Headlines News :
முகப்பு » » இறுதி யுத்தம் 2009 - மல்லியப்பூ சந்தி திலகர்

இறுதி யுத்தம் 2009 - மல்லியப்பூ சந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 6)

கடந்தவாரம் வன்னியில் வாழும் மலையகத் தமிழர்கள் பற்றிய பதிவைக் குறிப்பிட்டிருந்தேன். தேயிலை, ரப்பர், தென்னை, கோப்பி தொழில் துறையில் இருந்து முள்ளுத்தேங்காய்த்  தொழிலுக்கு மாற்றப்பட்டுவரும் மலையகத் தொழிலாளர் மக்கள் பற்றிய உரையாடலுக்காக எழுதப்படும் இந்த தொடரில் அரசியலும், சமூக பண்பாட்டு அம்சங்களும் கலந்து வருவதற்கு காரணமே இந்த தொழில்களின் ஊடாகவே மலையக மக்கள் நோக்கிய ஒரு 'அரசியல்' நகர்த்தப்படுவதை  விளக்குவதற்காகத்தான்.

1964 க்குப் பின்னர் இடம்பெற்ற இருவேறு குடிபெயர்வுகளை எடுத்துப்பார்த்தால் இந்தியா சென்றவர்களும் (தாயகம் திரும்பியோர்) வன்னிக்குச் சென்றோர் என இரு சாராரும் புதிய தொழிலுக்கும், காலநிலைக்கும், புவியியல் சூழலுக்கும் தம்மைத் தயார்படுத்த வேண்டியிருந்தது. 

இலங்கை மலையகத்தில் மலைப்பாங்கான பிரதேசம். மேலை மலையகத்தில் குளிர் காலநிலை, கீழை மலையகப் பகுதிகளில் ஓரளவு சூடான வெப்பநிலை. ஆனால் கொளுத்தும் வெயில் இல்லை. 

ஆனால், இவர்கள் குடிபெயர்ந்து தமிழ்நாட்டுக்கும் வன்னிக்கும் போனபோது அங்கே சூழ்நிலைகள் தலைகீழாக இருந்தன. எங்கும் மலைகளைக் காணக்கிடைக்கவில்லை. மழையையும் அபூர்வமாகவே காணக்கிடைத்தது. கொளுத்தும் வெயில்.இவற்றில் இருந்து  தம்மைத் பாதுகாத்துக் கொள்வது இனவாதத்தாக்குதலில்  இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதைவிட சிரம்மாகவே இருந்தது. எங்கள் குடும்பத்தில் இருந்து, நான் பிறந்த 70 களின் ஆரம்ப ஆண்டுகளில் இந்தியாவுக்கும், வன்னிக்கும் இடப்பெயர்வு இடம்பெற்றிருப்பதையும் அவதானித்தவனாக ஒரு அனுபவப் பதிவாக இதனை என்னால் உறுதிபட சொல்ல முடிகிறது.

1979ல்  சிறுவனாக முதன்முதலாக வன்னிக்கு சென்று தந்தை வழி தாத்தா, ஆச்சி, அத்தைமார், பெரியப்பா மற்றும் உறவுகளை பார்க்க நேர்ந்தமையும் அவர்களுள் இயற்கையாகவும், செயற்கையாகவும் செத்து மாண்டவர்களையும் தவிர இன்னும் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் இரத்த உறவுகள் பட்ட அவஸ்தைகள், படும் அவலங்கள் சொல்லில் அடங்காதவை.

விடுதலை இயக்கத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ வன்னியில் வாழும் மலையகத் தமிழர்கள் இணைக்கப்பட்டார்கள். இணைந்தும் கொண்டார்கள். இதனைப் பற்றி சயந்தனின் "ஆதிரை" நாவல் பேசுகிறது என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறு இணைந்தவர்கள் பலரும் இறக்க நேரிட்டது. இறுதி யுத்தத்தில் இறந்துபோன ஆயிரக்கணக்கான மலையக வம்சாவளி இளைஞர், யுவதிகள் பற்றிய உறுதியான பதிவுகள் இல்லை. ஆனால் அதனைக் கணக்கிட முடியாது என்றும் இல்லை. ஆய்வுப் பணியொன்றில் இறங்கினால் அது சாத்தியமே.

இறுதி யுத்தத்திற்கு முன்பான காலப்பகுதியில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு "மாவீரர் குடும்பம்" என பெயரிட்டு தென்னை, பலா, வாழைமரங்களுடன் கூடிய வளவுகள் வழங்கப்பட்டன. தன் பிள்ளை உயிர்நீத்தாலும் தம்மை வாழவைத்து விட்டுச் சென்றுள்ளதாக பெற்றோரும் ஆசுவாசப்பட்டுக்கொண்டனர். 2009 இறுதி யுத்த நாட்களில்  இந்த மாவீரர் குடும்பங்களும் தங்களது வீடு வளவுகளையும் விட்டு ஓடிவந்து வவுனியாவில் வந்து தங்க நேரிட்டது. அருணாச்சலம், மெனிக்பாம் என ஏகப்பட்ட அகதிமுகாம்கள் அமைக்கப்பட்டு அங்கே வவுனியாவில் லட்சங்களாக அகதிகளாக மக்கள் வாழ்ந்தனர். அப்போது அந்த உறவுகளைப்  பார்க்க மலையகத்தில்  இருந்து பலரும் வன்னிக்குச் சென்றனர். அந்த நேரத்தில் உருக்குலைந்த  அந்த உறவுகளின் தோற்றமும் நிலையும் கண்டு உருகாத நெஞ்சம் இல்லை.

என் தந்தையின் மூத்த சகோதர்ர் ஒரு தையல்காரர். மலையகத்தில் வாழ்ந்தபோதும் சரி, வன்னியில் தர்மபுரத்தில் குடியேறிய பின்னரும்சரி அவருக்குப் பெயர் "டெயிலர" அல்லது "ரெயிலர்" தான். தன் வீட்டுவளவுக்குள்ளேயே மாட்டுப்பண்ணை வைத்திருந்தவர்.ஆனாலும் டெயிலர் தொழிலைக் கைவிடாதவர். இறுதி யுத்தம் இவர்களைத் துரத்த மாட்டையும் ஓட்டிக் கொண்டு மறுகையில் தனது தையல் இயந்திரத்தின் மேல்பகுதியையும் தூக்கிக்கொண்டு ஓடியோடி குடும்பத்தோடு வவுனியா புறப்பட்டு இருக்கின்றார்.

இடையில் வரும்போது கூட்டத்தின் இடையே குடும்பம் கலைந்திருக்கிறது. முதலில் திகைத்து நின்றவர்கள் சரி எங்காவது சந்தித்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் ஓடிக்கொண்டிருந்தவரின் இடது கை பிடியில் இருந்த கயிற்றில் கட்டப்பட்டிருந்த மாடு இழுபட்டு ஓட மறுத்தபோது திரும்பிப் பார்த்திருக்கிறார். அது குண்டு பட்டு இறந்து கிடந்திருக்கிறது. 'ஐயோ ...... ' என கதறியவருக்கு  பின்னால் திரும்பி சென்று தன் செல்வமான பசுமாட்டைத் தடவிக்கொடுத்து அஞ்சலி செலுத்த, யுத்தம் அனுமதி கொடுக்கவில்லை. தாயையும், தந்தையையும், உறவுகளையும் பிள்ளைகளையும் கூட இவ்வாறு பிரிந்து செல்ல நேர்ந்த அந்த நாட்களில் எங்கே மாட்டுக்காக ஒரு நிமிடம் மௌனிப்பது. 

தயங்கி நின்றவரை அருகில் வந்த அவரது வயதை ஒத்தவர் " என்ன அய்யா ... நிற்கிறீங்கள் ... மாட்டுக்காக நின்றால் நீங்களும்  சாகவேண்டியதுதான்" என தனது வலது கையால் பெரியப்பாவையும் இழுத்துக்கொண்டு கொண்டு ஓடியிருக்கிறார். நூறுமீற்றர் தூரம் ஓடிக்கடக்கையில்  பாரிய சத்தத்துடன் தூசி கிளம்ப எல்லோருமாக மண்ணில் விழுந்து உருண்டு புரண்டு எழுந்து ஓடுகையில் தன்னை வலக்கை கொண்டு பிடித்து ஓடியவரை தனது இடக்கைக் கொண்டு இழுத்துக்கொண்டு கொண்டு ஓட எத்தணித்தபோது இப்போது அவர் எழுந்து வர மறுத்திருக்கிறார். பெரியப்பா  இழுத்தபோதுதான் தெரிந்திருக்கிறது அவர் இறந்துவிட்டார் என. ஐயோ........என தலையில் அடித்துக் கொண்டு ஓடிய பெரியப்பா பல கிலோ மீற்றர்கள்  கடந்து ஒரு எல்லையை அடைந்து  பாதுகாப்பு பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என பாரம் குறைந்தவராக உட்கார்ந்தபோது  உண்மையில் ஏதோ பாரம் குறைந்தது போல் உணர்ந்திருக்கிறார். 

இப்போது 'ஐயோ....ஐயோ ..... என கதறி அழுதவராக துடித்திருக்கின்றார்.இப்போதுதான் அவருக்குப் புரிந்திருக்கிறது அந்தப் பெரியவரை இழுத்தெடுக்கும் முயற்சியில் தனது தையல் மெஷினை தவறவிட்டுவிட்டு வந்துள்ளார்.தன் சுயமொழிலையும் இனி செய்ய முடியாது, மாடும் மரணித்துவிட்டது. குடும்பத்தார் பிரிந்துவிட்டார்கள். அவர்கள் அந்தப் பெரியவர் போல இறந்துவிட்டார்களா? தன்னைப் போல தப்பிப் பிழைத்து எங்காவது என்ன செய்வதென்றறியாது  புலம்பிக் கொண்டிருக்கின்றார்களா? என எண்ணி தலையில் அடித்துக் கொண்டு அழுதிருக்கிறார்.

தேயிலைத் தோட்டத்தில் பிறந்து அதில் வேலை செய்து, பிறகு வன்னியின் தென்னந்தோட்டத்திலும் காய்கறி பண்ணையிலும் வேலை செயதபோதும் தன்பேரோடு ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு செய்து வந்த 'டெயிலர்' தொழிலின் ஆதாரமான அந்த தையல் எந்திரத்தின் மேல்பாகத்தை தவறவிட்டவராக இப்போது பிணமாகி நின்றார். 

இப்படி அகதி முகாமில் நின்றவரை உரிய அதிகாரிகளுடன் பேசி சித்தப்பாவும் மாமாவும் அவரது நண்பர்களும் வெளியே கொண்டுவருவதில் வெற்றிபெற்றார்கள். 

நான் சிறுவனாக இருந்த அந்த நாட்களில் வன்னிக்கு இடம்பெயர்ந்து செல்வதற்கு முன்னர் என்னைத் தன் சைக்கிளில் ஏற்றி வட்டக்கொடை நகரில் புடவைக்கடை ஒன்றில் புதுசட்டை வாங்கிக்கொடுத்த பெரியப்பா இப்போது அவர் அளவுக்கு பெரியதான சட்டைபோட்டுக்கொண்டு உருக்குலைந்த உடம்போடு எலும்பும் தோலுமாக எங்கள்  வீட்டு வாசலில் நின்றார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்த்து தேகசுகமாக்கி வீட்டுக்கு அழைத்துவந்தோம்.

"என்னை ஒருக்கா ஊருக்கு கூட்டிப்போ மகன் " என்றார்

"இன்னும் வன்னி பிரதேசம்.விடுவிக்கப்படவில்லை பெரியப்பா... க்ளியர் ஆனதும் போவோம்" என்றேன். 

"நான் வட்டக்கொடைக்கு ... மடகொம்பரைக்கு கூட்டிப்போ எனக்கேட்டேன்" என்றார். 

நான் நெகிழ்ந்து போனேன். முப்பது ஆண்டுகள் வன்னியில் வாழ்ந்தென்ன ? அவர் ஊர் என்பது மடகொம்பரை தோட்டத்து மண்ணைத்தானே. 

எந்த ஊரில் என்னைச் சைக்கிளில் ஏற்றிச் சென்று சட்டை வாங்கிக் கொடுத்து விடைபெற்று சென்றாரோ அந்த பிறந்த மண்ணுக்கு இப்போது என் காரில் ஏற்றி அவரை அழைத்துப் போனேன். பெருமிதத்துடன் என்னுடன் பயணித்த அவர் முகத்தில்  மகிழ்ச்சி. காரில் போவதினால் மட்டுமில்லை, பிறந்த ஊருக்கு போகிறோம் என்பது மட்டுமில்லை. அங்கே வன்னியில் பிரிந்தோடிய குடும்பம் எல்லோரும் உயிர் பிழைத்து வவுனியா அகதி முகாம் ஒன்றில் ஒன்று சேரந்திருக்கிறார்கள் என்ற தகவல் எங்கள் காதுகளுக்கு எட்டியிருந்தது. அந்த ஆறுதலில் தான் அங்கு நடந்தவற்றை கார் பயணத்தில் என்னோடு பகிரந்துகொண்டார். நான் உங்களோடு இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன்.

பெரியப்பாவை ஊரில் விட்டுவிட்டு திரும்பியிருந்தேன். ஊரில் எல்லோரும் இவரைப் பார்க்க வருவதும் இவர் எல்லோரையும் பார்க்க வீடுவீடாக செல்வதும் என உறவுப்பரிமாற்றம் இடம்பெற்ற வேளை மீண்டும் அவரை கொழும்புக்கு அழைத்துவந்தார் சித்தப்பா. மீண்டும் வைத்தியசாலையில்  அனுமதித்திருந்தோம். நன்கு தேறி வெளியேறியிருந்தார். 

இப்போது என்னிடம் மீண்டும் வந்தவர் "ஊருக்கு போகவா" என்றார். "மடகொம்பரைக்குத் தானே" என்றேன் துணிவுடன். "ஆமாம்" என சிரித்தவர் இந்த முறை விடுத்த வேண்டுகோள் என்க்கு வியப்பாக இருந்தது. 

"நான் தனியாக ட்ரெயினில் போய் வட்டகொடை ஸ்டேஷனில் இறங்கவேண்டும் போல ஆசையாக இருக்கிறது" என்றார். 

வன்னியில் இருந்து நடைபிணமாக வந்தவர் இப்போது தனியாக பயணம் போகிறேன் என்கிறாரே என சற்றுத் தயங்கினோம். எனினும் கொழும்புக் கோட்டை - வட்டக்கொடை ரயில்பயணம் அத்தனைச் சிரமமானது இல்லை. நானே காரில் ஏற்றிச் என்று கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஆசனத்தில் அமரவைத்து வழியனுப்பிவைத்தேன். சிரித்த முத்துடன் யன்னல் வழியே கையசைத்து விடைபெற்றுக்கொண்டார். அது அவரது இறுதி விடைபெறுதல் என என்னால் எண்ணிப்பார்க்க கூட முடியவில்லை. அத்தனை உற்சாகமாக ரயில் ஏறியவர் பற்றி நான் வீட்டில் பெருமையாக பேசிக் கொண்டிருந்தேன். ஒருவாரம் கழிந்த நிலையில் வந்த தகவல் சுகவீனமான நிலையில் மடகொம்பரை வீட்டில்... தனது தந்தை பிறந்து, தானும் பிறந்து வளர்ந்த அதே வீட்டில் அவரும் காலமானார் என்பதுதான்.

இரண்டு மகன்கள், ஒரு மகள் அவருக்கு. ஒரு மகனை ஏற்கனவே காணிக்கையாக்கியிருந்தவருக்கு மூத்தமகன்தான் கொல்லிவைக்க வேண்டும். அகதிமுகாம் சட்டதிட்டங்கள் அத்தனை இலகுவாக இளைஞர்களை வெளியே விட்டுவிடவில்லை. கொல்லிவைக்கிறேன் என போய் குண்டுவைத்து விடுவார்களோ என அஞ்சினார்கள். அவரது குடும்பத்தினரால் அன்னாரது இறுதிகள் கிரியைகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆக இறுதி கிரியைகளின்போது 'மகன்' கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பு எனதானது.

நான் மொட்டை போட தயாரானேன். ஆனால் 16 நாட்கள் முடியும்வரை எங்கும் செல்லக்கூடாது எனும் நிபந்தனையை ஏற்க மறுத்தேன். குடும்ப வண்டியின் எஞ்சின் நான். நான் ஓய்வெடுத்துக் கொண்டால் வண்டி ஓடாது. நிலைமையைக் புரிந்து கொண்ட வீட்டார் முடிவுக்கு வந்தார்கள். மகனின் கடமைகளை தகப்பனை போன்ற தன் அண்ணனுக்குத் தானே செய்வதாக அறுபத்த்தைந்து வயதில் அப்பா தன் அண்ணணனுக்காக மொட்டை போட்டார்.கொல்லி வைத்தார். 1940 களில் மடகொம்பரை மண்ணில் பிறந்து 1980 களில் வன்னியில் குடியேறி 2010 ல் மீண்டும் மடகொம்பரை மண்ணில் மலையெத்துக்கே உரமானார் பெரியப்பா. 

இப்போது வன்னியில் மாவீரர் குடும்பமாக வாழ்ந்த பெரிய அத்தையை வவுனியா  அகதி முகாமில் இருந்து அழைத்துவந்தோம். இவர் நடைபிணமாக மாத்திரமல்ல மனதளவில் நலம் குன்றியவராகவே மாறிப்போயிருந்தார்.90 களிலேயே யுத்தத்தின்போது இறந்துபோன என்வயது ஒத்த சாந்தினி (கெப்டன் பூங்குயில் ) யின் தாயார் இவர். 

அப்போதெல்லாம் இவரின் பேச்சிலே பெருமை பொங்கும். "என்ர மகள் உயிர் போனாலும் .... என்னை வாழவைச்சுபோட்டு போய்இருக்கிறாள். இயக்கம் என்ன வடிவா பாக்குது மருமகன் ... எனக்கு கல்வீடல்லோ கொடுத்திருக்கினம். நிறைய தென்னையெல்லாம் நிற்குது. வந்து மாவீரர் வீடென்று நீங்கள் யாரிட்ட கேட்டாலும் நேர கொண்டுவந்து  விடுவினம்" .

இப்படி அத்தை சொன்னாலும் 91க்குப் பிறகு நான் ஒரு நாளும் அங்கு போகவில்லை. என்னை எங்கே அழைத்துக் கொண்டு போவார்கள் என எனக்குத் தெரியாதா என்ன?

இப்போது இறுதி யுத்தத்தில் நொந்து வந்து நிற்கும் அத்தையின் அமைதிக்குப் பின்னால் ஏதோ காரணம் இருக்கிறது என எண்ணி அவர் தேறிவிட்ட ஒருநாளில் பேச்சுகொடுத்தேன்.

"வவுனியா  கேம்பில க்ளியர் ஆனதும் எங்கட வீட்ட போனேன் தம்பி.... அது தன்ர வீடென்று உறுதியோட ஒருத்தன் லன்டன்ல இருந்து வந்து நிற்கிறான்..... என்ர பிள்ள தன் உயிர விட்டதால இயக்கம் கொடுத்த வீடு ... இப்போ இவன் வந்து ஏமாத்துறான்" என அழத்தொடங்கிவிட்டார்.

இப்போது ஏமாற்றியது யார் என அத்தைக்கு விளக்கும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. காணிக்கு உரித்தான உண்மையான ஆள் மாவீரனைப்போல அங்கே நின்றிருக்கிறார். அவர்கள் அத்தைக்கு செய்தது "வழித்தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைத்த கதை " என்று எடுத்துச்சொன்னால் அத்தைக்கு புரியவா போகிறது. "சரி கவலைப்படாதீர்கள் ... என்றோ ஒருநாள் உங்களுக்கும் நியாயம் கிடைக்கும்" என  வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல மட்டுமே என்னால் முடிந்தது. 

இதுவரை வன்னிக்குப் போன பெரியப்பா, பெரிய அத்தைக்கு நடந்தவை பற்றி பார்த்தோம்.இன்னும் சொல்ல ஏராளமான வன்னிக் கதைகள் உண்டு. இனி ..இனி கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் அவிழ்ப்பார்கள். அப்போது தெரிந்துகொள்ளலாம். நாம் இனி தாயகம் திரும்பிய (தமிழகம்) போன அம்மாவின் அக்கா 'பெரியம்மா' பற்றி பார்ப்போம்.அங்கு முள்ளுத்தேங்காய் குத்தாதபோதும் முள்ளாக குத்திய பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.அவற்றைத் தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.தலைப்பை மீண்டும் வாசித்துவிட்டு...

( உருகும்)

நன்றி - சூரியகாந்தி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates