கடந்தகாலங்களில் பொகவந்தலாவை பிரதேசத்தில் பாரிய சமூக சீரழிவுகளுக்கு வழிவகுத்த மாணிக்கக்கல் அகழுவதற்கான (பத்தல்) அனுமதி மீண்டும் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. சற்று சீரடைந்து வரும் சமூகத்தை மீண்டுமொரு தடவை அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இது அமையும். இதற்கு இன்று சில அரசியல் பிரதிநிதிகளும் தங்களுடைய ஆதரவையும், ஒத்துழைப்பினையும் வழங்கி மாணிக்கக்கல் அகழ்வதற்கான அனுமதியை பெறுவதற்கு முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.
இந்த மாணிக்கக்கல் அகழ்வு பற்றிய சமூக ஆராய்ச்சி இன்றைய நிலையில் அவசியமானதொன்றாகவே அமைகின்றது. மாணிக்கக்கல் அகழ்வின் நன்மை தீமைகள் சமூக மாற்றத்தில் அதனுடைய செல்வாக்கு என்பதை பற்றியும் அறிந்து தெரிந்து அதன்படி தீர்மானம் எடுத்தல் சாலப்பொருத்தமானதாக அமையும்.
இலங்கையில் மாணிக்கக்கல் என்கின்ற கனிய வளத்திற்கு பெயர்பெற்ற இடமாக சப்ரகமுவை மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டம் விளங்குகின்றது. புவியியல் ரீதியில் இரத்தினபுரியின் தொடர்ச்சியாக இருக்கின்ற பொகவந்தலாவை பிரதேசம் நுவரெலியா மாவட்டத்தில் மாணிக்கக்கல் கனிய வளத்திற்கு பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது. அதோடு நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய பல பிரதேசங்களிலும் மாணிக்கக்கல் காணப்படுகின்றது.
2012 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டின் பொருளாதாரத்தில் 24 % வேளான்மையின் மூலமாக பொருளாதாரமீட்டப்படுகிறது. அதில் 14 % சதவீதம் தேயிலை உற்பத்தியினூடாக கிடைக்கிப் பெறுகிறது. கனிய வளங்கள் மாணிக்கக்கற்கள் மூலமாக 0.6 % பொருளாதாரமே ஈட்டப்படுகிறது. முறையாக தேயிலை விதை மூலமாக பயிரிடப்படுமானால் நூறு வருட அறுவடை பெறமுடியும். தேயிலை என்கின்ற பல்லாண்டு பயிரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெருந்தோட்ட கைத்தொழிலை பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற தேயிலை உற்பத்தியை நிர்மூலமாக்கும் செயலாகவும் இந்த மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதியினை பார்க்க முடியும்.
இரத்தினகற்கள்சார் கைத்தொழிலினூடாக நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதும் ஏனைய நாட்டுடனான வியாபார தொடர்புகள் கிடைக்கப்பெறுவதும் வரவேற்ககூடியதாக இருந்தாலும் இதனால் ஏற்படுகின்ற சமூக சீரழிவினையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
இந்த அகழ்வினால் ஏற்படும் பாதிப்புக்களை இயற்கை வளத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் சமூகத்தில் மக்களிடையே ஏற்படும் பாதிப்புக்கள் என இருவேறாக நோக்கலாம்.
கடந்த காலங்களில் பொகவந்தலாவையை அண்டிய மோரார், தெரேசியா, வெம்பா, சீனாக்கொலை, கொட்டியாகொலை, கிள்ளார்னி, பிரிட்வெல் போன்ற தோட்டங்களிலும் நோர்வூடை அண்டிய எல்பொடை, கெர்கஸ்வோல்ட், தென்மதுரை, வெஞ்சர் நிவ்வெளி, போன்ற பிரதேசங்களிலும் அனுமதியுடனும் அனுமதியின்றியும் மாணிக்கக்கல் அகழ்வு பரவாலாக இடம்பெற்றன.
இவ்வாறு ஆழ அகழப்படுகின்ற இடங்கள் அகழ்விற்கு பின் எதுவிதமான பாவணைக்கும் உதவாத இடமாக, வளங்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்ட பயனற்ற நிலமாக தற்பொழுதும் காணப்பட்டு வருகின்றது. குறைந்த பட்சம் தேயிலை மீள் உற்பத்திக்குகூட இந்த நிலங்களை பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. இதனால் இந்த பிரதேசங்களில் தேயிலை உற்பத்தியும் குறைவடைந்துள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
பொகவந்தலாவை கெசல்கமுவ ஆற்றில் வெள்ளபெருக்கு காரணமாக மண் நிரம்பி மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி ஆற்றல் குறைவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதோடு இப்பிரதேச மக்களும் வெள்ளப்பெருக்கு அடைமழை என்பவற்றில் பாதிக்கப்பட்டு நிர்கதிக்குள்ளாகி இருந்ததையும் மீள நினைவூட்டி பார்க்க வேண்டிய நேரம் தற்பொழுது உருவாகியிருக்கின்றது.
அதிகமாக மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக இந்த பிரதேசங்களை சுற்றியுள்ள மலை பிரதேசங்களான சிங்காரவத்தை, டம்பாரை போன்ற உயர் பிரதேசங்கள் கீழிறங்கியதாகவும் உல்லாச பிரயாணத்தில் அதிகமாக செல்வாக்கு செலுத்தும் சிவனொளி பாதமலையும் இரண்டரை அடி இறங்கியிருப்பதாகவும் அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுட்டிகாட்டின. அதேவேளை காலப்போக்கில் மலை பிரதேசங்கள் கீழிறங்குவதால் பாரிய மண்சறிவுகள் ஏற்பட்டு இப்பிரதேச மக்கள் வேறு இடங்களில் இடம்பெயற வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் எச்சரித்திருந்தது.
சமூகத்தில் மக்களிடையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் எனும்போது,
மலையகத்தில் (பொகவந்தலாவை பிரதேசத்தில்) பொதுவாக இரத்தினக்கற்கள் அகழ்விற்கான அனுமதி மீண்டுமொரு தடவை வழங்கப்படுமிடத்து இரத்தினகற்கள் வியாபாரம் செய்யும் முதலாளிமார்களுக்கு பயனுள்ளதாக அமையுமே தவிர பெருந்தோட்ட துறைசார்ந்த அப்பிரதேச மக்களின் வாழ்வாதார உயர்வில் சிறிதேனும் தாக்கம் செலுத்தபோவதில்லை என்பதே உண்மை. முதலாளிகள் பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதிப்பார்களேயன்றி சாதாரண தோட்டபுற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வடையாது.
மாணிக்கக்கல் அகழ்வின்போது, பலி கொடுத்தல் என்ற மூட நம்பிக்கையின் பேரில் பல அப்பாவி சின்னஞ்சிறார்கள் பலி கொடுக்கப்பட்டமையும், அதன்பொழுது கைது செய்யப்பட்டவர்கள் பின் பணபலத்தால் விடுதலை பெற்றமையும் இதுவரையும் வெளிச்சத்துக்கு வராத உண்மையாகும்.
ஆனாலும் மலையகத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களின் மீது அக்கறையுள்ளதாக பாசாங்கு காட்டும் சில அரசியல் தலைமைகள் தோட்டபுற இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைப்பதாக வெற்று நியாயப்படுத்தலை மேற்கொள்ளலாம். ஆனால் அதன் உண்மைதன்மையினை மக்கள் உணர்தல் அவசியமாகும். தோட்டபுற இளைஞர்களுக்கு தொழில் (நாட்சம்பளம்) வழங்கப்படுமே தவிர பங்கு வழங்கபடாது. நிரந்தரமற்ற தொழில்ளூ தினகூலியாக இவர்களின் உழைப்பு பகலிரவாக உறிஞ்சப்பட்டு வெறுமனே ஐநூறு ஆயிரம் என வழங்கப்படும். அந்த பணமும் அவர்களின் கடின உழைப்புக்கான அன்றைய நாள் செலவீனத்துக்கே போதுமானதாகவிருக்கும்.
பத்தல் என்கின்ற இந்த மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்ற காலங்களில் இந்த பிரதேசங்களில் போதைபொருள் பாவனை, பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் சந்தேகத்துகிடமான மரணங்கள், திருட்டு, குடும்ப சிதைவுகள் (விவாகரத்து) போன்றன அதிகரித்தன. இதனை வைத்தியசாலை பதிவுகளும் காவல் நிலைய பதிவுகளும் உறுதிபடுத்துகின்றன.
பத்தல் ஆரம்பிக்கப்படுமானால் தோட்டத்தில் தொழில் புரிகின்ற இளைஞர்களும் பெரியோர்களும் தோட்ட தொழிலை விட்டு இந்த அகழ்விற்கு செல்வதனால் ஏற்கனவே நட்டம் என்று சொல்லி இயங்கி வருகின்ற பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பல தோட்டங்கள் மேலும் நட்டமாக காட்டப்பட்டு பெருந்தோட்ட கம்பனிகள் சில தோட்டங்களை மூடக்கூடிய சாத்தியக்கூறுகளும் நிலவுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் தோட்டத்தில் தொழிலை இழந்து பத்தல் செல்லும் மக்களுக்கு அவர்களின் முற்பணம், ஆதாய பணம், போனஸ், தீபாவளி முற்பணம் உள்ளடங்கலாக ETF, EPF என்பனவும் குறைந்து மேலும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்றவை கடந்த காலங்களில் ஏற்பட்டும் உள்ளன.
தோட்ட தொழிலை விட்டு இந்த பத்தல் தொழிலில் ஈடுபடுகின்ற நிலை மாத்திரமல்லாது பாடசாலையிலிருந்தும் மாணவர்கள் இடைவிலகி இந்த பத்தலுக்கு செல்கின்றார்கள். கடந்த காலத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தில் பத்தல் அனுமதி வழங்கி அனுமதி பெற்ற மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்ற காலத்தில் பொகவந்தலாவை பிரபல கல்லூரியில் மாத்திரம் 2800 – 3000 க்கும் இடைப்பட்டதாக இருந்த மாணவர் தொகை 1800 ஆக வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே பல பாடசாலைகளின் மாணவர்கள் வரவு வீதம் குறைவடைந்து இடைவிலகல் அதிகரித்து மாணவர் தொகை வீழ்ச்சியடைந்தது. இது பொகவந்தலாவை பிரதேசத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைமையை தோற்றுவித்தது. இதன் தொடச்சியாகவே பல சமூக குற்ற செயல்களும் அதிகரித்தன.
பொகவந்தலாவை பிரதேசத்தில் பள்ளி மாணவிகள் சிசு பிரசவித்த வீதம் அதிகரித்தமையும் இந்த காலப்பகுதியிலேயே. இந்த காலகட்டத்தில் 58க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோவொரு வகையில் இந்த மாணிக்கக்கல் அகழ்வுடன் தொடர்புடையனவே.
மாணிக்கக்கல் அகழ்வு நிறுத்தப்பட்டதன் பின்பு இப் பிரதேசத்தில் அனுமதியின்றி அகழ்வு இடம்பெற்றமையும் இதனால் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டமையும், இதன்பொழுது பல கொலைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கு கெர்கஸ்வோல்ட் மத்தியபிரிவில் இடம்பெற்ற இரண்டு கொலைகளை உதாரணமாக கொள்ளலாம். இந்த அனுமதியுடனான அகழ்வு நிறுத்தப்பட்ட பின் வேறுதொழில் இன்றி இருந்த இளைஞர்களினால் திருட்டுகள் அதிகரித்தன. இதனால் தோட்டபுற மக்கள் பயந்த நிலையில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது.
அது மட்டுமல்லாமல் வெளி பிரதேசங்களில் உள்ளவர்களின் வருகை அதிகரித்து பொகவந்தலாவை பிரதேசத்தில் வெளி பிரதேச மக்களின் பதிவுகளும் அதிகரித்தன.
இந்த காலப்பகுதியில் பொகவந்தலாவை பிரதேச தோட்டங்களில் மஞ்சக்கா மாலை, மலேரியா, வைரஸ் காய்ச்சல், தைபொயிட் என பல தொற்று நோய்கள் பெருகி இப்பிரதேச மக்களை வலுவிழக்க செய்தமையினையும் அனைவரும் சிந்தித்து பார்த்தல் அவசியமாகும். தைபொயிட் நோய் ஏற்படுமானால் மரணிக்கும்வரை உடம்பில் எலும்பு நுரையீரல் என ஏதாவதொரு இடத்தில் இருந்து உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகளை இல்லாமலாக்கும் என்பதையும் வைத்தியர்கள் சுட்டிகாட்டினர். இதன்பொழுது நோய்வாய்பட்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தோட்டபுற மக்களுக்கு அரச நிறுவனங்கள் நிவாரணங்கள் என்ற பெயரில் ஒரு வீட்டுக்கு 500 ரூபா காசு, ஒரு பொலித்தின் பை உலர் உணவு பொருட்கள் வீதம் வழங்கி தப்பித்துக் கொண்டதையும் யாரும் மறந்துவிட முடியாது மறுத்துவிட முடியாது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கை பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்றினால் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் மூலமாக மாணிக்கக்கல் அகழ்வு நிறுத்தப்பட்டதையும் இதனை மீள அனுமதி பெற முயற்சிக்கும் அனைத்து தரப்புகளும் அறிந்து செயற்பட வேண்டும். மீண்டும் ஆரம்பிக்கப்படுமானால் அது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகவே அமையும். அப்பாவி இப்பிரதேச மக்களே பாதிப்படைவார்கள்ளூ அவர்களின் இருப்பே கேள்விக்குறியாகும்.
காலனித்துவ காலத்தில் நிலவிய முதலாளித்துவ தன்மையை போன்று தற்பொழுதும் வெறுமனே பொருளாதாரத்தினை மாத்திரம் கருத்திற் கொள்ளாது இப்பிரதேச மக்களின் எதிர்காலத்தினையும் கருத்திற் கொண்டு இதனை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளாக மலையகத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக காட்டிக்கொள்பவர்கள் இருக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஆரம்பித்தால் தனக்கும் பங்குண்டு என்பதால் சமூகத்தை சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டாம் எனவும் இந்த கட்டுரையின் மூலமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மீறியும் ஆரம்பிக்கப்படுமானால் இந்த பிரதேசங்களில் இருக்கின்ற தன்னார்வ குழுக்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் நீதிமன்றம் செல்லும் நிலைமை ஏற்படாலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...