Headlines News :
முகப்பு » » எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றத்தை தந்த நாவல் - வனசாட்சி - எம். வாமதேவன்

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றத்தை தந்த நாவல் - வனசாட்சி - எம். வாமதேவன்


தமிழ் நாட்டைச்சேர்ந்த தமிழ்மகன் (துணை ஆசிரியர் ஜுனியர் விகடன்) என்பவரால் எழுதி 2012 இறுதியில் வெளிவந்துள்ள நாவல் 'வனசாட்சி’. இதனை வாசிக்கத் தூண்டியமைக்கு பல காரணங்கள் இருந்தன.

ஓன்று இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தேயிலைத் தோட்டத்திலே வேலை செய்வதற்காக, வறுமையில் உழன்று தென்னிந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு சமூகக்கூட்டம், அங்கிருந்து வந்து இலங்கையில் நூற்றாண்டு காலமாய் வாழ்ந்து, ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் தாயகம் திரும்பி, அங்கு வாழத்தொடங்கியதை உள்ளடக்கிய கதை என்று அறிந்தமை. 

மற்றது தமிழகத்தில், இலங்கைத்தமிழர் அவர்களது பிரச்சனைகள் பற்றி மக்கள் அறிந்திருந்த அளவிற்கு, மலையக இந்திய வம்சாவளி தமிழர்பற்றியோ அவர்களது வரலாறு, இருப்பு பற்றிய அறிவு குறைவான ஒன்றே. இந்த நாவல், தமிழ்நாட்டு வாசகரிடையே இந்த மலையக மக்கள் குறித்த அறிவினை பெருக்க உதவலாம் என்ற எதிர்பார்ப்பு. 

அத்தோடு, மலையக தமிழர், மற்றும் அவர்களது குடியகல்வு பற்றி பல நூல்கள், கட்டுரைகள் வெளிவந்திருந்தாலும், தமிழ்நாட்டிலே படைப்பிலக்கியமாக இவ்விடயம் உள்ளடக்கப்பட்டது குறைவே. 
1960களில் தீபம் பத்திரிகை ஆசிரியரான நா. பார்த்தசாரதி இலங்கை வந்து சென்று 'மேகங்கள் மூடிய மலைகளுக்கு அப்பால்' என்ற நாவல் வெளிவந்தபோது அது அன்றைய மலையக பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதாக அமையவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆகவே இந்த நாவல் எந்தளவிற்கு யதார்த்தமாக அமையப்போகின்றது என்ற எதிர்பார்ப்போடு வாசிக்கத்தொடங்கிய எனக்கு, வாசித்து முடிந்த போது ஒரு ஏமாற்றமே ஏற்பட்டது. 

இந்த நாவலின் உள்ளடக்கம், நூறு ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் கதை. மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1. முன்பனிக்காலம்: தென்னிந்தியாவில் கங்காணிகளால் ஆசைவார்த்தை காட்டப்பட்டு, தமிழ்நாட்டின் வடபகுதியில் வட ஆற்காட்டு பகுதியிலிருந்து புறப்பட்டு இலங்கையின் மத்திய பகுதியான ஹட்டன் பகுதிக்கு வந்து சேர்ந்த துயரம் தோய்ந்த கதை மிக உருக்கமாக சொல்லப்படுகிறது. இந்த காலப்பகுதி கண்டியிலிருந்து ஹட்டனுக்கு புகையிரதப்பாதை போடப்பட்ட காலம். 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பமாக இருக்கலாம். 

2. பின்பனிக்காலம்: ஹட்டன் பகுதி தோட்டமொன்றில் வாழத்தொடங்கி, ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நிறைவேற்றபபட்டு(1964) மூன்று ஆண்டு காலத்திற்கு(1967) பின் இடம்பெறுகின்ற தாயகம் திரும்பும் நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

3. இலையுதிர்காலம்: இச்சமூகத்தின் ஒரு பகுதியினர் தாயகத்தில் தங்களது சொந்த ஊருக்கு சென்று, அங்கு தங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில், மலைப்பகுதிக்கு சென்று அங்கு தங்களது வாழ்க்கையை தொடருகின்ற சம்பவங்களை உள்ளடக்குகின்றது. இலங்கையில் போர் முடிந்ததன் பின்னர் இடம்பெறுகின்ற சம்பவங்களை உள்ளடக்குவதால், 2009 அல்லது 2010 என எடுத்துக்கொள்ளலாம்.

இந்த கால வரையறைக்குள் ஒரு கதை ஒன்று சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பனிக்காலத்தை, ஒரு நீண்ட முகவுரையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். கதை என்ற நோக்கில், பின்பனிக்காலத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி, அது சம்பவங்களை பதிவு செய்வதால் ஒரு ஆவணமாகவும் அமைந்துவிடுகின்றது என்ற கருத்தோட்டத்தில் பார்க்கையில் சில விபரிப்புக்கள், உண்மைநிலையை எடுத்துக்காட்டுவதாக அமையவில்லை. எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது, தாயகம் திரும்புவோரின் குடியகல்வு இடம்பெற்றதை எடுத்துக்கூறியுள்ளமையாகும். ஒப்பந்தத்தின் நடைமுறையின்படி, இந்திய வம்சாவளியினரின் மொத்த  எண்ணிக்கை, இரண்டு நாடுகளுக்குமிடையே பகிரப்பட்டதன் பின்னர், மக்களுடைய விருப்பப்படியே விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்திய பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்தவருக்கு குடியகல்வு பத்திரம் (பாஸ்போட்) வழங்கப்பட்டு அவர்கள் தங்களது பிரயாண ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு 4 ஆண்டு காலப்பகுதி வழங்கப்பட்டது. 

குடிப்பெயர்வின் நடைமுறையில் வற்புறுத்தலோ கட்டாய நாடுகடத்தலோ இடம்பெறவில்லை. இந்திய குடியுரிமை பெற்று, அதன் நிமித்தமாக குடியகல்வு பத்திரம் பெற்று 4 ஆண்டுகள் கழித்ததின் பின்னர் இந்தியா செல்லாத போதே கட்டாய நாடுகடத்தல் இடம்பெற்றது. இந்த உண்மை நிலைக்கு மாறாக, ஆரம்பத்திலேயே தோட்டங்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள், காவல் துறையின் உதவியோடு, தோட்டங்களுக்கு சென்று, அவர்களை பலவந்தமாக இல்லையென்றாலும், அவசர அவசரமாக வாகனத்தில் ஏற்றி, தலைமன்னாருக்கு அனுப்பி வைக்கின்றதாக கதையில்  விபரிக்கப்படுகின்றது. இது நாவலின் கதையோட்டத்திற்கு மிகமுக்கியமானது. ஏனெனில் கதையின் முக்கிய பாத்திரங்களான, பெரியசாமி குடும்பம், தங்களது இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்றபோது, ஏதோ ஒரு காரணத்தினால் மகள் லட்சுமியின் விண்ணப்பம் சேர்க்காமல் விடுபடுகின்றது. இதனால், குடியகல்வு பத்திரங்களோடு தோட்டங்களுக்கு வருகின்ற அதிகாரிகள், மகளின் குடியகல்வு பத்திரத்தை கொண்டுவராததால் அவள் தன்னுடைய குடும்பத்தோடு செல்லமுடியாத ஒரு சூழ்நிலை உருவாகின்றது. இந்த மகளே இந்தியா செல்ல முடியாததால பின்னர் எப்படியோ வவுனியா சென்று, அங்கு விடுதலை இயக்கப் போராளியாக மாறியதாக கதை கூறுகின்றது. விண்ணப்பப்பத்திரத்தை குடும்பத்தோடு சமர்ப்பிக்கமுடியாமல் போன சூழ்நிலை, அதன் காரணமாக தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து பயணிக்கமுடியாமல் போனமை மிகவும் கற்பிதமாக, உண்மை நிலைக்கு புறம்பானதாகவே அமைந்துள்ளது. 

இந்தியாவுக்கு ஒரு குடும்பமாக போவதென தீர்மானித்ததன் பின்னால், எல்லோரும் ஒரே குடும்பமாக செல்வதற்கு உரிய வசதிகள் 1967ம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டன. அத்தோடு லட்சுமி வவுனியாவிற்கு போய்ச் சேருகின்ற சம்பவ விபரிப்பும் யதார்த்த நிலையோடு ஒத்ததாகவே படவில்லை.

இன்னுமொன்று குறிப்பிட வேண்டியது சம்பந்தப்பட்ட மக்கள், எவ்வாறு இந்தியா செல்வதென அறியாதிருந்தனர். கொழும்பு போய் அங்கிருந்து மன்னாருக்கு தோணிகள் மூலமாக அனுப்பிவைப்பார்களோ' என உரையாடுவதும் கற்பிதமாகவே படுகின்றது.

இதைவிட, 'தோட்டப்பாடசாலைகள் அரசாங்கம் பொறுப்பேற்றது' பற்றிக்குறிப்பிடுகையில், அவை சிங்களப் பாடசாலைகளாக மாற்றம் பெற்றன என்ற குறிப்பும் உண்மைக்கு மாறானது. தோட்டப்பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றமை, ஒரு முற்போக்கான நடவடிக்கையாகும். இந்த காலப்பகுதியில், தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் நன்கு வேரூன்றிவிட்டன. ஆரம்பகாலத்தில், தோட்டநிர்வாகத்திற்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் தொடர்பாடாலராக இருந்தவர்கள் பெரிய கங்காணிகள். இவர்கள் ஒரு நிறுவனமாக இருந்த நிலை, தொழிற்சங்கங்களின் வளர்ச்சியோடு இல்லாதொழிந்தமையே வரலாறாகும். தோட்டங்களின் முகாமைத்துவம், கம்பனிகளாக இருந்தாலும், தனியாராக இருந்தாலும், முறையாக செயல்ப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் தோட்ட ஆபீஸில் நன்கு பதிவுசெய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கு சிறு சிறு குறைகள் இருந்தாலும், பல்வேறு காரணங்களுக்காக பதிவுகள் இருந்தன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் இருக்கத்தக்கதாக, தோட்டத்திற்கு செல்லும் தூதரக அதிகாரிகள் தேவையான விபரங்களை கங்காணிகள் மூலமாக பெற்றுக்கொள்வதாக காட்ட முனைவது தோட்ட நிர்வாக அமைப்பினை நன்கு விளங்கிக் கொள்ளாததாகும். தோட்டங்கள், இலங்கைப் பொருளாதாரத்தில், நவீன துறையாக கணிக்கப்பட்டமையும், கம்பனிகளின் முகாமைத்துவம் மிகவும் சிலாகித்து பேசப்பட்டு வந்த  நிலையில், அது பற்றிய எவ்வித பிரதிபலிப்பும் இந் நாவலில் காணாமல் போனது ஒரு குறையே.

இங்கு மலையக மக்கள் வன்னிப்பகுதியோடு கொண்டுள்ள தொடர்பு தற்செயலாக இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையாக 1972ம் ஆண்டு தோட்டங்களினை அரசமயமாக்கியமை, 1977ல் ஆரம்பித்த இன வன்முறை என்பவை காரணமாக மலையகத்திலிருந்து தமிழர்கள் குறிப்பாக மாத்தளை, கண்டி போன்ற பிரதேசங்களிலிருந்து வன்னி நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். இப்படி சென்றவர்களே விடுதலைப்புலிகளின் போராட்டத்திலே  சேரவேண்டிய கட்டாயத்திற்குள்ளானர். இந்த வகையில் மலையகம், வன்னி ஆகிய பிரதேசங்களுக்கு ஒரு தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பை தொட்டுக்காட்டவோ, என்னவோ லட்சுமி என்ற பாத்திரத்தை ஆசிரியர் உபயோகித்திருக்கிறார் போலும்.

இந்த நாவலின் இறுதிப்பாகத்தில், தாயகம் திரும்பியோரின் வாழ்வு நிலை எடுத்துக்காட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. இருப்பினும், நாவலில் இரண்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
1. தங்களது சொந்த கிராமங்களுக்கு, சொந்தங்களை நம்பி சென்றவர்கள், அங்கு வஞ்சிக்கப்பட்டு,இலங்கையில் தங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்து மலைப்புறங்களை – கொடைக்கானல், வால்பாறை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் நோக்கி சென்றமையே பொதுவான செல் நெறியாக அமைந்திருந்தது.

2. தாயகம் திரும்பியோரின் சமூக உயர்வை நோக்கிய நகர்வு (upward social mobility) மிகத் துரித கதியில் இடம்பெற்றமையாகும். நான் 1986ல் தமிழ்நாட்டில் இருந்தபோது மக்கள் மறுவாழ்வு என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரையில் 'இலங்கையில் 150 ஆண்டுகளில் அடையப்பெறாத முன்னேற்றத்தை, சிலர் இங்கு 15 ஆண்டுகளில் அடைந்துள்ளனர்' என்று எழுதினேன். அதை உறுதிப்படுத்துவதாக, தாயகம் திரும்பிய பெரியசாமியின் மகன் கல்லூரிப் பேராசிரியராக, குறுகிய காலத்தில் உயர்நிலையை அடைந்து கொள்கின்றமை சான்றாக அமைகின்றது.

இந்நூலில் பின் அட்டையில் குறிப்பிட்டது போல, அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு உட்பட்ட இச்சமூகத்தின் கதையானது, கொஞ்சம் 'நகைச்சுவை' சேர்க்கப்பட்டு சொல்லப்படுவதானது, இந்த கதையின் மையப்போக்கினை தொய்வடையச் செய்துவிட்டது போன்ற ஒரு உணர்வினை எனக்கு ஏற்படுத்தியது. கல்லூரிகளின் நிர்வாக அடக்குமுறையை நகைச்சுவையோடு விவரிக்கின்ற நாவல், மலைப்பகுதிகளில் தாயகம் திரும்பியோர் எதிர்நோக்கிய அடக்குமுறையை தொட்டுக்காட்டியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. அந்த மக்களின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த இலங்கையிலிருந்து 1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழகம் சென்ற சமூக செயற்பாட்டாளர்களான மறைந்த இரா. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன் போன்றோரின் செயற்பாடுகள் நன்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், நூல் சுட்டிக்காட்டுவதைப்போல 200 ஆண்டுகால தோட்டப்பின்னணியை, ஹட்டன் மற்றும் கூடலூர் போன்ற வனப்பிரதேசத்திலும், பின்னர் வவுனியாவிலும் வனத்தை சாட்சியாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை முழுமையான திருப்தியை தராவிட்டாலும், இந்த முயற்சி வரவேற்க்கத்தக்க ஒன்றாகும். அத்தகைய முயற்சியை மேற்கொண்டமைக்காக ஆசிரியரை பாராட்டலாம்.

Share this post :

+ comments + 1 comments

விமர்சனம் படித்தேன். ஶசிரிமா சாஸ்திரி ஒப்பந்ததின் பின்னர் மக்கள் கடவுச் சீட்டு பெறுவதில் பெரும் சிரமங்கள் அடைந்தனர் என்றும் பல குடும்பங்கள் பிரிந்தன என்றும் பல நூல்களில் படித்திருக்கிறேன். மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக ரயில்களில் ஏற்றி அனுப்பப்பட்டது பதிவாகியிருக்கிறது. அழுகாச்சி கோச் என்றே அந்த ரயில் பெட்டிகளை அழைத்தனர். இவை எல்லாம் ஈரோஸ் அமைப்பினர் வெளியிட்ட 20-ம் நூற்றாண்டின் நவீன அடிமைகள் என்ற நூலில் புள்ளிவிவரங்களோடு பதிவாகியுள்ளன.
சிவி. வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள், நாடற்றவர் கதை போன்றவை, பாவைச் சந்திரன் எழுதிய ஈழப் போராட்ட வரலாறு, தவமுதல்வன் வெளியிட்ட பச்சை ரத்தம் ஆவணப் படம் போன்றவை இதற்கான ஆதாரங்கள்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates