Headlines News :
முகப்பு » » மலையகத் தேசியம் அண்மைக்கால முன்னெடுப்புகளும் அடுத்த கட்ட நகர்வும் - மல்லியப்புசந்தி திலகர்

மலையகத் தேசியம் அண்மைக்கால முன்னெடுப்புகளும் அடுத்த கட்ட நகர்வும் - மல்லியப்புசந்தி திலகர்


மலையக தேசியம் குறித்து சமகாலத்தில் இடம்பெறும் கதையாடல்கள், உரையாடல்கள் அதனை நிறுவுவதற்கான முனைப்புகள், முயற்சிகள் பலரதும் கவனத்தைப் பெற்றுவருகிறது. அரசியல், சமூக பண்பாட்டு, கலை இலக்கிய அசைவியக்கங்களில் இந்த மலையக தேசியம் பற்றிய உரையாடல் இடம்பெற்று வருவதனை அவதானிக்கலாம்.

‘மலையகம்’ என்ற உணர்வை அரசியல் மயப்படுத்துவதற்கு இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்த சூழ்நிலை பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது எனலாம். ‘தொழிலாளர்’ என்ற சொல்லாடலுடன் இயங்கிய மலையக அரசியல் (கட்சிகள்)  சூழலில், ‘மலையக மக்கள் முன்னணி’ என்ற அரசியல் கட்சியின் தோற்றம் ஒரு பாரிய அதிர்வை ஏற்படுத்தியது. இதனை அறிந்த ஆளும் தரப்பு அரம்பத்திலேயே அதனை முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அந்த கட்சியும் வடக்குக் கிழக்கு விடுதலை இயக்கங்களுடன் தத்துவார்த்த ரீதியல் அல்லாது பேணிவந்த (ஈரோஸ் மற்றும் புளோட் உடன்) தொடர்புகள் பின்னாளில் விடுதலைப் புலிகளுடனான தொடர்பாகவே மாற்றம்பெற்று சிறைவாசம் அனுபவிப்பது வரை சென்றது மட்டுமல்லாது, மலையகத்தில் பண்பாட்டுத் தளத்தில் கூட மலையக தேசிய முன்னெடுப்பை ஆபத்தான விடயமாக மாற்றிப்போட்டது.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் முடிவுக்குப்பின்னர் 2011 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு மலையக மக்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்து மதிப்பிட, மலையக மக்களின் அடையாளம் பற்றிய கேள்வியை தோற்றுவித்துள்ளது. இலங்கை அரச பதிவுகளில் ‘இந்திய வம்சாவளி தமிழர்’ எனறும் ‘இலங்கைத்தமிழர்’ என்றும் வகைப்படுத்தல்கள் இருந்தாலும்  ‘மலையக மக்கள்’ என்ற வகைப்படுத்தல் இல்லை. எனவே தாங்கள் இலங்கையர்கள் என்ற உணர்வுபெற்ற மலையக மக்கள் தங்களை ‘இலங்கைத் தமிழர்’ என்ற வகுதியினராக பதிவு செய்ய எத்தணிக்க, அது கணக்கெடுப்பில் பாரிய மாற்றத்தைக் காண்பிப்பதாக அமைந்து விட்டது. இதனால் இவர்கள் மலையக மக்களா? இந்திய வம்சாவளி தமிழரா? எனும்; உரையாடல்கள் பல்வேறு தளத்தில் இடம்பெறச் செய்துள்ளது. 

மலையகத்தின் கல்விசார், கலை, இலக்கிய, பண்பாட்டு ஆளுமைகளாகத் திகழும் பல்வேறு தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் இந்த விடயம் குறித்து பரவலாக பேசியும் எழுதியும் வருகின்ற நிலையில், கடந்த 23.02.2014 திகதியன்று ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் அதன் விரிவுரையாளர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணி செயலாளர் எ.லோரன்ஸ் அவர்களின்  சகோதரருமான திரு.மெத்யூஸ் அவர்களை இணைப்பாளராக்கி, இங்கிலாந்தில் வசிக்கும் மலையகத்தவரான திரு.ரட்ணம் நடராஜ் என்பவரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் கவனத்தைப்பெற்றுள்ளது. முகநூல் வழியிலும் எஸ்.எம்.எஸ் எனும் குறுஞ்செய்திகள் ஊடாகவும் உத்தியோகபூர்வமற்றவகையில்  மலையக அக்கறையுடையோரை அழைத்து ‘மலையகம்’ குறித்து கலந்துரையாட எத்தணிப்பு செய்யப்பட்டது. பெரும்பாலான மலையக ஆளுமைகள் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டாத அதேவேளை கலந்துரையாடலின் இறுதித் தருணத்தில் இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் (கண்டி) திரு.நடராஜன் வருகை தந்துள்ளமை தற்செயல் நிகழ்வாக கருத முடியாததாகவும் உள்ளது. கலந்தரையாடலின் இறுதியில் ஏற்பாட்டாளருக்கும் இணைப்பாளருக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியதாகவும் அறியமுடிகின்றது.

இந்திய நிலையில் கடல்கடந்து வாழும் இந்தியர்கள் அல்லது அதன் வம்சாவளியினர் பின்வரும் வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

  1. NRI – Non Resident Indians - வதிவற்ற இந்தியர்கள் - இவர்கள் தொழில் நிமித்தம் இந்தியாவுக்கு வெளியே வாழ்பவர்கள்.
  2. OCI – Overseas Citizens of India – கடல்கடந்து வாழும் இந்தியர்கள் - இவர்கள் இந்தியாவுக்கு வெளியே வேறு நாட்டு பிரஜையானாலும் இந்தியர்களாக மதிக்கப்பட்டு நிரந்தர வீசா மூலம் இந்திய பிரஜை அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள். இந்தியாவில் விவசாய நிலம் வாங்க முடியாது, வாக்களிக்க முடியாது என்பன தவிர்ந்த மற்ற எல்லா தகுதியுமுடைய இந்தியர்கள் இவர்கள். இலங்கையில் கொழும்பு கண்டி உள்ளிட்ட நகரங்களில் வாழும் வர்த்தக சமூகத்தினர் இந்த வகுதியில் இடம் பிடித்துக்கொள்கினறர்.
  3. PIO – Persons of Indian Origin - இந்திய வம்சாவளியினரான ஆள்- இவர்கள் இந்திய வம்வசாவளியினராக இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் வேறு நாட்டு பிரஜைகள். உலகளாவிய ரீதியல் லட்சக்கணக்கான இந்திய வம்சாவளியினர் இந்தத் தகுதியைப் பெறுகின்றனர். GO-PIO (Global Organization for Persons of Indian Origin) என்பதே அவர்களின் கூட்டிணைவுதான். இந்தத் தகுதியைப் பெறுபவருக்கு இந்திய வம்சாவளி PIO card எனும் அடையாள அட்டை போன்ற ஒன்றை இந்திய அரசாங்கம் உலகளாவிய ரீதியில் வழங்கிவருகிறது. ஆனால் இலங்கையில் வாழும் ‘மலையக மக்களுக்கு’ இந்த PIO card அந்தஸ்து  வழங்கப்படுவதில்லை. PIO அந்தஸ்து இல்லாத இலங்கையில் GO-PIO இயங்குவதும் பெரும் விந்தைதான். 


இந்த நிலையில் மலையக மக்களை தொடர்ச்சியாகவும் இந்திய வம்சாவளியாக பதிவு செய்துகொண்டு வருவது கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்றே. மறுபுறம் ‘இலங்கைத் தமிழரா’கவும் பதிவு செய்துகொள்ள முடியாத சூழ்நிலையில் அவர்கள் ‘இந்திய வம்சாவளி தமிழரா’கவே தம்மைக் குறிப்பிடுவது பரிதாபகரமான நிலைமையாகும்.

எனவே ‘மலையக மக்கள்’ என குறிப்பிடுவதே பொருத்தமாகும் என வாதிடுவோர் கையிலும் சில முக்கிய பணிகள் காத்திருக்கின்றன. இந்த பதத்தை அரச பதிவுகளில் உத்தியோகபூர்மாகக் கொண்டுவரும் பொறுப்பு அவர்களுடையது. இலங்கையில் வாழும் பல்வகை இஸ்லாமியர்களும் இலங்கைச் சோனகர்கள் (Moors) என அரச பதிவுக்குள் அடக்கும் முன்னெடுப்பை முஸ்லிம் சமூகம் செய்ததைப்போல, இந்திய வம்சாவளி தமிழரைக் குறிப்பதற்கு  ‘மலையக மக்கள்’ எனும் தொடரை அரச மட்டத்தில், பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையாகக் கொண்டுவருவதன் ஊடாகவே இந்தக் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரமுடியும். மலையக மக்களை இலங்கையில் ஒரு தேசிய இனமாக நிலைத்திருக்கச் செய்யமுடியும். 

இதனை மலையக அரசயில்வாதிகளே செய்யவேண்டும் என கூக்குரலிட்டு அறிக்கைவிட்டு விட்டு அமைதிகாக்காது,  அதனை செய்வதற்கான கலந்துரையாடல்கள் சிவில் சமூக மட்டத்தில் ஆரம்பிக்கப்படல் வேண்டும். இதன் குறைநிறைகள் கலந்துரையாடப்பட்டு ஒரு கருத்தாக்கப்பத்திரம் (Concept Paper) தயாரிக்கப்பட்டு மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது அக்கறையுடைய வேறு தரப்பினரிடமோ அதனைக் கையளித்து செயல்வடிவில் சாதிக்கும்  முனைப்பு மேற்கொள்ளப்படுதல் வேண்டும். 

இங்கு அக்கறையுள்ள தரப்பினர் எனும்போது, ‘தமிழ்நாட்டில் இலங்கையர்களுக்கான அகதி முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமைப்; பெறுவதற்கு’ 2008ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவும் முன்னெடுப்புமே பயன்பட்டது என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரனே அதற்கான பாராளுமன்றக் குழுத்தலைவராகவும் செயற்பட்டு அந்த சட்டமூலத்தை (2009 5ம் இலக்க நாடற்றோருக்கான குடியுரிமை வழங்கும் திருத்தச் சட்டம்) வெற்றிபெறச் செய்தார். 

அந்த குழு முன்மொழிந்த முன்-அறிக்கையில் சில மலையகத் தலைவர்கள்-பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவேயில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

எனவே, இது குறித்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ‘தொண்டா-திகா’ சண்டையாக மாத்திரம் எழுந்து விட்டு அடங்காத வண்ணம், பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் மீது அக்கறைகொண்ட அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நல்லெண்ணம் கொண்டோரைச் சந்தித்து, விளக்கி சாதிக்க வேண்டிய பொறுப்பு மலையக சிவில் சமூகத்துக்கு உரியது. இதுவே மலையகம் தேசியம் குறித்த தற்போதைய உரையாடல்களின் அடுத்த கட்ட நகர்வாக அமைய முடியும்.

நன்றி : ‘சமகாலம்’ (கடைசிப்பக்கம்) - 2014-மார்ச் 16-31 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates