99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 11
தமிழரசுக் கட்சி 1968 நவம்பர் மாதம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. இந்த நிலைப்பாட்டை எடுக்கும் தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் உடுவில் மாநாடு நிறைவேற்றியிருந்தது.
1969 ஏப்ரல் 7-9 வரை உடுவிலில் தமிழரசுக் கட்சியின் 11 வது மாநில மாநாடு நடந்தது. இந்த இந்த மாநாட்டுக்கு முன்னரே கட்சியின் வாலிபர் முன்னணியினர் யாழ்ப்பாணத்தில் அவசரமாகக் கூடி தீர்மானங்களை நிறைவேற்றினர்.
- அடுத்த வருடாந்த மாநாட்டில் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைப்பது.
- தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அமுல்செய்யும்படி கோருவது
உடுவில் மாநாட்டில் தனி நாடு கோரும் பிரேரணையை பிரேரிக்க இளைஞர்கள் எடுத்த முயற்சியை செல்வநாயகம் தடுத்து நிறுத்தினார். ஆனால் மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய இரண்டு தீர்மானங்கள்
- அரசாங்கத்திலிருந்து விலகி தனிக் குழுவாக செயல்படுவது.
- உரிமைப் போராட்டத்துக்கு தயாராகும் படி தமிழ் மக்களை கோருவது.
எதிர்க்கட்சி வரிசையில் தமிழரசுக் கட்சி அமர்ந்தபோதும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளித்தது. எதிர்க்கட்சியானது ஆளுங்கட்சியை விட ஆபத்தானது என்கிற புரிதலின் விளைவே அது. எதிர்க்கட்சி இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலமடைந்தால் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் அதை விட ஆபத்தில் போய் முடியலாம் என்பதற்கான சூழ்நிலையே அன்று நிலவியது. 1947 இலிருந்து ஆட்சியமைத்த எந்த ஒரு சிங்கள அரசாங்கமும் அதுவரை தனது பூரண ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. 1965 அரசாங்கமே தனது 5 ஆண்டு கால ஆட்சியை பூரணப்படுத்தியது. அது தமிழரசுக் கட்சியின் ஒத்தாசையால் தான்.
சிங்கள பௌத்த பாடசாலைகள்
யாழ்ப்பாணத்தில் புத்தூர், அச்சுவேலி, அல்வாய், கரவெட்டி போன்ற பகுதிகளில் இயங்கி வந்த பௌத்த பாடசாலைகளை பௌத்த சிங்கள பாடசாலைகளாக கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டன. அரசாங்கத்தின் கல்விக் கொள்கையை அதுவரை ஆட்சியில் பங்காளியாக இருந்த தமிழரசுக் கட்சி கட்டுபடுத்தி வந்தது. அரசாங்கத்திலிருந்து விலகியதும் உடனடியாகவே சிங்களமயப்படுத்தும் பணிகள் தடையின்றி ஆரம்பமானது.
ஏற்கெனவே “உயர்சாதி தமிழர்களால்” கல்வியுரிமை மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழ்ந்த அந்த பகுதிகளில் பௌத்த பாடசாலைகள் அச்சமூகத்தினருக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. கோவிலுக்கு நுழையக் கூட அனுமதி மறுக்கப்பட்ட அந்த மக்களுக்கு பௌத்த மதத்தை தழுவும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அரசாங்கம் அந்த பாடசாலைகளை சிங்கள பாடசாலைகளாக உத்தியோகபூர்வமாக ஆக்கியது. தமிழ்ப் பிள்ளைகளின் போதனா மொழியை சிங்களமாக மாற்றும் திட்டம் அங்கு நிறைவேறியது. அவை சிங்கள பௌத்த பாடசாலைகளாக அழைக்கப்பட்டாலும் தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்புக்கு அஞ்சி தமிழே அங்கு போதனா மொழியாக பின்னர் தொடர்ந்தது.
சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஜூன் 5ஆம் திகதியன்று தமிழ் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும். தமிழ் மொழி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தை அமுல் செய்யப்படும்வரை அந்த இயக்கம் இயங்கும் என்றும் அறிவித்தது தமிழரசுக் கட்சி. இதனை முறியடிப்பதற்காக கல்வி அமைச்சர் ஈரியகொல்ல ஜூன் 1ஆம் திகதி அப்பாடசாலைகளை கையேற்கும் வைபவத்துக்கு செல்லப்போவதாக அறிவித்தார். அதனை எதிர்ப்பதற்கான தயாரிப்புகளை வாலிபர் முன்னணி தயாராகிய அதேவேளை அரசாங்கமும் அதனை எதிர்கொள்ள படையினரை தயார் செய்தது. இந்த கெடுபிடி நிலையை சரி செய்வதற்காக செல்வநாயகம் , நாகநாதன், அமிர்தலிங்கம், துரைரத்தினம், கதிரவேலுப்பிள்ளை, திருச்செல்வம் ஆகியோர் பிரதம மந்திரி டட்லியை சந்தித்தனர். அப்பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பதை தாம் எதிர்க்கவில்லை என்றும் போதனா மொழியாக சிங்களமாக மாற்றுவதையே தாம் எதிர்ப்பதாகவும் அறிவித்தார்கள். இதன் விளைவாக மே 23 அன்று போதனா மொழி சிங்களமாக மாற்றப்படாது என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.
இந்த தோல்வியை ஒப்புக்கொள்ள இயலாத அமைச்சர் ஈரியகொல்ல அம்மக்களிடம் இருந்து மனுவொன்றை தயார் செய்து சிங்களப் பாடசாலைகளாக ஆக்கும்படி அம்மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அரசாங்கத்தின் முடிவை மாற்றும்படியும் பிரதமரை நிர்பந்தித்தபோதும் டட்லி அதற்கு இணங்க மறுத்துவிட்டார்.
டட்லி ஆட்சியின் முதல் நான்கு வருடங்களில் பல்வேறு உடன்பாடுகள் ஏமாற்றத்துக்கு உள்ளான போதும் திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளை தணிக்க முடிந்தது. சில உரிமைகளை சட்டபூர்வமாக நிலை நாட்ட முடிந்தது. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்த அமுல் சட்டம், அடையாள அட்டை மசோதா போன்றவற்றில் ஆட்சேபனைக்கு உரிய அம்சங்களை நீக்க முடிந்தது. அரசாங்க ஊழியர்களின் பிரச்சினை, தமிழ் மொழி உபயோகம் போன்றவற்றையும் ஓரளவு தீர்க்க முடிந்தது.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் |
1970 தேர்தல்
25.03.1970 ஆட்சி காலம் முடிவடைந்த நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஏப்ரல் 23 அன்று வேட்புமனு தாக்கல் பெறப்பட்டது. மே 27 அன்று தேர்தல் நடந்தது.
அதேவேளை ஆட்சிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் 1970 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் எப்பேர்பட்ட இனப்பாகுபாட்டைக் காட்டியது என்பது பற்றியும் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி மீறியது என்பது குறித்தும் குறைகளை வெளியிட்டது தமிழரசுக் கட்சி. தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டை துண்டாடுவதை தவிர்க்கும் வகையில் சமஷ்டி ஆட்சிமுறையை வலியுறுத்தியது. இலங்கைத் துண்டாடும் எந்த இயக்கத்துக்கும் ஆதரவளிக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
1960 யூலை, 1965 ஆகிய தேர்தல்களில் ஈழக்கோரிக்கையின் அடிப்படையில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுந்தரலிங்கம் 1970 இலும் ஈழக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்டார். 1958 தமிழ் ஈழம் கோரி பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை பிரேரணை செய்தவர் சுந்தரலிங்கம்.
இந்தத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சசமாசக் கட்சி ஆகியன இணைந்த ஐக்கிய முன்னணியானது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குதல், பௌத்தத்துக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற விடயங்களையும் தமது விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தன.
அத் தேர்தலில் ஐக்கிய முன்னணி 116 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களையே பெற்றது. தமிழரசுக் கட்சி 13ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றது. சுதந்திரத்தின் பின்னர் முதலாவது தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த முதல் தடவை இதுவாக இருந்தது. சிறிமா பண்டாரநாயக்க பிரதமராக தெரிவானார்.
அதுபோல இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தரப்பு தோற்கடிக்கப்பட்டவர்கள் மீது வன்முறையை என்றுமில்லாதவாறு பிரயோகித்தது. மோசமான வன்முறைக்கு உள்ளான இடம் கொழும்பு லேக் ஹவுஸ். அங்கு நுழைந்த வெற்றி பெற்ற தரப்பின் காடையர் கூட்டம் ஊர்வலமாகச் சென்று பலரைத் தாக்கிவிட்டு அங்கிருந்த நூலகத்தை எரித்தனர்.
ஜே.வி.பி கிளர்ச்சின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் |
1971 “சேகுவேரா” கிளர்ச்சி
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் இலங்கை பாரிய இளைஞர் கிளர்ச்சியை முகம் கொடுத்தது. 60 களின் நடுப்பகுதியில் இருந்து ஆயுத ரீதியில் இரகசியமாக தயாராகிய ஜே.வி.பி இந்த கிளர்ச்சியை நடத்தியது. ஒரே இரவில் ஆட்சியை கைப்பற்றுவது என்கிற திட்டம் மோசமாக தோல்விகண்டது. இலங்கையின் பிரதான இடதுசாரிக் கட்சிகளின் தலைமையிலான அரசாங்கம் இந்த இடதுசாரிக் கிளர்ச்சியை ஆயிரக்க்கணக்கான இளைஞர்களை கொன்றொழித்துத் தான் அதனை அடக்கியது. போதாதற்கு இந்தியாவுடன் தொடர்புகொண்டு அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் உதவியையும் பெற்றுக்கொண்டனர்.
சீனாவின் சதியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி இது என்கிற பிரசாரமும் இந்தியாவிடம் எடுபட்டது. ஏற்கனவே இந்தியாவின் தலைப்பகுதில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சீனா இப்போது காலடியிலும் சீண்ட இடமளிக்கக் கூடாது என்கிற வேகத்துடன் சிறிமாவின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமளவு இந்தியப் படையினரை அனுப்பி கிளர்ச்சியாளர்களை நசுக்கியது. பிடிபட்ட ஜே.வி.பி இளைஞர்களை இந்திய இராணுவம் எப்படி ஒடுக்கியது என்பது பற்றி பல சிங்கள நூல்களில் விலாவாரியாக வெளியாகி இருக்கிறது.
எப்படி இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ் கட்சிகளின் போதாமையை எதிர்த்து வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆயுத ரீதியில் இளைஞர்கள் தம்மை தயார் படுத்தி வந்தார்களோ அது போல இடதுசாரிக் கட்சிகளின் போதாமையை கண்டித்தபடி இரகசியமாக ஆயுத ரீதியில் தயாரான இயக்கம் தான் ஜே.வி.பி. 60களில் இடதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளிலும், நடைமுறைகளிலும், திசைவழிகளிலும் ஏற்பட்ட பாரிய மாற்றம் வெறுமனே இனத்துவ அரசியலில் மாத்திரமல்ல வர்க்க அரசியலிலும் பிரதிபலித்தது என்பது உண்மையே. அதன்வழி வந்த ஜேவிபி; இனத்துவ அரசியலில் அந்த இடதுசாரிக் கட்சிகளின் வழிமுறை நீட்சியாக வந்தடைந்தது. இந்தக் கிளர்ச்சிக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வந்த வேளை உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட ஐந்து வகுப்புகளில் ஒன்று “இந்திய விஸ்தரிப்பு வாதம்” என்கிற பெயரில் மலையகத் தமிழர்களுக்கு எதிரான இனத்துவேச வழிகாட்டல் கவனிக்கத்தக்கது.
அதைவிட படித்த இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினை, சாதியப் பிரச்சினை, நகரத்துக்கும் கிராமங்களுக்கும் இடையில் இருந்த பாரபட்சப் பிரச்சினைகள் போன்ற காரணிகள் இளைஞர்களின் விரக்திக்கு காரணமாக இருந்தன. கிளர்ச்சியை அடக்குவதிலும் கூட எப்படி சாதியம் இயங்கியது என்பது குறித்து விலாவாரியாக விக்டர் ஐவன் எழுதிய சில நூல்களில் விபரிக்கப்பட்டுள்ளன. “லங்காவ கலவா கேனீம” (இலங்கையை மீட்பது) என்கிற அவரது நூலில் “கேகாலை மாவட்டத்தில் சில கிராமங்களில் “பத்கம” சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் இல்லாமலாக்கப்பட்டார்கள்” என்கிறார்.
சிறிமா, கொல்வின் ஆர் டி சில்வா, ஜே.ஆர். போன்றோர் அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் |
அரசியல் நிர்ணய சபை
பெரும்பான்மை பலத்தைப் பெற்ற ஐக்கிய முன்னணி எதேச்சதிகார போக்கில் இயங்கியது. ஆங்கிலேயரால் ஆக்கப்பட்ட அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்றது.புதிய அரசியலைமைப்பை உருவாக்குவதற்காக நாட்டின் அரசியற் சட்டங்களுக்கு முரணாக பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் முடிவை எடுத்தது. “மக்கள் கட்டளையே தமக்கு இதற்கான அதிகாரம்” என்றது. அரசியலமைப்பை மாற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்றன ஏனைய அரசியல் கட்சிகள்.
கொல்வின் ஆர்.டீ.செயல்வா நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் பணி அவரிடம் கையளிக்கப்பட்டது.
யூலை 19 அன்று பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஒன்று கூடி தங்களை அரசியல் நிர்ணய சபையாக்கிக் கொண்டனர். அதற்கான பிரேரணையை பிரதமர் முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில்..
“ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்புதிய அரசியல் சட்டம் நாட்டின் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும். எம்மிடையே சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள். பறங்கியர் என்கிற இனக் குழுமங்கள் இருக்கின்ற போதும் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பல மதக் குழுக்கள் இருக்கின்ற போதும் நாங்கள் ஒரே நாட்டினராக இருக்க வேண்டும்.” என்றார்.தமிழரசுக் கட்சியின் சார்பில் அங்கு உரையாற்றிய கதிர்வேலுப்பிள்ளை “தமிழரசுக் கட்சி பிரிவினையை எதிர்க்கிறது. சமஷ்டி முறையை அரசியல் நிர்ணய சபை ஏற்க வேண்டும் “ என்றார். தமிழ் காங்கிரஸ் சார்பில் பேசிய ஆனந்த சங்கரி “சோல்பரி அரசியல் யாப்பில் வழங்கப்பட்ட 29வது சரத்து கூட தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது” என்றார்.
“சமதர்ம சமஷ்டி குடியரசு”
கொல்வின் ஆர் டீ சில்வா திருச்செல்வத்தைச் சந்தித்து தமிழ் மக்களுக்கு பல சலுகைகைகளை அளிக்கத் தான் திட்டமிட்டிருப்பதாக கூறினார். அது பற்றி ஆராய்வதற்காக தந்தை செல்வா தலைமையில் யூலை 17 கூட்டம் கூடியது. சோல்பரி அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான 29வது பிரிவை அகற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படலாம் என்பது குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இது ஒரு முக்கிய தருணமாகக் கருதிய தமிழரசுக் கட்சி அரசியல் நிர்ணய சபையில் கலந்து கொண்டது.
சமஸ்டிக் கோரிக்கைக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னிறுத்தி சமஷ்டி அடிப்படையிலான ஒரு யாப்பை உருவாக்குவதற்கான மாதிரி யாப்பை தயாரித்தது தமிழரசுக் கட்சி. அது ஒரு பூரண சோஷலிச சமூக பொருளாதாரக் கொள்கைகளையும், சாதி, மத வேற்றுமை கலைந்த ஐந்து மாநிலங்களைக் கொண்ட “சமஸ்டிக் குடியரசு” யாப்புத் திட்டம். “போர்த்துக்கேயருக்குப் போரிலே இழந்துவிட்ட இறைமை மிக்க சுதந்திரத்தை மீள அளிக்குமாறு கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு சட்ட பூர்வமான உரிமையுண்டு” என்று அந்த ஆவணத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. கூடவே இலங்கையில் வாழும் சிங்களவர்களுடனும் ஏனைய மக்களுடனும் முழுமையான சமத்துவ அடிப்படையில் ஒரு சமஸ்டிக் கூட்டரசின் கீழ் ஐக்கியப்படுவதே தமது கோரிக்கை என்று சுட்டிக்காட்டினர்.
அதனை தயாரித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம். இது அரசியல் நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆக “சமஷ்டி”, “சோசலிசம்” ஆகிய இரு பிரதான அம்சத்தையே அந்த யோசனை கொண்டிருந்தது. ஆனால் அதனைப் பற்றி ஆலோசிக்கக் கூட ஆயத்தமாக இருக்கவில்லை அச்சபை.
இந்த முக்கியமான தருணத்தில் தமிழ் கட்சிகள் தமது பேதங்களை மறந்து ஒன்றுபட்டு ஏகோபித்த கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் தமிழ் பெரியவர்கள் மத்தியில் இருந்து முன்வைக்கப்பட்டது. மாறுபட்டு நின்ற கட்சிகள் ஒன்று கூடினர். 07.02.1971 இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவர்கள் கூடி ஒன்பது கோரிக்கைகளை தயாரித்தனர். இந்தக் கோரிக்கையுடன் மார்ச் 6ஆம் தகதி பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவையும், நீதியமைச்சர் கொல்வின் ஆர்.டீ.சில்வாவையும் தந்தை செல்வா தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் மொழி உரிமை பற்றிய சில பகுதிகளையாவது நிறைவேற்றும்படி இறங்க வேண்டிவந்தது.
அடுத்த கட்ட சந்திப்பை பிறிதொரு தினத்தில் மேற்கொள்ள இருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்து ஒரு மாதத்துக்குள் ஜே.வி.பி. கிளர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்த சந்திப்பு கைகூடாமல் போய்விட்டது. பிரதமரின் ஆலோசனையின் படி ஏனைய அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மொழி உரிமை பற்றிய சிபாரிசுகளும் கூட அரசியல் நிர்ணய சபையால் நிராகரிக்கப்பட்டன. இதனால் அந்த அரசியல் நிர்ணய சபையிலிருந்து தமிழரசுக் கட்சி முழுமையாக வெளியேறியது.
துரோகங்கள் தொடரும்...
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...