(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 8)
முள்ளுத்தேங்காய் 5 ல் அங்கொன்றும் இங்கொன்றுமாக விடயங்கள் பேசப்பட்டாலும் அதில் பிரதானமாக அமைவது "இடப்பெயர்வு" என்பதாக அமைகிறது. இந்த இடப்பெயர்வு குறித்த கவனமும் அக்கறையும் நமக்கு எங்கிருந்து எழுகின்றது என்று பார்த்தால் அடிப்படையில் இலங்கை மலையகத் தமிழ் மக்கள் ஒரு இடப்பெயர்வு சமூகம் என்பதுதான். தென்னிந்தியாவில் இருந்து பிரித்தானியர்களால் இந்த மக்கள் கூட்டம் அழைத்துவரப்பட்டபோது அந்த இடப்பெயர்வுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று தள்ளும் காரணி மற்றையது இழுக்கும் காரணி.
தள்ளும் காரணிகள்
தமிழ் நாட்டில் பண்ணை அடிமை முறையில் பண்ணையாளர்களிடத்தில் ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்து பொருளாதார நெருக்குவாரங்களும் அதனோடினைந்த சாதிய ஒடுக்குமுறைகளும் இவர்களை அங்கிருந்து தள்ளியிருக்கின்றது. பொருளாதார விடுதலைப் பெறவும் சாதிய ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை பெறவும் தேவையான மன அழுத்தத்தை பண்ணையார்களின் நிலச்சுவாந்தர்களின் நடவடிக்கைகள் இந்த மக்கள் கூட்டத்தை தள்ளி இருக்கிறது.
இழுக்கும் காரணிகள்
இலங்கைக்கு போனால் வெள்ளைக்கார துரைமார்களின் தோட்டத்தில் சுதந்திரமாக வேலை செய்து பொருளாதார முன்னேற்றம் அடையலாம் என்றும் சாதிய ஒடுக்குதலில் இருந்து விடுதலை அடைந்து சுயகௌரவத்துடன் வாழ்லாம் என்றும் இரண்டு காரணிகள் இலங்கை நோக்கி இழுத்திருக்கின்றன. இதற்கு பிரித்தானியர்களினதும், அவர்களின் ஏஜண்டுகளான பிரித்தானியர்களினதும் பசப்பு வார்த்தைகள் அமைந்திருக்கின்றன. அதனை விபரிக்கத்தான் 'தேயிலைக்கடியில் தேங்காய் மாசி எல்லாம் கிடைக்கும்' என்று நம்பி வந்ததாக பசப்பு வார்த்தைகள் விபரிக்கப்பட்டிருக்கின்றன.
இது இடப்பெயர்வு மாத்திரமல்ல புலப்பெயர்வும்தான். ஆனால் அன்று அதனை அவ்வாறு பார்க்காமல் விட்டிருக்கின்றார்கள். இன்று புலம்பெயர் தமிழ் இலக்கியம் குறித்து பேசப்படுகின்றது. தமிழின் முதலாவது புலம்பெயர் இலக்கியம் "மலையக நாட்டார் பாடல்கள்"தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இலக்கியத்தின் வழிவந்து இன்றைய தமிழிலக்கிய சூழலில் "மலையகத் தமிழ் இலக்கியம்" தனியான ஒரு செல்நெறியைக் கொண்டுள்ளது.
மலையக மக்களின் இடப்பெயர்வுடன் ஆரம்பிக்கப்பட்டபோதும் பொருளாதார நிலை நின்று அவர்கள் இலங்கையையே தமது நாடாக கொள்ளும் வரை இந்தியாவுக்கும் இலங கைக்கும் இடையே ஒரு பயண நகர்வு நடந்திருக்கின்றது. எனினும் 1930 களில் சர்வசன வாக்குரிமை யின் விளைவாக இலங்கையின் வாக்காளர்களாக முழுமையான அங்கீகாரம் கிடைக்கின்றபோது தங்களது அரசியல் இருப்பை பிரதிநிதித்துவ அரசியல் ஊடாக தக்கவைத்துக்கொண்டார்கள். 1947 ஆம் ஆண்டு கண்டி, பதுளை, நாவலப்பிட்டி உள்ளிட்டதாக 7 தொகுதிகளைக் கொண்டதாக நாடாளுமன்ற பிரதிநித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சௌமியமூர்த்தி தொண்டமான், கே.ராஜலிங்கம், சி.வி.வேலுப்பிள்ளை, எஸ்.எம்.சுப்பையா, கே.குமாரவேல், ஆர்.மோத்தா, டி. ராமானுஜம் என அரச பேரவை உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இன்று மீண்டும் தொகுதிவாரி முறை அறிமுகப்படுத்தப்படப் போவதாக சொல்லப்படுகையில் நாம் ஏற்கனவே அனுபவித்த 7 தொகுதிகள் கேள்விக்குறியாகின்றது. உண்மையில. 1947 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று தொகுதிகள் அதிகரிக்கப்படல் வேண்டும். ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் தவிர வேறு எங்கும் தொகுதிகள் அமையும் வாய்ப்பில்லை என்கிறபோது மலையகத் தமிழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து பேச நேரிடுகின்றது. ஏனெனில் இன்று மலையகத் தமிழ் மக்களின் இடப்பெயர்வினால் ஏற்பட்டிருக்கும் சனத்தொகைப் பரம்பல் வேறுபட்டிருக்கின்றது.
மலையகத் தமிழ் மக்களின் மலையகத்தில் இருந்தான இடப்பெயர்வு என்பது பின்வருமாறு அமைகிறது.
- இந்தியாவுக்கு திரும்பி செல்லுதல் (தாயகம் திரும்புதல்).
- வன்னியில் குடியேறுதல்
- மலையகத்தில் இருந்து வெளியேறி தொழில் நிமித்தமாக இலங்கையின் வேறு இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லுதல்.
இந்தியாவுக்கு செல்லுதல் 1964 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஶ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இடம்பெறுகிறது. இது ஒரு சாராரால் விரும்பி விண்ணப்பிக்க்ப்பட்டு இடம்பெற்றாலும் லட்சக்கணக்கானோர் வெளியேறிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். பலர் பலவந்தமாக சிறைப்பிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர் எனும் அவலமும் பதிவாகிறது. இவ்வாறு இடம்பெற்ற இடப்பெயர்வு சம்பந்தமாக மு.சிவலிங்கத்தின் ஒப்பாரி கோச்சி" பல்வேறு புனைவு இலக்கியங்களில் பதிவாகியுள்ளபோதும் எம்.வாமதேவன் தமிழகம் சென்று ஆய்வு செய்து எழுதியிருக்கக் கூடிய ஆங்கில நூல் முக்கியமானத( * தலைப்பும் அட்டைப்படத்தையும் சேர்க்கவும்்து). இவர்கள் நிரந்தரமாக இந்திய பிரசைகளாகிவிட்ட நிலையில் அன்று 5 லட்சம் வரையில் இருந்த தாயகம் திரும்பியோர் தொகை இன்று இருந்திருந்தால் இலங்கை சனத்தொகையில் இரண்டாவது அதிகளவு சனத்தொகையினராக மலையகத்தமிழர்களாக இருந்திருப்பார்கள் என்பதும் அவர்களது பேரம்பேசுதல் எவ்வாறு இருந்திருக்கும் என்பதும் அவதானத்துடன் நோக்கத்தக்கது.
இரண்டாவது, வன்னியில் குடியேறுதல். இது இரண்டு விதமான காரணங்களால் ஏற்படுகின்றது. ஒன்று அவ்வப்போது தெற்கில் இடம்பெற்று வன்செயல்களினால் பாதிப்புற்ற மக்கள் வன்னியில் சென்று குடியேறுவதை பாதுகாப்பாக கருதினர். அதேபோல ஶ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா செல்ல விருப்பம் இல்லாதோர் வன்னிக் குடியேற்றத்தை ஒரு தெரிவாக கொள்கின்றனர். இந்த கட்டத்தில் வன்னியில் மலையக மக்களைக் குடியேற்ற காந்திய இயக்கம் எனும் டேவிட் அய்யா போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டமைப் பற்றி விரிவாக தெரிந்து வைத்துக் கொள்ளும் தேவை இருக்கிறது.
1970 களில் தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) எனும் ஒரு தமிழர் அரசியல் கூட்டமைப்பு இயங்கி இருக்கிறது. அதில் இலங்கைத் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிஸ் என்பன அங்கம் வகித்திருக்கின்றன. இந்த தமிழர் ஐக்கிய முன்னணி யாழ்ப்பணம் வட்டுக்கோட்டை எனும் இடத்தில் மாநாடு ஒன்றை கூட்டி தமிழருக்கான தனிநாடு ஒன்று பற்றி உரையாடும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதனை மறுத்து வெளியேற நேரிடுகிறது. மலையகத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தின் அடிப்படையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் எவ்வித்த்திலும் மலையக மக்களுக்கு பொருத்தப்பாடு உடையதன்று. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழர் ஐக்கிய முன்னணியில் இருந்து வெளியேறியதும் அந்த அமைப்பு தமிழர் (ஐக்கிய )விடுதலை கூட்டணியாகிறது (TULF). அதுவே இன்றுவரை தமிழர் விடுதலை கூட்டணியாக வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதன் உதயசூரியன் சின்னத்தில் சுசில் கிந்தல்பிட்டிய எனும் மேல்மாகாண சபை உறுப்பினர் (சரத் பொன்சேக்கா கட்சியை சேர்ந்தவர் ) 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார் என்பது மேலதிக செய்தி.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு நிகரான தீர்மானம் ஒன்று ஹட்டனில் கூடி எடுக்கப்பட்டது பற்றி பல முறை நான் பிரஸ்தாபித்து வருகின்றபோதும் அதனோடு தொடர்புடையவர்கள் அதன் விபரங்களை முறையான "ஹட்டன் தீர்மானமாக" வெளியிட்டதற்கான பதிவுகள் கிடைக்கும் கவில்லை. அத்தகைய ஹட்டன் தீர்மானம் ஒன்று தொடர்பில் முதலில் நான் அறிந்து கொண்டது மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் மு.சிவலிங்கத்திடமிருந்து. "எழுநா" பதிப்பகம் வெளியிட்ட வி.டி. தர்மலிங்கம் எழுதிய (சிறையில் இருந்த நாட்களில் சரிநிகர் பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரைகள்) "மலையகம் எழுகிறது" நூலின் அறிமுக விழாவினை பாக்யா பதிப்பகம் தலவாக்கலையில் நடாத்தியபோது தலைமையுரையாற்றிய மு.சிவலிங்கம் இந்த தகவலை வெளியிட்டார். அதற்கு பின்னதாக பலதடவைகள் இது குறித்த மேலதிக விபரங்களைக் கோரியபோதும் அவை வெளிவரவில்லை. இப்போது லன்டன் வந்திருந்தபோது மலையக மக்கள் முன்னணி முன்னாள் செயலாளர் பி.ஏ.காதரிடம் வினவியபோது அவர் பல்வேறு தகவல்களைப் பகிரந்துகொண்டதுடன் தன்னுடைய முதலாவது நூல் இது பற்றியதுதான் என்றும் அப்போது வன்னிக்கு மலையகத் தமிழ் மக்களை அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த சந்ததியார் மற்றும் வைத்தியர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன் தான் வாதவிவாதங்களில் ஈடுபட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா அவர்களுடன் ஒரு கூட்டத்தில் விவாதம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கின்றார். அந்த நாட்களில் இளைஞர்களாக சுறுசுறுப்பாக இயங்கிய மறைந்த ஆசிரியர் தேவசிகாமணி மற்றும் ஏ.லோரன்ஸ் ஆகியோர் இந்த ஹட்டன் கூட்ட ஏற்பாடுகளைச் செய்ததாகவும் தெரிவித்தார்.
18-02-2017 அன்று லன்டன், ஈஸ்ட்ஹாம், ட்ரினிட்டி சென்றரில் மூன்றாவது மனிதன் எம்.பவுசர் ஏற்பாட்டில் பி.ஏ.காதரின் வழிப்படுத்தலில் நானும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அமீர் பாயிஸ் அவர்களும் உத்தேச தேர்தல் முறை குறித்து உரையாற்றியபோது தலைமையுரையிலே நான் அவரிடம் வினவிய "ஹட்டன் தீர்மானம்" பற்றி அவர் "ஹட்சக் தீர்மானம்" என ஒன்றைத் தாங்கள் "வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு" நிகராக மேற்கொண்டதாக குறிப்பிடுகின்றார். "ஹட்சக்" என அவர் குறிப்பிடுவது ஹட்டன் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இன்றும் "சென்றர்" என அழைக்கப்படும் மண்டலத்தைக் குறிக்கின்றது. லன்டனில் மலையக ஆய்வு எழுத்தாளர் மு.நித்தியானந்தன் அவர்களை சந்திக்க நேர்ந்தபோது அவரும் இது பற்றி சில விடயங்களை பகிர்ந்துகொண்டார். அதுவரை அந்த "ஹட்டன் தீர்மானம்" என்ன அறிய ஆவலாக இருந்தால் மீண்டும் தலைப்பை வாசிக்க...
(உருகும்)
நன்றி - சூரிய காந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...