுக்கும் வந்தனர். 25.06.1972 அன்று கோப்பையில் கூடிய தமிழர் கூட்டணி நடவடிக்கைக் குழு நிலைமையை ஆராய்ந்து அரசாங்கத்துக்கு இறுதியாக 6 அம்சக் கோரிக்கையை விடுத்து மூன்று மாத கால அவகாசம் கொடுக்கலாம் என்று தீர்மானித்தனர். (பார்க்க இறுதியில் இணைக்கப்பட்டுள்ள பெட்டிச் செய்தி)
தமிழ் மக்களின் இந்த குறைந்த பட்ச கோரிக்கைக்கு அரசு இனங்காவிட்டால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் இனத்தின் விடுதலையைக் காணச் சாத்வீக போராட்டத்தில் இறங்குவது என்றும் தீர்மானித்தனர்.
இந்த கோரிக்கைகளை பிரதமருக்கு செல்வநாயகத்தால் அனுப்பி வைக்கப்பட்டபோதும் அதற்கு பதிலளிக்கவில்லை. அக்கடிதம் பற்றி ஒரு நினைவூட்டல் கடிதத்தை மீண்டும் அனுப்பியபோது. “உங்கள் தீமானம் கிடைத்தது” என்கிற பதில் மட்டுமே கிடைத்தது. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
துரோகங்கள் தொடரும்...
நன்றி - தினக்குரல்ஆறு அம்சக் கோரிக்கையும் மூன்று மாத அவகாசமும்
25.06.19721. அரசியல் அமைப்பில் சிங்கள மொழிக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதே இடம் தமிழ் மொழிக்கும் அளிக்கப்பட வேண்டும்.
2. இலங்கை மதச் சார்பற்ற அரசாகப் பிரகடனம் செய்யப்பட்டு எல்லா மதங்களையும் சமமாக பேணி வளர்க்க வேண்டும்.
3. இந் நாட்டைத் தம் தாயகமாகக் கருதும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் பூரண குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டங்கள் – அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டும்.
4. நீதிமன்றம் மூலம் நிலை நாட்டப்படக் கூடிய அடிப்படை உரிமைகள் அரசியல் அமைப்பில் அளிக்கப்பட வேண்டும்.
5. சாதியும் பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பதையும் அரசியல் சட்ட மூலம் ஒழிக்க வேண்டும்.
6. அதிகாரம் பரவலாக்கப்பத்ட், மக்கள் பங்கு கொள்ளும் சனநாயக ஆட்சி அமைப்பு ஏற்பட வேண்டும்.
1972 அரசியலமைப்பு - இலங்கை by SarawananNadarasa on Scribd
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...