Headlines News :
முகப்பு » » உள்ளும் வெளியும் நூல் வெளியீடு: பார்வையும் பதிவும் - லெனின் மதிவானம்

உள்ளும் வெளியும் நூல் வெளியீடு: பார்வையும் பதிவும் - லெனின் மதிவானம்


சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி சென்றிருந்தேன். கவிஞர் கருணாகரனை சந்திப்பதற்கான தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட போது நண்பர் குணேஸ்வரனின் உள்ளும் வெளியும் நூல் வெளியீட்டுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்நிகழ்வில் என்னையும் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தி எனக்கு மகிழ்ச்சி தருவதாகவே இருந்தது. நண்பர் குணேஸ்வரனை 41ஆவது இலக்கிய சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது சந்தித்தேன். அவரது கருத்துக்கள், சிந்தனைகள் மக்களை ஒட்டியதாக கிளை பரப்பியிருந்ததை அறிய முடிந்தது. இவ்வம்சம் இயல்பாகவே அவர் மீதும் அவரது எழுத்துக்கள் மீதுமான தொற்றை ஏற்படுத்தியிருந்தது. எனவே இவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன்.

அன்று காலை (02.03.2014) தோழர் கருணாகரன் சரியாக எட்டு மணிக்கு நண்பர் ஒருவரின் வாகனத்தில் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் எங்களது உடையாடல்கள் இயல்பாகவே 41ஆவது இலக்கிய சந்திப்பு குறித்ததாகவே அமைந்திருந்தது. இச்சந்திப்பு ஏற்படுத்திய தாக்கம் எதிர்காலத்தில் செய்யக்கூடியவை, செய்ய வேண்டியவை குறித்தும் அதற்கான பொறிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினோம். இந்த கலந்துரையாடலின் காரணமாக கூட்ட மண்பத்தை எப்படி அடைந்தோம் என்பதே தெரியாதிருந்தது. கூட்டத்திற்கு 15 நிமிடத்துக்கு முன் அங்கு சென்று விட்டோம். இக்கூட்டம் யாஃ தேவரையாளி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. மண்டப வாயிலை அடைந்தபோது சிரேஷ்ட எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன், அநாதரட்சகன்,  விமலன், தபேந்திரன் போன்றோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. அதிலும் நீண்ட இடைவெளிக்குப் பின் திரு. சி. வன்னியகுலம் அவர்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தது. அவர் ரூபவாஹினியில் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற காலங்களில் எனக்கும் அவருக்குமான உறவு மிக நெருக்கமாக இருந்தது. கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் குறித்து பல கருத்தாடல்கள் எம்மிடையே நடந்திருக்கின்றது. அந்த வகையில் அவரது சந்திப்பும், அன்பான அரவணைப்பும் நம்பிக்கை தருவதாக இருந்தது. இந்த சந்திப்புகளிடையே என் உள்ளமும் கண்களும் கூட்டத்தினரிடையே ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தது. அவர் எல்லோரும் மனமாரப் பாராட்டும் ஒரு மனிதராகவும் அதே வேளையில் தனது இலட்சியங்களையும் காப்பாற்றிக்கொள்ள் முடியும் என்பதற்கு சான்றாகவும் அமைந்த எழுத்தாளர் தெணியான் அவர்களாவார். அவரது மனிதாபிமானம் போற்றத்தக்கது. இளம் எழுத்தாளர்கள் பால் மிகுந்த அன்பும் பரிவும் கொண்டு அவரது படைப்புக்களைப் படித்து அவர்கள் முன்னேற ஊக்கமும் ஆக்கமும் அளிப்பவர். அவரது இத்தகைய தன்னலமற்ற தொண்டின் விளைவாக இன்று பல அருமையான எழுத்தாளர்கள் உருவாகி வந்துள்ளனர். அந்த வரிசையில் என்னையும்கூட உள்ளடக்கிக் கொள்கின்றேன். மிகக் குறுகிய நேரத்தில் அவரோடு ஏற்பட்ட உரையாடல் வாழ்வில் எதிர்படும் சோதனைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்ற திராணியை எனக்களித்தது.

குறித்த நேரத்தில் நூல் வெளியீட்டு விழா தொடங்கியது. இந்நிகழ்வில் உரையாற்ற வந்திருந்த திரு. அ. ஸ்ரீகரன் தனது உரையில் :
~குணேஸ்வரன் ஒரு பின்தங்கிய சமூகத்தின் கண்களைத் திறக்கும் கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது தன்னலமற்ற சேவையின் காரணமாக வன்னிப் பிரதேசத்தில் ஒரு புதிய தலைமுறை கல்வியில் முன்னேறி வந்துள்ளதை நான் அறிவேன்| என அவரது கல்விப் பணி குறித்து குறிப்பிட்டார். இவர் ஒரு பிரதிக்கல்விப் பணிப்பாளர் என்பதற்கு அப்பால் மானுடத்தை நேசிக்கின்ற கல்வியலாளராக மனிதனாக நிற்பதாகவே அவரது உரை அமைந்திருந்தது.

தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன்
~இந்நூலாசிரியர் ஒரு படைப்பாளி, கவிஞர், பதிப்பாளர், விமர்சகர். அதற்கு அப்பால் சமூக செயற்பாட்டாளராக தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் இயங்கி வருகின்றவர். குறிப்பாக அண்மைக்கால இலக்கிய செல்நெறிகளில் ஒன்றான புலம்பெயர் இலக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றவர். அவரது பல்பரிமாணங்களின் வெளிப்பாடாகவே இந்நூல் அமைந்திருக்கின்றது| எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வெளியீட்டுரை ஆற்றிய இ. இராஜேஸ்கண்ணன் திரு. குணேஸ்வரனின் ஆய்வுகளின் முக்கிய கூறாக திகழ்வது அவர் இலங்கையில் எழுந்த தமிழ்த் தேசிய போராட்டத்தின் விளைவாக அது ஏற்படுத்திய புலம்பெயர்வு வாழ்க்கையும் போர்க்காலச் சூழலில் எமது நாட்டில் வாழ்கின்ற தமிழர்களினுடைய வாழ்க்கை அம்சங்களை பிரதிபலிப்பதாக அவரது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. மிக ஆழமான தேடுதலை மேற்கொண்டு வருகின்ற அவரது எழுத்துக்கள் அவர் கூற வருகின்ற விடயங்களை வாசகர்கள் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஆதவனின் மண்மனம் என்ற நாவல் குறித்த கட்டுரையைக் குறிப்பிடலாம். புலம்பெயர்வு வாழ்வு குறித்து எழுந்த இலக்கியங்கள் இந்நாவலுக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இன்று இந்நாவலை பெற முடியாதுள்ளது. இவ்வாறானதோர் சூழலில் இந்நூலாசிரியரின் கட்டுரையை வாசிக்கின்றபோது மண்மனம் என்ற நாவலை வாசித்த அனுபவமும் அது பற்றிய விமர்சனத்தை தரிசித்த அனுபவமும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றது. அந்த வகையில் நூலாசிரியரின் எழுத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றது.

தொடர்ந்து மதிப்பீட்டுரை வழங்கிய திரு. கருணாகரன் அவர்கள் இந்நூலை முன்னிறுத்தி இன்றைய பண்பாட்டு சூழலில் வாசிப்பு குறித்த ஒரு பார்வையை முன்வைத்தார். ஒரு வாசிகசாலையை இழந்த சமூகம் அதற்காக கண்ணீர்விட்டது. எமது பண்பாடுகள் அழிவுறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்காகவும் கண்ணீர ;விடப்பட்டது. இந்த உணர்வுகள் யாவும் உண்மையாக இருந்தால் நாங்கள் மானுடத்தை நேசிக்கின்ற உணர்வுகள் உண்மையானவையாக இருந்தால் இன்று நம் மத்தியில் வெளிவருகின்ற நல்ல நூல்களை வாசிக்கின்ற உணர்வுள்ளவர்களாகவும் நாங்கள் இருக்க் வேண்டும். நமது சூழலின் வாசிப்பு என்பது பல வகையில் சிதைவுக்குள்ளாகி வருகின்றது. இவ்வாறான சூழலில் இத்தகைய நூல்கள் வெளிவருவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. இந்நூலின் முக்கியமான அம்சம் பேசாத பொருளைப் பேசத் துணிகின்றது. உதாரணத்திற்கு ஷோபா சக்தியின் படைப்புக்கள் புலம்பெயர் இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது. இருப்பினும்கூட ஷோபா சக்தியை நடுநிலையாக நோக்குகின்ற ஆய்வுகள் நம் மத்தியில் உள்ளனவா? அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் அவ்வாறான படைப்புகள் குறித்து நூலாசிரியர் பேசத் துணிந்திருப்பது வரவேற்கத்தக்கது என்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.

இலங்கையில் இனமுரண்பாட்டினடியாக தோன்றிய குறுந் தமிழ் தேசியமும் பேரினவாதமும் சமூக முரண்பாடுகளையும் மோதல்களையும் அதிகரிக்க செய்துள்ளன. இந்த சூழலில் வாழ்வின் பன்முகத் தன்மையை முழுமையாக காரண காரிய தன்னையுடன் எடுத்துக் கூற கூடிய இலக்கியங்கள் வரவேண்டியுள்ளன.  நடந்து முடிந்த தமிழ்த் தேசிய போராட்டத்தில் தமிழ் பாசிசத்தின் பரிமாணத்தை பொது மக்கள் அனுபவித்து உணர்ந்திருந்த போதினும் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்கள் நேர்மையாக முன்னெடுக்கபடாத நிலையில்  பொது மக்கள் மீண்டும் குறுந் தமிழ் தேசிய அரசியலுக்குள் முடங்குவதாக அமைந்திருக்கின்றது. இந்த சூழலில் தமிழ் தேசியத்தின் குறுகிய அரசியல் போக்குகளை விமர்சித்தால் தாங்கள் மக்களிலிருந்து அந்நியப்பட்டு போவோம் என்ற அச்சம் ஷோபாசக்தி முதலானோர் பற்றிய விமர்சனங்கள் ஆய்வுகள் மதிப்பீடுகள் தோன்றாதற்கு  பிரதான காரணமாக அமைந்திருப்தாக எண்ணத் தோன்றுகின்றது. இந்த மௌனம் இந்நுஸலாசிரியரில் ஒரளவு கலைந்துள்ளது எனலாம்.

இவ்விடத்தில் இன்னும் ஒரு குறிப்பையும் கூறி வைத்தல் பொருத்தமானதாக இருக்கும். புலம்பெயர் இலக்கியம் என்ற சொல் சில காலங்களில் வழங்கி வந்திருப்பினும் மிக சமீப காலங்களில்தான் அது பரந்த பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆன்மாவைத் தொலைத்து வெறும் யந்திரமயமாக்கப்ட்ட வாழ்க்கைச் சூழலில் தமக்கு கிடைக்கின்ற சிறிய ஓய்வு நேரங்களைக்கூட இந்திய சினிமாக்களில் தொலைத்து நின்றனர். இவ்வாறான சூழலிலும் அவர்கள் தமது கல்வியையும் உழைப்பையும் முன்னிறுத்தி தமக்கு அவசியமான உழைப்புடன் (சில நேரங்களில் உபரி உழைப்பை இழந்தபடியே) முழு நிறைவான வாழ்வை இருப்பை கட்டமைப்பதற்கான சமூகச் செயற்பாடுகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். மறுபுறத்தில் தாம் இழந்து வந்த சொந்தபந்தங்களின் வாழ்வு குறித்தும் அவர்களின் சமூக மாற்ற போராட்டங்கள் குறித்தும் கணிசமான அளவு பங்களிப்பை இந்த புலம்பெயர்த் தமிழர்கள் வழங்கியுள்ளனர். இந்த உதவிகள் எந்த அளவு இலங்கை வாழ் மக்களை வந்தடைந்தன என்பது முக்கியமான கேள்விதான். இந்த புலம்பெயர் வாழ்வு குறித்த இலக்கியம் வெறும் சொந்த மண் குறித்த புலம்பலாக மட்டுமன்றி புதிய பண்பாட்டுக்கான செயற்பாடுகளையும் முன்னிறுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. குணேஸ்வரனின் இந்த நூல் இத்தகைய செயற்பாடுகளுக்கான விவாதத்தையும் தொடக்கி வைக்கின்றது.

இந்நூலை ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்குகின்றபோது இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் சமகால வளர்ச்சி செல்நெறியை இந்நூல் தொட முனைந்துள்ளது. நமது இலக்கியச்சூழலில் இதுவரை பேசப்படாத இலக்கியங்கள் குறித்து பேசுகின்றது. மறுபுறத்தில் உருவத்தை மாத்திரம் பரிசீலிப்பதோடு நின்றுவிடாது உள்ளடக்கத்திலும் அது அக்கறை காட்டுகின்றது. வெளிப்படையாகக் கூறுவதாயின் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் உருவ வாதச் சித்தாந்த நோக்கின் அழுத்தத்தைவிட யதார்த்த சித்தாந்தத்தின் அழுத்தம் அதிகம் என துணிந்து கூறலாம்.நமது கலை இலக்கிய சூழலில் ஓயாத உழைப்பின் மீதும் அதன் உயிர்நாடியான சமூகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு பொது மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாத எழுத்துக்களைத் தருகின்றவர் குணேஸ்வரன் என்பதற்கு இந்நூல் ஆதாரமாய் அமைந்திருக்கின்றது. அதற்காக இங்கு விவாதிக்கப்படும் விடயங்கள் யாவும் அப்படியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல. வாழ்வு குறித்த இந்நூலாசிரியரின் பார்வையிலும் கருத்திலும் தத்துவ சிந்தனையிலும் சிற்சில முரண்பாடுகள் உண்டு. எனினும் பொதுமக்களை நோக்கி ஒரு புதியதொரு சித்திரத்தை ஆக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இந்நூலில் உள்ளன. இது குறித்து காத்திரமான விமர்சனங்கள் வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும். பணிவுடனும் பண்புடனும் நமது குறைநிறைகளை விமர்சித்துக்கொள்ள வேண்டும். நமது யதார்த்த நிலைமைக்கேற்ப எமது எதிர்காலவியலை உருவாக்குவதற்காகவேனும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates