Headlines News :
முகப்பு » » ஆங்கிலவாக்கம் செய்யப்பட மலையக எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு - GENESIS - எம்.வாமதேவன்

ஆங்கிலவாக்கம் செய்யப்பட மலையக எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு - GENESIS - எம்.வாமதேவன்


மலையத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மலரன்பனின் பன்னிரெண்டு கதைகளைக்  கொண்ட தொகுப்பு நூல் ஒன்று ஆங்கிலத்தில் ‘ஜெனசிஸ்’ என்ற தலைப்பில் கொடகே நிறுவனத்தினால் பதிக்கப்பட்டு வெளிவந்துள்ளமை மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

மலையக இலக்கிய படைப்புகள் பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளமை  மிக குறைவு. இந்த வகையில்  இலங்கை தோட்டப்புறங்களின் சிறுகதைகளாக  16 எழுத்தாளர் களின் 19 சிறுகதைகளை உள்ளடக்கிய Dream Boats என்ற பெயரில் தொகுதி ஒன்று மே 2004 இல் எம்.எஸ் அன்னராஜ் மற்றும் போல் கெஸ்பஸ் ஆகியவர்களால் பதிக்கப்பட்டு ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

மூத்த எழுத்தாளர்  ஏ.வி.பி கோமஸ் அவர் களின் 3 கதைகளும்  பிரபல எழுத்தாளர்  தெளிவத்தை ஜோசப், எம்.சிவலிங்கம், மாத்தளை வடிவேல் ஆகியோரின் கதைகளும் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் பன்னிர்  செல்வனின் 2 கதைகளும் தமிழ் நாடு சென்று மறைந்த நுவரெலியா சன்முகநாதனின் (மலைச்செல்வன்) கதைகளும் இந் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதை விட எஸ்.ஜி புன்ஜிஹேவா, ஹெக்டர் யாப்பா, புஸ்ஸலாவை  இஸ்மாலிகா  ஆகியவர்களின் தோட்ட மக்கள் சம்மந்தமான கதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 74 பக்கங்களை கொண்ட இந்த தொகுதியில் உள்ளடக்கப்பட்;;ட கதைகள் எந்த ஆண்டில் எங்கு வெளியிடப்பட்டது என்ற விபரங்கள் உள்ளடக்கப்பட வில்லை. இதை விட A LANKAN  MOSAIC என்ற சிங்கள தமிழ் கதைகளின் மொழிப்பெயர்ப்பு ஹெஸ்லி ஹல்பகே, எம்.ஏ நுஃமான், மற்றும் ரஞ்சித் ஒபயசேகர என்பவர் களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நூலில் மலையக எழுத்தாளர் களில் ஒருவரான  அல்அசுமத் எழுதிய ‘விரக்தி’ என்ற சிறுகதை எஸ்.பத்மநாதன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலும் பேராசிரியர்  .டி.சி.ஆர்.ஏ குணத்திலக அவர்களால் Modern Writing என்ற ஆங்கில நூலில் என்.எஸ்.எம் ராமையாவின் ‘தீ குளிப்பு’ என்ற சிறுகதையும் குறிஞ்சி நாடனின் கவிதை ஒன்றும் வெளிவந்துள்ளன.

சிங்கள மொழியைப் பொறுத்தவரை அதிகமான சிங்கள படைப்புகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைப் போலே தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்படவில்லை. எனினும் இலங்கை தொழிலாளர்  காங்கிரஸினது காங்கிரஸ் பத்திரிகையின் சிங்கள மொழியில் சி.கனகமூர்த்தி அவர்களாலும் சில சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சீ.கனகமூர்த்தி அவர்கள் கதைக்கனிகள் என்ற தொகுப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தெளிவத்தை ஜோசப், எம்.வாமதேவன் ஆகியோரின் கதைகள் உட்பட 3 சிறுகதைகள் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ளார்.

  இப்னு அசுமத் அவர்களால் சில சிறுகதைகளை மொழிப்பெயர் க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய ‘காளி முத்துகே புரவசிபாவய’ (காளி முத்துவின் பிரஜா உரிமை – அ.செ.முருகானந்தம்) என்ற சிங்கள நூலில் சில சிறுகதைகள் மலையக கதைகளாக அமைந்திருக்கலாம்.

இதோடு மல்லிகை சி.குமார்  என்பவரது சில சிறுகதைகளும் குறிஞ்சி தென்னவனின் கவிதைகளும் கண்டியிலிருந்து வெளியிடப்பட்ட குரலற்றோரின் குரல் என்ற சிங்கள மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன என அறியக் கிடக்கின்றது. 

இந்த வகையில் ஜெனசிஸ் என்ற நூலின் வெளியீடானது தமிழ் தெரியாத ஆங்கில வாசகர்களுக்கு மலையக மக்களின் வாழ்வியலை விளக்க உறுதுணை செய்வதாக அமையும். இந்த ஆங்கில சிறுகதைத் தொகுப்பு நூல் ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் 12 கதைகளை உள்ளடக்கப்பட்டு வெளிவந்துள்ளமை மிகவும் முக்கியத்துவமான ஒன்றாகும். ஓவ்வொரு கதைகளும் எந்த ஆண்டு, எந்த நூலில் வெளியிடப்பட்டது என்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன 

மலரன்பன் அறுபதுகளில் இலங்கையின் தேசிய இலக்கிய எழுச்சியில் உருவான மலையக படைப்பிலக்கியவாதிகளில் முதன்மையானவர். தமது எழுத்துக்களுக்குப் பல்வேறு அரச சன்மானங்கள், பாராட்டுக்கள் பெற்றவர். நல்ல பேச்சாளர், சிறந்த பாடலாசிரியர். மனித நேயமிக்கவர்.  தமிழில் வெளிவந்த இவரது ‘பிள்ளையார்  சுழி’, ‘கோடிச்சேலை’ ஆகிய நுhல்களில் இருந்து ஆறு ஆறாக தெரிவு செய்யப் பட்டு பன்னிரெண்டாக தொகுக்கப்பட்டதே ஜெனசிஸ் கதைத் தொகுதியாகும். இவை 1967-2004 வரையிலான காலப் பகுதிகளில் இலங்கையின் தினசரிகளிலும், மலர்களிலும், மாதாந்த சஞ்சிகைகளிலும் வெளிவந்தவையாகும். இக்கதைகளில் சமகால பிரச்சனைகள் வெளிப்படுத்துவதோடு வரலாற்று சம்பவங்களையும் ஆவணப் படுத்துகின்றது.

தலைப்புக் கதையான ‘பிள்ளையார்  சுழி’ (ஜெனசிஸ்) தோட்ட தொழிலாளர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னர்  எவ்வாறு இந்திய கிராமங்களின் பட்டினிக் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காக இலங்கையை நோக்கி மேற்கொண்ட கடும்பயணத்தின் துயர சம்பவங்களை - துன்பக்கேணியை - சித்தரிக்கின்றது. வறிய கிராமத்து மக்கள் எவ்வாறு கங்காணிமார்களால் வஞ்சிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதை நினைவுகூர ‘பிள்ளையார்  சுழி’ (ஜெனசிஸ்) தலைப்புக் கதையாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பொருத்தமானதே.

 ‘வனவாசம்’ என்ற கதையும் அன்றைய இந்திய கிராமத்து வாழ்க்கையை படம் பிடிக்கின்றன. இக்கதை, சாதிக்கொடுமை, கங்காணிகளின் ஆரம்ப சுரண்டல் போன்றவை மிகவும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. மலையகத்தை - குறிப்பாக மாத்தளைப் பிரதேசத்தை களமாக கொண்டவைகள் இக் கதைகளாகும். 

இத் தொகுப்பின் கதைகள் அப்பிரதேச இயல்புகளை - பெருந்தோட்டங்கள் உட்பட தேயிலை, றப்பர் , கொக்கோ பயிரிடப்படும் சிறுத் தோட்டங்களை பிரதிபலிப்பது மாத்திரமல்ல, தமிழ் மக்களோடு பெரும்பான்மையினர்  நெருங்கி வாழுகின்ற பிரதேசமாக இது அமைவதால் அம் மக்களோடு இணைந்த வாழ்க்கையையும் அவ் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை இக் கதைகள் படம் பிடிக்கின்றன.

மலையக சமூகத்தில் இன்னும் பலவீனமான குழுவினராக இருக்கும் பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பாலியல் கொடுமைகள் பற்றி ‘சாத்தான்கள்’ என்ற கதையில் எடுத்துக் கூறப்படுகின்றது.  இன்றைய இனத்துவ சிக்கல்களை மையமாக கொண்ட கதை ‘தமிழ்ச்சாதி’ ஆகும். ‘மாத்தளை என்றால் என்ன வவுனியா என்றால் என்ன, வெயில் வெயில் தான்!’ என்ற ஆரம்ப வசனத்தையும் இறுதி வசனத்தையும் கொண்ட ‘தமிழ்ச்சாதி’ என்ற கதை, தமிழர்  என்ற அடிப்படையில் மலையகமும் வடகிழக்கும் எதிர் நோக்கும் பிரச்சனையை சுட்டிக்காட்டுகின்றது. 

1956ல் ஆரம்பமாகி 1977ல் - 1983ல் உக்கிரமைடைந்த வன்செயல்கள் மலையகத்தவரை வடக்கிற்கு குடிப்பெயரவைத்தன. அத்தகையோர்  மலையத்தின் சொந்த பந்தங்களோடு தொடர்பு வைத்து கொள்வதில் தற்போது எதிர் நோக்கும் பிரச்சனைகள் ஒரு ரகமானவை.

கோடிச்சேலையின் தொகுப்பிலிருந்து சேர்க்கப்பட்ட 6 கதைகளும் 1967-1989 காலப்பகுதியில் வெளிவந்தவையாகும். தோட்டப்புற வறுமை நிலை, பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்கள் ஏமாற்றப்படல் மனித உறவுகள் பொருளாதார நலனை அடிப்படையாக கொண்டவை. தோட்டப்புறத்தே காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், என்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. தோட்ட மக்களின் வாழ்வியல் சித்தரிப்புகள் மலரன்பன் கைவண்ணத்தில், நகைச்சுவை பண்போடு வெளிப்படும் போது மனதைத் தொடுவதாக அமைந்துள்ளன. 

இத் தொகுப்பிற்கு நல்லதோர்  முகவுரையை எம்.பி.மாத்மலுவே என்பவர்  தந்துள்ளார் . தோட்டபுறத்தில் ‘தோட்டராச்சியத்தை’ (Planters Raj)  உருவாக்குவதில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர் களின் பொருளாதார பங்களிப்பினை எடுத்துக் கூறுவதோடு தோட்ட முதலாளிகள்- தேயிலை, றப்பர்  போன்றவற்றை பயிர்  செய்வதற்கு தங்களது சமூகத்தை விட்டு இங்கு வந்து செய்த பங்களிப்புகள் நினைவு கூறப்பட வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார் .

இந்த வகையில் CHRISTINE WILSON   vOjpa                                                                    எழுதிய BITTER BERRY என்ற நாவலை, இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. இந்த நாவல் முழுவதும் தோட்டத்துரைமாரின் வாழ்வியலை சித்தரிக்கின்ற ஒன்றாகும். . இதனை தமிழில் இரா.சடகோபன் நல்ல மொழிப்பெயர்ப்பு நாவலாக தந்திருக்கிறார், என்பதும் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும்.
இந்நூலை ஆங்கிலத்தில், நல்ல நடையில் தமிழில் வாசிப்பதை போன்ற உணர் வினை தருகின்ற  வகையில் மொழி பெயர் ப்பு செய்துள்ள ‘பண்ணாமத்து கவிராயர்’   நமது பாராட்டுக்குரியவர் . இவர்  நாடறிந்த கவிஞர். ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்வதில் திறமை கொண்டவர் .

  பண்ணாமத்து கவிராயர்  பல கதைகளை  ஆங்கிலத்தில், மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார் . தமிழிலே வருகின்ற படைப்புகளை, தமிழ் அறியாத சிங்கள மக்களுக்கு சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ கொண்டு செல்வதென்பது ஒரு சீரிய பணியாகும். சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரு சமூகத்தின் பிரச்சனைகள், அரசியல் ,மற்றும் ஏனைய வழிகளில், ஏனைய சமூகங்களை வெளிப்படுத்துவதிலும் பார்க்க இலக்கியப்படைப்புகள் மன உணர் வுகளோடு ஒன்றி இருப்பதாலும், இதயத்தை தொடுவதாக அமைந்திருக்கின்றது. 

\மலையக மக்களின் வாழ்வியலை சிங்கள இனத்தவர்கள் ஏனையோருக்கு வெளிப்படுத்துவதில், 1960க்கு முன்னர்  ஆங்கில மொழி மூலம் கற்றவர்கள் மலையக மத்தியிலே. சி.வி வேலுப்பிள்ளை  தலாத்து ஓயா கணேஷ், பொன்.கிருஷ்னசாமி, சக்தி பால அய்யா போன்றவர்கள் எழுதியுள்ளனர். இத்தேடலை அகலப்படுத்தினால் இந்தப்பட்டியல் நீள இடமுண்டு. அத்தோடு சிங்கள எழுத்தாளர்களும் இந்த மக்களைப் பற்றி எழுதியுள்ளனர். பந்துபால குருகே என்பவர்  எழுதிய ‘செனஹசின் உபன் தருவோ’ என்பது ஒரு உதாரணம். இதனை உழைப்பால் உயர்ந்தவர்கள் என இரா.சடகோபன் மொழிப்பெயர்த்துள்ளார். இன்னுமொரு உதாரணம் திக்குவல்லை கமாலினால் ‘விடைபெற்ற வசந்தம்’ என்று தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட உப்பாலி லீலாரத்னாவின் ‘பினி வந்தலாவ’ என்ற நாவலாகும்.

மொழிபெயர்ப்புகள் மூலமாக முரண்பட்ட சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ‘மும்மொழி நாடு’ என பிரகடனப்படுத்தப்பட்டு அது இன்னும் பூர்த்தியாகாத நிலையில், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் வாழ்வியல் பிரச்சனைகளை சரியாக  புரிந்துக்கொள்ள இத்தகைய மொழிப்பெயர்ப்புகள் சிறப்பான பங்களிப்பினை செய்யலாம். இது குறித்து தேசிய மொழிகளும் சமுக ஒருங்கிணைப்பு அமைச்சின் மும்மொழி வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவது பொருத்தமான ஒன்றாகும். மலரன்பன், பண்ணாமுத்து கவிராயர்  ஊடாக செய்தபணி மலையகத்தின் ஏனைய மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளை பொருத்தும் தொடரவேண்டியது காலத்தின் தேவையாகும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates