எங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் ஆரோக்கியமான கல்வி சமூகத்தை மலையகத்தில் உருவாக்க வேண்டுமென்பதையே கூறிவருகின்றோம்.
சிறந்த அரசியல் சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி அடிப்படையாக இருப்பதனால் கல்வி சமூகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து இந்த சேவையை செய்யவுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண வேட்பாளர் ராஜ்குமார் ஞாயிறு தினக்குரலுக்கு தெரிவித்தார்.அவருடனான நேர்காணலின் தொகுப்பு கிழ்வருமாறு...
கேள்வி: மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தினூடாக மலையக மக்களின் தற்போதைய தேவை என்ன என்பதை அறிந்துள்ளீர்களா?
பதில்: மத்திய மாகாணசபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மலையகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம். தலைவர் மனோகணேசனின் தலைமையில் தொடர்ந்து மக்கள் சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களிடம் பேசியதில் மதுகலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். தேசிய பாடசாலைகள் வேண்டும், லயன் அறைகள் இல்லாது ஒழிக்கப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய வீடுகள் தேவை. கல்வி, சுகாதாரம் போன்ற பலதுறைகளிலும் குறைபாடுகள் உள்ளன.
இந்தத் தேவைகள் அரசியல்ரீதியாக பூர்த்தி செய்யக்கூடியவற்றை எம்மால் செய்யமுடியும் என்பதை கூறியுள்ளோம். அதற்கு மலையகத்தில் சிறந்த கல்விச் சமூகம் ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். மக்கள் இன்றும் லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். இதனை மாற்றுவதாக இருந்தாலும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருந்தாலும் நாம் அரசியல் பின்னணியை ஸ்திரப்படுத்த வேண்டும்.
மனிதனுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மக்களும் மலையகத்திலேயே இருக்கின்றனர். மக்களுடைய இந்தக் குறைபாடுகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்றால் அரசியல் தேவையை முதலில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
கேள்வி: மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
பதில்: தேர்தலில் போட்டியிடுவதினூடாக நாங்கள் மக்களுக்கு பிரசாரத்தில் கூறுவது ஆரோக்கியமான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதாகும். கல்வி என்பது மனிதனின் அடிப்படை அறிவாக இருப்பதால் அந்த அடிப்படைக் கல்வியறிவை வழங்கி சிறந்த கல்வி சமூகத்தை உருவாக்குவோமானால் மலையகம் நிச்சயம் ஓர்நாள் எழுச்சி பெறும். அதற்காக நாங்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்களை மீண்டும் பாடசாலைக்கு இணைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவற்றைவிட, ஆளும்கட்சியில் உள்ள இரண்டு கட்சிகள் மலைய மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த வன்முறைகளால் மக்கள் குழப்பிப் போய் உள்ளனர். இவர்களால் மலையக அரசியல் கீழ்மட்டத்திற்கு செல்கிறது.
கேள்வி: பலம்பொருந்திய அரசியல் கட்சிகள் இருக்கும்போது வெற்றிக்காக எந்தளவுதூரம் போராட வேண்டியுள்ளது? இங்குள்ள சவால்கள் எவை?
பதில்: தேர்தல் காலங்களில் மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் பணத்தை வாரியிறைக்கும் சவாலைத்தான் எங்களால் முறியடிக்க முடியாமல் இருக்கிறது. ஆனாலும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலவசங்களை வழங்குவதால் மட்டுமே வாக்குகளைப் பெற்றுவிடமுடியாது.
கட்டவிழ்த்துவிடப்பட்ட தேர்தல் வன்முறைகள் அடுத்த சவாலாக இருக்கின்றன. தேர்தலை மையப்படுத்தி பல்வேறு வன்முறைகள் நடக்கின்றன. சாதாரண மக்களையே இதனை செய்ய, அழைக்கின்றார்கள். அண்மையில் நடந்த தேர்தல் வன்முறைகளில் கூட எம்.பி.திகாம்பரத்தின் அலுவலகம் தாக்கப்பட்டது. ஆனால், தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட ஆவணங்கள் பொது மக்களுடையவை என்பதை குறித்த எம்.பி.யே மறந்துவிட்டோர். இன்றும் மக்கள் வாக்கைப்பெற மலையக மக்களின் ஆவணங்கள் மழையில் நனைத்து கொண்டிருக்கின்றன.
பலமிக்க அரசியல் கட்சிகள் என்று நாங்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் மக்களிடமே நேரடியாக கதைத்து உறுதியளித்து வருகின்றோம். அதன்படி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களே நிர்ணயிப்பார்கள். சவால்களைக் கடந்து மக்கள எம்பக்கம் நிற்பார்களேயானால் சிறந்த கல்விச் சமூகமிக்க அரசியலை உருவாக்குவோம்.
கேள்வி: உங்களுடைய அரசியல் பிரவேசம் எப்படியானது? அரசியலினூடாக சாதிக்கப்போவது என்ன?
பதில்: நான் அரசியலுக்கு வர முதல் கல்விச் சமூகத்தினுடன் இணைத்து பல சேவைகளைச் செய்தேன். அத்தோடு பல அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் அடையாள அட்டைகள் போன்றவற்றை பெற்றுக் கொடுத் தேன். இன்னும் அந்த பொதுச்சேவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அதன்பின்னர் கென்யா, கராச்சி, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று சேவைகள் பற்றிய கருத்தரங்குகளில் பங்குபற்றி அதனை மலையக மக்களுக்கு வெளிப்படுத்தி ஓர் விழிப்புணர்வு செய்தேன்.
இத்தகைய சேவைகளுக்குப் பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனுடன் இணைந்து மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். மலையக சமூகத்தின் எழுச்சிக்காகவும் இலங்கைத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்துவரும் மனோகணேசனுடன் இணைந்து சேவை செய்வது மகிழ்ச்சிக்குரியதாகும்.
மாகாணசபைக்குச் சென்றால் என்ன செய்யமுடியும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். பெரும்பாலான மக்கள் வாக்களிப்பு தொடர்பில் ஆர்வமாக இருக்கின்றனர். எனினும் வாக்களிப்பு வீதம் குறைவாகவேயுள்ளது.
மலையகத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களும் இந்த தேர்தலில் ஆர்வம் காட்டவேண்டும். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும் இந்தத் தேர்தலின் மூலம் நன்மையே கிடைக்கும். எனவே, தமது உறவுகளுக்கு இது தொடர்பில் எடுத்துக்கூற வேண்டும். வெளிமாவட்டங்களில் அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கப்பெற்றிருந்தா லும் தமது சொந்தங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
எனது இந்த அரசியல் பிரவேசத்தினூடாக மக்களுக்கு சேவையை செய்வதோடு வடக்கு, கிழக்கு மத்தி என பல மாகாணத்திலும் தமிழர்களுக்காக போராடும் தலைவர் மனோகணேசனின் கரத்தையும் பலப்படுத்துவோம். தமக்கான உரிமையை வென்றெடுக்க மாகாணசபைக்கு ஒரு தமிழரை தெரிந்தெடுப்பது மக்களின் கடமை. அது கல்விச் சமூகத்திலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் ஓர் வேட்பாளராக இருக்கவேண்டும் என்பதே எமது நோக்கம்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...