ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மலையக தமிழ் மக்கள் பரவலாக வாழ்கின்ற போதிலும் மொனராகலை மாவட்ட தமிழர்கள் அரசியல் பிரதிநிதித்துவமோ விசேட ஒதுக்கீடுகளோ இன்றி அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ள சூழலே காணப்படுகின்றது.
குறிப்பாக பதுளை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் செறிவு அதிகமாக பெருந்தோட்டங்களைத் தழுவி அமைந்துள்ள காரணத்தினால் அரசியல் கட்சிகளோ தொழிற்சங்கங்களோ அதீத அக்கறை காட்டி மக்கள் பிரச்சினைகளை விளம்பரப்படுத்தி இலாபம் தேடுகின்றன. அப்புத்தளை, பசறை, பதுளை ஆகிய தேர்தல் தொகுதிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற பிரதிநிதிகளை தமிழ் மக்கள் சார்பாக தெரிவு செய்யக்கூடிய இயலுமையுடன் காணப்படுகின்றன.
அதேபோல் உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு மக்களுடைய இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதானமாக அரசியல் பிரதிநிதித்துவம் எனப்படுவது மக்களின் இன விகிதாசாரத்துடன் தொடர்புபட்டது. அண்மையில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை மாற்றத்தினூடாக ஊவா மாகாண தமிழ் மக்கள் மோசமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்புகளில் சுட்டிக்காட்டப்படுகின்ற நிலையில் நாம் மொனராகலை மாவட்ட தமிழர்களின் அரசியல் எதிர்காலமும் இருப்பும் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை ஆராய வேண்டியது அவசியம்.
மொனராகலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் “இறப்பர்” பயிர் செய்கையே பிரதான பெருந்தோட்டப் பயிராக காணப்படுகின்றது. இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் எம்மவர்கள் சொல்லொணா துயரங்கள் பலவற்றை தொழிலுடன் சார்ந்து எதிர்கொள்கின்றனர்.
அதிலும் குறிப்பாக இவர்கள் எதுவித தொழிற்சங்க கட்டமைப்புக்குள்ளும் உள்ளடங்கவில்லை.
மாவட்ட மொத்த சனத்தொகையில் 2.3% வீதமான மக்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் என சற்று முந்திய புள்ளி விபரம் குறிப்பிடுகின்றது. எனினும் இதனை மிகச் சரியான தரவாகக் கொண்டு எம்மால் ஆராய முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மொனராகலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பலர் பெருந்தோட்ட தொழிலைக் கைவிட்டு சேனைப்பயிர்ச் செய்கை, கட்டுமான உதவியாளர்கள், சிறு வியாபாரம், தினக் கூலி வேலைகள் போன்ற பல்வேறு நிரந்தரமற்ற தொழில்களை தெரிவு செய்து கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக இவர்கள் இயக்க ரீதியற்ற சனத்தொகையில் சிறுபான்மையாக உரிமைகள் அற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 319 கிராம சேவகர் பிரிவுகளிலும் உதிரிகளாக தமிழர்களும் மெதகம, பக்கினிகாவல, பிபிலை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் இவர்கள் பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்கு வாக்களித்து விட்டு தொடர்ந்து அவர்களால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய மாகாணத்தை தழுவியே அனைத்து தமிழ் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் காணப்படுவதால் மொனராகலை தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். உதிரி வாக்குகளால் இலாபம் இல்லாத உண்மை அறிந்த அரசியல்வாதிகளும் இவர்களை உதாசீனப்படுத்துகின்றனர்.
இன்னொருபுறம் இவர்கள் கலாசார உள்வாங்கல்களுக்கு உட்பட்டு பெரும்பான்மை இனத்துக்குள் ஐக்கியமாகி சிங்கள மொழிக் கல்வியை தொடரும் போக்கு அண்மைக் காலமாக இடம்பெறுவது குறிப்பிட்டுக் கூறக்கூடியது. இதன் காரணமாக பெருவாரியான தமிழர்கள் சிங்கள மக்கள் போன்று உடையணிதல் சிங்கள மொழி மூலம் தொடர்பாடல் மேற்கொள்ளுதல் சாதாரணமாக இடம்பெறுகின்றது. கல்விச் சமூகத்தைப் பொறுத்தவரையில் “கஷ்டப் பிரதேசம்” என்று அடையாளப்படுத்த மட்டுமே மொனராகலை மாவட்டம் கவனத்தில் எடுக்கப்படுகின்றது. புறம்பாக அரச நியமனங்கள் பெற்றுக் கொள்ளும் எம்மவர்கள் தொழில் மேம்பாட்டுக்காகவும் பிள்ளைகளின் கல்வி போன்ற சுயநல தேவைக்காகவும் பதுளை, பண்டாரவளை போன்ற நகரங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். இதன் காரணமாக கற்ற இடை நிலைச் சமூகத்தின் சமூகக் கடமை இடைவெளியாக காணப்படுகின்றது.
அதே போல் தமிழ் மாணவர்களின் கல்வியும் பாரிய பின்னடைவுடன் தேக்க நிலையில் உள்ளமையை நாம் சாதாரணமாகக் கொள்ள முடியாது. காரணம் ஒரு எதிர்கால சமுதாயம் அங்கு அடிப்படை கல்வியுரிமைகளோ, சலுகைகளோ இன்றி மழுங்கடிக்கப்படுகின்றது. ஒட்டுமொத்த மாவட்டத்தை எடுத்து நோக்குகையில் இவர்களின் இருப்பும் கல்வி இல்லாத காரணத்தினால் அற்றுப் போய்விடும்.
சுகாதாரம், வீடமைப்பு, உள்ளக வசதி வாய்ப்புகள் என்று எடுத்து நோக்குகையில் அனைத்து மட்டத்திலும் மேம்பாடு அடையாத ஒரு போக்கே காணப்படுகின்றது. குறிப்பாக சுகாதார பிரச்சினைகள் காரணமாக மொனராகலை மாவட்டத்தில் அதிகமான தொற்று நோய்கள், சிசு மரண வீதம் அதிகரிப்பு, இளம் பிள்ளை சார்ந்த நோய்கள் போன்ற அதிகமான பாதிப்புக்களை சமீபத்தில் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.
ஒரு சில பிரதேசங்களில் தமிழர்களும் சிங்களவர்களுடன் இணைத்து தனி வீட்டுத் திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்ட நிலைமை காணப்படினும் அது மிக அரிதான ஒரு விடயமே ஆகும்.
மலையக சமூகம் தொடர்பாக பேசும் அனைவரும் மொனராகலை மாவட்டம் தொடர்பாகவும் கரிசனை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். அரசியல் தொழிற்சங்க அமைப்புகளும் சிவில் அமைப்புக்களும் இது தொடர்பாக கவனம் செலுத்தி இருப்பை உறுதி செய்ய முனைய வேண்டும். மொனராகலை மாவட்ட தமிழ்க் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய பொறுப்பு உண்டு. வாக்குகள் கிடைக்கப் பெறாத மாவட்டம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு அப்பால் இன ரீதியான சமூகக் கடமையை பதுளை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் உணர வேண்டும். கல்விச் சமூகமும் பாடசாலைக்கு வெளியில் வந்து இருப்பை உறுதி செய்யும் விதத்தில் மக்களுடன் இணைந்து போராடத் தயாராக வேண்டும். காரணம் மொனராகலை மாவட்டத்தை முன்னிறுத்தி எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பாடசாலைகள் மட்டுமே ஆகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...