Headlines News :
முகப்பு » » ‘அன்று குடையும் குஞ்சரமும். இன்று பஜிரோவும் பஞ்சனையும்’ - குடைநிழல் நூலாய்வில் சிவலிங்கம் சிவகுமாரன்

‘அன்று குடையும் குஞ்சரமும். இன்று பஜிரோவும் பஞ்சனையும்’ - குடைநிழல் நூலாய்வில் சிவலிங்கம் சிவகுமாரன்


பாக்யா பதிப்பகம் மற்றும் நூலகம் நிறுவனம் இணைந்து நடாத்திவரும் எண்ணிம நூலகம், எண்ணிம ஆவணப்படுத்தல், இலத்திரணியல் பள்ளிக்கூடம் ஆகிய செயற்றிட்டங்கள் குறித்த செயலமர்வு அண்மையில் (23/02/2014) ஹட்டனில் நடைபெற்றது. மலையகத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையும் அம்பகமுவ பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

எண்ணிம நூலகம் மற்றும் எண்ணிம ஆவணப்படுத்தல் குறித்த விளக்கங்களை நூலக நிறுவன தன்னார்வப் பணியாளர் சேரன் வழங்கினார். 13000 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் நூல்களை கணிணிமயப்படுத்தி இணையத்தில் பாதுகாப்பதாகவும் அந்த வரிசையில் 100 க்கு குறைவான அளவில் இடம்பெற்றிருக்கும் மலையக நூல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நூலகம் இணையத்தின் ஊடாக மலையக மாணவர்களும் எழுத்தாளர்களும் பயன்பெறவேண்டும் எனும் நோக்கத்துடனும் அவை பற்றிய தெளிவூட்டலை இவ்வாறான செயலமர்வுகள் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மயூரன் கருத்து தெரிவிக்கையில் வெறுமனே நூல்கள் மாத்திரமின்றி பாடசாலை, சமூக மட்டத்தில் வெளியாகும் சிறு சஞ்சிகைகள், சிறப்பிதழ்கள் கூட இவ்வாறு கணிணிமுறை எண்ணிம ஆவணப்படுத்தலுக்குள் சேர்க்கும் திட்டத்தை நூலகம் நிறுவனம் மேற்கொள்வதாக தெரிவித்தார். இலத்திரணியல் பள்ளிக்கூடம் தொடர்பில் விளக்கமளித்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் நந்தகுமார் எங்களது தம்பி தங்கைகளின் பரீட்சை பெறபேறுகளை அதிகரிக்க நாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கும் திட்டமே இது. உங்கள் பாடசாலையிலோ, வீட்டிலோ உள்ள கணிணியில் பல நூறு கடந்த கால வினாத்தாள்களையும் மாதிரி வினாத்தாள்களையும் செயன்முறைப் பயிற்சிக்காக நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை முகநூலில் நண்பர்களிடையே கருத்துக்களை பகிரந்துகொள்வதைப் போல இந்த இணையத்தின் ஊடாக நிவர;த்தி செய்துகொள்ளலாம். எதிர்வரும் காலத்தில் விஞ்ஞான செயன்முறைப்பயிற்சிகளைக் கூட பிரபல ஆசிரியர்களைக் கொண்டு செய்வித்து வீடியோ காட்சிகளாக இந்தத் தளத்தில் தரவேற்றவிருக்கிறோம் எனவும் தெரிவத்தார். கணிணித்திரையில் தெளிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டன. தன்னார்வமாக இந்த முயற்சியில் ஈடுபடும் நூலகம் நிறுனமும் அவர்களை அழைத்து வந்து மலையகத்தில் அறிமுகப்படுத்தும் பாக்யா பதிப்பகத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.
மேற்படி நிகழ்வோடு இணைந்ததாக இரண்டு மூத்த எழுத்தாளர்களின் நான்கு நூல்களை பாக்யா பதிப்பகம் அறிமுகம் செய்து வைத்தது. தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடைநிழல் நாவல், மீன்கள் சிறுகதைகள், தெளிவத்தை ஜொசப் சிறுகதைகள் ஆகிய நூல்களையும் கவிஞர்அல் அஸுமத் எழுதிய அறுவடைக்கனவகள் நாவலையும் பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர்அறிமுகப்படுத்தினார்.

 அத்தோடு அறுவடைக்கனவுகள் நாவல் பற்றிய நயவுரையையும் வழங்கினார். 

அண்மைக்காலமாக நான் வாசித்த நாவல்கள் இடையே ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு ஒன்று இருக்கிறது. எச்.பி.டேனியல் எழுதிய ‘எரியும் பனிக்காடு’ தமிழகத்தின் கீழ் மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு தேயிலைத் தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நமது மக்களின் வாழ்க்கை அவலத்தைச் சொல்கிறது. இந்த நாவலின் தழுவலே ‘பரதேசி’ என்கிற திரைப்படம். அதேபோல தமிழ்மகன் எழுதிய ‘வனசாட்சி’ என்கிற நாவல் இலங்கைக்கு எமது மலையக மக்கள் அழைத்துவரப்பட்டதில் இருந்து அவர்களின்  இன்றைய நிலைவரை பேசுகிறது. கிறிஸ்டி வில்சன் எழுதி நமது எழுத்தாளர் சடகோபன் தமிழாக்கம் செய்த ‘கசந்த கோப்பி’ கோப்பி பயிர்ச்செய்கைக் காலத்தில் நமது மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. அதேபோல ‘குடைநிழல்’ மலையகத்தில் இருந்து தலைநகருக்குச் சென்று வாழும் ஒருவனின் வாழ்க்கை அவலத்தைப் பேசுகின்றது. இந்த வரிசையில் ‘அறுவடைக்கனவுகள்’ நமது தேயிலையின் வாழ்வியலைப் பேசுகின்றது. 

தேயிலை என்றாலே அது மலையகம் எனும் அளவுக்கு இன்று குறியீடாக மாறிப்போயிருக்கிறது. ஆனால் அந்த தேயிலை எவ்வாறு பயிரிடப்படுகின்றது, பராமரிக்கப்படுகின்றது என்பது தொடர்பாக அந்த தேயிலைத் தொழிலிலுடன் நேரடியாக தொடர்புபடாத மலையகத்தவர்களுக்கே தெரியாது. அந்தத் தொழில் துறையில் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகங்களுடன் தேயிலையை வளர்த்தெடுத்து அறுவைட செய்யும் அந்த நிர்வாக முறைமையை படம் பிடித்துக்காட்டுகிறது அறுவடைக்கனவுகள். இந்த நுட்பங்களை அறிந்தவர்கள் இரண்டு தரப்பினர். ஒரு தரப்பு உழைக்கும் தொழிலாளர்கள். இரண்டாவது தரப்பு நிர்வாகத்தினர். தொழிலாளி ஒருவன் மிகநுட்பமானவனாக ஒவ்வொரு கட்டத்திலும் இந்த தேயிலையை வளர்த்தெடுத்தாலும் அதனை படைப்பாக்கம் செய்வதன் ஊடாக இத்தகைய நாவலை வெளிக்கொணர்வான் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் வாய்மொழி பாடல்கள் நாடகங்கள் மூலம் தொழிலாளர்கள் இதை உணர்த்தியுள்ளார்கள். அதேபோல நிர்வாக பக்கத்தினர் இந்த நாவலை எழுதினால் அது முதலாளிகள் சார்ந்த பக்கத்தையே வெளிப்படுத்தும். கசந்த கோப்பியில் வெளிப்பட்டது போல. அதற்குள் நமது மக்களின் வாழ்க்கைக் குறிப்பை தேடலாமே தவிர முழுமையாக அதனை வெளிப்படுத்தாது. ஆனால் அறுவடைக்கனவுகளும் நமது மக்களின் வாழ்க்கைக் கோலத்தை தொழிலாளியாகவும் இல்லாமல் நிர்வாகியாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்கும் ஒரு தோட்ட மேற்பார்வையாளரான ‘சூப்பர்வைசரின் பார்வையில்’ தருகிறது. தமிழ்மொழியில் நன்கு புலமைபெற்ற கவிஞர் அல்அஸுமத் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மாத்தளை சுதுகங்கை தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வேலாயுதமாகிய இவர் வாழ்க்கைப் பயணத்தில் இடையில் இஸ்லாத்தைத் தழுவி அல்அஸுமத் ஆனது போலவே ஒரு கட்டத்தில் ஆசிரியத் தொழிலில் இருந்து ‘சூப்பர்வைசராக’ பொகவந்தலாவை சிங்காரவத்தைத் தோட்டத்தில் வேலைபார்த்த அனுபவத்தை நாவலாக்கியிருக்கிறார். அவரது மொழி கையாளுகையும் நகைச்சுவை ததும்பும் உரையாடல்களும் இந்த நாவலின் மிகமுக்கிய பலம். தேயிலைக்காட்டுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் அவரது லாவகமான நடை நமது தேயிலையை நமக்கே மீளவும் அறிமுகம் செய்கிறது. ஒருவிதத்தில் தோட்டஉத்தியாகத்தர்களான சூப்பரவைசர்மார்களையும் அஸுமத் கௌரவம் செய்துள்ளார். அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற வாசிப்பு மனிநிலை விவாதத்தில் இந்த நூல் ஆய்வு செய்யப்பட்டு அது தொட்பான நீண்ட கட்டுரை ஒன்றும் இணையவெளியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நமதுமலையகம்.கொம் இணையத்தளத்திலும் இதனைப்படிக்கலாம்.  மலையகத்தவர் ஒவ்வொருவரும் வாசிக்க மட்டுமல்லாது வாங்கி பாதுகாக்க வேண்டிய நூல் அறுவடைக்கனவுகள் என மல்லியப்புசந்தி திலகர் தனது நயவுரையில் குறிப்பிட்டார்.

 ஏற்புரை வழங்கிய அல்அஸுமத் அவர்கள் ஆரம்பத்தில் உணர்ச்சிவயப்பட்டவராகவும் பின்னர் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடனும் இந்த நூலை மலையகத்தில் அறிமுகம் செய்தமைக்காக பாக்யா பதிப்பகத்துக்கு நன்றி தெரிவித்தார்.

தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடைநிழல் நாவல் குறித்து சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் நயவுரை வழங்கினார். மெல்லிய குரலில் கதை சொல்லும் பாணியில் அமைந்த அவரது உரை இடையிடையே சிரிப்புவெடிகளை சபையில் எற்படுத்தியது. நாவலை நுணுக்கமாக வாசித்திருந்த அவர் சபையோருக்கு அதன் சுருக்கத்தையும் இந்த நாவலின் சிறப்பையும் எடுத்துக்கூறினார். இலங்கையில் இடமபெற்ற யுத்த சூழ்நிலையில் சிங்களத்தரப்பினரின் பாடுகள் குறித்த பதிவுகளும், இலங்கைத் தமிழர் தரப்பினரின் பாடுகளும், முஸ்லிம் தரப்பினரின் பாடுகளும் படைப்பாக்கம் செய்யப்பட்டு  இலக்கியங்களாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பாதிப்புற்ற மலையக மக்களின் பாடுகள் இன்னும் இலக்கிய வடிவில் பதிவு செய்யப்படவில்லை. அதனை ஒரளவுக்கு குடைநிழல் செய்ய முனைந்துள்ளது. தலைநகரில் வாழும் மலையகத்தவர் ஒருவர் அடையாள அட்டை, சந்தேகம், கைது முதலான விடயங்களில் மாட்டிக்கொண்டு அல்லாடுவதை அரசியல் இழையோட்டத்துடன் தெளிவத்தை படைத்துள்ளார். இந்த நாவலில் உள்ள சிறப்பு என்னவென்றால் நாவலுக்கு என்ற கதைநாயகனோ நாயகியோ இல்லை. யார் இந்த நாவலை வாசிக்கிறாரோ அவரே அந்த கதையின் நாயகன் எனும் உணர்வை நமக்குள் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு அத்தியாயத்தில் தோட்டங்களில் வாழ்ந்த பெரியாங்கங்காணிகள் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களை தருகிறார். எனது பாட்டனாரும் பெரியாங்கங்காணிதான் என்றாலும் இவர் நாவலில் காட்டும் பெரியாங்கங்காணிகள் ஊடாக அவர்களின் பல்வெறு லீலைகள் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன என் பாட்டனார் அப்படியில்லாதபோதும், என்ற சிவகுமாரனின்  லாவகமான உரை சபையை சிரிக்க வைத்தது. 

குடைநிழல் எனும் நூலுக்கு போடப்பட்டிருக்கும் அட்டைப்படம் பொருத்தமற்றது என பதிப்பகத்தாரினை விமர்சித்த சிவகுமாரன் ‘குடைநிழல் இருந்து ‘குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தோரூர் நன்னிலும் நன்னுவர்’ எனும் வெற்றி வேட்கை  பாடலின் அர்த்தம் பொதிந்ததாக அட்டைப்படம் அமையவில்லை. இது மழைக்கும் பிடிக்கும் குடையை காட்டுகிறது. ஆனால் பாடலிலும் நாவலிலும் சொல்லப்படுவது ஆட்சியாளர்களின் குடையை. அந்தகாலத்தில் ஆனை மேல் அமர்ந்து குடைபிடித்து வரும் ஆட்சியாளர்களையே இந்த வெற்றிவேட்கை பாடல் சொல்கிறது. சுருங்கச்சொன்னால் அன்று ‘குடைநிழலும் குஞ்சரமும்’ இன்று ‘பஜிரோவும் பஞ்சனையும்’ என்றார். (சபையில் மீண்டும் சிரிப்பொலி). ஏற்புரை வழங்கிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் நடிப்புடன் கலந்த உரை அந்த சிரிப்பொலியை சபையில் தொடர்ந்து  தக்கவைத்தது.

‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ நூல் பற்றி பாக்யா பதிப்கத்துக்காக அதனைத் தொகுத்த சுப்பையா கமலதாசன் உரையாற்றினார். தெளிவத்தையின் வாழ்க்கைக் குறிப்புடன் நூலை அறிமுகப்படுத்தி கால ஒழுங்கில் கதைகளைத் தெரிவு செய்து தெளிவத்தையின் கதை சொல்லும் ஆற்றலையும் அவரது நயமிகுந்த உவமைகளையும் எடுத்துரைத்தார். நூலாய்வு எனும் பெயரில் தம்மைபற்றியும் தன் கதைகள் பற்றியும் சுயபுராணம் பாடிக்கொண்டிருப்போர், பாடவைப்போர் மத்தியில் மத்தியில் சுப்பையா கமலதாசன் எனும் வளர்ந்து வரும் எழுத்தாளனின் உரை ஒரு முன்மாதிரியாக அமைந்து சபையின் பாராட்டுக்களைப் பெற்றது. 

வருகை தந்த பாடசாலைகள், இளைஞர் கழகங்களின் நூலகங்களுக்கு நூல்களும் மலையக ஆவணக இறுவட்டுக்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இளைஞர் சேவை அதிகாரி பாலசுப்பிரமணியத்தின் வாழ்த்துரை, ரஞ்சித்தின் நன்றியுரையுடன் நூற்றுக்கு மேற்பட்டடோர் வருகைதந்து அமர நாற்காலிகள் போதாதபோதும் நின்றுகொண்டு ரசித்த இலக்கிய களமாக அமைந்தது விழா. ஏற்பாடு செய்த அனைவரும்  பாராட்டுக்குரியவர்கள்.

--ப.விஜயகாந்தன் (ஆசிரியர்) - பொகவந்தலாவை






Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates