Headlines News :
முகப்பு » » சமூக- அரசியல்- பண்பாட்டு வெகுஜன அமைப்பு ஒன்றுக்கான கருத்தியல் தளம் பற்றிய நூல் - லெனின் மதிவானம்

சமூக- அரசியல்- பண்பாட்டு வெகுஜன அமைப்பு ஒன்றுக்கான கருத்தியல் தளம் பற்றிய நூல் - லெனின் மதிவானம்


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியை மார்க்சிய சிந்தனையின் பிரதான உருவாக்க காலக்கட்டமாகவும், தத்துவார்த்த தளத்தில் தன்னை நிலைநிறுத்தி ஸ்தாபன அமைப்புகளை தோற்றுவிக்கின்ற ஆரம்ப காலப்பகுதியாகவும் கருதலாம். முதலாளித்துவதின் விடியல் பொழுதில் அதன் சுரண்டலையும், அது உபரி மதிப்பை எப்படி அபகரிக்கின்றது என்பது குறித்தும் மார்க்ஸ் ஆழமான விரிவான ஆய்வொன்றினை முன்வைத்திருந்தார். புதிய தாராளமய உலகமய உற்பத்தி முறை இன்று சர்வ தேசமயமாக்கப்பட்ட சூழலில் உலகமயம் பற்றிய ஒரு விரிவான, முழுமையான ஆய்வொன்று  தேவைப்படுகின்றது. இந்நிலையில் தமிழர் பண்பாட்டுச் சூழலில் மார்க்சிய பிரயோகம் குறித்து  நோக்குகின்ற போது மார்க்சியத்தை நமது சூழலுக்கு ஏற்றவகையில் மறுவார்ப்புச் செய்வதற்கான  முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும் பெரும்பாலான அம்சங்கள் பிற நாடுகளின் புரட்சி அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை இறக்குமதி செய்வதாகவே அமைந்திருந்தன. இவ்வம்சம் ஒரு வெகுஜன சக்தியை கட்டியெழுப்புவதற்கு பதிலாக வெறும் கோசங்களின் அடிப்படையிலான போராட்டங்களுக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் எமது பண்பாட்டு சூழலை கவனத்தில் கொள்ளாது- எமக்கு பொருத்தமான பாதையை உணராது உலக புரட்சி அனுபவங்களிலிருந்து சில வற்றை நகnலுடுத்து ஒன்றாக ஒட்டுவதன் மூலமாக எமக்கான விடுதலை மார்க்கத்தை எட்ட முடியாது என்பதை எமது இதுவரை கால அனுபவங்கள் புதிய படிப்பினையாக அமைந்திருக்கின்றன. தமிழர் வாழ்வில் மார்க்சியர் ஏற்படுத்திய இடைவெளி பாரதூரமான தாக்கங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. மார்க்சியர்களிடம் இந்த பலவீனம் காணப்பட்டது என்பதற்காக அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள் புறக்கணித்தக்கவையல்ல எனபதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

இன்றைய நாளில், நமது சமூக -அரசியல் -பண்பாட்டு சூழலில் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் ஊடுவல் என்றும் இல்லாதவாறு நமது ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கவும், வளர்ச்சிப் போக்கை முடக்கவும் முனைந்து வருகின்றன. நமது பண்பாட்டு தளத்தில் ஒரு ஏகாதிபத்திய கலாசாரத்தை - புதிய தாராளமய கலாசாரத்தை புகுத்தவும் அவை முனைந்து வருகின்றன. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் திசையை திருப்பும் வகையில் இன, மத, சாதி, மொழி கூர்மையடைய செய்திருக்கின்றன. எனவே அபாயம் எங்கிருந்து வருகின்றது என்பது பற்றிய தெளிவை முற்போக்காளர்களும் மார்க்சியர்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இன்று நமது பண்பாட்டுச் சூழலில் முனைப்படைந்திருக்கின்ற அம்பேத்கரியம், பெரியாரியம் இன்னும் இது போன்ற தத்துவக் கோட்பாடுகள் யாவும் அதன் மக்கள் சார்பான பண்புகளை பின்தள்ளி சமூகமாற்ற போராட்டங்களை சிதைக்கின்ற வகையிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மார்சியம் காலவாதியாகிவிட்டது என்றும் அவ்விடத்தை பெயாரியம், அம்பேத்கரியம் முதலிய கோட்பாடுகளே ஈடு செய்கின்றன எனும் கோசம் இன்று தமிழியல் சூழலில் முனைப்படைந்து வருவதனை காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறானதோர் சூழலில் மீண்டும் ஒரு புனரமைப்புக்கான தருனம் குறித்து கலாநிதி ந. இரவீந்திரன் எழுதிய 'சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் புதிய பண்பாட்டு தளம் என்ற அமைப்பின் வெளியீடாகும்.

புதிய பண்பாட்டுத்தளம் என்ற அமைப்பு பரந்துபட்ட மக்களை ஒன்றிணைத்து அதிகாரத்திற்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக போராட கூடிய வெளிகளை உருவாக்குவது - வெகுசன சக்திகளை கட்டியெழுப்புவது என்ற உயரிய நோக்கோடு தோற்றம் கொண்ட ஒன்றாகும். வெறுமனே புரட்சியின் புனிதம் என்ற போக்கில் எல்லாவற்றையும் உதிரித்தனமாக செயற்படாமல் சிந்தித்து, திட்டமிட்டு ஒற்றுமையாக செயற்படுதலே காலத்தின் தேவையாக உள்ளது. அந்தவகையில், இன்றைய நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொண்டு ஜீவித பிரச்சனைகளுக்கு வழிகாட்டவேண்டிய வெகுசன சமூக அரசியல் ஸ்தாபனங்களின் வரலாற்று தேவையே இவ்வமைப்பையும் தோற்றுவித்தது எனக் கொள்ளலாம். எமது முக்கிய பணிகளில் ஒன்றாக நூல் வெளியீடு இவ்வமைப்பின் பணிகளில் ஒன்று. ந. இரவீந்திரனின் இரட்டைத் தேசியமும் பண்பாட்டு புரட்சியும், மா.பாலசிங்கத்தின் மா.பா.சி.கேட்டவை: தினக்குரல் பதிவுகள் என்ற நூல் வரிசையில் மூன்றாவது வெளியீடாக வந்துள்ள நூல் 'சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்".

இரசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சி(1917) மனித சமூகங்களின் வளர்ச்சியோடு ஒன்றிணையும் சமூக சிந்தனையின் உயரிய வடிவமாக இருந்துள்ளதை வரலாறு எண்பித்திருந்தது. அவ்வாறே எமது பண்பாட்டு சூழலுக்கான இதுவரை இருந்து வந்துள்ள சிந்தனைகளின் பின்னணியில், நமது யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற அக்டோபர் 21(1966) எழுச்சியின் நீடிப்பாக தீண்டாமை வெகுசன இயக்க போராட்டம் அமைந்திருந்தது. இரசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டில் காலடி வைத்துள்ள நாம் இலங்கையின் வட பகுதியில் இடம்பெற்ற அக்டோபர் 21- தீண்டாமை ஒழிப்பு வெகுசன போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டுகளிலும் காலடி வைத்துள்ளோம். இந்த சூழலில் கடந்தகால அனுபவங்களை பிரதானமாக கொண்டு நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய வரலாற்று கடமை நம் முன் உள்ளது.

இந்நிலையில், நம்மால் மாறுபட்ட உலகை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்ற சக்திகள் தமக்கு முந்திய வரலாற்றுக் கட்டத்தை விஞ்ஞான பூர்வமாகவும் மனித நலனுக்கான தார்மீக கண்ணோட்டத்துடனும் அணுக வேண்டியதோர் சமூகத் தேவையின் பின்னணியில் இந்நூல் வெளிவந்துள்ளது.

ஐரோப்பிய சமூகச் சூழலில் காணப்பட்டது போன்றதோர் சமூக முரண்பாடுகள் நமது பண்பாட்டுச் சூழலில் காணப்படவில்லை. ஓர் இனக்குழு மரபினை அடியொட்டி நமது சமூக உருவாக்கம் அடைந்த போது சாதி அமைப்பு முக்கியமானதோர் அம்சமாக தோற்றம் கொண்டுள்ளது. அக் கருத்தியல் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்குமான மாற்று வடிவமாக அமைந்திருந்துள்ளது ஃ அமைந்திருக்கின்றது. ஓர் ஒப்புவமை வசதி கருதி பின்வரும் உதாரணத்தை எடுத்துக்காட்டாக நோக்கலாம். ஐரோப்பிய சமூகச் சூழலில் தொழிலாளி வர்க்கத்தை சார்ந்த ஒருவர் செல்வந்தராக மாறி வர்க்கநிலை மாற்றம் அடைந்து விட்டார் என்றால் அவர் அந்த  வர்க்கத்திற்குரியவராகவே அங்கரிக்கப்படுவார். ஆனால் சாதிய சமூகத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் பொருளாதார ரிதியாக வர்க்க நிலை மாற்றம் அடைந்த போதிலும் அவரது சாதிய இழிவு மாறாது என்பதே யதார்த்த நியதி. அந்தவகையில் நமது சூழலுக்கான வர்க்கப் போராட்டம் என்பது வெறுமனே அரசியல், பொருளாதார போராட்டமாக மட்டுமன்று பண்பாட்டுக்கான போராட்டமாகவும் அமைய வேண்டும் என்பதையே  கடந்த கால அனுபவங்கள் எமக்கு புதிய படிப்பினையாக தருக்கின்றன. அந்த வகையில் தமிழர் பண்பாட்டுச் சூழலில் சாதியின் தேற்றம் குறித்து தெளிவு பெறாத வரையில் எமது ஆய்வுகள் அதனடியாக முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் என்பன திசையற்றதாகவே இருக்கும்.

தமிழர் பண்பாட்டுச் சூழலில் சாதி என்பது திணை மேலாதிக்கத்துடன் இணைந்ததாகும். தமிழ் சமூகத்தில் காணப்பட்ட ஜவகை நிலத்தினையும் நிலம் சார்ந்த உற்பத்தி முறை உற்பத்தி உறவு என்பனவற்றின் அடியாக எழுந்த பொருளாதாரம் மேட்கட்டுமானம் அனைத்தும் இணைந்தே திணை அரசியலை உருவாக்கியது. உற்பத்தியில் உபரியை தமதாக்கிக் கொண்ட மருதநிலத்தினர் ஏனைய நிலத்தித்தவர்களை வெற்றிக் கnhண்டதன் விளைவாக மருததிணை மேலாதிக்கம் உருவாகியது. இவ்வாறு மேலாதிக்கம் பெற்ற இனக்குழு ஏனைய இனக் குழுவை ஒடுக்க முற்பட்டதன் விளைவே தமிழ் பண்பாட்டுச் சூழலில் சாதி உருவாவதற்கு காரணமாக அமைந்தது. தமிழில் திணை உருவாக்கம் என்பது வெறுமனே வெறும் நிலம் சார்ந்த அம்சமல்ல, அது சமூகம் சார்ந்தது என்றவகையில் இலக்கணத்தை ஆராய முற்பட்டவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி. இருப்பினும் அவர் இவ்விடயம் தொடர்பான ஆய்வில் ஆழமாக செல்ல முடியாமல் போனமை துரதிஸ்டவசமாதொன்றே. இவ்வாறான சூழலில் திணைமேலாதிக்கம் தமிழர் பண்பாட்டுச் சூழலில் சாதியை தோற்றுவிப்பதில் எத்தகைய பங்கு வகித்துள்ளது என்பதை ஆதாரங்களுடன் வெளிக் கொணர்கின்றது இந்நூல்.
இந்நிலையில் சாதிய விடுதலைக்கான போராட்டம் என்பது வர்க்க விடுதலைக்கு அப்பாட்பட்டது. வர்க்க விடுதலையின் ஊடாக அனைத்தையும் சமன் செய்து விடலாம் என்ற வர்க்கவாத அறிவு ஜீவிகளின் கூக்குரல் ஒரு புறத்திலும், வர்க்க விடுதலை சாத்தியமற்றது சாதி விடுதலையே முதன்மையானது என்ற தலித்திய பார்வைகள் - கூடவே சாதிய ஒடுக்கு முறைகளையும் இழிவுகளையும் தமக்கு சாதமாக்கிமாக்கியவர்களின்  கருத்துநிலை மறுபுறத்திலும் முனைப்படைந்து வருகின்றன. இவ்விரு பார்வைகளுமே பலவீனமானவை.

இப்போக்குகள் யாவும் சமூகப் போராட்டத்தை சிதைக்க கூடியவை. இந்நிலையில் எமது போராட்டத்தின் சமூக சக்தியை நிர்மாணிக்காமல் ஒரு அரசியல் சக்தியை கட்டியெழுப்ப முடியாது. இது தொடர்பில் தம்மை மார்க்சிய பாதையில் அர்ப்பணித்துக்கொள்ள முன்வந்த அனைவரும் முகம்கொண்டு தீர்வு காணவேண்டியதொரு பிரச்சனையாகும்.  இவ்வாறானதோர் காலக்கட்டத்தில் வடக்கில் இடம்பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டம் எமக்கானதொரு பலமான அடித்தளத்தை இட்டு இருக்கின்றது.  இலங்கையில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே தோற்றம் கொண்டிருப்பினும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமே  அதனை  ஒருமுகப்படுத்தி ஸ்தாபன ஒழுங்கமைப்புடனும் அரசியல் தத்துவார்த்த வழிக்காட்டலுடனும் மிகச் சிறந்த வகையில் வளர்த்தெடுத்திருந்தது.

இப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களும், வெகுசன சக்திகளும் முக்கிய பங்கெடுத்திருந்தனர். ''சாதிமுறை தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்'' என்ற முழக்கம் முன்னிறுத்தப்பட்டிருந்தது. சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் எனும் விடயம் முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டிய தொன்றாக இருந்தது. இப்போராட்டத்தில் கே.ஏ.சுப்பிரமணியத்தின் (மணியம்) பங்கு முக்கியமானதாகும்.

இவ்விடத்தில் முக்கியமானதோர் அம்சம் குறித்துக் காட்ட வேண்டியதாகின்றது. வட இலங்கையில் 1960களில் சாதியத்திற்கு எதிரான போராட்டம் எவ்வாறு முனைப்பு பெற்றிருந்ததோ அவ்வாறே 70களில் தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும் முனைப்படைந்திருந்தது. கம்யூஸ்டுகள் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் கவனமெடுத்த அளவிற்கு தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் கவனமெடுக்காமை வரலாற்றில் அவர்கள் ஏற்படுத்திய இடைவெளியாகும். இந்நிலையில் ஏகாதிபத்திய எதிர்புணர்வை கொண்டிருந்த சிங்கள இடதுசாரிகள் தமிழ் தேசியத்தின் வலதுசாரி பண்பை-அமெரிக்க சார்பை உதாணரமாக்கி தமழின ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை கைவிட்டனர்.

இது இவ்வாறிருக்க தமிழின ஒடுக்குமுறைகள் ஏற்படுத்திய தாக்கம் தமிழரசு கட்சி போன்ற அமைப்புகளை உருவாக்கியிருந்தன. தமிழரசு கட்சி தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான முற்பேர்கான பார்வையை கொண்டிருந்தது. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதற்கு எதராக குரல் கொடுத்ததில் இவ்வமைப்பிற்கு முக்கிய இடமுண்டு. அதேசமயம் தமது நிலபிரத்துவ பிற்போக்கு குணாதியம் காரமாக தமிழரசு கட்சிக்குள் நிலவிய சாதிய குணாதியம் காரணமாக வெகு விரைவிலே இவ்வமைப்பு சிதைத்து சின்னாப்பின்னமாகியது. கம்யூனிஸ்டுகள் சாதியத்திற்கு எதிராக விழிப்புணர்வுக் கொண்டிருந்தது போல தமிழரசுக் கட்சியினர் தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான விழிப்புணர்வைக் கொண்டிருந்தனர். இவ்விடத்தில் சாதிய போராட்டமும் தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும் இரண்டு பிளவுபட்ட தேசிய போராட்டங்களாக இருந்துள்ளதைக் காணலாம்.

இத்தகைய வரலாற்றுச் சூழலில் தமிழ் தேசியத்தின் முற்போக்கான பார்வையை முன்வைத்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன். அதே போன்று கம்யூனிஸ்டுகளின் சாதி எதிர்ப்பு போராட்டத்தின்  மார்க்சிய பார்வையை முன் வைத்தவர் பேராசிரியர் க. கைலாசபதி. அன்றைய சூழலில் இவ்விரு ஆளுமைகள் வகித்த பாத்திரத்தை வரலாற்று பின்புலத்தில் வைத்து நோக்க தவறிய புத்திஜீவிகள் அம்முரண்பாட்டை தனிமனித முரண்பாடாக காட்டமுற்பட்டமை இன்னொரு துரதிஸ்டவசமாக நிகழ்வாகும்.

இது இவ்வாறிருக்க தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்ட அனுபவத்திலும் மணியத்தார் பேராசிரியர் க. கைலாசபதி முதலானோரின் அனுபவத்திலும் வழிகாட்டலிலும் தோய்ந்து எழுந்தவர் தோழர் ந.இரவீந்திரன். அவரது இந்நூல் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன்,ககைலாசபதி ஆகியோரின் தொடர்ச்சியை காட்டி நிற்கின்ற அதே சமயம் இவ்விரு ஆய்வுகளின் இடைவெளியையும் நிரப்புவதாக அமைந்துள்ளது.

மேலும் இந்நூல், புத்தகவாத சிந்தனைகளுக்கு அப்பால் சமூக நடவடிக்கைகளின் ஊடாக பெறப்பட்ட நேரடி அனுபவம் மற்றும் நூலாய்வுகளின் ஊடாக பெறப்பட்ட அனுபவங்கள் என்பனவற்றை நமது காலச் சூழலோடு பொருத்தி பார்ப்பதாக அமைந்திருப்பது இதன் தனித்துவமான பண்பாகும். நேரடி அனுபவம்,கூட்டு மற்றும் சமூக நடைமுறையின் ஊடாக பெறப்பட்ட அறிவு என்பன அவ்வாய்விற்கு வளம் சேர்த்துள்ளது.  இந்த சிறப்பு காரணமாக இந்நூல் புரட்சிகர புனிதம் என்ற அடையாளத்திற்கும் அங்கீகாரத்திற்கும் அப்பால் சமூக விடுதலைக்கு உதவக் கூடிய சகலவிதமான மார்க்சிய ஜனநாயக முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைய வேண்டியதொரு புரட்சிகரமான ஐக்கிய முன்னணியின் தேவையை உணர்த்தி நிற்கின்றது. இந்நூல் ஒருபுறத்தில் சிறந்ததொரு ஆய்வாகவும் மறுப்புறத்தில் வெகுசன அமைப்பொன்றினை தோற்றுவிக்க கூடிய கையேடாகவும் விளங்குகின்றது எனக் கூறின் மிகையாகாது.

இந்நூல் வெளிவந்து சில மாதங்களுக்குள் இந்நூல் பற்றிய விமர்சன்க கூட்டங்கள் கொழும்பு, பிரான்ஸ், சுவிட்சலாந்து ஆகிய இடங்களில் நடைப்பெற்றன. இந்நூல் பலரின் கவனத்தை பெற்றுள்ள அதே நேரம் இந்நூல் குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களில் 'இலங்கையில் சாதிய போராட்டத்தில் பங்குபற்றிய பலரின் பெயர் குறிப்படப்படவில்லை" எனும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ன. அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டையும் இலங்கையில் எழுந்த சாதிய போராட்டத்தின் எழுச்சியின் ஐம்பதாவது ஆண்டு நிகழ்வையும் முன்னிறுத்தி எழுதப்பட்ட இந்நூல் அதன் முனைப்புற்ற போக்குகளை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றது. இதனை நிருபிப்பதற்காக நூலாசிரியர் நீண்ட பட்டியல் நீட்ட விரும்வில்லை. இலங்கையில் சாதிய எதிர்ப்பு போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அது எத்தகைய வளர்ச்சியை பெற்று வந்துள்ளது என்பதையும் அதற்கு அனுசரணையாக உள்ளவர்களின் பெயர்களையும் சுட்டிக் காட்டுவதே இந்நூலின் சாரம்சமாகும்.   

குறிப்பாக, ஒக்டோபர் 21 எழுச்சியின் மார்க்கம் வன்முறை வழிப்பாட்டிற்கு உரிதாகவன்றி, வெகுஜன எழுச்சியுடன் மக்கள் போராட்டப் பாதையே அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிய ஏற்றது என்பதைக்காட்டி நின்றது என்பதை எடுத்துரைப்பதே இந்நூலின் உயிர் நாடி என்பது கவனிப்புக்குரியது. மானுடத்தின் மீதான காதலோடும் மார்க்சிய பற்றார்வத்துடனும் எழுதப்பட்ட நூல் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.

நன்றி- ஜீவநதி ஏப்ரல்-2017

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates