புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான மாற்றுத்திட்டங்கள் மிகவேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மலையக அரசியல் வாதிகள், சமூகவியலாளர்கள், மலையகம் சார்ந்த அமைப்புக்கள், கல்வி சமூகம், மக்கள் என அனைவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய ஒரு முக்கிய காலகட்டத்தில் இருக்கின்றனர். மலையக அரசியல் கட்சிகள் அனைத்தும் பிளவுபட்டுள்ள நிலையில் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். சமூக அரசியல் நிலையை புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை 1948 இல் பேரினவாத ஆட்சியினரால் பறிக்கப்பட்டதன் பின்னர், 1977 முதல் 1987 வரை பெருந்தோட்ட மக்கள் மேற்கொண்ட அமைதிப் போராட்டத்தின் மூலம் மீளவும் கிடைக்கப் பெற்றதே வாக்குரிமையாகும்.
கடந்த பொதுத் தேர்தலின் போது பெருந்தோட்ட மக்கள் வழங்கிய வாக்குகளின் பயனாகவே ஒன்பது உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்கள். தமது அரசியல் இருப்பை அடையாளப்படுத்த இந்த மக்கள் கடந்து வந்த பாதை மிகவும் கஷ்டமானதாகும். எதிர்காலத்திலும் இச்சமூகம் கடக்கப் போகும் பாதையும் மிகவும் கரடுமுரடானதாக தோன்றும் நிலை உள்ளது.
21.07.1977இல் இடம் பெற்ற தேர்தலில் நுவரெலியா –மஸ்கெலியா தொகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 35743 வாக்குகளைப் பெற்று மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.ஐயாதுரை 3026 வாக்குகளை மட்டுமே பெற்று 4 ஆவது இடத்தைப் பெற்றார். இத் தெரிவின் பின்னரே இச்சமூகத்தினர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது. 1977 ஆம் ஆண்டின் பின்னரும் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தப்படி நாடற்றவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் வாக்குரிமை கேட்டு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. போராட்டம் காரணமாக 1986 இல் நாடற்ற ஆட்களுக்குப் பிரஜாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்டது. 1988 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க நாடற்ற ஆட்களுக்குப் பிராஜாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழான இலங்கைப் பிரஜாவுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மலையகத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வுத் தாக்கத்தின் பிரதிபலனாக மலையக பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடி வந்த தொழிற்சங்கங்கள் மலையக மண்ணை விட்டு தொலைந்து போயின. இன்றும் இச் சமூகத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் காணப்பட்டாலும் தொழிற்சங்க தலைவன் இல்லாத ஒரு வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கமாக இச்சமூகம் உள்ளது.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் கணிப்பீட்டின் படி இம்மாவட்டத்தில் 5 இலட்சத்த 56 ஆயிரத்து 936 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். 2015 இல் இதே மாவட்டத்தில் 5 இலட்சத்து 48 ஆயிரத்து 971 வாக்காளர்கள் பதிவு இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரை 7 ஆயிரத்து 965 வாக்காளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்துள்ளனர். மலையக மக்கள் அல்லது இந்திய வம்சாவளி மக்கள் அடையாளப்படுத்தும் மாவட்டங்களாக களுத்துறை, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருந்தாலும் அரசியல் அவதானிகளின் பார்வையில் நுவரெலியா மாவட்டமே விழுகின்றது. பெரும்பான்மை இனக்கட்சிகள் இன்று விகிதாசாரத் தேர்தலை முற்றாக வெறுக்கின்றன.
புதிய அரசியல் சீர்திருத்தப்படி தொகுதிவாரியாக தேர்தல் இடம்பெற்றால் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரே தெரிவாகலாம். இதற்கான காரணங்களை பலவகையில் முன்வைக்கலாம். பழைய முறைப்படி மூவர் தெரிவு இடம்பெற்றால் இரு தமிழர் பெரும் கஷ்ட சூழலுக்கு இடையே தெரிவு செய்யப்படலாம்.
இன்றைய இச்சமூக அரசியல் வளர்ச்சியின் வேகத்தின் வாயில்படி நுவரெலியா– மஸ்கெலியா தொகுதி பல தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாக மாற்றம் பெற வேண்டும். நுவரெலியா, மஸ்கெலியா, கொட்டகலை, அட்டன், நோர்வூட் ஆகிய பிரதேசங்களின் நிலப்பரப்பு வாக்காளர் தொகைக்கு ஏற்றவகையில் பிரிக்கப்படல் வேண்டும். கொத்மலை– வலப்பனை, இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்படல் வேண்டும். இவ்வாறு கண்டி, பதுளை மாவட்டங்களிலும் மலையகப் பிரதிநிதிகள் தெரிவுக்காக இரட்டை அங்கத்தவர் தொகுதிகளை ஏற்படுத்தல் அவசியமாகும்.
இச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் மலையக அரசியலின் முகவரி தொலைந்து போய்விடும். இவ்வாறு செயற்பட்டால் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களை மிகவும் போட்டிக்கு மத்தியில் பெறலாம்.
இன்று சிறுபான்மைக் கட்சியினரின் இருப்பை உடைப்பதில் இனவிரோத சக்திகள் மிகவும் பிரயத்தனத்தையும் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகின்றன. மலையக கட்சிகள் தங்களின் அரசியல் விரோதத்தை விடுத்து சமூக இணக்கப்பாட்டை மேற்கொள்வதிலேயே சமூக அரசியலின் விடிவுகாலம் தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...