Headlines News :
முகப்பு » » மலையகம் எழுகிறது : அணிந்துரை - பி.ஏ காதர்

மலையகம் எழுகிறது : அணிந்துரை - பி.ஏ காதர்


அன்று 1997.05.19ம் திகதி அன்றைய தினம் எனக்கு இன்று போல் நினைவிருக்கிறது.

நான் கொழும்பில் இருந்து தலவாக்கலை மலையக மக்கள் முன்னணி தலைமையகத்திற்கு நண்பர் வி.ரி.தர்மலிங்கத்துடன் தொலைபேசியில் பேசுகிறேன்.

கொட்டகலையில் அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றுக்கு நான் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தேன். முக்கியமான அரசு மட்ட சந்திப்பு ஒன்றுக்காக கொழும்பு சென்ற என்னால் மலையகம் திரும்ப முடியாமல் போய் விட்டது. எனவே எமது கட்சியின் உப-தலைவர் நண்பர் வி.ரி.தர்மலிங்கத்தை எனக்குப் பதிலாக அங்கு செல்லுமாறு அன்போடு கேட்டிருந்தேன். அவர் அதற்கு ஏற்கெனவே இணக்கம் தெரிவித்திருந்தார்.

அவர் அந்த வைபவத்திற்கு போய்விட்டாரா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காகவே நான் தலவாக்கலை தலைமையகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அங்கு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வி.ரி. அவர்களே என்னோடு தொலைபேசியில் பேசினார். வழமை போல அன்பாகக் கதைத்து முடித்துவிட்டு ‘போக ரெடியாகீட்டேன். வரட்டா. பை’ என்று கூறிவிட்டு போனை வைத்தார்.

நான் கொழும்பில் நடைபெற்ற அந்தச் சந்திப்புக்காகச் சென்றேன். சுமார் 10 நிமிடத்தில் அவ்விடத்தை அடைந்த போது அங்கு எல்லோரும் எனக்காகக் கவலையோடு காத்திருந்தார்கள். என்னைக் கண்டதும் ‘யாருமே எதிர்பார்க்கவில்லை… எமது அனுதாபங்கள்’ என்று தமது அனுதாபத்தைத் தெரிவித்தனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. வி.ரி. மாரடைப்படைப்பால் திடீரென காலமாகி விட்டார் என்று அவர்கள் கூறியபோது நான் அதனை நம்பவில்லை. ‘யாரோ தவறான தகவல் தந்திருக்கிறார்கள். பத்து நிமிடத்திற்கு முன்னர் தான் அவரோடு கதைத்தேன்’ என்று உறுதியாக சிரித்துக் கொண்டே கூறினேன். என் மனதில் சிறு சலனம் கூட இருக்கவில்லை.

அப்போது தலவாக்கலை தலைமையகத்திலிருந்து என்னோடு முரளியென்ற அவரது மாணவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவருமான நண்பரொருவர் அழுதபடி அந்த அதிர்ச்சியான செய்தியை உறுதிப்படுத்தினார்.

வி.ரி.தர்மலிங்கம் என்னோடு தொலைபேசியில் பேசிவிட்டு தலைமையகத்தின் மாடியிலிருந்து- தயாராக இருந்த காரில் ஏறுவதற்காக- படி வழியே இறங்கும் போது விழுந்தவர் தான். மீண்டும் எழவே இல்லை. அவர் பேசிய கடைசி வசனம். ‘போக ரெடியாகிட்டேன்.. வரட்டா.. பை’. அது என்னோடு தொலைபேசியில் கடைசியாகப் பேசியது தான்.

அவரது மரணத்தைக் கேட்டு முழு மலையகமும் குமுறி அழுதது. அவரது மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட சனத்திரளை அதற்கு முன்னர் மலையகம் கண்டதில்லை.

அந்த அளவுக்கு அவர் மீது மலையக மக்கள் அன்பு வைத்திருந்ததற்கு என்ன காரணம்? அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருந்தது. அவர் மலையக மக்கள் மீது உண்மையான பாசம் வைத்திருந்தார். அவர்களுக்காக வாழ்ந்தார். அவர்களில் ஒருவராக கடைசிவரை நேர்மையோடு வாழ்ந்தார் என்பதுதான் அது.

இறக்கும் போது அவர் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்தார். அதற்கு முன்னர் தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்தின் அதிபராக இருந்தார். மலையக மக்கள் முன்னணியின் ஈட்டி என்று அழைக்கப்பட்டார். அதன் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராகவும் உபதலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

ஆனால் அவர் காலமான போது அவருக்கு மாற்றுவதற்கு ஒரு கால்சட்டையும் மேல்சட்டையும் மேலதிகமாக இருக்கவில்லை. அவரிடம் இரண்டு சோடி ஆடைகள் மாத்திரமே இருந்தன. ஒன்றை அவர் அணிந்திருந்திருந்தார். மற்றதைக் கழுவி கொடியில் காயவிட்டிருந்தார். அவரது அலமாரியில் புத்தகங்கள் இருந்தன. கட்சி ஆவணங்கள் இருந்தன. ஆனால் வேறு ஆடைகள் இருக்கவில்லை. எனவே அவரது சடலத்தை உடுப்பாட்டுவதற்கு புதிதாக ஆடைகளை அவர்களது மாணவர்கள் வாங்கி வந்தார்கள். அவரது எளிமைக்கும் நேர்மைக்கும் இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

அவரை எனக்கு சுமார் 25 வருடங்களாகத் தெரியும். நான் இராகலை தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியனாகக் கடமையாற்றிய காலத்திலே 1972இல் அவரை நான் முதற்தடவையாகச் சந்தித்தேன். அப்போது அவர் இராகலை பகுதியில் இருந்த படித்த இளைஞர்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகக் கருதப்பட்டார். இ.தொ.கா.வின் நகர பிரமுகர் சிலரின் ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய ஒருவர் – முற்போக்கு சிந்தனையாளர் – பல வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்துக் கரையேறுவற்காக தனது சொந்த வருமானத்தில் பெரும்பகுதியை கொடுத்து கைதூக்கி விட்டவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்தக் காலத்தில் இ.தொ.காவை எதிர்ப்பது என்பது யமனுக்கு சவால் விடுவதைப் போன்ற ஆபத்தான காரியம். அவர் அங்கு அப்போது இயங்கிய ‘கென்னடி’ என்ற தனியார் பாடசாலைக்கு உரையாற்ற வந்த போது அவரைச் சந்திப்பதற்காக பெருமளவு இளைஞர்கள் அலை மோதினார்கள். அவரது எழுச்சியான – எளிமையான பேச்சு இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையையும் வீர்த்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. அன்றுதான் நான் அவரை முதன் முதலில் சந்தித்தேன்.

அதன் பிறகு நாம் அடிக்கடி சந்தித்தோம். ஒன்றாக அரசியலில் நடை பயின்றோம். அவருக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர் யார் என்று அவரைக் கேட்டால் அவர் என்னையும்; அதே கேள்வியை என்னிடம் கேட்டால் நான் அவரையும் கூறுமளவுக்கு எனது உறவு கடைசிவரை நெருக்கமாக இருந்தது. அவர் இவ்வாறு திடீரென எம்மைவிட்டுச் சென்றிருக்காவிட்டால் நான் மலையக மக்கள் முன்னணியில் இருந்து இராஜினாமாச் செய்திருக்க மாட்டேன் என்று என் மனம் இப்பொழுதும் சொல்கிறது.

அவரும் சந்திரசேகரனும் நானும் 6ம் மாடியில் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த நீண்ட மூன்று ஆண்டுகளை என்னால் மறக்க முடியாது. நான் இதற்கு முன்னரும் நான்கு வருடங்கள் சிறையில் இருந்திருக்றேன். ஆனால் இந்த மூன்றாண்டுகள் முக்கியமானவை. நாம் மூவரும் சித்திரவதைக்குள்ளானோம் ஆனால் வி.ரியே மிகக்கூடுதலான சித்திரவதைக்கு உள்ளானார்.

அங்கு நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முதலாவது வருடம் கடுமையானதாக இருந்தது. அதன் பின்னர் என்மை விடுதலை செய்ய வேண்டும் என்று மலையகத்திலும் வெளியிலும் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் காரணமாக எம்மீதான கெடுபிடிகள் சற்றுத் தணிந்தன. எமது விடுதலைக்காக பிரித்தானியாவிலிருந்து தமிழ் தகவல் நிலையத்தைச் சேர்ந்த வரதகுமார் அவர்களும் தனிப்பட்டமுறையில் கீரன், ஈசன், நாவலன் போன்றோரும் குரல் கொடுத்தனர்.

எம்மைப் பார்ப்பதற்காக வாரம் ஒருநாள் அனுமதி வழங்கப்பட்டது. மலையகத்திலிருந்து பஸ்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு நூற்றுக்கணக்காவர்கள் எம்மைக் காண வந்தார்கள். பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனிதஉரிமை அமைப்புகளும் வரத்தொடங்கின. அவ்வாறு எம்மைப் பார்ப்பதற்கு அடிக்கடி வந்து எமக்கு ஆதரவு நல்கிய பலரில் சரிநிகர் என்.சரவணன், சிவகுமார் ஆகிய இருவரை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

இவர்களின் தூண்டுதலால் நண்பர் வி.ரி.தர்மலிங்கம் அவர்கள் சரிநிகரில் சிறையில் இருந்து எழுதிய தொடர் கட்டுரையே இந்நூல் வடிவில் வெளிவருகிறது.

வி.ரி. எம்மோடு தடுப்புக் காவலில் இருக்கும் போது தனது நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். காலையில் தேகப்பயிற்சி செய்வார். பிறகு குளித்துவிட்டு கீழே அமர்ந்து எழுதத் தொடங்குவார். அதேசமயம் நான் ‘இலங்கை வரலாறு – ஒரு மீளாய்வு’ என்ற பெயரில் இலங்கை வரலாற்றை தொகுத்துக் கொண்டிருந்தேன். நான் திரட்டிய குறிப்புகளை வைத்துக் கொண்டு நான் சொல்லச் சொல்ல அவர் வேகவேகமாக எழுதி அந்நூலை பூர்த்தி செய்வதற்காக தினமும் சுமார் மூன்று மணித்தியாலங்களை எனக்காக ஒதுக்குவார். பிறகுதான் அவர் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வாசிக்கத் தொடங்குவார். சிலர் சீட்டு விளையாடுவதிலும் சினிமாப் பாட்டுக் கேட்பதிலும் தமது நேரத்தைக் கழிப்பர். ஆனால் சிறையிலிருக்கும் போதும், அவர் தனது நேரத்தை மலையக மக்களுக்காகவே செலவளித்தார்.

வி.ரி சரிநிகருக்கு எழுதிய இத்தொடர் கட்டுரையை – தடுப்புக்காவலில் இருந்த ஒரு சமூகநேயம் படைத்த செயற்பாட்டாளார் தனது சொந்தச் செயற்பாட்டுகளின் ஊடாக – தான் சந்தித்த – தான் ஈடுபட்ட மலையக இயக்கங்களைப் பதிவு செய்துள்ளார் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இதில் பதியப்படாத சில மலையக அமைப்புகள் இருந்தன என்ற உண்மையை மறுத்தலாகாது. எனினும் எதிர்காலத்தில் இது தொடர்பாக ஆய்வு செய்ய முயலும் எவருக்கும் இது ஒரு பொக்கிஷமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நூல் மலையகத்தில் ஏற்பட்ட அரசியல் எழுச்சியின் பரிணாமத்தைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தருகிறது

இந் நூல் பிரித்தானியாவிலிருந்து எவரது தூண்டுதலும் இல்லாமல் வெளியாவது ஒரு சிறப்பம்சமாகும். இந்நூலை வெளியிடும் முயற்சிக்கு எனது நன்றிகள்.

நன்றி - எழுநா
Share this post :

+ comments + 1 comments

நான் தரம் 9இல் (2009) கல்வி கற்கும் போது எனது பாடசாலையில் ஒரு இலக்கிய வட்டம் நடைபெற்றது. அதற்காக வழங்கப்பட்டிருந்த அழைப்பிதழில் 'வி.டி.தர்மலிங்கம் அரங்கு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன அர்த்தம் இப்போது தெளிவாகிறது.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates