நேற்று (03 - 04 - 2017) தோழர் அஜித் ரூபசிங்க காலமானார்.
தோழர் என். சண்முகதாசனுக்குப் பின்னர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஓ) பொதுச்செயலாளராக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தோழர் அஜித் ரூபசிங்கா செயற்பட்டு வந்தார்.
இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தவர். இறுதி யுத்தத்தில் நேர்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் குரலெழுப்பி வந்தவர்.
இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தவர். இறுதி யுத்தத்தில் நேர்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் குரலெழுப்பி வந்தவர்.
97ஆம் ஆண்டு சரிநிகருக்காக ஒரு நேர்காணலை மேற்கொள்வதற்காக நானும் தோழர் நிஷாந்த அல்விசும் அவரை சந்திக்க தேசிய சமாதானப் பேரவையின் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அவர் அதன் தேசிய அமைப்பாளராக இருந்தார். இலங்கையின் பெரிய அரச சார்பற்ற நிறுவனங்களில் அதுவும் ஒன்று. அதில் பணிபுரிவதையிட்டு அரசியல் ரீதியில் சற்று சங்கடமாகத்தான் இருப்பதாக எம்மிடம் அப்போது அவர் தெரிவித்தார்.
சக இடதுசாரி பார்வையுள்ள தோழர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அவர் மனம் விட்டு நெடு நேரம் எம்முடன் உரையாடியது மட்டுமன்றி கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்த தன்னுடன் ஒத்துழைக்குமாறு தெரிவித்தார். அந்த சந்திப்பின் பின்னர் மேலும் சில தோழர்களையும் அவர் எமக்கு அறிமுகப்படுத்தினார். நேபாள் கொம்யூனிஸ்ட் கட்சி பாணியில் இயங்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தார். அவர்களுடன் தனக்கு இருக்கும் தொடர்புகளையும் ஆவணங்கள் பலவற்றையும் கூட எம்முடன் பகிந்துகொண்டார்.
நாங்கள் உண்மையில் ஆர்வம் காட்டினோம். கட்சித் தோழர்களுடன்கொம்பனித் தெரு அருகில் தூசும் குப்பைகளுமாக இருந்த பாழடைந்த அலுவலகத்தை சுத்தம் செய்தோம். அங்கிருந்த சண்முகதாசன் எழுதிய நூல்களின் பல பிரதிகள் கரையான் உண்டு மீதி நூல்களில் உருப்படியானவற்றை நாங்களும் எடுத்துக் கொண்டு வந்தோம்.
முழு நேர மூத்த கட்சித் தோழர்கள் சிலருக்கு தேசிய சமாதானப் பேரவையிலேயே சில பணிகளுக்கு அமர்த்தி அவர்களுக்கான வாழ்க்கை செலவை சரி செய்து கொடுத்து வந்தார்.
தோழர் அஜித் இரகசிய செம்படை அமைக்கவேண்டும் என்பது போன்ற கருத்துக்களை எம்முடம் தீவிரமாக கூறி எம்மை உசுப்பேத்தி வந்தாலும் அவர் அடிமட்டத்தில் இறங்கி பணியாற்றுவதற்கு தயாராக இருக்கவில்லை. மூத்த தோழர்களும் கூட அந்த கருத்தை ஆமோதித்தார்கள். இளம் இரத்தம் கட்சிக்குள் வேண்டும் என்றார்கள். கட்சியை முழு அளவில் புனரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். அவர் மீது விமர்சனம் வைத்த ஒரு வயதான தோழர் அஜித் ரூபசிங்கவால் தாக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் என் வீடு தேடி வந்து அழுதார்.
தோழர் அஜித் கட்சியை தன் வசம் வைத்துக் கொண்டிருந்த போதும் அவர் ஒரு புரட்சிகர கட்சியொன்றை வழிநடத்தும் திராணியை இழந்திருந்தார் என்றே கூற வேண்டும். ‘என்ஜீஓ” வாழ்க்கை முறையும் அவரை நிறையவே சிதைத்திருந்ததாகவே எமக்கு தோன்றிற்று. ஆனாலும் அவரின் ஓர்மத்தின் மீதும், எம்மைப் போன்றோரை உசுப்பேத்தும் அவரின் போக்கும் எம்மை அவரில் ஆர்வம் கொள்ள வைத்திருந்தது.
கூட்டங்களிலும், எழுத்துக்களிலும் அவர் மிகவும் ஆரோக்கியமான அரசியல் கருத்துக்களையே வெளியிட்டு வந்தார். மிகச் சமீப காலம் வரை முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற கட்சிகளும் அவருடன் தோழமையைப் பேணி வந்தன.
தோழருக்கு எமது புரட்சிகர செவ் வணக்கங்கள்/
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...