(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 13)
அத்தியாயம் பன்னிரண்டில் வரும் வன்னி கிராமங்கள் பற்றிய தகவல்கள் புள்ளி விபரங்கள் பலருக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கின்றன. எப்படி இந்த தகவல்களை எடுக்கின்றீர்கள் என்றும் கேட்டார்கள். ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டால் அது சுலபம் என்றேன். அடுத்தது வன்னி வாழ்வு என்பது என் வாழ்வில் இரண்டறக்கலந்தது. அதுபற்றி இன்னும் இன்னும் எழுதலாம். அங்கு வாழும் மலையக மக்கள் காமன் கூத்து கொண்டாடுவதையும், மார்கழி பஜனைப் பாடிக்கொண்டு 'கம்பம்' தூக்கி செல்வதையும் என் கண்கொண்டே பார்த்திருக்கிறேன். இதனை வடக்கு பூர்வீகத் தமிழர்கள் செய்யமாட்டார்கள். இவையெல்லாம் வன்னியில் மலையக அடையாளங்களாக இருந்தன. இன்றும் தொடர்கிறதா என்பதை அடுத்து வரும் அத்தியாங்களில் பேசலாம். இப்போதைக்கு இந்தத் தொடரின் தேவை கருதி வன்னியில் வாழும் மலையக மக்கள் எத்தகைய தொழில் செய்கின்றனர் என்பதற்காகவே பேச வேண்டியேற்பட்டது.
“தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு...”. என தலைப்பு. 'முள்ளுத்தேங்காய்' என்றால் என்ன என சிலர் சிலரிடம் பேசிக்கொள்வதாக சிலர் என்னிடம் கேட்டார்கள். அத்தியாயங்களை ஆரம்பத்தில் இருந்தே வாசித்தவர்களுக்கு இந்தப்பிரச்சினை இராது. இப்போதெல்லாம் முழுமையான தலைப்பில் கூட என்னிடம் விசாரிப்பதில்லை. அண்மையில் என்னைச்சந்தித்த ஒரு ராஜதந்திரி 'உங்களின் முள்ளுததேங்காய் தொடர்ச்சியாக வாசிக்கிறேன். அடுத்து என்ன தகவல் சொல்லப் போகிறீர்கள் எனும் ஆர்வம் ஒவ்வொரு வாரமும் ஆவலாக இருக்கிறது.' என வாழ்த்தினார். அவர் சொன்னது 'முள்ளுத்தேங்காய்' என்பது மட்டும்தான்.
'முள்ளுத்தேங்காய்' 12 ஆவது அத்தியாயம் வாசித்த பின்னர்தான் ராகலையிலிருந்து ராமலிங்கம் என்பவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதையே அறிந்துகொண்டேன் என ஒரு ஊடகவியலாளர் நன்றி தெரிவித்தார். ராமலிங்கம், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி தந்த இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர். முதலாமவர் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை (அவர் படித்த நாளில் ஹைலன்ஸ் கல்லூரிக்கு மெதடிஸ்ட் கல்லூரி என்று பெயர்), இரண்டாமவர் ஈரோஸ் தேசியப்பட்டியலில் வந்த ராகலை ராமலிங்கம் மாஸ்டர். மூன்றாமவர் மலையக மக்கள் முன்னணி ஸ்தாபகர் பெ.சந்திரசேகரன். நான்காவதுதான் நான் என மேலதிக தகவல்களையும் அவருக்குச் சொல்லிவைத்தேன். அப்படியா என ஆச்சரியப்பட்டவருக்காக இந்த தகவல்களை இங்கே எலலோருக்குமாகப பகிர்ந்து கொள்கிறேன்.
'முள்ளுத்தேங்காயின்' பின்னணியில் பெண் தொழிலாளர்கள் துஸ்பிரயோகம் செய்வது தொடர்பாக ஆய்வொன்றை செய்யப்போவதாக ஒரு பெண்ணிய ஆய்வாளர் தொடர்பு கொண்டார். அவசியமான ஆய்வு. இந்த கட்டுரைத் தொடர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பதில் மகிழ்ச்சி. புதிய ஆய்வுகளுக்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
'உங்கள் தொடர் வாசித்தேன். மலையகத்திற்கு வரப்போகும் எதிர்கால தொழில்சார் ஆபத்து பற்றிய ஒரு முன்னோட்டத்தைப் பதிவு செய்கிறீர்கள். கட்டாயமாக மலேசியாவில் நம்மவர் படும் துயரங்கள் இன்னும் விரிவாக எடுத்துச் சொல்லப்படல் வேண்டும். கபாலியில் காட்டப்படுவது கொஞ்சம்தான். அங்கே நிலைமைகள் மோசமானது' என மலேசியாவில் கல்விகற்றுத் திரும்பியிருக்கும் இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.
'தேங்காய் எண்ணை உற்பத்தி பற்றிய விவாதம் ஒன்று பாராளுமன்றில் முன்வைப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதன்போது இந்த 'முள்ளுத்தேங்காய்' எண்ணை ஒரு பதிலீடாக இருக்குமா ? என ஒரு கேள்வியைப் போட்டேன். 'முள்ளுத்தேங்காய்' உடலுக்கு மட்டுமல்ல சூழலுக்கும் கூடாது அது நிறுத்தப்படல் வேண்டும் என வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா கருத்துத் தெரிவித்தார்.
இப்போதெல்லாம் தேங்காய் எண்ணைக்குள் முள்ளுத்தேங்காய் எண்ணை (Palm oil) கலப்படம் செய்யப்படுவதாகவும் அது குறித்த அவதானம் தேவை என அண்மையில் ஒரு செயலமர்வில் விளக்கம் அளிக்கப்பட்டதாக ஒருவர் என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். இது குறித்த மேலதிக தகவல்களை அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள விழைகிறேன். கிடைத்ததும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
இந்த வாரம் பகிர்ந்துகொள்ள வேண்டிய முக்கியமான உரையாடல் பதுளை 'பாரதி' ராமசாமியுடனான சந்திப்பு பற்றியது. யார் இந்த ராமசாமி?
ராமசாமி |
அரசாங்கப்பாடசாலைகள், பாடவிதானங்கள், அரசாங்க ஆசிரியர்கள் என எதுவும் தொடர்பற்று 'தோட்டப்பாடசாலைகள்' என தோட்ட முதலாளிகளின் பிடியில் மாத்திரம் கல்வி இருந்து வந்த நிலையில் அரசாங்கம் நமக்கான பாடசாலைகளைப் பொறுப்பேற்று நடத்தாவிடில் நமது பாடசாலைகளை நாமே உருவாக்குவோம் என அந்த நாளிலேயே பாடசாலை ஒன்றை உருவாக்கியவர்தான் இந்த ராமசாமி. இவரது பாடசாலையின் பெயர் 'பாரதி கல்லூரி'. பதுளை இரண்டாம் கட்டையில் இன்று பாரதி தமிழ் மகா வித்தியாலயமாக அரசாங்க பாடசாலையாக உயர்ந்து நிற்கின்றது.
மலையக கல்வி வரலாறு தொடர்பில் ஆரம்பித்திருக்கும் ஆய்வு கட்டுரையில் தன்னார்வ பாடசாலைகள் பின்னாளில் அரச பாடசாலைகளாக மாற்றம் பெற்றமை பற்றிய தகவல் சேகரித்து வருகிறேன். அத்தகைய பாடசாலைகளில் முன்னிற்பது பதுளை பாரதி வித்தியாலயம். இந்தப்பாடசாலையை ஆரம்பித்தவர் இந்த ராமசாமி என்பதனை நானறிந்திருந்தேன். இவரை பல தடவைகள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்திருந்தேன். விரிவாக உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில்லை. அண்மையில் எழுதிய வாழ்த்துச் செய்தி ஒன்றில் இவரது பெயரை ராமசாமி என்பதற்கு பதிலாக கந்தசாமி என தவறுதலாக நானே குறிப்பிட்டு விட்டேன். அதற்கு காரணம் இருந்தது. பூண்டுலோயா கந்தசாமி வித்தியாலயத்தை உருவாக்கியதும் மாத்தளை பாக்கியம் வித்தியாலயத்தை உருவாக்கியதும் கூட இரண்டு கந்தசாமிகள் தான். அதே ஞாபகத்தில் இவரையும் கந்தசாமி என குறிப்பிட்டுவிட்டேன் போலும். இவர் ராமசாமிதான் என தெளிவாக தெரிந்திருந்தும், இவரை எனக்கு அறிமுகப்படுத்திய தெளிவத்தை ஜோசப் அவரை 'ராம்' என அழைப்பது நன்றாகத் தெரிந்திருந்தும் எனது கையில் தவறு நிகழ்ந்திருப்பது கட்டுரை வெளியான பின்னரே தெரியவந்தது. ஒருவரின் பெயரை மாற்றிப்போடுவதும், படத்தை மாற்றிப்போடுவதும் ஊடகநாகரிகம் இல்லை என எண்ணுபவன் நான். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கவும், அவர் பாடசாலையை உருவாக்கிய பின்னணி குறித்து அவரிடம் தெரிந்துகொள்வதற்காகவும் அண்மையில் அவரைத் தேடிச்சென்றிருந்தேன்.
என்னுடன் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் உள்ளிட்ட பதுளை பிரதேச ஆசிரிய நண்பர்களான ராஜமாணிக்கம், மனோகரன், சேதுரட்ணம், சிவகுமார், தி.வி முருகன் எனகூட்டமாக பசறை பதின்மூன்றாம் கட்டை 'மெத்தக்கடை' பக்கத்தில் உள்ள அவரது வீட்டை அடைந்தபோது அந்தியாகிவிட்டது. அடைமழை ஒரு பக்கம். அவரின் உரையாடல் மழையோ மறுபக்கம். மலையக கல்வி வரலாற்றைத் தெரிந்துகொள்ள சென்ற எங்களுக்கு அவரது அரசியல்பார்வை, சமூகப்பார்வை, நமது அரசியல் மீதான விமர்சனப்பார்வை என ஏகப்பட்ட விடயங்களை அருவிபோல ஓடவிட்டார். அவரது ஒவ்வொரு கூற்றின் பின்னரும் நாங்கள் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டோம்.
'பாரதி பேருல எவன் பள்ளிக்கூடம் வச்சான் சொல்லுங்க... ஏதோ பதினோராம் தேதி வந்தா அவனுட்டு ரெண்டு பாட்டைப் போடுவாங்கே... நாங்கதான் அந்த நாளிலேயே பாரதி கல்லூரினு பேரு வச்சோம்.' நியாயமாக கோபப்பட்டார்.
'பசறையில விஞ்ஞான கல்லூரி உருவாக்க உதவி செய்ய வந்தீங்களா.. ம்ம்... நல்ல விசயம்...நல்ல விசயம்... நான் வைத்தியராக வர ஆசைப்பட்டேன். 1959 லேயே பதுளைக்கு விஞ்ஞானம் கற்பதற்கான பாடசாலை கேட்டுப் போராடினோம். நோட்டீஸ் எல்லாம் கூட கெடக்கு. இன்னும்தான் அது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்'
சலித்துக்கொண்டார்.
'அரசாங்கம் பாடசாலை கொடுக்காட்டி.... நாம உருவாக்கனும்... ஏன் முடியாது.? ஏன் முடியாதுங்கிறேன். நான் சும்மா கிடந்த கோயிலை திறந்து பள்ளிக்கூடம் தொடங்கினேன். (அப்படியா என நான் ஆச்சரியமாகக் கேட்டேன்.) ஆமா.... கோயிலைக் கட்டி அங்க வசூல் வராட்டி நம்மாளு கடவுளையும் கைவிட்டிருவான்.. (வாய்விட்டு சிரித்து விட்டேன்) அப்பிடி கைவிட்ட கோயில்தான் இன்னைக்கு பாரதி வித்தியாலயம். என்னோடு வேலை செஞ்ச ஆசிரியர் மாரெல்லாம் நல்லா ஒத்தழைச்சாங்க. தனியா என்னால நடத்த முடியல. அரசாங்கத்தை பொறுப்பேற்கச் சொல்லி கடுதாசி எழுதிக்கிட்டே இருந்தேன். நான் எழுதின கடுதாசி பற்றி ஒரு அமைச்சர் பாராளுமன்றத்துல பேசி இருக்கிறதாகவும் அது 'ஹன்சாட்ல' வந்திருப்பதாகவும் சமீம் (எம்.எம்.சமீம் - சாகித்ய ரத்னா விருதுபெற்ற முற்போக்கு எழுத்தாளர்) எனக்கு தகவல் சொன்னான். அந்த நாளிலேயே அஞ்சாறு கொப்பி வாங்கி வச்சிட்டேன். பின்னாளில் அதுதான் உதவுனுச்சி. அரசாங்கத்துக்கு பொறுப்பு கொடுத்துட்டேன். இன்னைக்கு பாரதில படிச்சி ஒரு பையன் 9 ஏ எடுத்துருக்கான் கேட்க மகிழ்ச்சியா இருக்குல்ல'
மகிழ்ச்சி தெரிவித்தார்.
'தோட்டங்களை நடாத்த முடியாட்டி எங்க மக்களுக்குக் கொடுங்க. அவிங்களுக்கு தெரியும் தேயிலைத் தோட்டம் செய்ய. இருநூறு வருஷமா நாங்க இதைத்தானே பண்ணுறோம். எங்களுக்கு தெரியாததா கம்பனி காரனுக்கு தெரியப்போகுது. தேயிலை மலைக்கு இடையில வெட்டியிருந்த நெத்திக்காணுக்கெல்லாம் என்னாச்சி..? அதை பராமரிக்காம தண்ணியெல்லாம் அப்பிடியே அடிச்சிக்கிட்டு போனா தேயிலைக்கு ஏது தண்ணி..அது எப்பிடி வளரும். வறட்சியில காயும். தேயிலை அழியும். இப்போ தமிழ் நாட்ட பாருங்க வரட்சினு விவசாயி எல்லாம் போராடுறான். அவிங்க என்னடானா ரொக்கட் உட்டுக்குட்டு இருக்காங்கே. எனக்கென்னவோ இருநூறு வருஷத்துக்கு முன்னாடி நாம இங்க வந்தது தமிழ்நாட்டுல வந்த வறட்சினால பஞ்சம் பொழைக்க முடியாமதான். அந்த நெலமை திருப்பி வந்திரும்போல.'
அய்யா, இந்த சுழற்சி முறையை குறிக்கிற மாதிரிதான் நான் 'தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு' னு ஒரு தொடர் கட்டுரை எழுதுறேன். நாம் தொழில் அடிப்படையில் நிரந்தரமில்லாமல் ஒரு சுழற்சி முறையில அழிக்கப்பட்டு வருகிறோம்னு நான் நினைக்கிறேன். இலங்கையில் வாழ்ற நாம தேயிலை, றப்பர இழக்கிறோம் இந்தியாவுக்கு போனவுங்களுக்கு இதுதான் தொழில்னு நிரந்தரமில்ல. வன்னிக்கு போனவங்க நிலைமையும் மோசமாகத்தான் இருக்குது... களுத்துறை பக்கம் 'கட்டுப்பொல்' (முள்ளுத்தேங்காய்) னு 'பாம் ஒயில்' உற்பத்தில நம்ம ஆளுக மிகுந்த சிரமப்படுறாங்க என்றேன்.
'ஆமா..ஆமா.. நீங்க எழுதுறது பேசுறது எல்லாம் வாசிச்சிக்கிட்டுதான் இருக்கேன். இந்த 'பாம் ஒயில்' கூடாத சாமான்னு இருபது வருஷத்துக்கு முன்னாடியே ஆனந்தவிகடன்ல ஒரு கட்டுரைப் படிச்சேன்.. அடுத்த முறை வாங்க எடுத்து வைக்கிறேன்'
'முள்ளுத்தேங்காய்னு என்னா எழுதிகிட்டு இருக்காரு..? என்று ஒரு எழுத்தாளர் தன்னிடம் கேட்டதாக ஒரு வாசகர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். பாரதி ராமசாமி எனும் முதியவரின் முதிர்ச்சியைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
விடைகொடுக்க மனமில்லாமல் விடைபெற்றோம். ஒரு சிந்தனையாளனாக எளிமையாக எண்பத்தைந்தாவது அகவையில் வாழ்ந்துகொண்டிருக்கும் 'பாரதி' ராமசாமி. உண்மையிலேயே ஒரு பாரதிதான்.
(உருகும்)
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...