Headlines News :
முகப்பு » » தேயிலைத் தோட்டத்திலே (முழுமையான நூல்) - ஸி. வி. வேலுப்பிள்ளை

தேயிலைத் தோட்டத்திலே (முழுமையான நூல்) - ஸி. வி. வேலுப்பிள்ளை


தேயிலைத் தோட்டத்திலே - ஸி. வி. வேலுப்பிள்ளை
ஆங்கில மூலம்:
ஸி. வி. வேலுப்பிள்ளை

தமிழாக்கம்:
சக்தீ அ. பாலையா

--------------------------------------------------

முதற் பதிப்பு: 1969

'செய்தி' பதிப்பகம்
தபால் பெட்டி - 5
கண்டி.

விலை ரூ. 1-50


கவிஞர் ஸி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் "இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே" கவிதைத் தொகுதியைத் தமிழ்க் கவிதையாக்கும்போது, கவிஞரவர்களின் உள்ளத்தையும், உணர்வையும், ஏழ்மையில் வாடும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின்பால் அவர் கொண்டிருக்கும் பாசமும், பரிவும் அலைத்திரள்களாக எனது சிந்தனைகளைத் தழுவித் தொடர்ந்தன.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மலையகத் தமிழ் மக்கள் மலையகத்தைச் சீராக்கிச் சேர்த்தளைத்த செல்வங்கள் எண்ணிலடங்க. கோப்பியையும், தேயிலையையும், றப்பரையும் நட்டு கிராமங்களையும் பட்டினங்களையும் உருவாக்கி- பிரதானப் போக்குவரத்துப் பாட்டைகளை அமைத்துத் தம் உடல் பொருள் ஆவி, அத்தனையும் இலங்கைத்தீவின் நலனுக்காக - நல்....

(......கிழிந்துள்ளது.........)

...போல ஆக்கப்பட்ட ஓர் நிலையை அவர்கள் அடைந்திட நேர்ந்ததைக் கவிஞரின் உணர்வு குமுறிக் கூறுகிறது; மகாகவி பாரதி பாடினான் "கரும்புத் தோட்டத்திலே" மக்கள் படும் பாட்டினை, நெஞ்சம் குமுறினான். அவர்கள் நிலைமாறி உயர்வடைய நினைவளித்தான். ஆம்... அதுபோலத்தான் கவிஞர் வேலுப்பிள்ளையின் குமுறல்களும். "தேயிலைத் தோட்டத்திலே" நம் தமிழர்களின் நிலைமாறி வாழ்கைத் தரம் உயர்ந்திட வேண்டுமே என்று உள்ளம் குமுறுகிறார். அவர்கள் சுதந்திரத்தை நினைவூட்டுகிறார்.

கவிஞரின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்க் கவிதையாக்கும்போது அவரது மூலக் கருத்துணர்விற் கலந்திட விழைந்திருக்கிறேன். கருத்தாழம் வழுவாதிருந்திடக் கவிஞரின் கவிதைகளின் ஊடுருவும் மலையக மக்களின் உணர்வாம் கருப்பொருளைத் தழுவியே தமிழ்க் கவிதைகளைத் தந்திட முயன்றிருக்கிறேன்.

தமிழ்த் தெய்வத்தினை அலங்கரிக்கும் அழியாத முத்துக்களில் இதுவும் ஒன்றாகிச் சுடர்விட்டுப் பொலிவூட்டும் காப்பியமாக என்றும் விளங்கிட வேண்டும். மலையகத் தமிழருக்கு நன்றி செலுத்தத்தான் வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு இந்தக் காப்பியம் ஓர் சிறந்த பதில்; ஆம்! சிந்திக்க வைத்திடும் செம்மையான சித்திரம்.

சக்தீ அ. பாலையா
கொழும்பு - 12

--------------------------------------------------

பேரிகைக் கொட்டெழு
பேரொலித் துடிப்பும்
புலர்த லுணர்த்தப்
புரளுமாம் வைகறை

பாரிலே கதி ரொளி
பண்நடம் பயிலுமுன்
பசுந்தளிர்த் தேயிலை
பள்ளி கொள்தூய

எஞ்சிய முத்தாம்
எழில்மிளிர் பனித்துளி
எழுவான் இறைக்கும்
இதயார்ப் பணமுற

சஞ்சலம், வேதனை,
சாதல், அழிவு,
சகலமும், ஒன்றென
சார்ந்தவ் வேளைக்கண்-

இன்பமே அறியா
எம்மவர் சீவிய
எதிரொலித் துடிப்பென
எழும் பேரிகை ஒலி

அன்பரீர் நமக்குள்
ஆர்ப்பதும் எதுவோ!
அதனை எம் மூச்சென்(று)
அழைத்திடலாமே.

*

முந்தையோர் செய்த
முயற்சியும் அவர்தம்
மூச்சும், உணர்வும்
முழுமையாய் இங்கே

சிந்திய இரத்தமும்
வியர்வையும், தாங்கிய
சீற்றமும், துன்பமும்,
சிறுமையும், நோவினால் -

நொந்து குமுறி
அழுத கண்ணீருடன்
நித்தம் தம்முடல்
நிலம் புதைத்துழன்ற

எந்தை யோர் தம்மின்
எலும்புக் குவியல்கள்
எத்தனை! எத்தனை!!
எத்தனை யாமோ!!!

*

இங்கொரு நூற்றாண்(டு)
எல்லையுள் எம்மவர்
ஏற்ற துன்பம் பல
எண்ணுதற் புரிந்தமோ,

எங்ஙனும் அவர்தம்
இரத்தமும், வியர்வையும்
எலும்பும், எருவாய்
இருப்பதும் அறிந்தமோ?

நித்தம் அதனை
நினைந்து, நினைந்து
நெடுமலைத் தொடர்களும்
நீள்பசும் வெளிகளும்

சத்திய மௌனம்
பூண்டவை போலச்
சாதித்தார் தமை
நினைவுள் அடக்கினும் -

அன்று தொடங்கிய
அன்னார் மரபும்
ஆக்கிய சாதனை
அகத்தெழக் குமுறி

நின்று நின்று
நொந்துளம் ஏங்கி
நெடு மூச் செறிவதை
நோக்கிடு வாமேல் -

*

கூர் வேல் இதயம்
குத்திப் பிளத்தற் போல்
கொடுமையைக் கண்டு
மனம் தாளாது

பேரிகைத் துடி ஒலி
பிறந் தெதிர் ஒலிக்குமே!
பேரி கைத்துடி ஒலி
பீரிட் டொலிக்குமே!

*

புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களைப்
போற்றும் இரங்கற்
புகல் மொழி இல்லை;

பழுதிலா அவர்க் கோர்
கல்லறை இல்லை;
பரிந்தவர் நினைவுநாள்
பகருவார் இல்லை.

ஊணையும் உடலையும்
ஊட்டி இம் மண்ணை
உயிர்த்த வர்க்(கு) இங்கே
உளங்கசிந் தன்பும்

பூணுவாரில்லை - அவர்
புதைமேட்டில்லொர் - கானகப்
பூவைப் பறித்துப்
போடுவாரில்லையே.

*

ஆழப் புதைந்த
தேயிலைச் செடியின்
அடியிற் புதைந்த
அப்பனின் சிதைமேல்

ஏழை மகனும்
ஏறி மிதித்து
இங்கெவர் வாழவோ
தன்னுயிர் தருவன்.

என்னே மனிதர்
இவரே இறந்தார்க்கு
இங்கோர் கல்லறை
எடுத்திலர்! வெட்கம்

தன்னை மறைக்கத்
தானோ அவ்விறைவனும்
தளிர் பசும் புல்லால்
தரை மறைத்தனனோ!

*

வாடிய றோசா
மலரிதழ் போல
வாடியே அன்னார்
வாழ்க்கை கழிந்தது;

கூடிய வழக்கக்
கொடுமைகள் யாவும்
கூர்முள் ளெனவே
குடி, குடி தொடர்ந்தன.

ஓர் நூற் றாண்டு
உதயமும் மறைவும்
ஓங்குறு பேரிகை
ஒலிக் குமுறலிலே

உருவு மழிந்து
ஒன்றன்பின் ஒன்றென
உருண்டன; புரண்டன;
ஒழிந்தன கண்டீர்.

*

வரிசையாய்ப் பலவாய்
வளர்ந் தாங்கமைந்து
வரி, வரி நிறை களாற்
றம் வளம் கொழித்து

விரிந்து நிமிர்ந்து
மென் தளிர் விரித்து
விளைந்திடும் தேயிலைச்
செடி கொடி மரங்களால் -

அழகு தவழும்
மாதவப் பூமியை
அணுகிய பசுந்திடல்
சுரந்திடும் அமுதைத்

தழுவி நீளு மக்
கல் மலைக் கோவையைத்
தட்டி உலுக்கிடும்
மோனக் குரலதோ -

வழி, வ்ழி மரபினர்
வாழ்க்கையின் சோகமாய்
வழங்கிடு கீதமாய்
ஒலித் தெதிர் ஒலித்துப்

பிழியுதே உள்ளப்
பாச உணர்வினுட்
பிணைந்து மீண்டும்ம்
பிரியுதே; ஆங்கே -

*

கண்களுக் கெட்டும்
ககன விளிம் பையும்
கடந்ததற் கப்பால்
வெகு தூரந்தாங்கும்

எண்ணற் கெளிதலாத்
தொலைவையுங் கடந்து,
ஏக்கத் தீயிடை
எழு மூச்சுப் போல் -

யாதும் ஊடுருவிப்
பேதமும் கலைந்து
ஆக்கப் பயனை
அளித்த முந்தையோர்

ஆதரம் காணா
அதிர்ச்சியால் சலிப்பால்
அயர்ந்தும், சோர்ந்தும்
அருகே கடப்பதை -

நண்ணுவர் யாரே!
நம்உள வேதனை
நாடொறும் தொடர்வதை
நட்புற வுடனே

எண்ணுவர் யாரே!
என் இனத்தார்க்கும் பரிந்து
இரங்குவர் யாரே....!
இரங்குவர் தாம் யாரே!

*

அன்றைய கானகச்
சூழலும் எங்குள?
ஆக்க உயிர்ப்பு
மூச்சுற வெங்குள?

இன்றதோ எரிபடு
சவுக்கை விறகிடை
இராப் பகல் செந்தீ
எரியவும் அதன்கண் -

எழுதழல் வேகம்
இங்ஙனும், அங்ஙனும்
ஏங்கியே தேடும்
எந்தையர் பாசத்

தெழில் உற வெங்குள?
எங்குள? எங்குள?
இனியதாம் உறவும்
எங்குள? எங்குள?

இனிதாய்க் கிளைவிரி(து)
உயர்ந்துள வாகையின்
எழில் நிழல் தேடும்
இன வுற வெங்குள?

எனது முந்தையோர்
இதயம் கனிந்த
இரக்கமும் பரிவும்
இங்கே எங்குள?

*

நாகையும் சவுக்கும்
நட்டவரில்லை காண்;
நன்னிலம் படைத்த
பொன்னுடல் இல்லைகாண்;

ஈகையே புரிந்த - என்
முந்தையோர் இல்லைகாண்;
இங்கவர் செய்தவை
எண்ணுவாரில்லைகாண்.

*

பூனைக் குட்டிகள்
வாழ்க்கையைப் போலப்
போனதே அவர் சுகம்
புழுதியில் மறைந்ததே;

ஆனை என் றெண்ணும்
கந்தையர் இன்று
அவர் சவக்குழிமேல்
அமைந்த பாட்டையில் -

வானவரென வே
வரு மிப்பவனியும்
வழுத்திடில் எந்தையர்
வலிமைத் தியாகத்து

ஞானப் பலன் என
யாமும் உரைப்பது
ஈனர்க்குப் பொய்யாம் - ஆனால்
எமக்குப் பொய்யலதே
எமக்கும் பொய்யல்லதே!

*

சென்ற டைந்த
என் தமிழ் மக்கள்
செய்த பாட்டை
இரு புறத்தானும்

இன்றோ குச்சில் -
குடிசைகள்; இவையும்
இராப் பகல் சோகப்
பாழ்முகம் காட்டுதே;

தொழிற் சாலைக்கும்
தோட்டத்திற்கும்
தொடரும் செம்மண்
ஒற்றை வழியொடு

எழில் நீராற்றை
இணைக்கும் பாலமும்
இங்கே தொலையையும்
இல்லாதாக்குதே.

*

இருண்ட கனவாய்
இடைவெளி பலவும்
ஏகமாய்ப் படரும்
எழில் பனிப்படலம்

திரண்டு கொழிக்கும்
திருவயல் ஊடும்
தேயிலைச் செழிப்பில்
தெளிவையுந் தேடும்.

மருண்ட நிலை கெட
விடுதலைக் குமுறலால்
மலை நாட்டவர் செயல்
மாட்சியைக் கூட்டி

உருண்டும் புரண்டும்
ஓயா அருவிகள்
ஊறிப் பாயும்
உண்மையை உணர்மீனோ!

இதயக் குமுறல்
இதுவும் எமது
எலும்புள், நரம்புள்
இரத்தத் தசையுள்

புதுமை உணர்வுப்
பொலிவு கொள் வீரப்
புரட்சித் தணலைப்
பிறப் பித்திடுதலால் -

*

முதுமை என் பதைப்
பொய் யெனப்படுத்தும்
மூத்தோர் கரங்களும்
முடங்குவதில்லையே;

பதுமை போல
வாழ்ந்தது மில்லையே!
பாடுபடாமல்
இருந்ததுமில்லையே.

*

மென்னுடல் குலுங்க
மோகனக் குமரியர்
முயற்சிக் கேகும்
முறை வழி நோக்கி லோ

பொன்னுடல் மீதவர்
போடு மக் கூடையும்
பொலிவுடை, நடை, இடை,
புது நடம் புரிவதும்

கன் னியர் அவருடன்
கனிவுடைத் தாயும்,
குடுகுடு பாட்டியும்,
பேரப் பிள்ளையும்,

பொன் னென மண்வளம்
பெருக்குறச் செய்வதும்
பூரிப் புணர்ச்சிசேர்ப்
புதுமைப் புரட்சியோ.

*

இலைவடி வான
எழிலார் விழிகளும்;
ஏக மாய்த் தழைத்து
இனிதாய்த் தளிர்த்து

மலையகம் களிக்க
வளர்த்திடும் கொழுந்தை
மயக்கிக் கவர
மாட்சி சேர் கரங்களும் -

கலை நடம் பயிலக்
கைவிரல் பத்தும்
கண்ணிமைப் பதனுள்
கை கொளக் கொய்வத்ய்ம்

இலைகள் இரண்டும்
மொட் டொன் றாமே;
இலைகள் இரண்டும்
மொட் டொன்றாமே.

*

இயந்திரம் போல
இள நகை மாதர்
இயங்குவர் அவர்தம்
மென் மலர் பாதச்
சிலம் பொலி படியும்
சிரிப்பும் இயற்கைப்
பலம் உரை மலைகளில்
படுகை மடுக்களில்
கணீர் என் றொலித்துக்
காதலைக் கூட்டும்.

முதுகிலே தொங்கும்
மூங்கிற் கூடையில்
புதிதாய்ப் பறித்துப்
பொதித்த தேயிலைப்
பொன்னிற மாகத்
தன் நிறம் பெறவும்
கன்னியர் நினைவில்
கற்பனைத் திரளுமே.

*

தளர்ந்த உடலம்
தாங்காச் சுமை யைத்
தாமே சுமந்து
தளிர் இளம் மாதர்

வளர்ந்த மலைகள்
மடுக்கள் முதலாய்
விரைவரே! மிருகச்
சுமை யூர் வலமென

பளுவைத் தாளாது
பட்டுடல் நொந்து
பாவையர் முக மெலாம்
வியர் வையே சிந்த

உளமும் ஏங்கி
ஒருவர் பின் ஒருவராய்
ஒடுங்கியே நிறுவை
முறையினை மேவும் -

நேரம் நோக்கி
நின்று, நின்று
நினைப்பும் சோர்ந்து
நலிவரே; இவர்தம்

பாரம் உள்ளப்
பார மோ! உலகப்
பார மோ - யாரே
பகரவும் கூடும்!

*

ஓட்டமும் நடையும்
அணு குறைந்தாலும்
ஒரு காலிடறியே
கீழ் விழுந்தாலும்,

தேட்ட மாம் குழந்தைக்(கு)
அமுதும் ஊட்டித்
தூங்கச் செய்ததால்
சுணக்க மென்றாலும்

தப்பித் தவறியே
ஓரிரு முற்றிய
தளிர்த் தேயிலைகளைப்
பறித் திருந்தாலும்

இப்படி என்றிலா
இழிந்த வார்த்தை யால்
எத்தனை வசவுகள்
எத்தனை! அந்தநாள் -

*

வேலைத் தளத்திலே
வேலை இல்லை என
வீட்டை நோக்கி
விரட்டப் படுவரே;

காலை முதலாய்
கடும் பகல் வரை அவர்
கடமைகள் புரிந்தும்
கருதுவாரில்லையே!

*

வெட்கமும் துயரமும்
வேதனைப் பழுவும்
முட்களாய் உள்ளம்
முழுமையும் துளைக்கினும்
வீட்டுப் பணியில்
தம்துயர் களைந்து
வாட்டும் வறுமைதனையும் மறந்து
பிள்ளையும் கணவனும்,
புசிப்பதற் குணவு
கொள்ளை கொள் பாசக்
குறிப்புடன் சமைப்பளே!
இரவும் நெருங்கும்
இவளுடல் சோர்வால்
தரையிலே பழம் பாய்
தனில் விழுந் தயருமே.

*

- ஆயினும்

அன்னாள் அயர்வும்
நித்திரையாமோ!
அவ்விருட் காலத்தும்
அமைதி மேவுமோ!
முன்னைய வெறுமைக்
காலக்கனவிலும்
மூடு பனி சூழ்
உதய நினைவிலும்
கண் விழிப்பூட்டும்
பறைக் குமுறலிலும்
கடுமையாம் துன்பப்
பாரந் தனிலும்
கண்ணிமை திறந்தும்
மூடியும், இரவுக்க்
காலம் போக்குதல்
கற்பனையல்லவே -
கனவும் அல்லவே.

*

- இயற்கையின்
உறவுப் பாசமும்
உணர்ச்சித் தொடர்பும்
பிறவுயிர்க்குளது போல்
இவர்க் குளதாயினும்
வினைமனைகளிலும்
வேலைத் தளத்திலும்
மனம் விரும்பாத
மங்கையர் தம்மை
அற்பர்களான
அதிகாரி களோ
கற்பைக் கெடுக்கும்
காமப் பேய்களாய்...

*

எழில் மிகு குமரியர்
வாழ்வைக் கெடுப்பதை
இங்கவர் சீவியம்
பாழ்படச் செய்வதை

பொழியும் வானமும்
அன்னை பூமியும்
பொறுக்குமோ - உள்ளம்
பொறுக்குமோ - அந்தோ!

கற் பிழந்து
கண்ணீர் வடித்துச்
சொற்ற கை மதிப்புச்
சுக மெலாம் இழந்து

அற்பப் பரத்தை என்(று)
அவச் சொற் கேட்டு
அழிந்த பெண்மையும்
போயதே! நூறாண்டும் -

போயதே கொடியதாய்
போயதே! அந்த நாள்
போயினும் அத்துயர்க்
குமுறலும் இந்தநாள்

ஓயா முரசத்து
ஒலித் துடிப்புள்ளே
மாயா உணர்வெணெக்
குறித்திடல் கேண்மினோ!

*

செம்பு நிறத்து
வைரத் தேகச்
சிறப்பும் பூண்ட
என் தமிழ் ஆடவர்

நம்பும் இயற்கை
வளத்துயிர் ஊட்டி
நாட்டின் உயிர்களைக்
காத்து மதிப்பவர் -

எழுவான் ஒளியும்
புலர்ந்தது முதற் கை
ஏந்தும், குத்துளி, கோடரி, சுத்தியல்
அலவாங்கொடு மண்வெட்டி முதலாய்

வழு வா தாள
இசை யதைப்போல
வழங்கு சப்த
எதிரொலி தொடர்ந்து -

காட்டிலும் மேட்டிலும்
மலையிலும் மடுவிலும்
கானம் புரிவதும்
கற்பித மா மோ!

நாட் டுளோர் இதனை
நம்புவ ராமோ!
நம்மவர் உரிமையை
நல்கவும் போமோ!

*

முள்ளாற் மண்ணைக்
கிளர்பவர் பலபேர்
முறையாய்க் கவ்வாத்துக்
கொய்பவர் பலபேர்

தெள்ளிய எருவைத்
தூவுவர் பலபேர்
தொற்றுநோய் மருந்தைத்
தெளிப்பவர் பலபேர் -
- இவரெலாம்
தத்தம் தொழிலில்
தமக்கோர் நிகரிலா
உத்தமர் எனது
உறவுகாண் மனிதர்;

தத்தம் செயலில்
முறைபிசகாது
தர்மமே புரியும்
சத்திய மனிதர்.

*

கலைத்த தேனிக்
கூடவர் இதயம்
கரங்களைத் தேன் கசி
திரட்டெனக் கொளலாம்;

நிலைத்த உறுதி
மனந்தள ராது
நிலத்திலே அவருடல்
வியர்வையைக் கொட்டி -

ஒவ்வொரு நாளும்
எண் மணி நேரம்
ஓய்விலா தேழு நாள்
உழைப்பவர் ஓர் வாரம்;

இவ்வித மிவர்தம்
வாழ்க்கையின் இரத்த
வெள்ளம் இந் நாட்டை
விருத்தி செய்தாலும் -

யாரோ சிலரின்
மோட்ச வாசமாய்
ஆச்சுதே இந்த
அழகிய பூமி

யாரோ சிலரின்
சுவர்க்க இன்பமாய்
ஆச்சுதே என் மக்கள்
ஆக்கிய பூமி

*

கூலிகள் என்னும்
கொடியதோர் கொடுமையைக்
குலத்தின் பரம்பரைச்
சொத்ததென இங்கே

பாலிப்பாரை
பரவசப்படுத்தும்
பகட்டு மனிதர்க்கும்
விடுதலை போச்சோ?

*

அடிமைத் தளையை
ஒடித் தெறியாது
அவர் பொருட்டெதையே
ஆக்குவன் யாரே!

மிடிமைச் சூழலே
களஞ்சியமாக
மகனும், பாட்டனும்
பேரனும், வழிவழி -

பரம்பரை நியதிப்
பட்டயமாகக்
கடன் எனும் கண்ணி
வலையினால் மனத்து

உரம் வலுவிழந்து
வறுமையிலுழன்று
உறவுங் கசந்து
வெட்கி மெலிந்து -

சக்கர வளைவு போல்
உடலும் வளைந்து
சாதியில் தாழ்ந்தவோர்
சாதியாய் வீழ்ந்து

மிக்கக் கேவல
நாயினும் கேடாய்
நடைப்பிணமாகி
நாமமும் அழிந்து -

*

அடிமைக் கடிமை போல்
அநாதையாய்த் தனது
ஆன்றோர் உறவும்
அழிவுறும் கூற்றைப்

படி மிசை காட்டும்
பாடமாய் வாழ்க்கைப்
பலன் இது தான் எனப்
பகர்வது போலவே -

விதி எனும் பயத்தை
விரதமாய்க் கொண்டு
விதிக்குள் இவ்வாழ்வை
விரையமும் ஆக்கி

அதியிலாத் தமது
காலமுடிவைக்
கழித்தனர்; என் இனக்
காதலர் அவரே.

*

புல்லைப் பிடுங்கியும்
புதுமண் பரவியும்
நல்வளப் பெருக்கினை
நாட்டும் என்மனிதர் -

கல்லை உடைத்து
வழிகள் அமைத்து
கட்டடம் செய்த
என் இன மனிதர் -

சென்ற காலத்து
வேதனை வாழ்க்கையைச்
சோதனையாகக்
கொண்ட முந்தையர்

நின்ற கதியிலா
நிலையை அடிக்கடி
நினைப்பர்; இவரது
நினைவுத் திரையிலே...

கடலைக் கடந்து
முந்தையோர் வந்த
காட்சியைக் கண்டு
கண்ணீர் வடிப்பர்;

உடலை வளர்க்க
வந்தாரிவரோ?
உயிரைக் காக்க
வந்தவ ரிவரோ? -

*

பெற்ற தாயின் முன்
புத்திரர் பிரிய
பிறந்தவர் பிரிவதால்
சோதரி கதற

கற்ற வரில்லா
கயவர்கள் பேச்சைக்
கடவுளர் வாக்கெனக்
கருதிய மனிதரும் -

தேயிலைச் செடியின்
அடியிலே தங்கப்
புதையலுண்டெனும் வீண்
புரளியை நம்பித்

தாயைப் பிரிந்தும்
தந்தையைப் பிரிந்தும்
தமையனைத் தம்பியைத்
தமக்கையை தங்கையை

உற்ற உறவுகள்
யாவையும் துறந்து
உடலையும் உயிரையும்
விலை எனப் பேசியும்

நற்றவத் தாயாம்
நாட்டினைப் பிரிந்து
நயனம் நீர்ப் பெருக்க
நடுங்கிய வாறு -

*

பாய் மரம் தாங்கும்
படகிலே ஏறுவர்
படகோட்டும் "பாட்டா"
பாட்டிலே ஆறுவர்.

பாய் விரித்தந்தப்
படகும் காற்றுப்
பலத்தால் உந்திக்
கடலிற் கதியாய்

அலை மலை ஏறியும்
வீழ்ந்தும் அசைந்தும்
அக்கரை விட்டு
இக்கரை சேருமே

அலைகடல் போல
மனமும் கலங்கி
அக்கரை விட்டவர்
இக்கரை சேர்வரே.

*

- ஆயினும்

பாத சாரியாய்
வந்த முன்னையோர்
பட்ட கட்டங்கள்
பகரக் கொஞ்சமா?

மாதக் கணக்கில்
கானகத்தூடே
மருண்டு நடந்து
மாண்டவர் கொஞ்சமோ?

வன விலங்கினத்து
உணவென ஆக
வந்தவர் எத்தனை
வழுத்துதல் எளிதோ?

கனவிது மன்று
கடல் கடந்தன்று
வந்தவர் வாழ்க்கைக்
கதையீதாமே

*

கண்டித் தோட்டம்
என முன் உற்ற
கலைநகர் 'மாத்தளை
தமிழரூர்' அடையவும்

பண்டைத் தமிழர்கள்
மன்னார் தொடக்கம்
பாதசாரியாய்க் 'குரு
நாகலை' வழியே -

வந்ததை உணர்த்தும்
மனித எலும்புகள்
வெண்தலை யோடுகள்
வனங்களில் கிடக்குதே.

இந்தப் படியிவண்
எஞ்சிய எம்மவர்
இலங்கைத் தீவிற்
றமையர்ப் பணித்து -

கானக மழித்தனர்
காப்பியை நட்டனர்
காப்பிமரங்களும்
கனி மணிதந்தன.

வானமும் பெய்தது
வளமும் கொழித்தது;
வாழ்வும் எவர்க்கோ
வந்த தாம் கண்டீர்.

*

அளவைக் கெட்டா
மலைகளுக்கப்பால்
ஆங்கே புகையிரத
வழிகள் அமைந்தன;

களவாய்ச் சிறுத்தைகள்
பதுங்கிய புதர்மேல்
கட்டடங்களும்
பாலமும் அமைந்தன.

தாவளப் பொதிகளில்
தானியம் வந்தன;
தட புடலாக
ஜட்கா வந்தன;

காவலாக வேற்கம்பில்
சலங்கையைக்
கட்டியே சேவகன்
கடிதமும் கொணர்ந்தான்.

தோட்டங்களுக்குள்
ஆட்சி புகுந்தது;
தூரப்பட்டணம்
கிராமம் நுழைந்தது;

நாட்டில் சட்டங்கள்
நாளும் புகுந்தன
நம்மவர் உழைப்பால்
நலன்கள் மிகுந்தன.

*

சென்றடைந்ததாம்
ஒரு நூற்றாண்டும்
செப்பும் இதனைச்
சித்தம் பதித்து

நின்று ஒலிக்கும்
முரசொலித் துடிப்பும்
நினைவு கூறியெம்
நிலையை உணர்த்துதே!

*

குக்கிராமங்கள்
இவ்விடத்தில்லை;
குடிகளுமற்ற
கிராமங்கள் இல்லை;

மிக்க பயங்கர
யுத்தமும் சாவும்
மலைநாட்டினிலே
தோணவுமில்லை.

போர்வாள் யுத்தம்
புகுந்திடவில்லை
பெருந்தீ எழுந்து
அழித்திடவில்லை;

வீரர்கள் இரத்தம்
சிந்திடவில்லை
விரோதியர் சரணம்
அடைந்திடவில்லை;

சரித்திரக் கதைபோல்
பகையால் போரால்
சாவால் ஆட்சி
நிலைத்திடவில்லை...

தரித்திரம் நீக்கிய
மனிதர்ரின் உழைப்பால்
தழைத்ததாம் தோட்டத்
துரைகளின் அரசே!

*

தகரக் கூரைகள்
தாங்கிய லயங்களில்
தழைத்த உழைப்பினர்
விளை பயன் எனினும்

பகரக் கூடா
அவர் குடியிருப்பைப்
பகரவும் வெட்கம்;
பகர்ந்திடுவாமேல் -

ஈரா றடியும்
ஈரைந்தடியும்
இங்கவர் வாழும்
இல்லமேயாகும்;

யாரே மனிதரை
மிருகமாய் எண்ணி
யாவையும் ஒடுக்கப்
பிறந்தார் பகர்வீர்!

பெற்றவருடனே
மருமான், மருமாள்,
புத்திரன், புத்திரி
பூட்டனும் பேரனும்

உற்ற அவ்வறையிலே
அடுப்பும் மூட்டுவர்;
உணவுஞ் சமைத்து
உண்டு உறங்குவர்.

*

கண்ணைக் கயக்கும்
புகைப்படலத்து - முறைக்
காதலும் புரிவர்
குழவிகள் பெறுவர்.

எண்ணள வற்ற
இத்தனை பாடும்
இவர் படுவதும்
ஏனெனில் - அவர்தம்

எஜமான் கொண்ட
எதேச்சா வாத
எழுச்சி யாணவக்
கட்டளைக்காகவே.

எஜமான் என்ற தோர்
வகுப்புப் பிரிவின்
இறுமாப்புணர்வுக்
கட்டளைக்காகவே.

*

பழுத்த வயதுடைப்
பொக்கை வாய்க்கிழவரின்
பாழ்பட்டிருக்கும்
நிலையை நோக்கிலோ

செழித்தவன் - பெரிய
துரை - வா என்னான்;
சின்ன துரையும்
நன்னயம் பண்ணான்.

அன்னார் புதுமைக்
காலமும் அகன்றது!
அன்னார் கோடை
இரவும் கழிந்தது!

அன்னார் இரத்தமும்
ஊக்கமும் வற்றின!
அன்னார் வாழ்க்கையும்
வீணென ஆயதே.

முதுமைக் காலப்
படி இவர்க்கில்லை
மூச்சோ, பேச்சோ
இவர்க் குரித்தில்லை;

வெதும்பிய உளத்தால்
பிச்சையும் எற்று
வீதிப் புழுதி
வீழும் இக்கிழவர் -

*

எழுக்கை இழந்த
தம்முடல் தம்மை
எருவாய்த் தேயிலைச்
செடிக்குண வாக்குதல்

வழக்கென முரசொலி
வழுத்தும் குமுறல்
வழங்கும் உண்மையை
வழுத்தினேன் கண்டீர்.

*

மதில் போல் வளர்ந்த
வேலிச்செடிகளில்
மலரும் சூரிய -
காந்திப் பூக்களும்

உதிர் மகரந்தப்
பொடிகளிற்பட்டு
உவந்து பாடிடும்
தேயிலைச் சிட்டு.

*

மாலைக் காற்றும்
வீசிடும் போது
மங்கிடும் இரவு
வந்திடும் போது

மேலே வெண்ணிலா
மேவிடும் போது
மூலைமுடுக்கில் நாய்
குரைத்திடும் போது

வாழ்க்கையின் இனிய
ஆசையை அள்ளி
வீசும் நிலவொளி
வாலிபர் - குமரியர்

வாழ்க்கைத் துணையையும்
வரிக்கச் செய்வதால்
வஞ்சமே இல்லாக்
குழந்தைகள் பிறக்கும்

*

இவர்களும்
எண்ணெய் காணா
தலைமயிர்ச்சடையுடன்
என்றோ குளித்த
அழுக்கு உடம்புடன்

கண்ணிலே காணும்
சேற்றில் புரளுவர்
காட்டெலி, கோழிகள்
வேற்றுமையறிந்திலர்.

கூரிய சூரியக்
கதிரொளி அவருடல்
குடைந்து சதையையும்
எரிப்பதைக் கண்டவர்

யாரே! இவர் சுகம்
நண்ணியதுண்டு?
யாதிவர்வளர்ப்பென
எண்ணியதுண்டு?

தாயும் வீடு
அடையும் வரையில்
தாமும் மள்ளியில்
படிக்க ஏகாமல்

நேயர் சூழத்
தேயிலைச் செடிக்குள்
நித்தம் ஒளிந்து
நிற்பர் - அல்லது -

*

தோட்டம் சுற்றித்
திரிவர் - அல்லது
திரண்ட காந்திச்^
சோலையை அடைந்து

கூட்டம் போட்டுக்
கும்மாள மடிப்பர்
கூடி விறகும்
பொறுக்கிடப்போவர்.

எழுத்தறி வில்லா
இத்தகை வளர்ச்சியால்
இவர் எதிர்காலம்
கனவென ஆயினும்

அழித்தெழுதாதவோர்
ஆக்கினை போல
அலவங்கு, முள்ளு
மண்வெட்டி, கைஏந்தியே -

வியர்வை வடித்து
கூலியாய் உழைத்து
வெறுமையுள் நலிந்து
வீழுவ தெல்லாம்

துயரக் கதையிலும்
துன்பக்கதை, அதைத்
தொனிக்குதே பேரிகைத்
துடி ஒலிக் குமுறல்!

^ சூரியகாந்திச் சோலை

*

பொங்கல் புத்தாண்டு
திருவிழா உண்டு;
புனிதமாம் இருநாள்
அமைதியும் உண்டு,
- பூரிப்பால் இருநாள்
சாந்தியு முண்டு.

எங்கும் ஒருங்கே
இவரெல்லாம் கூட
இவர் விழிப்பார்வை
எழுவானம் நாட -

ஞாயிறைப் போற்றும்
உதய கீதமே
நவிலுவர்; அவன் கதிர்
ஒளிவிடும் வேளையே,

தேயிலை மலைகளும்
விண்ணிறம் பூணுமே;
தோரணம் மாவிலைத்
திருமிகக் காணுமே;

தோட்டத்து லயங்களில்
சுகந்தப்புகை எழும்
தூய அந்நேரம்
துதியும் பாடலும்

கேட்க ரசிக்கும்
சேகண்டி, செஞ்சுரா
கலீர், கலீர் எனும்
சாலரா சுதியொடு -
பொங்கலோ பொங்கல் என்
றிறைவனைப் போற்றுவர்;
பொங்கி எழும்வான்
ஞாயிற்றைப் போற்றுவர்.

*

காக்கும் கடவுளின்
வாசலில் தோரணம்
கட்டி அழகெழ
அலங்கரித்திடுவர்;

பாக்கும், பனையும்
வாழையும் நட்டுப்
பந்தலும் போட்டுப்
பக்தியுட்படுவரே.

சந்தனம், மஞ்சள்
சூடம், பத்தி
சாம்பிராணியும்
வெற்றிலைப் பாக்கும்

சிந்தைக் கனிவுடன்
நெய்யும், பாலும்
செந்நெல் அரிசியும்
தட்டிலே வைத்து -

கன்னியர் தங்கள்
கரங்களில் ஏந்தி
கடவுளை எண்ணி
வலம் வரும் போது

அன்னவன் கோயில்
மணியின் ஓசையும்
அவனை அழைக்கும்
பெயர்களும் ஒலிக்க -

*

வண்ண உடைகளில்
வந்துள கூட்டம்
வணக்கமாய்த் தெய்வத்தை
வாழ்த்திடும் கண்டீர்.

எண்ணங்கள் ஆயிரம்
இவர்க்குள்ள போதும்
இறைவனென்றால் அவர்
கைதொழும் கண்டீர்.

*

தீபாவளித் திரு
நாள்வரும் போதும்
தொடருமே இருநாள்
அமைதியும் மகிழ்வும்

பாப இருட்டும்
அகலவும் விளக்குகள்
பற்றவும் வைப்பர்
கடவுளைப் பணிவர்;

எண்ணெய் குளிப்பர்,
பலகாரங்களும்
இனத்தாருக்குப்
பரிமாறிடுவர்;

கண்ணைப் போலவே
உறவையும் பாச
உணர்வையும் ஆங்கு
உணர்ந்திடுவாரே.

பச்சை மயில் நிறச்
சேலையும், மஞ்சள்
சட்டையுமணிந்த
குமரியர் கூட்டம்,

இச்சை எனும் புது
உணர்வும் அவருள்
எழுந்ததால் மகிழுவர்
இது அவர் இன்பமே.

*

குங்குமப் பொட்டும்
நெற்றியில் துலங்கும்
குமுத இதழும்
சிவந்து இலங்கும்

இங்கவர்க் கதுவே
இணையிலா அழகு
இன்பப் பொலிவு
எழில், இஃதுண்மையாம்.

*

நாட்டுக் கீதமும்
நட்டுவக் கூத்தும்
கும்மி ஒயில்
கோலாட்டம் முதல்

பாட்டுடன் தம்பூர்
மத்தளம் உருமி
பலப்பல வண்ணப்
பண்ணிசை முழங்க -

ஒரு நாள் வாழ்வு
உவக்கும் களிப்பே
உண்மையில் அவரது
ஆத்தும திருப்தியாம்

பெருநாள் இதுவும்
ஒரு நாள் எனலால்
பெரிதே விரும்பிப்
போற்றி செய்திடுவரே.

*

வசந்த கால
வருகையின் போது
வரும் ஓர் மகிழ்ச்சித்
திருவிழா அதுவும்

கசந்த நினைப்பை
அகற்றும் கலையாம்
காமன் கூத்தால்
களிப்புறுவாரே.

ரதி எனும் மங்கை
காதலில் தோற்ற
ரம்மியக் கதையைக்
கூறி நடித்துப்

பதி எனும் மதன், சிவன்
பார்வையால் எரிந்த
பரிதாபத்தையும்
பண்ணிசைப்பரே.

சந்திர ஒளியில்
இரவெலாம் விழித்து
சிறு தீ மூட்டிக்
குளிரையும் தடுத்து

விந்தையாம் காதல்
வித்தாரக் கதையைப்
பெண்ணும், ஆணும்
பிள்ளையும் கேட்பரே.

*

தொன்மைக் காதைத்
திரு இலக்கியத்தைத்
தொடர்ந்து இரவுக்
காலமே கேட்டு

அன்னவள் ரதியின்
அழகையும் பொலிவையும்
அறிந்து மகிழ்வரென்
றொலிக்குதே முரசம்.

*

சாந்தியும் அமைதியும்
சார்ந்த இக்காலம்
போந்த புத்தாண்டும்
பொங்கலும் தீப -
ஆவளி நாளும்

காமன் கூத்தும்
போவதும் தொடர்ந்து
போவதே யாகும்.

போலி மகிழ்ச்சிக்
கனவென இவைகள்
கேலிக் கூத்தாய்ச்
சென்ற பின் இங்கே

மனதும் நொடிப்பர்;
மகிழ்வும் இழப்பர்;
கனவோ இவை எனக்
கண்ணீர் உகுப்பர்.

என்ன விழப்பல
வந்து போயினும்
இவர்க்கே அரச
பிரபு வாய் விளங்கும்

சின்ன துரைகளும்
பெரிய துரைகளும்
செய்யதிகாரச்
செல்வத் தொப்புமோ?

தாமே எஜமான்
தாமே பிரபு
தாமே அரசர்
தமதே ராஜ்யம்!

ஆமாம்; இதனை
மறுப்பாரில்லை
அவரது உரிமைகள்
கணிப்பாரில்லை!

ஏனெனில் அவர்கள்
இயம்பினால் அதுவே
இங்கொரு சட்டம்
இயற்றுவதாகும்.....

ஏனெனில் அவரதே
உலகம் ஆனதால்
இங்கவர் செய்வதே
நீதி என்றாகும்.

*

பொன்னை விளைக்கும்
எந்தமிழ் மக்களின்
பிச்சைக்கரங்கள்
பொலிந்த செல்வத்தால்

^அன்னவர் வாழும்
இடமெலாம் ஒரு
ஆங்கிலச் சீமையை
அமைக்கிறார் கண்டீர்.

செங்கல் மாட
மாளிகை இல்லமோ!
சிறந்த புதுமுறைக்
கட்டட இல்லமோ!

ஆங்கெழ -
அவற்றின் முன்
அமைந்திடும் பசும்புல்
அலரும் முற்றத்தே -

குதிரைச் சவுக்கும்
கப்பல் மரமும்
கூடி வளர்ந்து
கொழிக்கும் அழகும்

இது ஒரு சிறிய
இங்கிலாந்தென்பதை
எமக்கறிவிக்கும்
இறுமாப்புடைத்தே.

^துரைகள்

*

காலை ஒளியைக்
கவர்ந்துளம் பருகிக்
களிப்புடன் மாலை
ஒளியையும் முகரும்

சோலைப் பூங்கா
சுற்றிலும் விளங்கும்
சுகந்த றோசா,
சேம்பு மலர்களும்

சுரப்பியூற்றும்
சிறு சிறு குட்டையும்
சடைச்செடி வளர்ப்பும்
சரளைக்கல்லமைப்பும்

நிரப்புமே சீமையின்
அழகையும், பொலிவையும்
நினைவையும் அன்னவர்
நிம்மதிக்காகவே.

சின்ன துரைக்கும்
பெரிய துரைக்கும்
சித்தம் போலவே
சீவியம் உயரும்;

பொன்னும் மணியும்
களஞ்சியம் பெருகும்
பேரிகைத் துடிப்பொலி
கூறுமே இதையே.

*

கோப்பிக் காலம்
தொடங்கியே இந்நாள்
கொழுந்து பறிக்கும்
சரித்திரம் மட்டும்

கோப்பிப் பிடுங்கினோர்
தொடங்கிய இந்நாள்
கொழுந்து பறிப்போர்
வாழ்க்கை மட்டும்

பெருமூச்சுடனும்
சிறுநகையுடனும்
பெருஉழைப்புடனும்
சிறு ஓய்வுடனும்

ஒரு முகமான
பலப்பல மாற்றம்
உவந்தும், தவழ்ந்தும்
ஓடி மறைந்தன.

*

மாறும் புதுமை
யாதே ஆயினும்
மனிதனை - மனிதனும்
மனிதனை - ஆட்சியும்

வேறு வேறாகப்
பிரித்துப் பிரித்து
ஒருவர் உரிமையை
மற்றவர் பறித்தும்

ஒறுத்தும், மறுத்தும்
வெறுத்தும், வீழ்த்தியும்
ஒருவர் வாழவும்
மற்றவர் தாழவும்

சிறுத்த மனத்தால்
செய்திடும் சூழ்ச்சி
சிறிதே மாறவும்
செய்திடப் போமோ?

*

சட்டம் கொடுமைக்
கெடுபிடி போமோ?
சர்வாதிகார
ஆணவம் போமா?

கட்டி வதைக்கினும்
சுதந்திரத் தீச்சுடர்
கனலின் எழுச்சியை
அழிக்கவும் போமோ?

ஆப்பினைச் சம்மட்டி
அறைய எழுந்தீ
ஆப்பின் அறைக்கும்
அடங்குவதாமோ?

தோப்பு மரங்களை
பிளந்திடும்போது
தெறிக்குந் தீப்பொறி
தொடராது போமோ?
- ஆனால்
மனிதனின் நாமத்தை
மனிதன் வணங்கவும்
மனிதனே சிலுவைமேல்
வடிப்பான்.

புனிதமாம் சுதந்திரச்
சோதிச்சுடரின்பப்
பூரண எழுச்சியும்
படைப்பான்.

*

நூற்றாண்டு காலமாய்
நுழைந்த இவ்விருட்டை
வேரோடழிக்க
என்தமிழ் மக்கள்

கூறுவர் சிகர
உச்சியில் ஏறிக்
கூறுவர் திடல்கள்
யாங்ஙனு மடுக்கவே.

விடுதலைக் குரலது
வெற்றிக் குரலது
வீரக்குரலது
விரைந்தெழும் கேட்பீர்!

அடிமை நிலையை
அகற்றவும் அழைக்கும்
அன்புக் குரலது
அன்பரீர் கேட்பீர்!

வாக்குரிமையோடு
வளநாட்டுரிமையும்
ஊக்கமும் வெற்றி
ஓம்பிடுங்காலம்

பூக்குமே யந்தப்
புண்ணிய நாள்தனில்
ஆக்கம் புரிந்தவர்
அமைதி இழந்தவர்

*

மூச்சிலே சுதந்திரத்
திருகலந்திடுமே;
மூச்சிலே விடுதலைச்
சுகம் மலர்ந்திடுமே.

பேச்சிலே வீரமும்
உறுதியும் மாட்சியும்
பிறந்திடும் வெற்றிப்
பெருவாழ்வாமே.

++++++பின்னட்டை++++++

" ...வியர்வையையும் இரத்தத்தையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாக அவமதிக்கப்பட்டு தோட்டத்துரையின் நாய்களிலும் குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளியின் அவஸ்தையைப் பிரதிபலித்துக் காட்டும் அமர சிருஷ்டி இது"

இலஸ்டிரேட்டட் வீக்லி ஒப்f
இந்தியா - பம்பாய்

*****
நெஷனல் பிரிண்டர்ஸ் - 241, கொழும்பு வீதி, கண்டி.

*****முற்றும்*****
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates