Headlines News :
முகப்பு » , » மீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை! – என்.சரவணன்

மீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை! – என்.சரவணன்


ஏப்ரல் 14  சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்துமளவுக்கு மீதொட்டமுல்லை குப்பைச் சரிவு சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. மீதொட்டுமுல்லையில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 140 வீடுகளாவது புதைந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட முப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தபட்டதில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் புதைந்திருக்கிறார்கள் என்பதை யாராலும் உறுதியாக இன்னமும் கூற முடியவில்லை.

புதுவருட பண்டிகை விடுமுறையில் பலர் வீடுகளில் இருந்திருக்கிறார்கள். விருந்தினர்களாக பலரும் வந்திருக்க வாய்ப்புண்டு. சில கும்பங்களில் யார் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை சொல்லக்கூட எவரும் எஞ்சவில்லை. இலங்கையில் சுனாமிக்குப் பின்னான சட்டத்தின்படி நபரொருவர் காணாமல் போய் ஒரு வருடம் ஆகியிருந்தால் அவர் இறந்தவராக கருதப்படுவார். ஆக மீதொட்டுமுல்லையில் கிடைக்கப்படாத சடலங்கள் கொல்லப்பட்டவர்களின் கணக்கில் இப்போதைக்கு வரப்போவதில்லை.


அஜித்தின் அத்திப்பட்டியல்ல
தமக்கு நேரப்போகும் அழிவைப் பற்றி அவர்கள் அப்போதே அரசுக்கு எடுத்துக்கூறி தம்மை காப்பாற்றுமாறு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த மக்களை அரசு தனது இரும்புக் கரங்ககளைக் கொண்டும், சண்டியர்களைக் கொண்டும் நசுக்கியது. இதற்காக போராடிய செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் என்பனவற்றைச் சேர்ந்த பலர் அடித்து காயப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

அப்படி கதறிய மக்களில் ஒரு பகுதியினர் இன்று உடல் துண்டங்களாக மட்டுமே கிடைத்திருக்கிறார்கள். இது சினிமாவில் அஜித் நடித்த “அத்திப்பட்டி” கதையல்ல. அதற்கொப்பான உண்மைக் கதை.

இந்த குப்பை மேட்டுக்கு மேலாக பியகமவிலிருந்து தொடங்கும் அதிசக்தி வாய்ந்த (132,000 வோட்ஸ்) மின்சார கம்பிகள் கொலன்னாவை வரை செல்கிறது. சம்பவத்தின் போதும் அக்கம்பி அருகிலிருந்த மாமரத்தில் விழுந்து எறிந்த சமவமும் நிகழ்ந்திருக்கிறது.


மீதொட்டுமுல்ல குப்பை மேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் கீர்த்திரத்னவின் மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளை அனைவரும் புதைந்து போனார்கள்.

இப்படி நேரக்கூடாது என்பதற்காக அவர் இது வரை நடத்திய போராட்டங்களின் போது மண்டை உடைபட்டு, கைதுக்குள்ளாகி, பல தடவைகள் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டவர். இன்று அவரை அனாதையாக்கியுள்ளது இந்த அரச இயந்திரம்.


பெருகும் குப்பைகளுக்கு தீரவில்லை.
இலங்கை முழுவதும் 23 மாநகர சபைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 7000 மெற்றிக் தொன் குப்பைகள் சேருகின்றன. மேல்மாகாணத்தில் மாத்திரம் சேருகின்ற 1400 தொன் குப்பைகளில் கொழும்பு மாநகர சபையிலிருந்து மாத்திரம் 700 தொன்கள் சேருகின்றன. ஆக இலங்கையில் அதிக அளவு குப்பைகளை சேர்க்கின்ற இடமாக மீதொட்டுமுல்லை ஆகியிருக்கிறது.

கிராமங்களில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உக்கக்கூடியவை உரமாகவும், உக்காதவற்றை அழிக்கும் வழிமுறையும் கைகொள்ளப்படுகிறது. நகரங்களில் அவை ஒன்று சேர்க்கப்பட்டு இப்படி குவிக்கப்படுகின்றன. நகரங்களில் வேகமாகப்  பெருகும் மக்கள் தொகையும், நுகர்வின் அதிகரிப்பும், அதனால் பெருகும் குப்பைக்கான தீர்வையும் நீண்ட கால நோக்கில் திட்டமிடப்படவேண்டியது.

இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்குப் பதிலாக புளுமெண்டல் வீதியிலிருந்து, மீதொட்டுமுல்லவுக்கும், அங்கிருந்து ஜாஎலவுக்கும்,  புத்தளத்துக்கும் மாற்றுவதற்கான ஒழுங்கை மட்டும் மேற்கொண்டது அரசு. இந்த குப்பைகள் தமக்கு பெரும் ஊழல் பணத்தைக் கொட்டித்தந்த ஒன்றாக மட்டுமே இருந்த அரசியவாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வரப் போகும் நாசத்தைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை.

கோத்தபாயவின் கொடுங்கோல்
கோத்தபாய நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அபிவிருத்தியின் பெயரில் குடிசைவாழ் ஏழைகளின் எதிர்கால வாழ்க்கையில் கைவைத்தார். வசதி குறைந்திருந்தாலும் இருக்கின்ற நிலத்தில் தமது குடிசைகளுடன் வாழ்ந்து வந்த அம்மக்களின் குடியிருப்புகளை பலாத்காரமாக இடித்து விரட்டியடித்தார். அனைத்தையும் இழந்த மக்கள் தெருவுக்கு கொண்டுவரப்பட்டனர். மாற்று வீடு என்கிற பெயரில் அதில் ஒரு பகுதியினருக்கு தொடர்மாடி வீடுகளை கொடுத்தனர். அவர்கள் வாழ்ந்து வந்த குடிசைகள் தொடர்மாடி வீடுகளை விட, இட வசதி இருந்தது என்றே கூறவேண்டும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் புளுமண்டல் வீதியருகில் இருந்த குப்பை மேட்டை அங்கிருந்த மக்கள் அகற்றச் சொல்லி போராடினார்கள். அதனை அங்கிருந்து அகற்றி குடியிருப்புகள் நிறைந்த மீதொட்டுமுல்லைக்கு மாற்றியதும் கோத்தபாய தான். அங்கிருந்த ஏழைகளை இலகுவாக கையாளலாம் என்கிற நம்பிக்கையும் தான். ஆனால் அம்மக்கள் தமது எதிர்ப்பை கடுமையாக வெளியிட்டார்கள். அது மட்டுமன்றி அவர்கள் நடத்திய போராட்டத்திற்கு எந்தவித பிரதிபலனும் கிடைக்காததால் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டு அடிப்படை உரிமை வழக்கொன்றை தொடுத்தார்கள்.

அந்த வழக்கில் அம்மக்களுக்கு பூரண வெற்றி கிடைக்காவிட்டாலும் இரண்டு வருடங்களில் இதனை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும். அதுவரை இரண்டு ஏக்கருக்கு மேல் இந்த குப்பைகளை விஸ்தரிக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை கோத்தபாயவின் நகர அபிவிருத்தி அமைச்சும், நகர சபையும் கொஞ்சமும் கணக்கில் எடுக்கவில்லை. அந்த தீர்ப்பும் இந்த குப்பையோடு கலந்தது தான் மிச்சம். கோத்தபாயவின் எந்த தீர்மானத்தையும் மாற்றும் பலம் அன்று எந்த கொம்பனுக்கும் இருக்கவில்லை. அவர்கள் அந்த குப்பை மேட்டை 17 ஏக்கருக்கு விஸ்தரித்தார்கள். நாளொன்றுக்கு 1000 தொன் அளவிலான குப்பைகள் குவிக்கப்படுவதுடன், நான்கு லட்சம் தொன்களையும் 90 மீற்றர் உயரத்தையும் கொண்ட குப்பை மலை அது இப்போது.

வீடுகளின் மீது குந்திய குப்பை
புதைந்து போன இந்த வீடுகளும் குடிசைகளும் குப்பை மேடு வந்ததன் பின் வந்தவை அல்ல. ஏற்கெனவே இருந்த குடியிருப்புகளின் மத்தியில் தான் இந்த குப்பை மேடு உருவாக்கப்பட்டது. இந்த மக்களுக்கு பழக்கப்பட்ட வாழ்க்கை என்பது போல இந்த குப்பை மேட்டை உருவாக்கினார்கள்.


1997ஆம் ஆண்டு அன்றைய மேயர் கரு ஜயசூரியவும், அன்றைய முதலமைச்சர் சுசில் ஜயந்தவும் உலக வங்கியின் உதவியுடன் மீபே பிரதேசத்த்துக்கு குப்பைகளை கொண்டுசெல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால் அன்று அங்குள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக அதைக் கைவிட்டுத் தான் புளுமண்டலில் குப்பைகள் குவிக்க நேரிட்டது. புளுமெண்டல் குப்பை மலையாக குவிந்தும், விழுந்தும், சுற்றுச் சூழல் பிரச்சினைகளாலும், களனி கங்கை மாசடைந்தது. அகவே மாற்றிடமொன்று தெரிவு செய்ய வேண்டியேற்பட்டது. 

ஆனால் இதனை வெறும் கோத்தபாயவின் தலையில் மட்டும் கட்டிவிட முடியாது. கொழும்பு நகரின் சுத்திகரிப்பு கொழும்பு மாநகர சபைக்கு பொறுப்பான விடயம். முல்லேரியா, கொலன்னாவ போன்ற பிரதேசங்களில் இருந்து கொண்டு வரும் குப்பைகளை கொட்டும் சிறிய இடமாகத்தான் இந்த மீதொட்டுமுல்ல குப்பை மேடு இருந்தது. கொழும்பு நகரத்தின் குப்பைகளையும் அங்கு கொண்டு போய் கொட்டுவதற்கான அனுமதியை 2008 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை பெற்றுக் கொண்டது. 2012 இல் பல வீட்டு மதில்கள் வெடிக்கத் தொடங்கின.

அதே ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி 63 வீடுகள் உடனடியாக மாநகர சபையால் அகற்றப்பட்டன. குடும்பமொன்றுக்கு 60 ஆயிரம் ரூபாவை வழங்கி 6 மாதங்களுக்கு எங்காவது வாடகைக்கு இருக்கும்படி பணித்தனர். அந்த சிறிய தொகையைக் கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை அம்மக்களுக்கு. கூடிய விரைவில் அவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சில மாதங்களில் மேலும் பல குடும்பங்களையும் அங்கிருந்து வெளியேறும்படி பணித்தனர். ஏற்கெனவே வெளியேறிய மக்கள் இன்னமும் நடுத்தெருவில் இருக்கும்போது தமக்கு மட்டும் எப்படி மாற்று வீடுகள் வழங்கப் போகிறீர்கள் முதலில் உடைக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று போக மறுத்தனர்.

1947 ஆம் ஆண்டு ஐ.தே.க உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரே ஒரு தடவை ல.ச.ச.க தலைவர் என்.எம்.பெரேரா மாநகர சபை மேயராக இருந்திருக்கிறார். மற்றும்படி 1956 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுகததாச மேயராக தெரிவானதிலிருந்து இன்று வரை கொழும்பு மாநகர சபை ஐ.தே.க வின் ஆட்சியில் இருந்து வருகிறது. எனவே இந்த குப்பை விவகாரத்தை இது வரை கையாண்டதில் ஐ.தே.க வுக்கும் பாரிய பொறுப்புண்டு.

கொழும்பு மாநகர ஆட்சியின் மீதான கோத்தபாயவின் தலையீடானது 2010-2014 வரையான காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஆனதன் பின்னர் தான் தொடங்குகிறது. உலக வங்கித் திட்டத்தின் கீழ் கொழும்பு நகர அபிவிருத்திக்கு பெருமளவு நிதி அந்த அமைச்சுக்குக் கிடைத்தது. குப்பைகளை மீள் சுழற்சிக்கு உள்ளாக்குதல், உரம் தயாரித்தல், அவற்றைக் கொண்டு, மின்சக்தி உற்பத்தி செய்தல் போன்ற திட்டங்களும் ஆராயப்பட்டுள்ளன. இதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டது. 


குப்பை வாங்க வந்த பிரித்தானியா
பிரித்தானிய நிறுவனம் ஒன்று இந்த குப்பைகளை விலைக்கு வாங்கி தரம் பிரித்து நாளொன்றுக்கு 4000 தொன் குப்பைகளை கப்பல் மூலம் எடுத்துச் செல்ல முன்வந்தது. அந்த குப்பைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகளை செய்வதற்கு நான்கு ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் கேட்டிருந்தது. அரசாங்கம் அதற்கு முன்வராத நிலையில் அந்த நிறுவனமே 400 பேர்ச்சஸ் நிலத்தை கடுவெல பிரதேசத்தில் வாங்கியிருப்பதாக சென்ற ஆண்டு உள்ளூராட்சி அமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்திருந்தார். (சக்ஹண்ட – 13.05.2016)

ஒன்றரை வருடங்களில் மீதொட்டுமுல்ல, பிலியந்தல ஆகிய இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதாக தெரிவித்திருந்த அந்த நிறுவனத்திடம் முன்னைய அரசாங்கம் அதிக கொமிசனை கேட்டிருந்தது. இதனை அந்த நிறுவனத்தின் தென்னாசியாவுக்கான முகவர்  நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அரசியல்வாதிகளுக்கு கொமிஷன் கொடுத்து இதனை சாதிக்க மாட்டோம் என்றார் அவர்.

மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவர்களை கைவிட்டுவிட்டு சிங்கப்பூருக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியது அங்குள்ள ஒரு நிறுவனத்திடம் இந்த பணியை ஒப்படைக்க. அது தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தென் கொரியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அனுப்பினார். அதுவும் தோல்வி. இன்னொருபுறம் குப்பைகளுக்கு பொறுப்பான கொழும்பு மாநகர சபையும் வழிகளைத் தேடியது. இந்த முத்தரப்பும் தத்தமது கொமிசன்களை அடைவதற்காக நடத்திய கயிறிழுத்தலின் விளைவே இன்றைய விபரீதம் என்கிறார் சமூக ஆய்வாளர் தர்ஷன ஹன்துன்கொட (SLVBLOG - ஆசிரியர்).

கொழும்பு குப்பைகளைக் கொண்டு ஒரு நாளைக்கு 240 MW மின்சாரத்தை தயாரிக்க ஒரு கனேடிய நிறுவனம் முன்வந்தது. அவர்கள் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்தார்கள். அவர்களிடம் லஞ்சமாக கேட்கப்பட்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை தர மறுத்த அவர்கள் வேண்டுமாயின் அந்தத் தொகையை ஏதாவது ஒரு சமூக நடவடிக்கைக்கு நிதியுதவியாக வழங்கத் தயாரென்று அறிவித்திருந்தது. கொமிஷன் சிக்கல்களால் அவர்களும் ஓடியே போனார்கள். இது நிகழ்ந்தது ஒரு வருடத்துக்குள் தான்.

இலங்கையில் குப்பை மீள்சுழற்சியை மேற்கொள்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி ஒரு அமெரிக்க நிறுவனம் அமெரிக்க தூதுராலயத்திடம் அலோசனை கேட்டது. ஏற்கெனவே மூன்று அமெரிக்க நிறுவனங்கள் இங்கு முயற்சித்து தோல்வியடைந்துவிட்டன. காலத்தையும் பணத்தையும் விரயமாக்காதீர் என்று விரட்டிவிட்டது தூதராலயம்.

இந்த குப்பை விடயத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகள், அதிகாரிகள், நிறுவனங்கள், மற்றும் அவர்கள் பேரம் பேசிய தொகை போன்ற பல்வேறு விபரங்கள் இந்த நாட்களில் சிங்கள ஊடகங்ககள் பலவற்றில் வெளியாகி இருகின்றன.

ஊழலில் சிக்கிய உயிர்கள்.
புத்தளத்தில் “குறுக்கால்” என்கிற பகுதியில் முன்னர் சீமேந்துக்கான மூலப்பொருட்களை அகலும் ஒரு நிலப்பகுதி இருக்கிறது. கைவிடப்பட்டிர்யுக்கிற அந்த பகுதி 30 ஹெக்ராயர் விஸ்தீரனமுள்ளது. அரசாங்கத்துக்கு ஏற்கெனவே பரிந்துரைக்குழு பரிந்துரைத்த நிலம் அது. கொழும்பிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அந்த இடத்தில் எதிர்வரும் 50 ஆண்டுகளுக்கான குப்பைகளை குவிக்குமளவுக்கு வசதியுள்ளது. மீதொட்டுமுல்லயிலிருந்து குருக்காலுக்கு 20 அடி கொள்கலன்கள் மூலம் ரயில் வழியாக எடுத்துச் செல்லும் திட்டம் இருந்தது. மீதொட்டுமுல்லயில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இருக்கக்கூடிய குப்பைகள் மட்டுமே தற்காலிகமாகத் தேங்கும். இதற்கான ரயில் பாதை சீரமைக்கும் திட்டமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. உலக வங்கியின் உதவியுடன் இந்தத் திட்டத்துக்கு 14 பில்லியன் ஒதுக்குவதற்கான தீர்மானத்தை 14.08.2014 அமைச்சரவை தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. 2014 வரவுசெலவு திட்டத்திலும் கூட இது உறுதி செய்யப்பட்டிருந்தது. 2015 அரசாங்கம் மாறியதுடன் அமைச்சர்களும் அவர்களின் புதிய வேலைத்திட்டங்களும் இந்த திட்டத்தின் மீதான கவனத்தை திசை திருப்பி விட்டதுடன். ஊழலால் சிக்கி சின்னாபின்னமாக்கியது இந்தத் திட்டம்.
கோத்தமாலாவில் இப்படி குப்பை சேகரிக்கும் பலர் குப்பை மலை சரிந்து மாண்டார்கள் - 2016
கோத்தமாலா – எத்தியோப்பியா
இந்த குப்பை மலை சரிந்து விழுந்து ஆபத்தை விளைவிக்கவிருக்கிறது என்று மூன்று வருடங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் அனுருத்த கருணாரத்ன எச்சரித்திருந்தார். அது ஞாயிறு “லங்காதீப” பத்திரிகையில் முன் பக்க செய்தியாக வெளிவந்துமிருந்தது. அவரது எதிர்வுகூரலை கிஞ்சித்தும் எவரும் கணக்கில் எடுக்கவில்லை. சிலவேளை இதே எதிர்வுகூரலை ஒரு சோதிடர் தெரிவித்திருந்தால் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும்.

சென்ற வருடம் இதே ஏப்ரல் மாதத்தில் 27ஆம் திகதி கோத்தமாலாவின் தலைநகரில் நிகழ்ந்த குப்பைமேட்டு சரிவில் 24 பேர் புதைந்து போனார்கள். தினசரி அங்கு வந்து குப்பை பொறுக்குவோர் பலர் அதில் இறுகினர். சென்ற மார்ச் மாதம் 14 ஆம் திகதி எத்தியோப்பிய தலைநகர் அடிச அபாபாவில் நிகழ்ந்த குப்பைமேட்டுச் சரிவில் 113 பேர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் புதையுண்டன. அங்கும் பலர் காணாமல் போனார்கள். இந்த உதாரணங்களைப் பார்த்தாவது இலங்கை அரசாங்கம் விழிப்புற்றிருக்க வேண்டும். ஆனால் மாறாக விசதரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
“இறுதின” என்கிற பத்திரிகை (05.06.2016) 
என்றாவது இந்த குப்பை மலை சரிந்து தான் சாவோம்!
இந்த அநியாயத்தை பதிவு செய்த “இறுதின” என்கிற பத்திரிகை (05.06.2016) வெளியிட்ட கட்டுரைக்கு வைக்கப்பட்ட தலைப்பு “என்றாவது இந்த குப்பை மலை சரிந்து தான் சாவோம்!” என்பது தான். அதனைக் கூறியவர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழைத் தாயொருவர்.

மூன்றாம் உலக நாடுகளில் இன்று தலைதூக்கிவரும் முக்கிய பிரச்சினையாக “குப்பை பிரச்சினை ஆகியிருக்கிறது”. இந்த ஏழை மக்கள் பாதிக்கப்படுவது வெறும் குப்பை சரிவினால் மாத்திரமல்ல. இந்த குப்பைகல் உருவாக்கும் விஷ வாயு, இந்தக் குப்பைகளால் உருவாகும் கிருமிகள் என்பன விதவிதமான நோய்கள், சுவாசப் பிரச்சினை என அனைத்துக்கும் முகம் கொடுக்கின்றனர். மீதொட்டுமுல்லவைச் சூழ கொசுப் பிரச்சினை, “டெங்கு” நோய் போன்றவற்றால் ஏற்பட்ட இறப்புகள் பற்றிய செய்திகள் நல்ல உதாரணங்கள். அந்த பகுதியை பஸ்கள் தாண்டிச் செல்லும் போது தூரத்திலயே மோசமான தாங்க முடியாத நாற்றத்தை உணர முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளோடு இங்கு தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இரு வருடங்களுக்கு முன்னர் அங்கு வாழும் 1000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 60% மானோர் சிலவகை நோய்களுக்கு ஆளாகியிருப்பதாக அறிக்கையிட்டார்கள். அங்கு வாழும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற நோய்கள் பற்றிய விரிவான விசேட கட்டுரையொன்றை “திவய்ன” பத்திரிகை (29.05.2016) வெளியிட்டிருந்தது. சென்ற ஆண்டு Amy Nordum எனும் நிறுவனம் 192 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் பொலிதீன்களை கடலில் கொட்டும் நாடுகளில் இலங்கை 5வதாக இருப்பதாக அறிவித்திருந்தது. 

மீதொட்டுமுல்ல ஸ்ரீ ராகுல வித்தியால பாடசாலையை சிறுவர்களால் குப்பை மேட்டிலிருந்து பரவிய துர்நாற்றத்தை சுவாசிக்க முடியாமல் போனதால் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மூன்று மாதங்கள் மூடி வைத்திருந்தார்கள்.

ஜாஎல பகுதிக்கு இனிவரும் குப்பைகளை நிறைப்பதற்கு தீர்மானமெடுத்தது இந்த புதிய அரசாங்கம். ஆனால் அந்த பகுதியிலுள்ள மக்கள் நான்கு மதத் தலைவர்களின் தலைமையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்ததால் அந்த முயற்சியும் இழுபறிபட்டது.


மறக்க முடியுமா கொழும்பு வெள்ளம்
சில மாதங்களுக்கு முன் கொழும்பில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் போது அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று இந்த மீதொட்டுமுல்ல பிரதேசம். அதை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் நரகம் என்றால் என்ன என்பது. இந்த வெள்ளத்தின் போது குப்பைகளைக் கழுவிக் கொண்டுவந்த கருப்பு நிற எண்ணெய்த் தார் கழிவுகளாகத் தான் இந்த வீடுகளை வெள்ளங்களாக மூழ்கடித்தன. அந்த கருப்பு நிற கழிவு அடையாங்கள் இன்னமும் இந்த பிரதேசங்களில் உள்ள வீடுகளில் காண முடியும்.

மீதொட்டுமுல்லையில் இனி கொட்டமுடியாத நிலையில் கடந்த 18ஆம் திகதி கெஸ்பேவ நீதிமன்றம் இந்த குப்பைகளில் 350 தொன் குப்பையை பிலியந்தலவில் உள்ள கரதியான பகுதியில் தற்காலிகமாக கொட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அனால் சூழ உள்ள மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தபடி இருக்கிறது.

இன்று “எங்கள் பிரதேசங்களில் குப்பைகள் கொட்டவேண்டாம்’ என்கிற போராட்டங்கள் நாடெங்கிலும் வலுத்துள்ளது. ஊர்வலம் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், குப்பை வண்டிகளை விரட்டியடிப்பது என்று இந்த போராட்டங்கள் விரிவடைந்துள்ளன.
 “2011 இலிருந்து 15 ஆப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். அன்றைய மகிந்த அரசாங்கமும் அதன் பிறகு ரணில்-மைத்திரி அரசாங்கமும் பொலிஸ், இராணுவத்தை கொண்டு எங்களை மோசமாக கண்மூடித்தனமாக ஒடுக்கியது. இந்த குப்பை மேட்டை மேலும் விஸ்தரித்தது. அன்று எங்களை ஒடுக்கிய அதே இராணுவமும் பொலிசாரும் குப்பைக்குள் புதைந்த சிறுவர்களின் உடல் துண்டங்களை தேடி தேடி எடுத்துத் தந்து கொண்டிருக்கின்றன.” என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் நுவன் போபகே.
அடுத்ததாக தொம்பே, கரதியான, ஏகல, அருவக்காலு போன்ற இடங்கள் அடுத்த மீதொட்டுமுல்ல அனர்த்தத்துக்காக தயாராகின்றனவா என்கிற சந்தேகம் எழுவதில் என்ன பிழை.

தனியார்மயத்தின் விளைவு
அரசியல்வாதிகளின் பணம் காய்க்கும் மரமாக ஆனது இந்த குப்பைகள். இதற்கான 600 மில்லியன் டெண்டரை 800 மில்லியன்களுக்கு வழங்கி 200 மில்லியன்களை தமக்குள்ள பிரித்துக் கொண்டனர் மாநகர சபை ஆட்சியினர். தங்களுக்கு சொந்தமான பினாமி லொறிகளைக் கொண்டு குப்பை திரட்டி தமது வருமானத்தை பெருப்பித்துக் கொண்டனர். குப்பை லொறிகள், புல்டோசர்கள் அனைத்தும் டெண்டர் மூலம் தனியார்களுக்கு ஒப்படைக்கப்பட்டதில் ஏராளமான ஊழல் நிலவுகிறது. தனியார்மயத்தின் விளைவு வேறெப்படி இருக்கமுடியும்.

இன்று “எங்கள் பிரதேசங்களில் குப்பைகள் கொட்டவேண்டாம்’ என்கிற போராட்டங்கள் நாடெங்கிலும் வலுத்துள்ளது. ஊர்வலம் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், குப்பை வண்டிகளை விரட்டியடிப்பது என்று இந்த போராட்டங்கள் விரிவடைந்துள்ளன.

இந்த குப்பைகள் மக்களின் குப்பைகளின் தான் என்பதை ஏற்குமளவுக்கு அவர்களின் மத்திய தர வர்க்க குனாம்சம் விடவில்லை என்றே கூறவேண்டும். அவர்களுக்கு இது நம்மெல்லோரினதும் பிரச்சினை என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசு கண்டுள்ள தோல்வியின் விளைவு இது.

இப்போது சகல அரசியல் கட்சிகளும் இதற்கான குற்றச்சாட்டை எதிர் தரப்பின் மீது சுமத்திவிட்டு தப்பிப்பதும், அரசியல் லாபம் சம்பாதிப்பதுமே நிகழ்கிறது.

மூன்றாம் உலக நாடுகளிலெல்லாம் இத்தகைய குப்பை மேடுகள் ஏன் ஏழைகள் வாழும் சேரிகளை அண்டி உருவாக்கப்படுகின்றன என்பதை வர்க்கக் கண்ணோட்டத்துடன் தான் பார்க்க வேண்டும். மாறாக குப்பை மேடுகளை தேடிப்போய் சேரிகள் அமைக்கப்படுகின்றன என்கிற புனைவுக்கு வெகுஜன மனநிலை ஆளாக்கப்பட்டிருக்கிறது. குப்பைகளை இப்படி குவிப்பதற்கு கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் போன்ற பகுதிகள் ஒரு போதும் தெரிவு செய்யப்படாததற்கு இடம் இல்லை என்பது மட்டும் காரணமில்லை. இவர்களின் குப்பையும் சேர்த்து ஏழைகளின் தலையில் கொட்டும் அரசியல்; வர்க்க அரசியலே. முன்னிலை சோஷலிச கட்சியினர் இந்த நாட்களில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். “குப்பை பிரச்சினை! வர்க்கப் பிரச்சினையே” என்கிற அந்த சுலோகம் மிகச் சரியானது.

மீதொட்டுமுல்ல மக்கள் அரசாங்கத்திடமிருந்து வேறு எந்த சலுகைகளையும் கேட்கவில்லை அவர்கள் கேட்டதெல்லாம் எங்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்க வழி செய்யுங்கள், சுகாதாரமாக வாழ வழிவிடுங்கள்  என்பது தான். 

மக்கள் பணத்தினை இடையில் நின்று கொள்ளயடிப்பவர்களால் ஆன சாவுகள் இது என்பதை இன்று உலகம் அறிந்துள்ளது. இதன் உச்சமாக ஒன்றை நினைவு கொள்ளவேண்டும். முதலில் கண்டெடுக்கப்பட்ட 14 சடலங்களின் இறுதிச் சடங்கு ஒன்றாகவே நிகழ்ந்தது. அரசே அதற்கான செலவுகளைப் பொறுப்பேற்று இருந்தது. ஊர்வலத்தின் போது தரம் குறைந்த அந்த சவப்பெட்டிகளில் இருந்து ஆணிகள் கழன்று விழுந்ததாக பத்திரிகைச் செய்தியொன்றைக் கண்டேன். இந்தக் களவானிகள் சாவையும் விட்டுவைக்கவில்லை. சவப்பெட்டியையும் விட்டுவைக்கவில்லை.

பணத்தைத் தான் விட்டுவைக்கவில்லை. என் பிணத்தையும் கூடவா என்று உள்ளிருந்து எழுந்த சாபக் குரல் யாருக்குக் கேட்டிருக்கும்.

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates