2013 ஆம் ஆண்டுக்கான ‘துரைவி இலக்கிய விருது’ வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை 01.03.2014 மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றலுடனும், மேமன்கவியின் வரவேற்புரையுடனும் விழா ஆரம்பமானது. தனது தந்தை துரைவியின் உருவப்படத்திற்கு ராஜ்பிரசாத் மாலை அணிவித்து கௌரவம் செய்தார்.
விழாவுக்கு தலைமைதாங்கிய மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனதுரையில், இலக்கிய ஆர்வலர் துரை.விஸ்வநாதன் பெரிய தொழிலதிபர் இல்லை. ஒரு நடுத்தரமட்ட பொருளாதார பின்னணியுடன் வியாபாரத்தில் இருந்தவர். அவரது இலக்கிய நெஞ்சம் எல்லா இலக்கிய விழாக்களிலும் எங்காவது ஒரு மூலையில் அவரை உட்காரவைத்திருக்கும். எழுத்தாளரின் படைப்புக்களை வாசித்த அனுபவத்தை பகிர்ந்து எழுத்தாளனுக்கு கௌரவமளித்து பிரதியை உரிய பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் நல்ல மனம் அவருடையது. அவரைச் சந்தித்த மல்லிகை டொமினிக்ஜீவா விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் உருவானதுதான் துரைவி பதிப்பகம்.
குறிப்பாக மலையக நூல்களை வெளியிடுவதில் அளப்பரிய சாதனை ஆற்றியவர் துரைவி. எடுத்த எடுப்பிலேயே மலையகத்தில் இதுவரை சிறுகதை எழுதிய எல்லா எழுத்தாளர்களின் ஒவ்வொரு கதையை தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் அவரது கனவுதான் ‘மலையகச் சிறுகதைகள்’. அந்தத் தொகுதிக்காக என்னிடம் துரைவி விடுத்த வேண்டுகோள்தான் மலையகத்தில் முதலாவது கதையையும் தேடமுடியுமா? என்பது. அப்படி தேடுகையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘இராமசாமிசேர்வையின் சரிதம்’. பின்னர் நான் துரைவியின் வெளியீடாக வந்த ‘மலையக சிறுகதை வரலாறு’ நூலில் ஆய்வுகுறிப்பாகவும் எழுதியுள்ளேன். வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் எழுதிய அதே 1931 காலப்பகுதியில் வெளிவந்த கதைதான் கோ.நடேசய்யரின் ‘இராமசாமி சேர்வையின் சரிதம்’. அப்போது ஒரு கேள்வி எழுந்தது ஈழத்து சிறுகதை மூலவர்கள் மூவரா? நால்வரா..? நாளை வரை அதற்கு மறுப்பு சொல்ல யாருமில்லை. கோ.நடேசய்யர் எனும் மலையக இலக்கிய ஆளுமையை ஈழத்து இலக்கிய பரப்பில் நிறுவுவதற்கு அத்திவாரமிட்டவர் துரைவி அவர்கள். அவரைத்தான் நாங்கள் இன்று நினைவு கூருகிறோம்.
துரைவி ஈழத்தமிழ் இலக்கிய பதிப்புதுறைக்குள் ஒரு புரட்சியை செய்தவர். சோர்ந்து போயிருந்த மலையக இலக்கியத்தையும் ஈழத்துப் பதிப்புத்துறையையும் தட்டி எழுப்பியவர். அவரது மறைவு மலையகத்துக்கு பேரிழப்புதான் என்றாலும் அவரது மகனார் துரைவி.ராஜ்பிரசாத் தந்தையின் பணியினை தொடர்ந்து முன்னெடுத்துவருவதோடு 1997 ஆம் ஆண்டில் இருந்து தந்தையின் பெயரில் நினைவுப் பேருரையையும் 2012 ஆண்டில் இருந்து இலக்கிய துறையில் ஆய்வு மற்றும் விமர்சன நூல்களுக்கும், மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் வழங்கப்படும் துரைவி இலக்கிய விருதும் வழங்கும் நிகழ்வையும் மேற்கொண்டு வருகிறார். தந்தையை போலவே கொடைமனம் கொண்ட ராஜ்பிரசாத்தும் பாராட்டப்பட வேண்டியவர் என குறிப்பிட்டார்.
அன்றைய நினைவுப் பேருரையை இலங்கை ஊடகவியல் கல்லூரியின் விரிவுரையாளரும், ஊடகவியலாளருமான திருமதி.எம்.தேவகௌரி அவர்கள் ‘இணையத்தளத்தில் இலக்கியம்’ என்னும் தலைப்பில் நிகழ்த்தினார். மரபுரீதியாக நிலவும் அச்சுமுறை இலக்கிய அளிக்கைகளையும் நவீன இலத்திரனியில் அளிக்கை முறைகளையும் அதன் உள்ளடக்கம், வெளிப்பாடு, விமர்சனம், விளம்பரம், பதிற்குறி என அத்தனை அம்சங்களையும் ஒப்பிட்டு நேர்த்தியான ஒரு உரையை, ஒரு ஊடகவியலாளர்- விரிவுரையாளர் போன்ற ஆளுமையுடன் ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிக்காட்டினார் திருமதி தேவகௌரி. அவரது ஆழமான உரையை தனியான கட்டுரையாக பதிவு செய்வதே பொருந்தும். துரைவி பதிப்பகத்தினர் அவர்களது நினைவுப் பேருரைகளைத் தொகுத்து ஒரு நூலாக்குவார்களெனில் அதில் முக்கியமான ஒரு கட்டுரையாக திருமதி.தேவகௌரியின் உரை அமையும் என்பது திண்ணம்.
அடுத்த நிகழ்வாக விருதுவழங்கல் இடம்பெற்றது. 2013 ஆண்டு வெளிவந்த சிறந்த ஆய்வு இலக்கிய நூலுக்கான துரைவி விருதினை ‘போர்க்கால சிங்கள இலக்கியங்கள்’ எனும் நூலினை எழுதிய எம்.சி.ரஸ்மின் பெற்றுக்கொண்டார். கொடகே பதிப்பக உரிமையாளர் தேசபந்து ஸ்ரீ சுமன கொடகே அவர்கள் இவ்விருதினை பொற்கிழி, சான்றிதழ் நினைவுசிற்பம் சகிதம் வழங்கிவைத்தார்.
மொழிபெயர்ப்புக்கான விருதினைப்பெற தகுதியான நூல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் மொழிபெயர்ப்பை ஒத்ததாக சிங்கள இலக்கிய படைப்புகளையும் சிங்கள படைப்பாளர்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலான விமர்சன நூலான ‘மொழி வேலி கடந்து’ எனும் நூலுக்காக மேமன் கவி அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் இவ்விருதினை பொற்கிழி, சான்றிதழ் நினைவுசிற்பம் சகிதம் வழங்கிவைத்தார்.
ஆய்வு நூலுக்கான விருதினை நடுவர் குழுவும் விமர்சன நூலுக்கான பரிந்துரைப்பினை துரைவி செயற்குழுவும் தீர்மானம் செய்தன என்றும், போட்டித் தெரிவுக்கு நூல்களை அனுப்புவோர் போட்டி விதிமுறைகளை முறையாக பின்பற்றாத நிலையிலும் கூட அரசமட்டத்தில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தட்டி கேட்கத் தயங்குகிற எழுத்தாளர்கள் மத்தியில், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடுவர் குழுவிலும் செயற்குழுவிலும் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்தே இன்றைய இரண்டு விருதுகளும் வழங்கப்படுகின்றன என தலைமைதாங்கிய தெளிவத்தை ஜோசப் அவர்கள் நிதானமாகவே விருதுகளை அறிவித்தார்.
அடுத்ததாக துரைவி பதிப்பகத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்கள் அண்மையில் விஷ்ணுபுரம் விருதினை வென்றமையை பாராட்டும் முகமாக ஒரு பாராட்டுரையை ஏற்பாடு செய்திருந்தார். உரையை வழங்கவந்த பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர்:
தெளிவத்தையை பாராட்டும் தகுதி எனக்கில்லை என நினைக்கிறேன். ஆனால் கொண்டாடும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக ராஜ்பிரசாத் அவரது அப்பா துரைவி பெயரில் செயற்படும் பதிப்பகத்தின் ஊடாகவும், நான் என் அம்மா பாக்கியம் பெயரில் நிறுவியிருக்கும் பாக்யா பதிப்பகத்தின் ஊடாகவும் தெளிவத்தையின் படைப்புகளை நூலாக வெளிக்கொணர்ந்தவர்கள். எனவே சற்று அதிகமாகவே எங்களுக்கு உரிமையுள்ளது என நினைக்கிறேன். நான் இங்கு உரையாற்ற வரவில்லை. மாறாக ராஜ்பிரசாத் அவர்களின் வேண்டுகோளை ஏற்று உரையை ஒரு கதையாக சொல்லப்போகிறேன் என ‘தெளிவத்தையும் திருமையாவும்’ என கதை கூறினார்.
தெளிவத்தையைப் போன்ற பாவனை செய்து அவரது வாழ்க்கைக் குறிப்புகளையும், விஷ்ணுபுரம் விருது, அது கிடைக்கப்பெற்றதன் பின்னணி, எழுந்த சர்ச்சைகள், கோவையில் நடைபெற்ற தெளிவத்தையுடனான இலக்கிய கலந்துரையாடல்கள் விழா நிகழ்வுகள் அத்தனையையும் ஒரு கோர்வையாக சுவாரஷ்யமாக சொல்லிமுடித்து தெளிவத்தை யாரென எல்லோருக்கும் தெரியும் யாரந்த திருமையா? என அவரது கதையின் முடிவில் எடுத்துரைத்த விதம் சபையோரை கரகோசம் செய்யவைத்து விழாவையும் கலகலப்பாக்கியது.
இறுதியாக தனது இந்த நிகழ்வுப்பதிவு உரையின் நினைவாக ஒரு நினைவுசிற்பத்தையும் தெளிவத்தையாருக்கு தனது பாக்யா பதிப்பகத்தின் சார்பாக பரிசளித்து விடைபெற்றார் மல்லியப்புசந்தி திலகர். துரைவி.ராஜ்பிரசாத் அவர்களின் நன்றியுரையுடன் நேர்த்தியாக இரண்டு மணித்தியாலங்களில் இனிதே நிறைவடைந்த ஒரு முன்மாதிரி இலக்கிய விழா துரைவி விருது வழங்கும் விழா.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...