Headlines News :
முகப்பு » , , , , » “1972: அடிமைச் சாசனம்” (99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 12) - என்.சரவணன்

“1972: அடிமைச் சாசனம்” (99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 12) - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 12
கொல்வின் ஆர் டீ சில்வா
“ஒரு தடவை பாதிக்கப்பட்டால்  அதன் பின்பு கவனமாக நடக்க வேண்டும். என்னிடம் இரண்டு ஒப்பந்த பத்திரங்கள் இருக்கின்றன. முதலாது எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க  கையெழுத்திட்டது. மற்றது டட்லி சேனநாயக்க கையெழுத்திட்டது.  இரண்டிலும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் நிறைவேற்றப்படவில்லை. 1960 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பல வாக்குறுதிகளை அளித்தது. நமது ஆதரவைப் பெற்று அரசாங்கத்தையும் அன்றைய அரசாங்கத்தையும் தோற்கடித்தது. ஆனால் பதவிக்கு வந்ததும் எல்லா வாக்குறுதிகளையும் கைவிட்டது... எனவே சிங்களத் தரப்பினரின் "வாக்குறுதிகளை" மட்டும் வைத்துக் கொண்டு ஆதரவளிக்குமாறு தமிழ் மக்களை கேட்க நான் தயாரில்லை”
இதைக் கூறியவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம். தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த எப்.எக்ஸ்.மார்டினுக்கு (Cyrillus Xavier Martyn) அனுப்பிய கடிதத்திலேயே அப்படி அவர் குறிப்பிட்டிருந்தார். அரசியல் நிர்ணய சபை தமிழ் மக்களின் எந்த அபிலாஷைகளையும் உள்வாங்கத் தயாரில்லாததால் அந்த சபையை விட்டு வெளியேற எடுத்த முடிவை மார்டின் நிராகரித்திருந்தார். தமிழ் மொழிக்கு உரிய இடத்தை அளிப்பதாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனக்கு வாக்குறுதி அளித்திருப்பதாகவும் எனவே அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் மார்டின் வாதிட்டிருந்தார். அந்த நிலைப்பாடு குறித்து அவருக்கு அனுப்பிய இரண்டாவது கடிதத்திலேயே செல்வநாயகம் அவாறு குறிப்பிட்டிருந்தார். அக் கடித்தத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்,
“சிங்களத் தலைவர்கள் வாக்குறுதிகளைத் தருவார்கள். நிறைவேற்ற வேண்டிய கட்டத்தை நெருங்கியதும் நாங்கள் என்ன செய்வது மக்கள் எதிர்க்கிறார்கள் என்று கையை விரித்துவிடுகிறார்கள்.” என்றார்.
மார்டின் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டதால் 15.7.71 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

‘பண்டா-செல்வாவாக’ இருக்கட்டும், ‘டட்லி-செல்வாவாக’ இருக்கட்டும் இவை ‘சிங்கள-பௌத்த’-மைய அரசியலை மாற்றாது, அதற்குள்ளான ஒரு சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகளாகவே இருந்தன. இவை அனைத்துமே நேர்மையாகவும், இதய சுத்தியுடனும் சிங்களத் தரப்பால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல. மாறாக சந்தர்ப்பவாத ஒப்பந்தங்கள். எனவே இதற்கான நடைமுறைப் பெறுமதி இல்லாமல் போனது. வெகு விரைவிலேயே காலாவதியானது.

எப்போதும் ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் என்பன இரு தரப்பும் விட்டுக்கொடுப்புகளையும், சமரசங்களையும், பேரங்களையும் செய்து ஒழுங்குக்கு வரப்படும். ஆனால் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை சமரசமும், விட்டுக்கொடுப்பும் சரணாகதிக்கு இட்டுச்சென்ற வரலாறையே ஒரு நூற்றாண்டாக அனுபவித்து வந்திருக்கிறது. சமரசத்துக்கு மறு பெயர் சரணாகதி என்கிற அர்த்தத்தையே வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது.

விலகலுக்கு உடனடிக் காரணம்
அரசியல் நிர்ணய சபையில் மொழி சார்ந்த நான்கு கோரிக்கைகளை தமிழரசு கட்சி சார்பில் பண்டிதர் இரத்தினம் முன்வைத்தார்.

சிங்களமும் தமிழும்
  1. சட்டங்கள் இயற்றப்படும் மொழிகளாக இருக்கவேண்டும்
  2. இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்க வேண்டும்.
  3. நீதிமன்ற மொழிகளாக இருக்க வேண்டும்
  4. எல்லாச் சட்டங்களும் பிரசுரிக்கப்படும் மொழிகளாக இருக்க வேண்டும்.
நான்கு நாட்கள் நடந்த இந்த விவாதத்தின் இறுதியில் அந்த கோரிக்கையை எதிர்த்து 87 எம்பிக்கள் வாக்களித்ததுடன் தமிழரசுக் கட்சியின் 13 எம்.பிக்கள் மாத்திரம் ஆதரித்து வாக்களித்திருந்தனர்.

இந்த குறைந்தபட்ச அடிப்படை மொழி உரிமையைக் கூட வழங்கமுடியாத அரசியல் நிர்ணய சபையால் தமிழ் மக்களுக்கு வேறெதுவும் சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு வந்த தந்தை செல்வா அந்த சபையில் இருந்து வெளியேறும் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இத்தனைக்கும் இந்த அரசியல் நிர்ணய சபையின் நிறைவேற்றுக் குழு அங்கத்தினராக செல்வநாயகமும் கடமையாற்றியிருந்தார். வெறும் கண் துடைப்புக்காகவே அவரை அந்த நிறைவேற்றுக் குழுவில் வைத்திருந்தது அரசாங்கம்.
“இந்த சபையில் கலந்து கொள்ள பிரதமர் அழைத்தபோது இதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்று எமது கட்சியினர் முன்வைத்தனர். ஆனாலும் பிரதமரின் அழைப்பை நாங்கள் ஏற்பது என்று முடிவு செய்தோம். யாப்பின் தன்மை, மலையக மக்களின் பிரஜாவுரிமை, அடிப்படி உரிமைகள் ஆகிய பல விடயங்களில் திருத்தங்கள் முன்வைத்தோம். அத திருத்தங்கள் யாவும் நிராகரிக்கப்பட்டன.
எமது குறைந்தபட்ச உரிமைகளை அரசியலமைப்புத் திட்டத்தில் சேர்க்கும்படி பிரதமருடனும், யாப்பு சீர்திருத்த அமைச்சருடனும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எத்தகைய மாற்றத்தையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில் மொழி உரிமைகளுக்கும் திருப்திகரமான தீரு கிட்டாததால் இந்த சபையில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை என்ற துக்ககரமான முடிவுக்கு நாம் வந்துள்ளோம். இந்த முடிவின் மூலம் எவருக்கும் துன்பத்தை ஏற்படுத்தவில்லை. எமது மக்களின் கௌரவத்தைப் பாதுகாக்க மட்டுமே விரும்புகிறோம்.”
என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்துக்கு தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் வகையில் முன்னால் செனட்டர் நடராசா அரசு அளித்திருந்த சமாதான நீதவான் பட்டத்தையும் உத்தியோகப்பற்றற்ற நீதவான் பட்டத்தையும் அந்த மாநாட்டில் வைத்தே துறப்பதாக அறிவித்தார்.

இலங்கை முழுவதும் இளைஞர் எழுச்சி
1970 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வாக இளைஞர்கல் மத்தியில் ஏலத் தொடங்கிய விரக்தியையும் எழுச்சியையும் கூறவேண்டும். தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களின் எழுத்தியை போல வடக்கிலும் துரோகங்களால் பொறுமை இழக்கும் இளம் சமூகம் கிளர்ந்துகொண்டிருந்தது. சிங்கள தரப்பை நம்பி ஒத்துழைத்து மோசம்போன கால கட்டம் முடிவுக்கு வருகிறது என்றும் இனி தமிழ் மக்கள் தனி வழியே போக வேண்டிய தருணத்தை எட்டிக் கொண்டிருக்கின்றனர் என்கிற உரையாடலும் வெகுஜனத் தளத்தில் முனைப்பு பெறத் தொடங்கியது.
விஜேவீர, லயனல் போபகே
1971 சிங்கள இளைஞர்களின் எழுச்சி தோல்வியுற்ற போதும் அது தந்த படிப்பினைகளில் ஒன்று இலங்கையில் ஆயுதப் போராட்டமானது சாத்தியமே என்பது தான். அந்தக் கிளர்ச்சியின் போது பீதிக்குள்ளான அரசாங்கம் உலக நாடுகள் பலவற்றிடம் உதவி கோரியிருந்தது. பிரித்தானியா, அமெரிக்கா, யுகோஸ்லாவியா, எகிப்து, சோவியத் யூனியன், இந்தியா, அவுஸ்திரேலியா மட்டுமன்றி பாகிஸ்தானிடமும் உதவி கோரியிருந்தது. பிராந்திய அரசியலில் இது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை உணர்ந்த இந்தியா உடனடியாகவே பெருமளவு இராணுவ உதவியை அரசாங்கத்துக்கு வழங்கி அந்த கிளர்ச்சியை நசுக்கியது.

ஜே.வி.பி கிளர்ச்சியாளர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்திந பங்காளிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்காரவையும் கூட கைது செய்திருந்தது.

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்து போவதற்காக நடத்தப்பட்ட போராட்டமும் திபாகினி என்று விடுதலைப் போராட்டத்தின் கெரில்லா நடவடிக்கைகளையும் தமிழ் இளைஞர்கள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினர். பங்களாதேஷ் விடுதலையடைய இந்தியா ஆற்றிய பங்களிப்பும் முக்கிய கவனத்தைப் பெற்றது. இந்தியாவின் நலன்ககள் ஆற்றிய பாத்திரம் ஒருபுறமிருக்க இந்தியா தனக்கு சாதகமான சக்திக்கு ஆதரவு வழங்கும் என்கிற நம்பிக்கை அதில் வெளிப்பட்டது.

அது மட்டுமன்றி அப்போது தான் கெரில்லா பாணியிலான கியூப புரட்சியும் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தது.

பங்களாதேஷ் வெற்றிக்குப் பாராட்டுச் செய்தியொன்றை தமிழரசுக் கட்சி இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்தது.

தமிழரசுக் கட்சியினர் இந்தக் காலத்தில் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக 1972 பெப்ரவரியில் தமிழ் நாட்டுக்கு சற்றுப் பிரயாணம் மேற்கொண்டனர். அந்தக் குழுவில் செல்வநாயகம், அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன் ஆகியோர் இருந்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த நடிகர்களையும் சந்தித்தனர்.

துக்க தினம்
இந்த எதிப்புகள் எதையும் பொருட்படுத்தாது குடியரசு அரசியல் அமைப்பை 22.05.1972 அன்று அரசாங்கம் நிறைவேற்றியது. அதனைப் பகிஷ்கரிப்பதென முடிவெடுத்த தமிழரசுக் கட்சி துக்க தினமாக பிரகடனப்படுத்தியது.
இந்த அரசிலமைப்பை ஆதரித்து இருந்தவர்கள் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களான வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா, நல்லூர் தொகுதி உறுப்பினர் சி.அருளம்பலம், தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மார்டின், மட்டக்களப்பு தொகுதி சுயேச்சை உறுப்பினர் இராஜன் செல்வநாயகம் ஆகியோரே. 

அந்த நாளன்று தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் பூரண துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பாடசாலைப் பகிஸ்கரிப்பு கடையடைப்பு, சிங்கக் கொடி எரிப்பு என்பனவும் மேற்கொள்ளப்பட்டன. கண்டனக் கூட்டங்கள் பல நிகழ்த்தப்பட்டதுடன் அரசியல் திட்டத்தின் பிரதியை தீயிட்டு கொழுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த எதிர்ப்பில் ஈடுபட்ட 70 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, இ.போ.ச.சுப்பிரமணியம், வண்ணை ஆனந்தன் ஆகியோர் அதில் உள்ளடங்குவர்.

நெருப்பிலிருந்து சட்டிக்கு
1972 அரசியல் யாப்பு தமிழர்களை சட்டியிலிருந்து அடுப்புக்கு விழவைத்த நிகழ்வு என்கிறார் விக்டர் ஐவன் (ராவய - 11.04.2014). தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கதிற்காக தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் சமஷ்டி கோரிக்கை குறித்து இனவாத கட்சியான "ஜாதிக ஹெல உறுமய"வின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஊடக மாநாட்டில் தமிழ் மக்களுக்கு தெரிவித்திருந்த எச்சரிக்கையும் அது தான். “நீங்கள் சமஷ்டி கேட்டு சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்துவிடாதீர்கள்" என்றார் சென்ற வருடம்.

விக்டர் ஐவன்

விக்டர் ஐவனின் அந்தக் கட்டுரையில்
“குறைந்த பட்சம் சோல்பரி யாப்பில் சிறுபான்மை இனங்களுக்கு இருந்த காப்பீட்டு வழிகளுக்கு கூட (அது பலவீனமாக இருந்தபோதும்) மாற்று ஏற்பாட்டை கொல்வின் வழங்கவில்லை. இது விடயத்தில் ல.ச.ச.க. வை ஆதரித்து பேசுபவர்கள் சுதந்திரக் கட்சியை மீறி சமசமாஜ கட்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பார்கள். ஆனால் அது அப்படியல்ல சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் செல்வாக்கு பெற்று இருந்தது. அமைச்சரவயிலும் போதிய செல்வாக்கு இருந்தது. இந்த யாப்பின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் தேவை இருந்திருந்தால் சமசமாஜக் கட்சி பிரதமரையும், ஆளும் கட்சியினரையும் உடன்பட வைத்திருக்க முடியும். ஆனால் சமசமாஜக் கட்சிக்கு அதை செய்ய எந்த அவசியமும் இருக்கவில்லை. சமசமாஜக் கட்சியும், கொம்யூனிஸ்ட் கட்சியும் சுதந்திரக் கட்சியுடன் கூட்டு சேர்ந்ததன் பின்னர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்வரும் கொள்கையை கைவிட்டுவிட்டு சுதந்திரக் கட்சியை விட மோசமான தமிழர் விரோதப் போக்குக்கு ஆளாகியிருந்தார்கள். இறுதியில் கொல்வினின் அரசியலமைப்பு தமிழ் மக்களை இலங்கை தேசத்திலிருந்து தனிமைப்படுத்தி தமக்கான அரசை உருவாக்கிக் கொள்வதற்கு தள்ளப்பட்டார்கள்.”
சமதர்மக் கொள்கையைக் கொண்ட கட்சியின் தலைமையில் இலங்கைக்கான அரசியலமைப்பை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்த வேளை சமத்துவமற்ற ஒரு அரசிலமைப்பை உருவாக்கி விட்டுச் செல்லும் நிலை எங்கிருந்து தொடங்கியது. ஆகக் குறைந்தபட்சம் மொழிச் சார்பற்ற, மதச் சார்பற்ற ஒரு அரசியலமைப்பைக் கூட உருவாக்க முடியாத அளவுக்கு இனவாதத்தில் ஊறிப்போனது தலைமை மட்டும்தானா அல்லது முழுக் கட்சியும் தானா. ஜே.வி.பியிலிருந்து கூட இதுவரை அதன் இனக்கொள்கை காரணமாக லயனல் போபகே, கெலி சேனநாயக்க, ரோஹித்த பாசன, முன்னிலை சோசலிசக் கட்சி போன்றோர் வேவ்வேறு காலங்களில் பிளவு பட்டு போயிருக்கிறார்கள்.

ஆனால் சமசமாஜக் கட்சியிலிருந்து அதன் இனப் பாரபட்சப் போக்கை எதிர்த்து எவரும் வெளியேறியதாக இல்லையே. அந்தளவு இனவாதத்தால் வளர்க்கப்பட்ட கட்சியாகத்தான் கொம்யூனிஸ்ட் கட்சியும், சமசமாஜக் கட்சியும் இருந்ததா என்கிற கேள்வியை வரலாறு விட்டுச் சென்றுள்ளது. 60 களில் அக்கட்சிகள் இனவாத அரசியலுக்கு எப்படி பரிமாற்றமடைந்தது என்பது பற்றிய நிறையவே ஆதாரங்கள் உள்ளன. 

“70 களில் சிங்கள பௌத்த உணர்வின் மேலாதிக்கத் தன்மையானது சிங்கள பௌத்தர்களில் சகல வர்க்கங்களையும், தெற்கின் முக்கிய கட்சிகளையும் தழுவியிருந்தது.,.” என்கிறார் கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா. “1972 யாப்பின் மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கம் சட்டபூர்வமாக்கப்பட்டது”. என்றும் அவரது “இன வர்க்க முரண்பாடுகள்” நூலில் விபரித்துச் செல்கிறார்.

உண்மை. அவர் விபரிப்பது போல 70களிலும், 80களின் முற்பகுதியிலும் சிங்கள பௌத்தர்களின் சகல சமூகப் பிரிவினரையும் கவரக் கூடிய வகையிலேயே இனவாதப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தன. சிங்கள பூர்ஷுவா பிரிவினரால் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட இத்தகைய இனவாத அரசியல் ஜனரஞ்சகமயப்படுத்தப்பட்டு சாதாரண தொழிலாளர்களும், விவசாயிகளும் கூட தூண்டப்பட்டனர். சாதாரண உழைக்கும் வரக்கத்தின் அடிப்படைப் பிரச்சினை திசைதிருப்பப்பட்டு “சிங்களவர்களுக்கு நேரும் அநீதிகளில் இருந்து” விடுவிக்க அணிதிரளுமாறு வெகுஜன மாயை கட்டியெழுப்பப்பட்டன. சிங்கள பௌத்த பேரினவாதம் மேலும் நிறுவனமயப்பட அந்த முன்னெடுப்புகளே துணை நின்றன.

தேசியம், இறைமை, சுயாதிபத்தியம், சுதேசியம் என்கிற விடயத்தில் 1972 யாப்பு ஆற்றிய பங்களிப்பு குறித்து பலர் பிரஸ்தாபிப்பார்கள். ஆனால் அது யாருக்கான தேசியம், யாருக்கான சுதேசியம் என்பது தான் நம்முன் உள்ள கேள்வி. அந்த யாப்பின் மூலம் பிரித்தானியாவிடமிருந்து இலங்கையை பூரணமாக விடுவித்தது என்று மார்தட்டிக் கொண்டாலும் சிங்களவர்களிடம் இருந்து தமிழ் மக்களுக்கு அந்த சுதந்திரமும், இறைமையும், விடுதலையும் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

சுயநிர்ணயம், சுயாட்சி, சமஷ்டி, அதிகாரப் பிரிவு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் இலங்கையை ஆட்சிசெய்த அரசாங்கங்களைப் பொறுத்தவரையிலும், பெரும்பான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் “பிரிவினைவாத”, “தமிழ் இனவாத”, :"ஏகாதிபத்திய நலன் காக்கும்” பயங்கரவாதப் பதங்களாகவே புனையப்பட்டு, பூதாரகரபடுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

1972-ம் ஆண்டு இலங்கையின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பை யாழ்நகர நாவலர் மண்டபத்தில் வைத்து எரித்து தீக்கிரையாக்கியதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார். அந்த யாப்பை 'அடிமைச் சாசனம்' என வர்ணித்தார். அந்த யாப்பு தமிழரின் கால்களில் விலங்கை மாட்ட்டியிருக்கிறது. ஆதலால் அந்த விலங்கை நாம் எதிர்க்கிறோம். தமிழ் மக்களின் உரிமைக்கான யாப்பு மாற்றங்களைச் சிங்களத் தலைவர்கள் செய்வார்கள் என்று நாம் ஒருபோதும் மனப்பால் குடிக்க முடியாது என்றார்.

1972 யாப்பு தமிழர் அரசியலில் எப்படி ஒரு திருப்பு முனையானது என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும் துரோகங்கள்...

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates