Headlines News :
முகப்பு » , » மாவலியும் களனியும் - தெளிவத்தை ஜோசப்

மாவலியும் களனியும் - தெளிவத்தை ஜோசப்


கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய முத்துறை சார்ந்த கனமான இலக்கிய ஏடு ஒன்றினை வெளியிட உத்தேசித்த உழைத்து வந்தனர். ஒரு காலாண்டு சஞ்சிகையை ‘மாவலி’ என்ற பெயரில் வெளியிடத் தீர்மானித்தனர். இலக்கிய நண்பர்களின் கூட்டு முயற்சி இது என்பதால் சஞ்சிகைக்கான பெயர் தெரிவும் நண்பர்களின் கலந்தாலோசிப்பின் பின்பே ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

மாவலி என்ற பெயர் ஒத்துக் கொள்ளப்பட்டவுடன் அதற்கான ஆரம்ப வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.  மாவலிக்கென விஷயங்கள் பெறப்பட்டன.  விளம்பரங்கள் தேடப்பட்டன கடிதங்கள் தயாராகின. முதல் இதழின் முன் அட்டைக்கான ‘புளக்’ இத்தியாதிகள் செய்யப்பட்டன. மாவலி வரப்போவதாகப் பத்திரிகைகளில் செய்தியும் வந்துவிட்டது. 

இது இப்படியிருக்க மலையகத்தின் முன்னோடி இலக்கியவாதியும், ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளருமான திரு சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகபபூர்வ ஏடாக மாவலி என்கிற பெயரில் ஒரு மாத சஞ்சிகையை வெளியிட்டார். 

சி.வி.யின் “மாவலி” கிளிநொச்சி நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.  அந்த அதிர்ச்சி அவர்களைச் சோர்வடையச் செய்யவில்லை. மாறாக தீவிரமடையவே செய்தது. நமது மண்ணின் கலை கலாசார அறுவடைக்கு மாவலியும் வேண்டும்.  களனியும் வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டார்கள். கிளிநொச்சி மக்கள் கலாசாரப் பேரவையின் வெளியீடாகக் களனி வெளிவரத் தொடங்கியது.

“நூறு சிந்தனை மலரட்டும்
நாறும் கீழ்மைகள் தகரட்டும்”
என்பதே களனியின் பத்திரிகைச் சுலோகமாக இருந்தது.

ஒரு நாட்டின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்க, அந்த நாட்டின் கலாசாரமும் வளமுள்ளதாக இருக்க வேண்டும்.  கலாசாரத்தின் வீழ்ச்சி ஒரு நாட்டின் வீழ்ச்சி.  அந்த நாட்டு மக்களின் வீழ்ச்சி  என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த களனி,  கலாசாரச் செழுமைக்காக ஓயாது உழைக்கவென தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர் களனிக் குழுவினர்.களனியின் ஆறாவது இதழின் தலையங்கம் இந்தக் கலாசார சீர்குலைவு பற்றிப் பேசுகிறது (செப்டம்பர் 1979)

‘இன்று எமது அரசாங்கமும் அதன் ஊதுகுழல் பத்திரிகைகளும் தார்மீகம் பற்றி ஓலமிடுகின்றன.  தார்மீகக் கலாசாரம் பற்றி ஓயாமல் பிரசாரம் செய்யப்படுகின்றது. ஆனால் இந்தத் திரைமறைவில் நாட்டின் எதிர்காலம் பணயம் வைக்கப்படுகின்றது.  கலாசாரத்தின் எதிர்காலம் பணயம் வைக்கப்படுகிறது. இறக்குமதிச் சுதந்திரம் உள்ளுர் உற்பத்திகளுக்கு மட்டுமல்லாது, நாட்டின் கலாசாரத்துக்கும் சவாலாக அமைந்துவிட்டது. பாலுணர்வைத் தூண்டும் சஞ்சிகைகள், எழுத்துக்கள், ஹொலிவூட் திரைப்படங்கள் தாராளமாக இறக்குமதியாகின்றன.  இவை தார்மீகம் பேசுவோரின் பணப்பையை நிர்புவதோடு இந்நாட்டு இளம் உள்ளங்களை கொடும் விஷத்தாலும் நிரப்பிவிடுகின்றன.  கலை இலக்கியத்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சி குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது.
உலகிலேயே உல்லாசப் பயணத்துக்கு ஏற்ற இடம் இலங்கைதான் என்று உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்துறை மூலம் பெறப்படும் வருமானம் பற்றி புள்ளி விபரங்கள் காட்டப்படுகின்றன. ஆனாலும் இந்த வருமானமெல்லாம் அந்த உல்லாசப்பயணிகள் நாடுகளுக்கே ஏதோ வழியில் திரும்பிச் சென்றுவிடுகின்றன.  இவ்வுல்லாசப் பயணிகள் நாட்டுக்குள் கொண்டுவரும் போதைப் பொருட்களும், பழக்கவழக்கங்களும், பொழுது போக்குகளும் எமது கலாசாரப் பாரம்பரியத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றன என்னும் உண்மை மறைக்கப்படுகின்றது.  அரசின் இறக்குமதிச் சுதந்திர்மும், உல்லாசப் பயணிகளின் ஊக்குவிப்பும் எந்த அளவுக்கு நமது கலாசாரத்தைப் பண்பாட்டை சேதமுறச் செய்கிறது’

 என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர களனி பெரிதாகக் குரல் கொடுத்தது.  சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் குறிப்பாக சீனத்துக்  கவிதைகள் ஆகியவற்றுடன் அறிவியல் விஞ்ஞானக் கட்டுரைகளையும் களனி முக்கியத்துவத்துடன் பிரசுரித்து வந்தது.

செப்டம்பர் 11 ஆம் திகதி பார்தியின் நினைவு தினம்.  அன்னிய ஏகாபத்தியத்தினை நொறுக்கிட இடக்கப்பட்டவர்களின் இதயங்களின் சுதந்திர்க்கனலை, சுதந்திரத் தாகத்தை மூட்டிவிட்டவன் பாரதி.  சாதிப்பகைமைக்கும், பெண்ணடிமைத் தனங்களுக்கும் ஜனநாயகம் நசுக்கப்படுதலுக்கும் எதிராகச் சுடுகவிதைச் சரங்கள் தொடுத்தவர் என்னும் குறிப்புடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர்ம் பாரதி பற்றிப் பாடிய பாடலை மறுபிரசுரம் செய்துள்ளது களனி (இதழ் 06)

விஞ்ஞானத்தில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் அல்பெட் ஐன்ஸ்டீன்.  இவ்வருடம் (1979) அவர் பிறந்த நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது என்னும் குறிப்புடன் அல்பெட் ஐன்ஸ்டீன் பற்றியதொரு அருமையான கட்டுரையும் இதழில் பிரசுரம் கொண்டுள்ளது. ஐன்ஸ்டீன் (1879- 1955)  மாபெரும் விஞ்ஞானி, தத்துவவியல் அணுகுமுறை கொண்ட தலைமையான சிந்தனையாளர் மட்டுமல்ல, நேர்மையும், சமுதாயப் பொறுப்பும் நிறைந்த மனிதர்.

ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும். இராணுவவாதம், பாசிஸம், தேசிய ஒடுக்குமுறை, இன ரீதியான பாகுபாடு என்பவற்றிற்கும் எதிரானவர் என்பது போன்ற குறிப்புகளுடன் ஐன்ஸ்டீன்  பற்றிய கட்டுரை இந்த ஆறாவது இதழில் வெளியாகி இருக்கிறது.  ஆறாவது இதழின் (ஜூலை- செப்டம்பர் 1979) அட்டையில் ஒரு சீனக் கவிதை (லூசுன்)  இருக்கிறது.

கடைசிப் பக்கத்தில் சீன நிலத்தின் மீது பனிமழை பெய்கிறது என்கின்ற சீனக் கவிஞர் “அய்பிங்”கின் கவிதை இருக்கிறது.
அய்பிங்கின் கவிதையை அ.யேசுராசா மொழி பெயர்த்திருக்கின்றார்.
“இது போன்ற குளிர்ந்த இர்வில்
கணக்கற்ற முதிய தாய்மார்
நாளையின் சக்கரம் தம்மை 
எங்கு எடுத்துச் செல்லும் என்பதறியாது
தமக்குச் சொந்தமான வீடுகளில்
அன்னியர் போல் கூனிக்குறுகி
ஒடுங்கி இருந்தனர்….
ஓ சீனா விளக்கற்ற இவ்விரவில்
எனது பலவீன வரிகள்
உனக்குச் சிறு
உயிர்ப்பினைத் தருமா?
சீன நிலத்தின் மீது
பனி மழை பெய்கிறது
குளிர் சினாவைச் சூழ்கிறது……

என்று ஆரம்பிக்கும் இக்கவிதை 1937ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஜப்பானியரால் சீனா ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொது எழுதப்பட்ட கவிதை இது.  தேச விடுதலை பற்றிய செயற்பாடுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கவிஞர் இவர். சீனச்சார்பும் ரஷ்ய எதிர்ப்பும் களனியின் படைப்புகளில் துல்லியமாகவே மேலெழுந்து நிற்கின்றன.

எழுபதுகளின் ஆரம்பத்தில் “தொழிலாளர் தேசிய சங்கம்” என்கின்ற தொழிற்சங்கத்தின் வெளியீடாக கொழும்பிலிருந்து வெளிவந்த ஏடு மாவலி. வெறுமனே தொழிற்சங்கப் பிரசார்த்துக்காகவும், தலைவர்களின் சுயபுராணங்களுக்கும், விளம்பரங்களுக்குமாகவும் செயற்படாமல் மலையக மக்களில் விழிப்புணர்வுக்கும் கலாசார வளர்ச்சிக்குமான பங்களிப்பினை முனைப்புடன் செயலாற்றியமையாலேயே மாவலி பற்றியும் பேசப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை வேண்டி நிற்கிறது.

“உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்”
என்னும் பாரதி வாக்கே மாவலியின் பத்திரிகை வாக்காகவும் இருந்தது.

உதவித் தொழில் ஆணையாளராக இருந்து ஓய்வுபெற்ற ஜி.ஏ.ஞானமுத்து எழுதிவந்த “சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்னும் கட்டுரை ஒவ்வொரு இதழிலும் இடம் பெற்றது. இலங்கையில் குடியேறும்படி இந்தியத் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், இந்திய அரசு அவர்களின் வருகையை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளை முறியடிக்கவுமாக 1923 இல் இயற்றப்பட்ட தொழிலாளர் குடியேற்றச் சட்டத்திலிருந்து இக்கட்டுரை தொடங்குகிறது.
 தொழில் ஆணையாளர் லக்ஷ்மன் த.மெல் எழுதிய  “தேயிலைத் தொழிற்துறை” என்னும் கட்டுரையும் தொடராக வந்தது. கங்காணி முறையும், குலவாதிக்கமும், தலைமைக்கங்காணி, சம்பளமுறைமை என்பது போன்ற உப தலைப்புக்களுடன் எழுதப்பட்ட கட்டுரை இது.

பாரதி காட்டும் பாதை, இனவிடுதலைக்காகப் பாடிய இன்னிசைக் குரலோன் போல்றொப்சன், இன்று நமக்கு வேண்டிய கலைகள், இருபதாம் நூற்றாண்டின் தமிழினத் தலைமகன் அண்ணாத்துரை, சுற்றுப்புறச் சூழ்நிலை, மலைநாட்டார் சரித்திரம், பரிபூர்ணாகாந்தத்தில் திளைக்கும் பரம புருஷர் - ஜீட்டு கிருஷ்ணமூர்த்தி,  புதுமை இலக்கியம் ஆகியவை மாவலி தந்த சில கட்டுரைத் தலைப்புக்கள்.

மாவலியின் பிரதம ஆசிரியராகத் திகழ்ந்தவர் மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை என்பதுவும் கூட மாவலியின் சிறப்புக்கும் முக்கியத்துவத்துக்குமான ஒரு காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
மலையக இலக்கிய வர்லாறு எழுத முனைந்தவர்களுக்கும், முன்வந்தவர்களுக்கும் ஒரு கைநூல் போல் விளங்கியது மாவலியில் சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய புதுமை இலக்கியம் என்னும் கட்டுரை.  சக்தீ பால- ஐயா, ஏ.எஸ்.வடிவேல், சாரல் நாடன் ஆகியோரின் படைப்புகளும் மாவலியை அலங்கரித்துள்ளன.

ஓவியப் போட்டி ஒன்றை நடத்தி வெற்றிபெற்ற ஓவியத்தை அட்டையில் பிரசுரித்து ஓவியக்கலையின் முக்கியத்துவத்தை உயர்த்தவும் செயற்பட்டது மாவலி. களனியினதும் மாவலியினதும் மறைவு கலை இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பேயாகும்.

(மீண்டும் ‘மாவலி’(2014 மார்ச்) - வெளிவருவதோடு தெளிவத்தையின் ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்’ எனும் ஆய்வு கட்டுரையின் இந்த பகுதியினை நன்றியுடன் பிரசுரித்துள்ளது).

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates