1
ஈழத் தமிழர் நாம் உள் இன வாரியாக சாதி சமயம் கலாசாரம் பால் மற்றும் ஊர் பிரதேச ஏற்றத்தாழ்வுகளை அடிபடையாக்க் கொண்ட சமூகமாகும். அதனால் நம் சமூகம் பற்றிய ஆய்வுகளை / பதிவுகளை நீதியும் நடுநிலையுமாக மேற்கொள்ளுவது நமக்கு ஆறுமுக நாவலர் காலத்திருந்தே பெரும் சவாலாக இருந்துள்ளது. தமிழரிடையே எதிலும் நம்ம ஆக்கள் -பிறத்தியார் என பார்க்கிற பார்வை புலம் பெயர்ந்த நாடுகளுக்கும் பரவித் தொடர்கிறது.
முதன் முதலில் 2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் தோழியர் தமிழ்க் கவியை வன்னியில் சந்தித்தேன். அடிமட்ட மக்கள்மீது அக்கறையும் தோழமையும் உள்ளவர். தமிழ் கவியை நன்கு அறிந்தவன் என்கிற முறையில் நோக்கம்சார்ந்து அவர் மீது குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கிறேன். எனினும் அவரது கட்டுரையில் உள்ள இரண்டு முக்கிய தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சிறந்த தமிழ் எழுத்தாளரான தமிழ்க்கவியின் ஆய்வுக் கட்டுரையில் இரண்டு இடங்களில் சமூக கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிராகரிக்கவேண்டிய சொற் தவறுகளும் பொருள் தவறுளும் இடம்பெற்றுளது. இதனை தோழி தமிழ்கவி திருத்த வேண்டும்.
போரை எதிர்கொண்ட வன்னி வாழ் அனைத்து’ தமிழர் மத்தியிலும் அதிகரித்த விதவைகள், பெண் தலமைக் குடும்பக்கள், உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிக்கப் பட்டவர்கள் , கல்வியைத் தொடராமல் இடையில் நிறுத்தியவர்கள், வேலையற்றவர்கள், ஊட்டசத்துக் குறைபாட்டினால் பாதிக்கப் பட்டவர்கள், பால்வதைபட்டவர்கள், சிறு வயசில் கற்பமுற்றவர்கள் என போர் பாதிப்புக்குள்ளான பலர் உள்ளனர்.
வன்னிப் பிரதேசத்தைப் பொறுத்து போரினால் பாதிக்கப் பட்ட வன்னித் தமிழர்களதும், வன்னியில் குடிறிய யாழ்பாண வம்சாவழித் தமிழர்களதும், மலையக வம்சாவழித் தமிழரதும் குரலற்ற கீழ்வர்க்கப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களால் பிரச்சினைகளின் பாதிப்பிலிருந்து விடுபடுதல் இன்னும் முழுமையாகச் சாத்தியமாகவில்லை. கீழ்மட்ட வன்னிப் பெண்களை குறிப்பாக மலையக வம்சாவழி வன்னிப் பெண்களுக்கு அரசினதும் தொண்டு நிறுவனங்களதும் புலம்பெயர் அமைப்புகளதும் உதவியின்றி மீட்ச்சி அடைய அதிகம் வாய்ப்பில்லை.
.
தமிழ் கவி தனது கட்டுரையில் இதனைப் பற்றிப் பேசவே முனைந்திருக்கிறார் என தோன்றுகிறது. . ஆனால் அவரது பதிவு "இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர்” என்ற அபத்தமாக பதிவாகியுளது. ”இவர்களது பெண்கள்” என்னும்போதே அவர்கள் நாமல்ல என்கிற அன்னிய படுத்தல் தொனிக்கிறது. அன்னியப் படுத்தலின் உச்சமாக “இந்தப் பெண்கள் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என எல்லோரையும் உள்ளடக்கி பொத்தாம் பொதுவாக ’லேபிள்’ ஒட்டப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் தமிழ்க் கவியின் இயல்பல்ல. ஆனால் தமிழ்க்கவி மலையக வம்சாவழி ஈழத் தமிழ் பெண்களை (இவrகள் நமது பெண்களல்ல என்கிற தோரணையில்) இவர்களது பெண்கள் எனக் கீழ்படுத்துகிறார். தவறுகளின் ஊற்று இதுதான்.
தமிழ்க்கவியின் உறவுகள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களுட் சிலர் புலம் பெயர்ந்து சுமார் பத்து வருடம் கழிந்ததுமே வாழும் நாட்டி குடியுரிமை பெற்றவர்கள். பத்து பதினைந்து வருடங்களில் அவர்களுட் சிலர் இங்கிலாந்தின் பிரசைகளாகவும், கனடா பிரசைகளாகவும், ஜெர்மன் பிரசைகளாகவும் மேம்படுகிறதை தமிழ்க் கவியும் அறிவார். எறக்குறைய 40 வருடங்களுக்கு மேல் வன்னியில் வாந்த மலையக வம்சாவழி ஈழத் தமிழ்ப் பெண்களை “இவர்களது பெண்கள்” என அன்னியப்படுத்திக் குனிந்து பார்ப்பதே நிகழ்ந்த தப்புக்கு அடிப்படையான கோட்பாட்டு ரீதியான காரணமாகும்.
2
தமிழ் கவியின் கட்டுரையில் ஏற்பட்ட இரண்டாவது தவறு பின்வரும் பதிவாகும். "எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குடும்பங்களிலிருந்து போராடப் போனவர்களும் அதிகம். காரணம் தேசப்பற்றல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டது தான்”
மீண்டும் “எம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் குடும்பங்கள்” என்கிற பதிவிலும் தப்பான அன்னியப்படுத்தும் மேலோர் குரலே தூக்கலாகத் தொனிக்கிறது. மலையக வம்சாவழி வன்னிப் பெண்கள் பற்றிய தனித்தனியான கள ஆய்வுத் தரவுகளௌயும் தகவல்களையும் திரட்டாமல் ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகளையும் அறிக்கைகளையும் புள்ளிவிபரங்களையும் தொகுத்து ஆராயாமல் மலையக வம்சாவழி வன்னி இளையோரும் எங்கள் பிள்ளைகளே என்கிற நிலைபாடும் உணர்வும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக ”இவர்கள் போரில் சேர்ந்தமைக்குக் காரனம் தேசப்பற்றல்ல. அவர்களுக்கும் ஒரு அந்தஸ்து தேவைப்பட்டமையே என்கிறது உயர்ந்த பட்ச அபத்தமாகும்.
போரில் அங்கவீனர்களாக மலையக வம்சாவழி ஈழத் தமிழர்களை வன்னியில் சந்திதிருக்கிறேன். மாவீரர் துயிலும் இல்ல நடுகற்களில் ஈழத் தமிழர் மற்றும் முஸ்லிம் மாவீரர்களது பெயர்களோடு மலையக வம்சாவழி ஈழத் தமிழ் மாவீரர்களின் பெயர்களையும் வாசித்து அவர்கள் கல்லறைகளைத் தரிசித்து மரியாதை செய்திருக்கிறேன்.
எல்லா மக்களையும்போல மலையக வம்சாவழி ஈழத் தமிழர்களும் சமுகமாகவும் தனிமனிதராகவும் வாழ்கின்றனர். அவ்வண்னமே அரசியல் முடிவுகளையும் எடுக்கின்றனர். நான் யாழ்பாணம் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்தபோது எனது வணிக பேராசிரியரான மலையகத் தமிழர் மு.நித்தியானந்தன் தனது உயிர் பொருள் அந்தஸ்து எல்லாவற்றையும் பணயம் வைத்து போராட்டத்தில் இணைந்தார். மலையக தலைவரான அமரர் சந்திரசேகரன் ஒரு போராளிக்கு அடைக்கலம் கொடுத்ததால் தன் உயர் சமூக அந்தஸ்து அழியச் சிறை சென்றார். இப்படி ஆயிரம் உதாரணங்கள் சொல்ல்லாம். தமிழ் கவியின் தவறான கோட்பாட்டு அணுகுமுறை மண் விடுதலைக்காக அந்தஸ்தையும் உயிரையும் தியாகம் செய்த மலையகத் தமிழர்கள் முன் தோற்று நாணிப்போயுள்ளது.
தோழி தமிழ்க்கவியின் இயல்பு இதுவல்ல என முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். அவரது நாவல்களிலோ பதிவுகளிலோ இத்தகைய தவறுகளை நான் கண்டதில்லை. இலக்கியத் தமிழ் தமிழ்கவிக்கு கொடையாக்க் கைவந்த கலையாகும். ஆனால் சமூக ஆய்வுக் கட்டுரைகளின் தமிழ் தற்சார்பானதோ உணர்வு பூர்வமானதோ அல்ல. அது அறிவு பூர்வமானதாகும். இதற்கான இலக்கியங்களும் பயிற்ச்சியும் வாசிப்பும் துறை சார்ந்து வேறுபட்டதாகும்.
இதகைய ஆய்வுக் கட்டுரை எழுது முன்னம் தமிழ்க்கவி ஆய்வு முறை இயலையும் ஆய்வு கட்டுரையின் மொழியையும் வாசிப்பின்மூலமும் கற்றல் மூலமும் வளர்த்திருக்கலாம். நிறைய மலையகத் தமிழரது சமூக இயல்பற்றியும் போராட்ட தொடர்புகள் பற்றியும் முறைப்படி தேடி அறிந்திருக்கலாம்.
என் நீண்டகாலத் தோழியான தமிழ்க்கவி அவருக்கே உரிய துணிச்சலுடன் தன் தவறுக்கு விள்க்ம் சொல்லாமல் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி - வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூலில் இருந்து
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...