Headlines News :
முகப்பு » » சட்டங்களுக்குட்பட்ட பிரஜாவுரிமையும்¸ திணைக்களத்துக்குட்பட்ட ஆள்பதிவும் நீக்கப்பட வேண்டும் - - மு.சிவலிங்கம்

சட்டங்களுக்குட்பட்ட பிரஜாவுரிமையும்¸ திணைக்களத்துக்குட்பட்ட ஆள்பதிவும் நீக்கப்பட வேண்டும் - - மு.சிவலிங்கம்

(யாப்பு சீர்திருத்தத்துக்கான தனி நபர் பிரேரணை)

- மு.சிவலிங்கம் -  முன்னாள் ம.ம.மு. செயலாளர் நாயகம்


புதிய அரசியல் யாப்பு திருத்தத்துக்கான தனி நபர் பிரேரணையாக முன் வைக்கப்பட்ட எனது பத்து பிரேரணைகள் பற்றி இக்கட்டுரை விளக்கமளிக்கிறது.. 

01. அரசியலமைப்பின் பிரகடனத்துக்கப்பால் 1948 முதல் 2009 வரையில் அமுலில் இருக்கும்  பதினொரு வகை பிரஜா உரிமைச் சட்டங்கள் நீக்கப்படல் வேண்டும். 

இப் பிரேரணை பற்றிய விளக்கமாவது -:  1948 ம் ஆண்டு 18 ம் இலக்கப் பிரஜா உரிமைச் சட்டம்¸ மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்தது. 1946 ம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழு தயாரித்த அறிக்கையும் இச் சட்டத்தினால் நிராகரிக்கப்பட்டது. இச் சட்டத்தால் இந்திய வம்சாவளி  தமிழர்கள் நாடற்றவராகினர். இதன் பின்னர் 1949 ம் ஆண்டு 48 ம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டு குடியுரிமையை இழந்தவர்களுக்கு  வாக்குரிமை வழங்கும் உரிமையும் மறுக்கப்பட்டது. 

1949 ம் ஆண்டு மூன்றாம் இலக்க இந்திய – பாகிஸ்தானியர் குடியிருப்பாளர் (பிரஜா உரிமை) சட்டம் இயற்றப்பட்டு¸ அடைப்புக்குறிக்குள்ளே “பிரஜா உரிமை” என்று குறிப்பிடப்பட்டது¸ இச் சட்டத்தின் படி நாட்டின்  குடிகளாகவன்றி¸ (Citizen) குடியிருப்பாளராக (Resident)  இம் மக்கள் கணிக்கப்பட்டனர். 1964 ம் ஆண்டு ஒக்;டோபர் 3 ம் திகதி  உருவாக்கப்பட்ட சிறிமா – சாஸ்திரி   ஒப்பந்தப்படி 5¸25000 பேர் இந்தியாவுக்குச் செல்ல வேண்டுமெனவும்¸ 3¸00000 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படுமெனவும் மிகுதி 15¸0000 பேர் பிறகு யோசிக்கப்படுவார்கள் என்ற சட்டம் ஒப்பந்தமாக உருவாகியது. அன்று 9¸75000 பேர் இந்திய வம்சாவளி மக்களின் குடிசனத் தொகை என்று கணக்கிட்டிருந்தார்கள்

1967 ம் ஆண்டில் 14 ம் இலக்க இலங்கை - இந்திய உடன்படிக்கை அமுல்படுத்தும் சட்டம் உருவாகியது. இச் சட்டத்துக்கிணங்க 4 லட்சம் பேர் இந்தியாவுக்கு விண்ணப்பித்தனர்.. 

1971 ம் ஆண்டில் 43 ம் இலக்க இலங்கை - இந்திய அமுல் படுத்தும் ஒப்பந்தம் திருத்தச் சட்டப்படி 7 பேர் இந்தியா செல்லும் போது  4 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படும் என்ற சட்டம் செயல் பட்டது… 1974 முதல் சிறிமா – சாஸ்திரி  ஒப்பந்தப்படி மீதப்பட்ட 15¸0000 பேரில்¸  75¸000 பேர் இந்தியாவுக்கும் 75¸000 பேர் இலங்கைக்கும் பதிவாக்கப்படும் என சட்டம்  பிறப்பித்தது..

இந்தச் சட்டங்களுக்குப் பின்னர் 1988 ம் ஆண்டு 39 ம் இலக்கச் சத்தியக் கடதாசி மூலம் பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 2003 ம் ஆண்டின் 35 ம் இலக்க இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்டமும் உருவாகியது. பின்னர் 2009 ம் ஆண்டின்  6 ம் இலக்க இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு பிரஜா உரிமை வழங்கல் (திருத்தச்) சட்டமும்¸ 2009 ம் ஆண்டின் 5ம் இலக்க நாடற்ற ஆட்களுக்கு விஷேசத் திருத்தச் சட்டமும் என பிரஜா உரிமை சட்டங்கள் முற்றுப் பெற்றன.. இந்தச் சட்டங்கள் அனைத்தும் இன்று வரை அழிக்கப்பட வில்லை. அவை நீறு பூத்த நெருப்பாக உயிரோடுதான் இருக்கின்றன..!

இன்றைய நல்லாட்சியின் சமாதானச் சூழலில் 1948 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமை சட்டம்  முதல் 2009 ம் ஆண்டு வரையிலான உருவாக்கப்பட்ட  சட்டங்கள் அனைத்தையும் அழித்து விட்டு¸ இம் மக்கள் யாப்பு பிரகடனத்துக்கமைய இலங்கைக் குடிகளாவர் என்று பிரகடனப்படுத்த வேண்டு;ம். அதுவன்றி  21 ம் நூற்றாண்டிலும்  குடியுரிமை அற்ற மக்களாக சட்டத்துக்குட்பட்ட குடியுரிமையுள்ள மக்களாக அடையாளப் படுத்துவது சர்வதேச ரீPதியில் வெட்கமானதும்¸ ஐ.நா. சாசனத்துக்கு எதிரான மனித உரிமை மீறல் செயல் எனவும் குரல் எழுப்பப்படலாம். 

02. அரசியலமைப்பின் பிரஜா உரிமை பிரகடனத்தில் 'பிரஜா உரிமைச் சட்டத்துக்கிணங்க  பதிவு செய்யப்பட்ட பிரஜைகள்" என்ற பதம் நீக்கப்பட்டு¸ அனைத்து மக்களும்  'வம்சாவளி பிரஜைகள்"(Citizen by descent) என்ற பதத்துக்குள்ளேயே  உள்ளடக்கப்பட வேண்டும்.

யாப்பிலிருக்கும் இந்தப் பிரகடனம் பதிவுப் பிரஜை என்ற சட்டத்துக்களாக்கப்பட்டிருக்கும் பிரஜைகளுக்கு ஒரு ஆறுதல் வசனத்தையும் குறி;ப்பிட்டுள்ளது.! அதாவது¸ பதிவு பிரஜைகளுக்கும்¸ வம்சாவளி பிரஜைகளுக்கும் எது வித வேறுபாடுகளும் கிடையாது.. என குறிப்பிடுகின்றது. அப்படியாயின் ஏன் இந்த இரண்டு விதமான பிரஜைகள் அந்தஸ்தை அடையாளப்படுத்த வேண்டும் என்பது பதிவுப் பிரஜைகளின் கேள்வியாகும். 1949 ம் ஆண்டு 3ம் இலக்க இந்திய - பாகிஸ்தானிய வதிவிட சட்டத்தின் போது¸ பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே பதிவுப் பிரஜைகள் ஆவர். அவர்களது வழித் தோன்றல்கள் பரம்பரை பரம்பரையாக பதிவுப் பிரஜைகளாக இருப்பர் என எதுவும் இந்தச் சட்டம் சொல்லவில்லை. ஆகவே இந்த சட்டம் அமுலில் இருக்கும் வரை புதிய தலைமுறைகளும் பதிவுப் பிரஜைகளாக கணிக்கப்பட வேண்டியிருக்கும் என்ற சட்டம் தொடர்ந்து தேவையா என்பதும்  இம்மக்களின் கேள்வியாகும். இச் சட்டங்கள் புதிய யாப்பு சீர் திருத்தத்தில் நீக்கப்பட்டு விட்டால் இக் கேள்விகள் அவசியப் படாது போகும்..

03.  நடைமுறையிலிருக்கும் 'இந்திய வம்சாவளி ஆள் பதிவுத் திணைக்களம்" பதம்  நீக்கப்படல் வேண்டும். (Department of Registration of  people of Indian Origin)  'இந்திய வம்சாவளி ஆள் பதிவுத் திணைக்கள ஆணையாளர்" (Commissioner of      Department of  Registration of  People of Indian Origin) பதவியும் நீக்கப் படல்  வேண்டும்.

இந்த திணைக்களத்துக்கும்¸ திணைக்கள ஆணையாளருக்கும் உட்பட்டிருக்கும்  குடிமக்கள்  நேரடியான நாட்டின் பிரஜைகளாக அல்லாமல்¸ இரண்டாந் தர நிலைக்குள்ளாக்கப்பட்டவர்களாக¸ திணைக்கள பிரஜைகளாக¸ திணைக்கள ஆணையாளருக்குட்பட்ட  பிரஜைகளாக இருக்கும் பட்சத்தில் இவர்களது குடியுரிமையை எப்படி அந்தஸ்து படுத்துவது..? எப்படி அடையாளப் படுத்துவது? என்பதும்  இந்திய வம்சாவளி ஆள் பதிவுத் திணைக்களத்துக்குட்பட்ட பிரஜைகளின் இன்னுமொரு சட்டக் கேள்வியாகும். புதிய யாப்பு சீர்திருத்தத்தில் இப்படியொரு திணைக்களம் தேவையா என்பது மனித உரிமைக்கான இன்னுமொரு கேள்வியாகும்.. 

04. எமது தேசிய அடையாளம் 'மலையகத் தமிழர்" என்று தேசிய இனப் பதிவேட்டில்  பதிதல் வேண்டும். எங்களை நாட்டிலிருந்து அந்நியப்படுத்தும் 'இந்தியத் தமிழர்" அல்லது  'இந்திய வம்சாவளியினர்" என்ற அடை மொழிப் பதம் முற்றாக நீக்கப் படல் வேண்டும். 

இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்களை மலையகத் தமிழர் என்று தங்களுக்குள்ளேயே வழமைப்படுத்திக் கொண்டார்களே தவிர அதை தேசிய இன அடையாளமாக யாப்பில் பதிவு செய்துக் கொள்வதற்கு இன்று வரை எந்தவொரு மலையகக் கட்சியும் சட்டத்தை நோக்கிய நடவடிக்கை எதுவும்  எடுக்க வில்லை. பாராளுமன்றத்தில் பேசியதாகவும் இல்லை. இதே வேளை இம் மக்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டிக் கொள்வதும் கேள்விக்குரிய விவகாரமாகவும் இருக்கின்றது.

05. மலையகத் தமிழரின் குளறுபடியான குடிசனத் தொகை புள்ளி விபரம் (1981 - 2011) மீள்  பரிசீலனை செய்யப்பட்டு ஆள் பதிவு திணைக்கள பதிவேட்டில் உறுதி செய்தல்  வேண்டும். 

இந்த மக்களின் தேசிய அடையாளம் தளம்பல் நிலையில் இருப்பதால்¸ இந்தியத் தமிழர் என்றும்¸ இலங்கைத் தமிழர் என்றும் குடிசனத் தொகை பதிவேட்டில் பதியப் பட்டுள்ளன.  இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 8 லட்சத்து¸22ஆயிரம் பேர்களே பதிவாக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் பிழையான கணக்கெடுப்பாகும். ஆகவே இந்த நிலைக் கருதி¸ புதிய யாப்பு சீர் திருத்தத்தில் இந்த மக்கள் மலையகத் தமிழர் அல்லது இலங்கைத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தை பதிவு செய்துக் கொள்ளல் வேண்டும். அல்லாவிடில் உலக சனத் தொகை கணிப்பீட்டில் கூட இந்த மக்களின் உண்மையான  அடையாளம் உள் வாங்கப் படாமல் போகும்.

06. மலையகத் தமிழர்கள் தங்கள் தேசிய இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்கு சுய  விவசாயத்துக்கான நிலவுடமையாளராகக் காணி உரிமையை¸ காணி சீர்திருத்தச்  சட்டத்துக்குள் உள்ளடக்கப்படல் வேண்டும்.

பெருந் தோட்ட மக்கள் நிலவுரிமையற்று¸ தோட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமான  தொடர் முகாம் வசிப்பிடங்களில் வாழ்வதால்¸ கிராம மக்களாக அரசினால் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் வாழ்விடம் கிராமமயமாக்கப்பட வில்லை. காலணித்துவ ஆட்சியிலிருந்து இன்று வரை பெருந் தோட்டத் துறை (Plantation Sector)  என்று ஒரு நாட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சமூகப் பிரிவினராக தனிமைப் படுத்தப்பட்டிருப்பதால்¸ அவர்கள் உள்ளுராட்சி நிர்வாகத்துக்குள் உள் வாங்கப்பட வில்லை. அரசின் பொது நிர்வாக நிதி அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சுற்றுச் சூழல்¸ உட்கட்டமைப்பு அபிவிருத்திகள்¸ தேசிய நீரோட்ட உறவு எல்லாமே துண்டிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே¸ இந்த மக்களுக்கு பண்ணை விவசாயம் என்னும் சுய தொழில் வாழ்க்கையில் ஏனைய மக்களைப் போன்று வாழ்வதற்கு அரச காணி வழங்கப் படல் வேண்டும். 'வீடமைப்பு எனும் ஏழு பேர்ச்சஸ் வசிப்பிட நிலத் திட்டம்" என்ற ஒரு பாரதூரமான பிழையான வீடமைப்புத் திட்டம் நிராகரிக்கப்பட வேண்டும். புதிய யாப்பு சீர் திருத்தத்தில் நிலத்துடன் வாழும் கிராமத்தவர் என்ற கலாச்சாரத்துக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்பட்டு¸ பெருந் தோட்ட முறை ஒழிக்கப்படல் வேண்டும்.

07. காலணித்துவ பிரித்தானிய ஆட்சிக் காலமான 1823 ம் ஆண்டு கோப்பிக் காலத்திலிருந்து  2017 ம் ஆண்டு தேயிலைக் காலம் வரை மனித உரிமை சாசனத்துக்கு முரணான  வகையில் உழைப்புக்கேற்ற நீதியான சம்பளம்  மறுக்கப்பட்டு வருவதன் காரணமாக¸  பெருந் தோட்ட மக்கள் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டு¸ போஷாக்கின்மையால்  தேசிய ரீதியில் பொதுவான மரண வீதத்திலும்¸ சிசு¸ கர்ப்பிணி மரண வீதத்திலும்¸  ஊமை¸ குருடு¸ செவிடு¸ முடம் எனும் வலது குறைந்தோரின் (மாற்றுத் திறனாளிகளின்)  பிறப்பு  வீதத்திலும் தேசிய மட்டத்தை விட விகிதாசார உயர்வு காணப்படுவதால்¸ இந்த  சமூகத்தின் விசேஷ கவனிப்புக்காக அரசியல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

அரசாங்கத் தொழிலாளர்களை பாதுகாக்கும் தொழிற் சட்டங்கள் பெருந் தோட்ட மக்களுக்கும் உரித்தாகும்படி சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களும் அரச ஊழியர்களாக அங்கீகரிக்கப்படல் வேண்டும். அவர்களுக்குரிய நியாயமான சம்பளத்தை அரச ஊழியருக்குப் போன்று வழங்குதல் வேண்டும். அவர்களின் உழைப்புக்கேற்ற சம்பளத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். பொருளாதாரத்தால் வீழ்த்தப்பட்டிருக்கும் இந்த மக்களின்  சமூக வாழ்க்கை¸ தொழில் சட்டங்களாலேயே சீரமைக்க முடியும். ஆகவே அரச தொழிற் சட்டங்கள் புதிய யாப்பு சீர் திருத்தத்தில் பெருந் தோட்ட தொழிலாளருக்கும் சமமாகக் கிடைக்க  செயல் பட வேண்டும். அரச ஊழியர்களுக்கு சுமத்தப்படாத கணக்கு வேலை முறை (Task work)  நீக்கப்படல் வேண்டும். இன்று அரச சிற்றூழியர்கள் கூட மாதச் சம்பளமாக 25ஆயிரத்துக்கு மேல்பெறுகின்ற போது¸ தோட்டத் தொழிலாளர் தினக் கூலியாக 500 முதல் 600 ரூபாய் வரை சம்பளம் பெறுவது அரசியல் பாகுபாடு (Political discrimination) என்றும் மனித உரிமை மீறல் செயல் என்றும் அரசை விரல் நீட்ட முடியும். 

இக் கணக்;கு வேலை முறை நீக்கப்படும் வரை பெருந் தோட்டத் தொழிலாளர் இன்றைய கணக்கு வேலையான 8 லிட்டர் ரப்பர் பால் சேகரிப்பதும் 15 கிலோ கொழுந்து சேகரிப்பதுமான இந்த வேலை முடிவடையும் பட்சத்தில் அவர்கள் அன்றைய பணி முடிந்;ததாக கணிக்கபட வேண்டும். அதுவன்றி   கணக்கு வேலை முடிந்தும் 8 மணி நேர வேலை என்று அவர்களை வேலைத் தளத்தில் ஒடுக்கி வைப்பது தொழிற் சட்டத்துக்கு முரணானது என்பதை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம் கணக்கு வேலை என்பது எட்டு மணி நேர வேலை என்பதுடன் சம்பந்தப்பட்டதல்ல என்று தொழிற் சட்டம் தெளிவு படுத்த வேண்டும். புதிய யாப்பு சீர் திருத்தத் திட்டத்தில் பெருந் தோட்டத்தில் அமுலில் இருக்கும் பிரித்தானிய நிர்வாக முறை மாற்றப்பட வேண்டிய தொழிற் சட்டத்தை உருவாக்க வேண்டும். 

08. உள்ளுராட்சியின் பொது அபிவிருத்திப் பணம் கிராம மக்களுக்கு மட்டுமே என்று  வரையறுக்கப்பட்டிருக்கும் 1987 ம் ஆண்டு 15 ம் இலக்க 33வது உறுப்புரை கொண்ட  பிரதேச சபை சட்டம் நீக்கப்பட்டு¸ பெருந் தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களும்  உள்ளுராட்சிக்குள் உள் வாங்கப்படல் வேண்டும். தோட்டங்கள் கிராமங்களாக  மாற்றுவதற்கு இந்தச் சட்டம் புதிய யாப்பில் திருத்தப்பட வேண்டும்.

09. வடக்கு¸ கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் 'அரச கரும நிர்வாக மொழியாக தமிழ்  மொழி இருக்கும்"என்ற பதம் நீக்கப்பட்டு¸ மலையகத் தமிழர்¸ முஸ்லிம் மக்கள் வாழும்  பிரதேசங்கள் யாவிலும் அல்லது நாடளாவிய ரீதியிலும் தமிழ் மொழி நிர்வாக மொழியாக  இருத்தல் வேண்டும். தமிழருக்குரிய பிறப்புச் சான்றிதழ் தமிழ் மொழியில் இருத்தல்  வேண்டும்.

10. மலையகத் தமிழரின் குடிசனத் தொகைக்கேற்ப பிரதேச செயலகங்களும்¸ கிராம சேவகர்  பிரிவுகளும் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று உருவாக்கப்படல் வேண்டும்.  

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates