Headlines News :
முகப்பு » » வட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மானமும் சி.எஸ்.சி மண்டபமும் - மல்லியப்புசந்தி திலகர்

வட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மானமும் சி.எஸ்.சி மண்டபமும் - மல்லியப்புசந்தி திலகர்


சுமார்  இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்புத் தமிழச் சங்கத்தில் மலைநாட்டு எழுத்தாளர்  மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமதி. கிறிஷ்டி வில்சன் எழுதி, இரா.சடகோபன் தமிழாக்கம் செய்த ‘கசந்த கோப்பி’ நாவல் வெளியீட்டின்போது கருத்துரை வழங்குவோரின் பட்டியலில் என்னோடு அமர்ந்திருந்தவர்  நண்பர்  சுதர்ம மகாராஜன். அதற்கு முன்னர்  அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் அன்றுதான் முதல் அறிமுகம். வவுனியா - மலையகம் என இரண்டு பிரதேசங்களை இணைத்துப் பிறந்து, கண்டியில் வாழும், வளமான சிறுகதை எழுத்தாளர் , ஓவியர் , இலக்கிய செயற்பாட்டாளர் சுதர்ம மகாராஜன். கிடைக்கும் அறிமுகங்களை இலக்கிய செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்திக்கொள்பவர்.

அறிமுகம் முதல் அடிக்கடி தொலைபேசியில் உரையாடும் நண்பர்  சுதர்மன் ஒருமுறை ‘இளைஞர்கள் நாங்கள் ஒன்றுகூடி இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு களம் தேவை, தொடர்ச்சியாகவும் குறைந்த செலவிலும் ஒரு இடம் ஒன்றை ஹட்டனில் அறிமுகப்படுத்த முடியுமா..?’ எனும் வேண்டுகோளை முன்வைத்தார். அவரது நோக்கம் எனக்கு பிடித்திருந்தது. ஹட்டன் எனக்கு புகுந்த வீடு. மயில்வாகனம் திலகராஜாவாக மடகொம்பரையில் பிறந்து உயர்தரம் படிக்கவென்று ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு வந்து சேர்ந்து, பின்னர்  மல்லியப்பு நகரில் (லோயல்) கல்வியகம் நடாத்தி, அங்கிருந்தே இலக்கிய பிரவேசமும் செய்து ‘மல்லியப்புசந்தி திலகர்’ ஆனவன் நான். எனவே ஹட்டனில் அதிகம் அறிமுகம் இருந்தது, இருக்கிறது.
சுதர்மனின் வேண்டுகோளுக்கு ஏற்றாற்போல் எனக்கு மனக்கண்ணில் வந்தது ஹட்டன் சி.எஸ்.சி மண்டபம். ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அந்த கட்டடம் மதம்சார்  சமூக சேவை நிறுவனமாயினும் மலையக சமூகம் சார்ந்து பல்வேறு சந்திப்புகளையும் கூட்டங்களையும் நடாத்திய வரலாற்றுக் களம். தமிழ்நாட்டில் -மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் -அமைத்து செயற்படுவதற்கு  அருட்பணி. அல்போன்ஸ் , இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றோருக்கு  ஆரம்ப களமாக இருந்த இடம் இந்த மண்டபம்.

 வட்டுக்கோட்டை தீர்மானம் எந்தளவுக்கு வடக்கு கிழக்கு அரசியலுக்கு முக்கியமானதோ அந்தளவுக்கு மலையக அரசியலில் ‘ஹட்டன் தீர்மானம்’ முக்கியமானது. ஆனால் அது பற்றி இன்னும் பெரிதாக பேசப்படவில்லை.

மலையக மக்கள் தொடர்ச்சியாக இனவாத துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்தபோது அவர்கள் தொடர்ந்தும் மலையகத்திலேயே இருப்பதா? அல்லது தமிழகத்துக்கு (தாயகம்) மீளவும் திரும்பி செல்வதா? எனும் மிக முக்கிய கேள்வியை முன்னிறுத்தி ஹட்டனில் நடந்த மலையக அறிவு ஜீவிகளின் மாநாடு நடைபெற்ற களம் இந்த மண்டபம் என அறியமுடிகின்றது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ‘நூற்றியைம்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டிற்காக உழைத்து இலங்கையை வளமான ஏற்றுமதி நாடாக மாற்றிய, உழைப்பாளர்களாகிய நாம் இந்த மண்ணையே நமது மண்ணாகக் கொள்ள வேண்டும். மலையக மண்ணிலேயே வாழ்வோம். யாரும் அடித்தால் திருப்பி அடிப்போம்’ என்பதாக அந்த ‘ஹட்டன் தீர்மானம்’ அமைந்ததாக மு.சிவலிங்கம் அவர் கள், வி.டி.தர்மலிங்கம் அவர்களின் ‘மலையகம் எழுகிறது’ நூல் வெளியீட்டில் தலைமையுரை ஆற்றியபோது கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த முன்மொழிவைச் செய்தவர்  தற்பொது பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் உபபீடாதிபதியாக விளங்கும் வி.செல்வராஜா (எனது ஆசிரியர் ) எனவும் மு.சிவலிங்கம் அவர்கள் கூறியதாக நினைவு.

 இந்த இருவரும் தற்போது மலையக சமூக, கலை இலக்கிய பணிகளில் செய்றபாட்டாளர்கள் என்ற வகையில் ‘ஹட்டன் தீர்மானம்’ பற்றி எழுத்தில் பதிவு செய்வார்கள் எனில் அது இன்றைய மலையக இளைய சமூகத்துக்கு பயனுள்ள பல தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கலாம். அதற்கான ஆரம்பப் புள்ளியாகவே இந்த பத்தி இடம்பெறவேண்டும் என எண்ணுகிறேன்.

1991-1993 காலத்தில் உயர் தரம் படித்த காலத்தில் இருந்து பின்னாளில் 2000 ஆம் ஆண்டு லோயல் கல்வியகத்தில் இருந்து தலைநகர்  நோக்கி வரும் காலம் வரை எனக்கும் இந்த சி.எஸ்.சி (Centre for Social Concern) நிறுவனத்திற்கும்  தொடர்பு இருந்தது. அப்போது அங்கு பணிப்பாளராக பணியாற்றிய அருட்பணி. மரிய அந்தனி அவர்கள் மலையக சமூகம் சார் ந்து காட்டிவந்த அக்கறை அந்த நிலையத்துடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் நிலவிய உள்ளக இன முரண் பிரச்சினைகள் சமூக பிரச்சினையாக வெளிகிளம்பியபோது நானும் நண்பர் பொன்.பிரபா (புதிய பண்பாட்டு அமைப்பு), Fr.மரிய அந்தனி போன்றோர் களத்தில் நின்று செயற்பட்டிருந்தோம். 

சி.எஸ்.சி.  நிலையத்தின் ஊடாக இந்திய (தமிழக) கல்லூரிகளில் மலையக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் Fr. மரிய அந்தனியின் பங்கு மறக்க முடியாதது. இலங்கையில் பல்கலைக்கழ வாய்ப்பினை இழந்த பல மாணவர்களுக்கு இந்த நிலையம் தமிழகத்தில் அந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்து வருகிறது. என்னுடைய  மாணவர் களான பீரிஸ், மகேந்திரன், (தற்போது இருவரும் ஹட்டன் பகுதியில் பிரபல ஆசிரியர்கள்) தனகுமார்  (தற்பொது அரசசார்பற்ற நிறுவனமொன்றில் உயர்  பதவி வகிக்கிறார் ) போன்றோரும் நண்பர் களான ஜூட் மெலிட்டஸ், எம்.முத்துக்குமார் , கிருபாஹரன் போன்றோரும் இந்த நிலையத்தின் ஊடாக புலமைப்பரிசில் பெற்று இன்று பட்டதாரிகளாகவும் உயர்  பதவிகளிலும் இருப்பவர்கள். அருட்பணி. மரியஅந்தனி, முன்னாள் கந்தப்பளை பிரதேச பாடசாலை அதிபர்  திரு.பிலிப் ராமையா போன்றோருடன் கூட எனக்கு தொடர்புகள் ஏற்பட்டது இந்த நிலையத்தின் ஊடாகத்தான்.

இந்த நிலையத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப்பாக இருந்தவர்  அருட்பணி. பெனி அவர்கள். இவரும் பொகவந்தலாவையில் பிறந்து வளர்ந்து  இந்தியாவில் கல்வி கற்றவர். நான் லோயலில் பணியாற்றிய காலத்தில் சி.எஸ்.சி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணிவந்த நண்பரும் ஆசிரியருமான முத்துக்குமார்  (ஹட்டன்) அருட்பணி. பெனி அவர்களை அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருந்தார். 

வெளியில் இருந்து வரும் ஆளுமைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. விரிவுரைகளை நடாத்துவது எனும் பண்பாட்டை லோயல் கல்வியகத்தில் பேணிவந்தேன். அவ்வாறு பாளையம்கோட்டை சேவியர்  கல்லூரியில் இருந்து வந்திருந்த  பேராசியர். இமானுவேல் ராஜ்  அவர்களை திரு.பிலிப் ராமையா அவர்கள் அழைத்து வந்தமையும் அவரைக் கொண்டு ஒரு விரிவுரை நடத்தியமையும் கூட நினைவுக்கு வருகிறது. 

கல்வியக பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த ஒரு ஜப்பானியர், ஒரு பேராசியரியர்  என்பதையும், அவர்  மலையக மக்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்  என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு அவரைக்கொண்டு ஒரு விரிவுரை நடாத்தியதும் நினைவு இருக்கிறது. அவர் அறிமுகமான அந்த நாளில் நானூறு ரூபா சம்பள உயர்வுக்கான மல்லியப்புசந்தி போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அவரை இரவு ஒரு மணிக்கு அழைத்துசென்று போராட்ட இடத்தை ஆய்வு செய்யச்சொன்னேன். புன்னகையுடன் திரும்பி வந்தார். உயரமாக அமைக்கப்பட்ட மேடைக்கு அடியில் திரைப்படக்காட்சியும் சாராய பரிமாறல்களும் நடக்கும். அதுவே ‘மல்லியப்புசந்தி’ என எனது பதிவானது. 

 இன்றுவரை என்னுடன் தொடர்புகளைப் பேணிவரும் ஜப்பானிய பேராசிரியர்.கவாசிமா கொஜி, வரலாற்றுத்துறை சார்ந்து, குறிப்பாக தென்னாசிய, இலங்கை வரலாற்று விடயங்கள் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மிக அண்மையில் இலங்கை வந்திருந்தபோது எனது அலுவலகத்தில் நானும் நண்பர்கள் சிவம்.பிரபா, லெனின் மதிவானம் ஆகியோர் அவருடன்  கலந்துரையாடலைச் செய்திருந்தோம்.

அன்று கவிஞராக எனக்கு அறிமுகமான அருட்பனி.பெனி அவர்கள். இன்று ‘சூரியகாந்தி’ பத்திரிகையில்  ‘பெட்டுக்களம்’ எனும் களத்தில் மலையக வாழ்வியல் பத்திகளை எழுதி வருபவர் . இறுக்கமான மதகுருவாக அன்றி சரளமான நண்பனாக பழகும் இன்முகத்தவர் . இலக்கியம், சினிமா, அரசியல், தொழிற்சங்கம், சமூகம் என பல்வேறு விடயங்கள் குறித்தும் சம்பாஷிப்பவர்.  ‘போர்க்களப் பூபாளங்கள்’ (1996) எனும் கவிதைத் தொகுதியை தமிழகத்தில் கல்விகற்கும் காலத்திலேயே வெளியிட்டவர். அவரது கவிதையொன்று தமிழகத்தில் இவ்வாறு ஒலித்திருக்கிறது:

‘இந்தியர்கள் என்று 
ஏற்றுக்கொள்வார்கள் என
எண்ணியன்றோ நாங்கள் வந்தோம்..
இன்றோ.. இன்னும்
அன்னியர்களாகவே
அழைக்கப்படுகின்றோம்….’
இந்தக் கவிதையை வாசிக்கும்போது ‘ஹட்டன் தீர்மானம்’ எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பது புரிகிறது. 

மலையக மண் மீது அதிக பாசம் கொண்டவர்  அருட்பணி. (கவிஞர்.) பெனி. தொலைக்காட்சி, வானொலியில் ‘தவக்காலசிந்தனை’ க்காக பேச அழைத்தாலும்கூட அதில் மலையக மண்ணை இணைத்துப் பேசும் மண்வாசனைக்காரர். பொகவந்தலாவை பெட்ராசோ தோட்டத்தில்  சவரிமுத்து - செசலி தம்பதியருக்கு மகனாக பிறந்து, பொகவந்தலாவை ஹொலிரொசரி பாடசாலையில் கல்விகற்று, தமிழகத்தில் உயர்  கல்வியைத் தொடர்ந்து பின்னாளில் குருத்துவ வாழ்வில் இணைந்துகொண்டவர். இன்று ‘பாதர்  பெனி’ என எல்லோராலும் அழைக்கப்படும் சவரிமுத்து பெனடிக். இவரது சகோதரி திருமதி. வயலட்மேரி. தொழிலாளர்  தேசிய சங்கத்தின் உபதலைவர்களுள் ஒருவர். மாதரணி செயலாளர்.

அருட்பணி.பெனி அவர்களின் பொறுப்பில்தான் சி.எஸ்.சி மண்டபம் தற்போது இருக்கிறது என்கின்ற என் நினைவு சுதர்மனின் வேண்டுகோளை யதார்த்தமாக்கியது. சி.எஸ்.சியில் பணியாற்றி பின்னர்  தொழிலாளர்  தேசிய சங்கத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அரசியல்துறை பட்டதாரியான செ.கிருஸ்ணாவுக்கு அழைப்பெடுத்து Fr. பெனியிடம் பேசி சுதர்மன் குழுவினருக்கு மண்டப ஏற்பாட்டை செய்துகொடுக்குமாறும் இணைந்து செயற்படுமாறும் கோரினேன். எனது முதலாவது வேண்டுகோளை மாத்திரம் செவ்வனே நடைமுறைப்படுத்திய செ. கிருஸ்ணா இலக்கியத்தில் இணைந்து செயற்படவில்லை. அதற்கு அவரது தனிப்பட்ட விடயங்கள் காரணமாகியிருக்கலாம். ஆனால் மலையகம் நல்லதொரு இலக்கிய, அரசியல் ஆய்வாளனை இழந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. பதுளையில் ‘சி.வியின் தேயிலைத்தோட்டத்திலே’ கவிதை நூலையும், கொழும்பில் சி.ராமச்சந்திரனின் (கருத்துப்பட ஓவியர் . சந்திரா) ‘கடவுளின் குழந்தைகள்’ நாவலையும் ஆய்வு செய்யுமாறு நான் கேட்ட போது, அதனைத் திறம்பட செய்தவர்  செ.கிருஷ்ணா. ஒரு சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார் . அதில் ‘வி.கே.வெள்ளையனின் தொழிற்சங்க பணிகள்’ பற்றிய கட்டுரை முக்கியமானது. (நமது மலையகம்.கொம், வீரகேசரி, தினக்குரல்).

அன்று சுதர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க நான் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றித்தந்த செ.கிருஷ்ணா, அருட்பணி.பெனி அகிய இருவரும் பணிநிமித்தம் வெளிநாடு சென்றுவிட்ட சூழ்நிலையில் அந்த மண்டபத்தில் இருபதாவது களத்தினைக் கண்ட (மாதத்திற்கு ஒன்று) ‘பெருவிரல்’ கலை இலக்கிய இயக்கத்தின் இலக்கிய கலந்துரையாடலில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருமுறையும் தவறாமல் அழைப்பிதழ் அனுப்பிவிடும் சுதர்மனின் நன்றி மறவாத மனம் பெரிது. ஆனாலும் இந்த (23.03.2014) முறைதான் அவரது அழைப்பினை ஏற்று கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 

எனது மாணவனும் அன்புக்குரிய சகோதரனுமான பத்தனை வே.தினகரன் (நானறிந்த வரையில் இவரது முதலாவது கவிதை லோயல் வெளியிட்ட ‘சுவாதி’ இதழில் வந்த ‘நம்மவர்’ என நினைக்கிறேன்), சுதர்ம மகாராஜன்,   ‘சிவப்பு டைனோசர்கள்’-சு.தவச்செல்வன், சண்முகம் சிவகுமார், பெரியசாமி விக்னேஸ்வரன், கீர்த்தியன், பபியான், நேரு கருணாகரன், கிருபாகரன் என பல இளம் இலக்கிய ஆளுமைகள் இணைந்து ‘பெருவிரல் கலை இலக்கிய இயக்கமாக’ இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது இயக்கத்துக்கு சி.எஸ்.சி மண்டபம் நல்லதொரு களமாக அமைந்துள்ளதை அறியும்போது அதனை ஏற்பாடு செய்தவன் என்றவகையில் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்வில் அதற்குரிய நன்றியினை ‘பாதர்  பெனி’ அவர் களுக்கும், செ.கிருஸ்ணா வுக்கும் தெரிவித்துக்கொண்டேன். இந்த கலந்துரையாடலில் பங்கு கொண்ட எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்கள் ‘ஹட்டன் தீர்மானத்தை’ மீளவும் நினைவூட்டியுள்ளார். கலந்துரையாடலின் நிகழ்வுகளை தனியான கட்டுரையில் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

(அருட்பணி)கவிஞர்.பெனியின் ‘போர்க்களப் பூபாளங்கள்’ கவிதைகள் பற்றி குறிப்பொன்றை எழுதியிருக்கும் கவிக்கோ அப்துல் ரகுமான் : 

‘மலையகத் தமிழர்களின் கண்ணீரால் பூத்திருக்கின்றன இளம் கவிஞர்  பெனியின் கவிதைகள். பெனியின் பூபாளத்தில் புதிய யுகம் விழித்தெழட்டும்’  எனக் குறிப்பிட்டுள்ளார் . 

கவிஞரானவர்  மதகுருவாகிவிட்டாலும் பல கவிஞர்கள் எழுத்தாளர் களை உருவாக்கும் களமாக சி.எஸ்.சி மண்டபத்தை ‘பெருவிரல்’ இயக்கத்தினருக்கு வழங்கி, கவிக்கோ. அப்துல் ரகுமானின் ஆசையை தன் பரம்பரையினூடாக நிறைவேற்ற முனைந்திருக்கிறார்  அருட்பணி (கவிஞர் ).பெனி.

 ‘இருபத்தோராம் நூற்றாண்டின் விளிம்பில் தனிமனித வாழ்வும், சமூக வாழ்வும் போர்க்களமாக மாறிவரும் காலச் சூழலில், என் கவிதைகள் மனிதம் மலர பூபாளம் பாடட்டும்’ என தன் ‘போர்க்களப் பூபாளங்கள்’ கவிதை நூலில் குறிப்பிட்டுள்ள கவிஞர்  பெனி. அவர்கள், பாட எண்ணிய பூபாளம் இசைக்கப்படுகின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.










Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates