கடந்த 15.03.2014 சனிக்கிழமை அன்று பொகவந்தலாவ பெற்றோசோ (பெத்தராசி) தோட்டத்தில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அர்ச்சுனன் தபசு கூத்து நடாத்தப்பட்டது. இக்கூத்தினை முழுமையாக பார்த்த ஒரு இஸ்லாமியருடனான கலந்துரையாடல் கீழே வழங்கப்படுகின்றது.
உங்களைப்பற்றி?
எனது பெயர் திருமதி மு. பாரூக். நான் தெரேசியா தோட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். திருமணத்தின் பின் டெவன்போட் (புதுக்காடு) தோட்டத்தில் வசிக்கின்றேன். தற்போது பெற்றோசோ தழிழ் பாடசாலையில் தற்காலிக அதிபராக கடமையாற்றுகின்றேன்.
பொதுவாக எமது பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் சைவசமய மரபுடைய கலை, கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பது குறைவு. இருந்தப்போதும் நீங்கள் பெற்றோசோ தோட்டத்தில் இடம்பெற்ற கூத்தினை முழுமையாக பார்த்துள்ளீர்கள் இது பற்றி…?
நான் வசிக்கும் இடம் டெவன்போட் தோட்டமாகும். அதற்கு பக்கத்தில் உள்ள தோட்டம் தான் பெற்றோசோ அங்கு கடந்த 15.03.2014 அன்று இரவு அர்ச்சுனன் தபசு கூத்து நடாத்தப்பட்டது. அதனை எனது குடும்பத்தாருடன் இணைந்து முழுமையாக பார்த்தேன். எனது கணவர் (திரு பாரூக்) தான் இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்தார்.
நான் இதனை ஒரு மதச்சார்புடைய நிகழ்வாக மாத்திரம் கருதவில்லை. இக்கூத்து ஒரு கலை, மனதிற்கு இனிமைதரும் ஒரு படைப்பு என நான் கருதுகின்றேன். நான் ஒரு இஸ்லாமியராக இருந்தப்போதிலும் நான் வாழும் பிரதேசம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த இடமாகும். எனவே நானும் இச்சமூக அங்கத்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்மக்களின் தனித்துவமான இக்கூத்தினை ஒரு கலை இரசனையோடும் சமூக அங்கத்தவர் என்ற அடிப்படையிலுமே இரசிக்கின்றேன். என் வாழ்நாளில் இது போன்ற மலையக கூத்துக்களை நான் பிறந்த இடத்திலும் இப்போது வசிக்கும் இடத்திலும் இதற்கு முன்பும் பலமுறை பார்த்திருக்கின்றேன்.
நான் வசிக்கும் இடத்தில் பதினைந்து இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் இக்கூத்துக்கு தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை வழங்குவர். எனவே இஸ்ஸாமியர்களான நாம் அனைவரும் இதனை ஒரு கலை என்ற நோக்கில் இரசிக்கின்றோம்.
இக்கூத்தை இரசித்ததன் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்டது …?
இக்கூத்தானது எமக்கு பலவிதமான படிப்பினைகளை தருகின்றது. சாதாரண தொழிலாளர்களின் கலை ஆர்வம், சமூகத்தின் கூட்டு முயற்சி, ஒற்றுமை, ஒழுக்கம், பொறுப்புணர்ச்சி, பண்பாட்டினை போற்றும் தன்மை, கலையின் தூய்மை என பல படிப்பினைகளை இவை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கின்றன.
இம்மக்கள் இக்கூத்தினை ஏன் தொடர்ந்து பேணுகின்றார்கள் ?
பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டதை நாமும் தொடர்ந்து பேணவேண்டும் என்பது அவர்களது நோக்கம். இக்கூத்து அழிந்து விடக்கூடாது என கருதி பழைய அனுவபசாலிகள் இளைஞர்களை ஊக்கப்படுத்துகின்றார்கள். எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
நீங்கள் இக்கூத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
நான் ஏற்கனவே சொன்னதுபோல இது வெறுமனே ஒரு மதம் சார்ந்த விடயம் மாத்திரம் அல்ல.
தொழிலாளர்களின் போராட்ட குணம் இங்கு வெளிப்படுகின்றது. எதையுமே போராடி பெறவேண்டும் என்ற செய்தி வெளிப்படுவதோடு எத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டாலும் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும். கூத்தின் இறுதியில் அர்ச்சுனன் தவசு மரம் ஏறும் காட்சி என்மனதில் இதனை தான் தோற்றுவிக்கின்றது.
இக்கூத்தில் உங்களை கவர்ந்த பகுதி எது?
அர்ச்சுனன் தவத்துக்கு செல்லும் வழியில் பேரண்டனுக்கம் அர்ச்சுனனுக்கம் இடையில் நடக்கும் சண்டை காட்சி மிகவும் சுவாரசியமானது. காரணம் இக்காட்சி மிகவும் விருவிருப்பானதாக அமைந்திருந்தது.
“சண்டைக்கு வா சங்குமா…” என்ற பாடலை மிக உயர்ந்த தொனியில் பாடிக்கொண்டு மிக வேகமாகவும் கம்பீரமாகவும் ஆடுவார்கள். சண்டையும் விருவிருப்பாக செல்லும் அந்த சந்தர்ப்பத்தில் அமர்ந்திருப்பவர்கள் கூட எழுந்து உற்சாகமடைவார்கள்.
கூத்தின் எதிர்காலம் பற்றி?
கட்டாயம் தொடர்ச்சியாக வருடம் தோறும் இக்கூத்து ஆடப்படவேண்டும். இக்கூத்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் என்பது நிச்சயம். மதப்பேதங்களை கடந்த கலையை இரசிக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள் கட்டாயம் இவற்றை பார்க்க வேண்டும். இதன்மூலம் நேரடியான அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...