போகம்பறை சிறைச்சாலை பற்றியும் அதன் வரலாறு மற்றும் இன்னோரன்ன விடயங்கள் பற்றி கடந்த சில தினங்களாக தாராளமாக இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து விட்டன.
சிறைச்சாலையில் நான் பார்த்த சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
பிரதான நுழைவாயிலின் அருகில் வைத்திருந்த சிறைச்சாலை மாதிரி அமைப்புப்படம் புதிதாக பார்க்க வந்தவர்களுக்கு ஒரு முழுமையான பௌதீக சூழலை விளக்குகின்றது. உள்ளே பலவிதமான உற்பத்தி நடவடிக்கைகளை அவதானிக்க முடிந்தது. அத்தனையும் சிறைக்கைதிகளின் உற்பத்திகளே. தளபாடங்கள், இரும்புப்பொருட்கள், அலங்கார கைப்பணிப்பொருட்கள், கயிறு திரித்தல் என்பன அவற்றுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.
சுற்றுவட்டாரங்களை அவதானித்தப்பின்னர் கைதிகளுக்கான சிறைக்கூடங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மனம் படபடக்க தொடங்கியது. சாதாரண குற்றவாளிகள், பாரிய குற்றவாளிகள், சிறப்பு பாதுகாப்பிற்குரிய குற்றவாளிகள், மரணதண்டனைக்குரிய குற்றவாளிகள் என தனித்தனியான சிறைக்கூடங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. சிறிய அறை காற்றோட்டத்திற்காக மிகச்சிறிய யன்னல், மொத்தமான பலகையினாலான கதவுகள் நடுவில் ஒரு கண்ணால் பார்க்கக்கூடியவகையிலான மிகச்சிறிய துவாரம் அதிகூடிய தனிமை உணர்வினை தரக்கூடிய உட்புற சூழல் என சொல்லிக்கொண்டே போகலாம். மனிதனாக பிறந்து சூழ்நிலை வசத்தால் குற்றம் புரிந்த குடும்ப உறுப்பினர்கள், குடும்பங்களில் சந்தோஷத்துடன் வாழ்ந்தவர்கள், குற்றம் செய்யாது - குற்றவாளி என பெயர்பெற்று - சென்றவர்கள் பொலிஸ் என்ற சொல்லை கேட்டால் கட்டிலுக்கு கீழே சென்று ஒளிந்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள் என எத்தனை மனிதர்கள் அந்த மினி நரகங்களில் தனிமையில் தவித்திருப்பார்கள். உண்மையாகவே மனம் மடங்கி விரிகின்றது.
கைதிக்கூடு - 34
இதில் என்ன விசேஷம் என்கின்றீர்களா? ஒரு படைப்பு அது அர்த்தமுள்ள படைப்பு. இளைஞர்களின் புரட்சித்தலைவன் சேகுவேராவின் உருவப்படத்தை ஒரு கைதி ஓவியமாக்கியிருந்தார். பார்த்தவுடன் மெய்சிலிர்த்து போனேன். மின்னல் வெட்டைப்போல் இப்போதும் அந்த கைதிக்கூடு என்முன் தோன்றுகிறது. பல கூடுகள் பார்க்க சகிக்காத நிலைமையில் இருந்தன .ஆனால் சில கூடுகள் கோயிலாக காட்சியளித்தன. ஒருபோராளிக்கு சிறைச்சாலைதான் ஓய்வெடுப்பதற்கான சிறந்த களம் என வீரவசனம் கேள்விபட்டிருக்கின்றேன். போகம்பறையில் பலர் ஓய்வெடுத்து சென்றுள்தை உள்ளத்தில் ஊகித்துக்கொண்டேன்.
தூக்குமேடை
தூக்குதண்டனை கைதிகளுக்கென தனியான பகுதி அமைந்திருந்தது. தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதற்கென குறிக்கப்பட்ட நாளுக்கு ஒருவாரத்திற்கு முதல் கைதி தூக்குமேடைக்கு அருகில் உள்ள கூட்டுக்கு அழைத்து வரப்படுவார். அங்கு ஆறு அறைகள் உள்ளன. அறைகளின் இலக்கங்கள் இரங்குவரிசையில் அமையும் வண்ணம் கைதி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறைக்கு மாற்றப்படுகின்றார். ஒவ்வொரு நாளும் முடிய முடிய வீக்கம் பெறும் கைதியின் மனநிலைமையை எவ்வாறு விபரிப்பது. இறுதிநாள் கைதி தூக்கு மேடைக்கு அழைத்து வரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.
தூக்குமேடைக்கு செல்லும் கடைசிநாட்களில் தங்கியிருக்கும் அறையின் சுவரில் "All The Beings Be Happy" என எழுதிய வைக்கபட்டுள்ளது. இது ஒரு கைதியால் எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன். துன்பம் வரும் வேளையில் எப்படிதான் அந்த ஜீவனுக்கு சிரிக்க முடிந்ததோ? எல்லோரும் சந்தோசமாக இருப்போம் என மரணவாயிலில் நின்று சொல்ல முடியுமா? உள்ளத்திலே அதற்கென ஒரு ஆத்மபலம் வேண்டாமா?
பொழுதுபோக்காக பார்வையிடச்சென்ற பார்வையாளர்களுக்கே மரணபயத்தை தரும் அவ்விடம் மரணதண்டனையை பெற்ற கைதிகளுக்கு எவற்றையெல்லாம் புகட்டியிருக்கும்...? பார்த்தவர்கள் பதைத்தவர்கள் மனதிற்குள் குமுறியவர்கள் நிச்சயமாக குற்றம் செய்ய விளையமாட்டார்கள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...