'தமிழ் இனவாதத்தைத் தோற்கடிக்க வேண்டுமெனில் தலைமையும், கல்வியும் பிக்குகள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என்கிறார் பிரபல இனவாத சித்தாந்தி பேராசிரியர் நளின் டி சில்வா.
சில வருடங்களுக்கு முன்னர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு எழுதிய பத்தியில் குறிப்பிட்டிருந்ததாக ஆய்வாளர் ஒருவர் எழுதிய கட்டுரையின் மூலம் வாசித்த நினைவு வருகின்றது.
இது இவ்வாறிருக்க, தென்னாசியாவில் ஜனநாயகத்தின் நிலை (State of Demogracy in South Asia)
தொடர்பில் நடத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பில், நாட்டு விவகாரங்களில் மதகுருமார்கள் தீர்மானம் எடுக்கும் செல்வாக்கு உடையவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவே அறியக்கூடியதாக இருக்கின்றது. பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகளிலேயே இந்த அபிப்பிராயம் கூடுதலாக இருக்கின்றதாகவும் இந்த வாக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலப் பத்திரிகையொன்றே இத்தகவலை வெளியிட்டிருந்தது. சமகாலத்தில் மிகவும் அத்தியாவசியமாக பலராலும் பேசுபொருளாக இருக்கும் விடயமாகவும் இதனைக் கொள்ளலாம். இந்த அபிப்பிராயங்கள் இலங்கை உட்பட இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆகிய நாடுகளில் உள்ள சுமார் 18,576 பேரிடமிருந்து பெறப்பட்டுள்ளன. அண்மையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மதகுரு ஒருவர் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அபிப்பிராயமும் வெளி வந்துள்ளது.
மதங்களுக்கு மதிப்பளிப்பது என்பது வேறு ஒரு மத வழிநடத்தலில் அரசியலை முன்னெடுப்பது என்பது வேறு என்றிருக்கையில், இலங்கையில் மதகுருக்கள் எவ்வாறு அரசியல் முன்னெடுப்புக்களை நகர்த்துகின்றனர். அதன் பக்க பலம் எவ்வாறானதாக இருக்கின்றது என்பது பற்றி இவ்வார 'அலசல்' பேசுகிறது.
இலங்கையைப்பொறுத்தவரையில் மதகுருக்களின் அரசியல் என்றவுடன் இந்து , கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதத் தலைவர்களும் பாராளுமன்ற அரசியலில் செயற்படுவதில்லை என்பது யாவரும் அறிந்ததே. பாராளுமன்ற அரசியல் செயற்பாட்டில் நேரடியாக ஈடுபடுபவர்களாக பௌத்த மதகுருக்களே முன் தெரிகின்றனர். அதேநேரம் அரசியலில் அழுத்தக் குழுவாகவும் சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே செயற்பட்டு வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியே இன்றைய அரசியலிலும் நகர்ந்துச் செல்கின்றது.
காவிகளின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகள் ஆரோக்கியமான விடயத்துக்கு வழிவகுக்குமா? என்பது இன்றைய சிறுபான்மை இன சமூகத்தினர் மத்தியில் தொடர்ந்து எழும் ஒரு கேள்வியாகவும் இருக்கின்றது. பிக்குகளிடம் அரசியலைக் கொண்டுச் செல்வது ஒரு நீண்டகால கலாசாரமாக இருக்கின்றது. அரசியலில் ஒரு பெரிய பொறுப்பான பதவிக்கு வருபவரோ அல்லது சாதாரண நிலைக்கு வருபவர்களோ மகாநாயக்க தேரர்களிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதோ அல்லது அவர்களது அரசியல் பற்றி தேரர்களுக்கு விளங்கப்படுத்துவதோ இன்று வரை இடம்பெற்று வருகின்றது. காலங்காலமாக இது இந்நாட்டின் மறை முகமான கொள்கைச் செயற்பாடாகவும் இருந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
மேற்கத்தய நாடுகளில் அரசியலை தீர்மானிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இதுபோன்றவர்கள் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோதும் மறைமுகமாக ஒரு முறைமை இருக்கிறது.
இது ஒரு பௌத்த நாடு என்றும் இங்கு நடத்தப்படுகின்ற ஆட்சி பௌத்த ஆட்சி என்றும் அதற்கான ஆசிர்வாதத்தை சிரேஷ்ட மதகுருவிடம் பெற்றுக்கொள்வதென்பதும் இயல்பாக பேணப்பட்டு வருகின்ற ஒரு அரசியல் கலாசாரமாக இருக்கின்றது. ஆனால், இது அரசியல் அமைப்பிலோ அல்லது வேறு எங்கும் எழுதப்படாமலேயே பின்பற்றப்பட்ட வருகின்ற நடைமுறையாக இருந்து வருகின்றது. இதில் உள்ள சுவாரஷ்யம் என்ன வெனில் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் கூட மகாநாயக்க தேரர்களிடம் சென்று ஆசி பெறுவது ஒரு 'பெஷன்' என்று ஆகிவிட்டது.
இந்த முறைமையினூடாக பௌத்தம் என்பது அல்லது தேரர்களிடம் ஆசி பெறுவது என்பது ஒரு உயர்ந்து ஸ்தானத்தில் வைக்கப்படுகின்ற நிலையில் அவர்களின் வழிகாட்டலில் தான் இந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தோற்றப்பாட்டை கொண்டு வருகின்றது. அரசியலமைப்பு மாற்றம் மகாநாயக்க தேரரின் பார்வைக்கு சமர்ப்பித்த பின்னரே நிறைவேற்றப்படும் என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் காவிகளிடம் இருந்து அரசியல் பிறக்கின்றது. தங்களது ஆசியுடனேயே இந்த அரசியல் நடத்தப்பட வேண்டும் என்றால் , தாங்களே இந்த அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக தீர்மானிக்கின்ற பிக்குகளின் அரசியல் முன்னெடுப்புக்கள் வந்து சேர்கின்றது. இதன் வெளிப்பாடே பிக்குகள் பாராளுமன்ற பிரசேவத்துக்கு காரணமாக அமைகின்றது. அந்தவகையில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பாராளுமன்ற அரசியல் செயற்பாடுகளுக்கு பிரவேசித்த பிக்கு காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பத்தேகம சமித்த தேரரே (லங்கா சமசமாஜக்கட்சி) . மதகுருவாக இருந்தபோதும் இடது சாரி கொள்கையுடைய இவரது பிரவேசமே முதன் முதலாக அமைந்தது. 2001ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் , தற்போது தென்மாகாண சபை உறுப்பினராகவும் இருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற பிரவேசத்திற்கு உள் நுழைகின்றது. ஆனால், இவர்களின் பிரவேசம் முற்றுமுழுதாக பௌத்தவாதத்தை முன்வைத்து பௌத்த மதகுரு ஒருவரையே தலைவராகக் கொண்டு கடும்போக்கு சிந்தனையுடைய கொள்கையுடையதாக இருந்தது யாவரும் அறிந்த விடயமே.
பாராளுமன்றத் தேர்தலில் முதலாவது தடவையாக ஜாதிக ஹெல உறுமய தமது 260 வேட்பாளர்களையும் பௌத்த துறவிகளாக களமிறக்கியது. 2004ஆம் ஆண்டு நடந்த அந்த தேர்தலின் போது மொத்தம் 5,52,724 வாக்குகளைப் பெற்று மொத்த தேசிய வாக்குகளில் 5.97 வீதத்துடன் 9 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. 2010ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய 3 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
தற்போதைய நிலையில் ஒருவர் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நிலையில், அவர் ஹெல உறுமயவில் இருந்தும் விலகி ஐ.தே. கட்சியின் தேசியப்பட்டியலில் ஜனாதிபதியின் தயவில் இருக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால், பாராளுமன்றத்துக்கு வெளியேயான இவர்களது அரசியல் செயற்பாடுகள் பெரும் .அபாயகரமானதாகவே இருக்கின்றது என்பதை ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாகவுள்ளதுடன் அன்றாடம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் காணொளிகள் மூலம் முழுமையாக பார்க்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
1818 இல் கண்டியில் பிரிட்டிஷ் கொடியை இறக்கிய சுமங்கள தேரருக்கு அந்த இடத்திலேயே சிலையும் கட்டப்பட்டிருக்கிறது. இன்றும் அவர் பெரிய தேசிய வீரர். புத்த ரக்கித்த தேரோவால் பிரதமர் பண்டாரநாயக்க 1959 சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இந்த அபாயத்தின் ஆரம்பமாக இருக்கின்றது. அந்தளவுக்கான தீவிர போக்கு இருந்துள்ளது. 1965 இல் தமிழ் மொழி சட்டத்துக்கு எதிராக ஊர்வலம் சென்றபோது பொலிஸாரால் கொல்லப்பட்ட தம்பராவே ரத்னசார தேரோ சிங்கள பௌத்தர்களின் வீரர் அதன் தொடர்ச்சியாக தற்போதைய காலத்தில் தோற்றம் பெற்றுள்ள பொதுபலசேனா , தோற்றம் பெற்று வருகின்ற இராவண பலய போன்ற பிக்குகள் மட்டத்தில் செய்யப்படுகின்ற அரசியல் செயற்பாடுகள் சமூக கட்டமைப்புக்களை மீறி செயற்படுவதாக தெரிகின்றது. இவ்வாறான போக்குகளிலே இந்த காவிகளின் அரசியல் கொண்டு செல்லப்படுகின்றது.
மறுபுறம் பாராளுமன்றத்தில் வெளியே இருந்த காலஞ்சென்ற சோபித்த தேரரின் அரசியலையும் மறந்து விட முடியாது. ஆரம்பத்தில் கடும்போக்ககாளராக இருந்தாலும் பின்நாளில் நல்லாட்சி உருவாகுவதற்கு காரண கர்த்தாவாகவும் முக்கிய செயற்பாட்டாளராகவும் இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற அரசியலுக்குள் இரு வேறு கொள்கைகளையுடையவர்களின் ஆரம்பத்தில் நுழைந்தனர் என்பது அறிந்த விடயமே. ஆனால், அதற்கு வெளியே அதாவது பிரதமர் பண்டாரநாயக்கவை .சுட்டுக்கொன்ற புத்த ரக்கித்த தேரரர் முதல் தற்போது தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற ஞானசார தேரர் வரையானோர் அரசியலை முன்வைக்கும் நோக்கம் எவ்வகையானதாக இருக்கின்றது என்பது அவதானத்துக்குரியது.
இந்நிலையில், பிக்கு அரசியல் தடை சட்டம் ஒன்றை 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச தனிப்பட்ட சட்ட மூலமொன்றை முன்மொழிந்தார். அதாவது அரசியலமைப்பின் 91ஆம் பிரிவைத் திருத்துவதன் மூலம் இனிமேல் மதத்தலைவர்கள் எவரும் அரசியலில் ஈடுபட முடியாதபடி திருத்தத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்றார். அரசியலமைப்பின் 91ஆம் பிரிவானது பாராளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதி பற்றி பேசுகிறது. ஜாதிக ஹெல உறுமய விஜயதாசவின் பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டது. போதிய ஆதரவற்ற நிலையில் அந்த பிரேரணை கிடப்பில் போடப்பட்டது என்பதும் வருந்தத்தக்க விடயமே. ஆனால் அவர் ,இப்போது புத்த சாசன அமைச்சராக இருக்கின்ற நிலையில் இந்தப்பிரேரணையை முன்வைப்பாரா என்ற கேள்வியும் எழுகின்றது.
எது எவ்வாறாயினும் பிக்குகளிடத்தில் நாம் அரசியலை கொண்டு சென்று முன்வைப்பதன் காரணமாகத்தான் பிக்குகளின் அரசியல் முன்னெடுப்பு என்பது அவர்களிடத்தில் நாமே அவர்களிடத்தில் காவிச் செல்கின்றோம். மதகுருக்களிடம் அரசியலை காவிச்செல்லும் நிலை நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கும் வரை காவிகளின் அரசியலை நிறுத்த முடியாது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...