ஈழத்த இலக்கிய பரப்பில் முக்கிய படைப்பாளியாகத் திகழும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் அவருக்கான பாராட்டு விழாவும் 16-02-2104 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்துடன் இணைந்து பாக்யா பதிப்பகம் ஒழுங்கு செய்து நடாத்தியிருந்த இந்த விழா மங்கல விளக்கேற்றல் மற்றும் சுப்பையா கமலதாசனின் வரவேற்புரையுடன் நான்கு அரங்குகளைக் கொண்டதாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
மலையகத்தின் சிறுகதை மூலவரான கோ.நடேசய்யர் அரங்கில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் காப்பாளர் எம்.வாமதேவன் தலைமையில் பாக்யா பதிப்பகத்தின் ‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ எனும் தொகுப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. கலைக்கேசரி பொறுப்பாசிரியர் திருமதி. அன்னலட்சுமி ராஜதுரை அவர்கள் வெளியிட்டு வைக்க புரவலர் ஹாசிம் உமர், பேராசிரியர் தை.தனராஜ், திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் ஆகியொர் சிறப்புப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
தலைமையுரையாற்றிய எம்.வாமதேவன், நாடற்றவர்களாக இருந்த மலையக மக்கள் தற்பொது ஊரற்றவர்கள் நிலைக்கு உள்ளாகி வருகின்றனர் அவர்களுக்கான வாழ்விட நிலம் தொடர்பில் தற்போது அறிவு ஜீவிகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தெளிவத்தை மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை இலக்கியமாக பதிவு செய்ததோடு தெளிவத்தை எனும் தோட்டத்துப் பெயரை தனது பெயரில் இணைத்து மலையகத்துக்கு புகழ் சேர்த்தவர். ஆனால் இதுவரை அவருக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை என்பது துரதிஷ்டவசமானதாகும் என தெரிவித்தார்.
நூலாய்வுரையை ஆற்றிய லெனின் மதிவானம் தெளிவத்தை தனது படைப்புகளின் ஊடாக மலையக எல்லையைக் கடந்து தேசிய மட்டத்தில் பேசப்படும் ஈழத்தின் முக்கிய படைப்பாளியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். இன்று விஷ்ணுபுரம் போன்ற விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டாலும் அத்தகைய விருதுகளுக்கு அப்பால் பெறுமதி மிக்கவராகவே உள்ளார் எனவும் தெரிவித்தார்.
மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அரங்கில் எழுத்தாளர் ஜெயமோகன் தொகுத்த தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகளைக் கொண்ட ‘மீன்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டது. கொடகே பதிப்பக உரிமையாளர் ஸ்ரீ சுமன கொடகே நூலினை வெளியிட்டு வைக்க பேராசிரியர் சந்திரசேகரன், தொழிலதிபர் நடராஜா அகியோர் பெற்றுக்கொண்டனர் தலைமையுரையாற்றிய ‘ஞானம்’ கலை இலக்கிய இதழின் ஆசிரியர் தி.ஞானசேகரன், தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தேடியெடுத்து தொகுக்கும் அளவு தகுதி பெற்ற எழுத்து தெளிவத்தையினுடையது. அவரது எழுத்துக்களின் வலிமையினால் மலையக மக்களின் வாழ்க்கையை மற்றைய சமூகங்களுக்கு எடுத்துச் சென்றவர் என குறிப்பிட்டார்.
ஆய்வுரையாற்றிய கவிஞர் அல் அஸுமத் அவர்கள் தெளிவத்தையின் கதைசொல்லும் நுட்பத்தை வியந்து பாராட்டினார். மீன்கள் தொகுப்பில் வரும் ‘மீன்கள்’ கதையில் வரும் தாம்பத்யம் சார்ந்த விடயத்தை நுணுக்கமாக காட்டியுள்ள விதத்தை எழுத்தாளர் ஜெயமோகன் வியந்து பாராட்டியுள்ளார் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும், இதே கதையை ஏனைய எழுத்தாளர் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்? குறிப்பாக சாரு நிவேதிதா போன்றவர்கள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணும்போதுதான் தெளிவத்தையின் நுட்பம் புரியும். ஆனாலும் இவரது சிறுகதைகள் ஏன் இலங்கைப் பாடநூல்களில் இன்னும் சேர்க்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தார்
மலையகச் சிறுகதை முன்னோடி என்.எஸ்.எம் இராமையா அரங்கில் ‘குடைநிழல்’ நாவல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பிரதியை அந்தனி ஜீவா அவர்கள் வெளியிட துரைவி பதிப்பகத்தின் ராஜ்.பிரசாத், மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஹேமசந்திர பத்திரன, கவிஞர் மேமன் கவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தலைமையுரையாற்றிய சமூக ஆய்வாளர் பெ.முத்துலிங்கம்: தெளிவத்தையின் எழுத்துக்கள் எந்த அரசியல், தொழிற்சங்க பக்கம் சாராது மக்களின் மனசாட்சியாக பிரதிபலிப்பவை. அவரது பணி மகத்தானது. விஷ்ணுபுரம் விருதினை அவர் பெறுவது தொடர்பில் ஆரம்பத்திலேயே சர்ச்சைகள் எழுந்தபோது, தமிழநாட்டில் அரசியலோடு இவரை சம்பந்தப்படுத்த வேண்டாம் எனவும் இவரை மாக்ஸிம் கார்க்கி நொக்கில் பார்க்காது டாலஸ்டாய் நோக்கிலேயே பார்க்க வேண்டும் என்றார்.
ஆய்வுரையாற்றிய பேராசிரியர் செ.யோகராசா சமூகம், குடும்பம், அரசியல் என மூன்று தளத்தில் நின்று கொழும்பில் வாழும் மலையக தமிழர் ஒருவரின் சிக்கல் நிறைந்த வாழ்வை அழகியலோடு குடைநிழல் நாவலில் தெளிவத்தை படம்பிடித்துள்ளார் என குறிப்பிட்டார்.
மூன்று அமர்வுகளையும் தொகுப்பாளராக நின்று பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் நெறிப்படுத்தினார் தெளிவத்தை ஜோசப்பின் இலக்கிய பயணத்தை காட்டும் ஆவணப்படக்காட்சி விழாவின் மகுடமாக அமைந்தது.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக விஷ்ணுபுரம் விருது வென்ற எழுத்தாளரும் மன்றத் தலைவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. மன்றத்தின் உபதலைவர் மு.சிவலிங்கம் தலைமையில் இணைச் செயலாளர்களான இரா.சடகோபன், ஜி.சேனாதிராஜா, காப்பியக்கோ ஜின்னாஹ் சரிப்புதீன், மு.தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் தெளிவத்தையின் எண்பதாவது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. திருமதி.தெளிவத்தை ஜோசப் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
- சுப்பையா கமலதாசன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...