Headlines News :
முகப்பு » , , , , » புரோஹியர் கண்ட இலங்கை : (“அறிந்தவர்களும் அறியாதவையும்”) - என்.சரவணன்

புரோஹியர் கண்ட இலங்கை : (“அறிந்தவர்களும் அறியாதவையும்”) - என்.சரவணன்

ரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர் (Dr. Richard Leslie De Boer Brohier)
ரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர் (Dr. Richard Leslie De Boer Brohier 1892-1980) இலங்கை பற்றிய ஆய்ந்த முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். அவர் பறங்கி இன வம்சாவளி இலங்கையர்.

புரோஹியரின் பாட்டனார் 1777 இல் டச்சு கிழக்கிந்திய கம்பனியில் சேவையாற்ற வந்த கேப்டன் ஜீன் புரோஹியர். அவரது மகன் பீட்டர் ஐசாக் புரோஹியர் (Pieter Isaac Brohier). அவரது மகன் ரிச்சர்ட் அன்னஸ்லி புரோஹியர். அன்னஸ்லிக்கு 05.10.1892 அன்று பிறந்தவர் தான்  தான் ரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர். இலங்கையில் ஐந்து தலைமுறைகளைக் கொண்டது அவர்களின் குடும்பம்.

ஆரம்பத்தில் றோயல் கல்லூரியில் கற்று பின்னர்  பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டம்பெற்று கலாநிதி பட்டமும் பெற்றார். இலங்கையைச் சேர்ந்த முதலாவது நில அளவையியலாளர் இவர் என்று கூறலாம். பிரித்தானிய இலங்கையின் கீழ்  பிரதி நில அளவை அத்தியட்சகராக 40 வருட காலம் கடமையாற்றினார். அதன் பின்னர் அப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு சுதந்திர இலங்கையில் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க கல்லோயோ அபிவிருத்தித் திட்டத்தின் தலைமை நில அள வையியலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவரது நிபுணத்துவம் காரணமாக தொல்லியல் ஆராய்ச்சிக்கென நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணைக்குழுவுக்கும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

மொத்தம் 17 ஆய்வு நூல்களை அவர் வெளியிட்டார். அவை இலங்கைக்கு மிகப் பெரும் சொத்துக்கள். இவற்றில் பெரும்பாலானவை சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல பதிப்புகளையும் கண்டிருக்கின்றன. அவற்றில் “இலங்கையைக் காணல்” (Seing Ceylon) என்கிற நூல் முக்கியமானது. அதில் அவர் எழுதிய முன்னுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
“எனது தொலைநோக்கிக் கருவியையும், அளவெடுக்கும் கருவியையும் எடுத்துக்கொண்டு இலங்கையிலுள்ள சந்து பொந்துகளெங்கும் 40 வருடங்களாக திரிந்து சேகரித்ததன் விளைவு தான் இந்த நூல்....
இந்த அழகான தீவின் மீது நான் கொண்டிருக்கும் பக்தியும், கௌரவமும் மட்டுமன்றி இதன் வரலாறு, பண்பாடு குறித்து நான் கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாகவும் இந்த நூலில் எனது தனிப்பட்ட எண்ணங்களும் வெளிப்படுமாயின் மன்னித்தருளுங்கள்....”
நில அளவையியலாளராக நீண்ட காலம் சேவையில் இருந்த நிபுணர் என்பது மாத்திரமல்ல. இலங்கை பற்றி விரிவான பல ஆய்வு நூல்களை எழுதித் தள்ளியிருக்கிறார். இலங்கை முழுவதும் மூலை முடுக்கெங்கும் அலைந்து திரிந்து அவர் ஏற்படுத்தித் தந்த தரவுகளை வைத்துத் தான் இன்றும் நில அளவையியல் திணைக்களமும், பல்வேறு ஆய்வாளர்களும் மேலதிகப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.


இலங்கையின் புவியியல் விவகாரங்களை அரசியல், வரலாற்று கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தவர் அவர். அவரது நூலில் 1833 இல் தமிழர் பிரதேசம் என்பது நாட்டின் அரைவாசிக்கும் மேலிருந்தததாக ஆய்வுகளின் மூலம் வரைபடமாக தனது நூலில் விவரித்திருக்கிறார். கிழக்கில் உள்ள பிரதேசங்கள் எவ்வாறு சிங்கள குடியேற்றங்கள் மூலம் புதிய சிங்கள ஊர் பெயர்கள் அதிகரித்தன என்பது குறித்தும் விளக்குகிறார். இன்றைய சிங்கள பிரதேசங்களாக இருந்தவை பல அன்று தமிழ் பிரதேசங்களாக இருந்தவையே என்பதை ஆராயும் பலருக்கு மூலாதாரங்களை அவரின் நூலிலிருந்து ஏராளமாக கையாளலாம். புரோஹியரைக் கொண்டாடும் சிங்களத் தரப்பினர் அவர் தமிழ் பிரதேசங்கள், தமிழர் வரலாறு பற்றிய தொல்பொருள் ஆதாரங்கள்  குறித்து கூறியவற்றை மூடிமறைத்தே வருகின்றனர்.

தமிழீழ பிரதேசமாக இன்று பேசப்படும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள எல்லைகள் உருவான விதம் குறித்து விபரமாக பல தகவல்களையும் தரவுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

"கொழும்பின் முக மாற்றம்" (“Changing Face of Colombo”) என்கிற நூலில் கொழும்பின் அமைப்பு தோற்ற மாற்றம் மட்டுமின்றி, குடிப்பரம்பலிலும், பொருளாதாரம் சார்ந்த மாற்றங்களையும் கூட விபரிக்கிறார். கொழும்பில் தமிழ் பரம்பலின் உருவாக்கம் பற்றி கூறும் விபரங்கள் கூட சுவாரஸ்யமானவை. இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களின் வாழ்வாதாரம் கொழும்பின் அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி பேசுகையில் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வரவு, அரேபிய சோனகர்களின் வரவு, சிங்கள முதலியார் மாரின் இடப்பெயர்வு என்பன கொழும்பின் மைய வியாபார, வர்த்தகத் தளத்தை  மாற்றியமைத்த விதத்தையும் குறிப்பிடுகிறார். இதன் போது சாதியத்தின் பாத்திரத்தையும் ஆங்காங்கு குறிப்பிடத் தவறவில்லை அவர்.

அவரது நூல்களில் கையாளும் தரவுகள், பட்டியல்கள், அட்டவணைகள், வரைபடங்கள் என்பன அந்த ஆய்வுகளின் ஆழத்தை பறைசாட்டுபவை.

பண்டைய நீர் பாசன திட்டம் பற்றி ஆராய்ந்த அவர் 13 ஆம் நூற்றாண்டுகளிலேயே குழாய் வழியாக நீர் செலுத்தும் (hydraulic) முறை இலங்கையில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்துப்போனார். மகாவலி கங்கை நீர் மட்டம் பெருகும் காலங்களில் அவற்றை திசைதிருப்ப பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கையாண்டிருக்கிற வழிகளும் அவருக்கு வியப்பைத் தந்தது. அதன் விளைவாக அவர் மேற்கொண்ட ஆய்வையும் நூலாக வெளியிட்டார்.  அந்த ஆய்வு பற்றி வேறு பல நாடுகளும் அவரை அழைத்து விளக்க விரிவுரை நடாத்த கோரியது.

A map of the Gallefort designed by R. L. Brohier
1933இல் இலங்கையின் பண்டைய நீர்பாசன முறை பற்றி எழுதும் படி அன்றைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த டீ. எஸ்.சேனநாயக்க கோரியதன் பேரில் புரோஹியர் “The Ancient Irrigation Works of Ceylon” என்கிற நூலை எழுதினார். ஐந்தாண்டுகளில் மூன்று பாகங்களாக அவை வெளிவந்தன. அவை அரசாங்க வெளியீட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டது. அந்த நூல் இலங்கையின் நீர் வள இயல் பற்றிய “பைபிள்” என்பார்கள் அத்துறை சார்ந்தவர்கள்.

1908 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை டச்சு பறங்கியர் ஐக்கிய கழகத்தில் 1953-1955 காலப்பகுதியில் அவர் தலைவராக இருந்திருக்கிறார்.

1703 இல் வெளியான பால்டஸ் பிலிப்புஸ் (Baldaeus, Philippus) இலங்கை பற்றி டச்சு மொழியில் எழுதிய முக்கிய நூலான “மலபார், கோரமண்டலம், இலங்கை தீவு பற்றிய உண்மைத் தகவல்” என்கிற நூலை புரோஹியரின் பாட்டனார் பீட்டர் ஐசாக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த முக்கிய நூலையும் நூலாசிரியரைப் பற்றியும் நிச்சயம் பின்னர் பார்ப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆவர் ஆற்றிய மாபெரும் சேவைகளின் காரணமாக இங்கிலாந்து சாம்ராஜ்ஜியத்தின் சார்பில்  பட்டமும் விருதும் கொடுத்து கௌரவித்தது. அதுபோல ஒல்லாந்து அரசியால் அவரின் சேவைகளுக்காக பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.

இலங்கையின் வடிகாலமைப்பு, கால்வாய்கள், குளங்கள், காடுகள், நதிகள், மலைகள் பற்றிய அவரது ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மகத்தானவை. வடக்கில் உள்ள பல குளங்கள் கி.மு.வுக்கு முற்பட்டது என்கிற அவரின் தகவல்கள் மேலும் பல ஆய்வுகளுக்கு வழி திறந்து விட்டது.

ராஜரீக  ஆசிய கழகம் - இலங்கைக் கிளை (Journal of the CEYLON BRANCH of the Royal Asiatic society) வெளியிட்ட பல இதழ்களில் அவரின் கட்டுரை பிரசுரமானது. ஆய்வாளர்களையும் புத்திஜீவிகளையும் கொண்ட அந்த கழகத்தின் ஆயுட்கால உறுப்பினர் மாத்திரமல்ல, முதல் பறங்கி இனத் தலைவராக புரோஹியர் இயங்கியிருக்கிறார். அவர் தலைவராக இயங்கிய காலத்தில் 1795-1800 காலப்பகுதியைச் சேர்ந்த இலங்கை பற்றிய அறிக்கைகளையும், ஆவணங்களையும் சென்னை (எக்மோர்) ஆவணப் பாதுகாப்பகத்திலிருந்து எடுத்து வந்து அதனை கால வரிசைப்படுத்தி தொகுத்து ஆவணப்படுத்தினார். ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயர்களிடம் கைமாறிய ஆட்சியதிகாரம் பற்றிய முக்கிய ஆவணங்கள் அவை.  “Chronological Catalogue of Letters and Reports on Ceylon Affairs” என்கிற தலைப்பில் புரோஹியர் பெருங் கட்டுரையொன்றையும் வெளியிட்டார். கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா எழுதிய “பிரித்தானிய ஆக்கிரமிப்பின் கீழ் இலங்கை” (Ceylon under the British Occupation) என்கிற நூலில் இந்த ஆவணங்களை அதிகம் கையாண்டிருக்கிறார்.

புரோஹியரின் மூன்று பிள்ளைகளும் இலங்கையில் பிறந்தவர்கள். அவரது மகள் யிவேத்த ஹெர்மன் கற்று மருத்துவராக சேவையாற்றி வந்த வேளை 1956இல் இலங்கையின் சிங்கள மட்டும் சட்டத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி நியூ சீலாந்தில் குடியேறிவிட்டார் (இப்போது அவருக்கு வயது 98). ஒரு மகன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார். கடைசி மகள் டெலோரின் புரோஹியர் (Ms. Deloraine Brohier) இன்னமும் இலங்கையில் தான் வாழ்ந்து வருகிறார். அவரும் சில ஆய்வு நூல்களை வெளியீடுகளுக்கு சொந்தக்காரி.  இலங்கையில் பல பதவிகளை வகித்தவர். நெதர்லாந்தின் அரச வம்சத்து உயரிய விருதொன்று கூட அவருக்கு வழங்கப்பட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தின் விளைவாக தமிழர்களை விட பாரபட்சத்துக்கு உள்ளான சமூகம் பறங்கியர் சமூகம் தான் என்றால் மிகையில்லை என்றே கூறலாம்.
“சிங்களம் மட்டும் சட்டம் வந்த போது நான் மருத்துவராக கடமையாற்றிக்கொண்டிருந்தேன். சுகாதார திணைக்களம் எனது பணிகளுக்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்தது. சகலவற்றையும் இரு வழிகளிலும் மொழிபெயர்த்த பின்னர்தான் நான் கையெழுத்திட வேண்டி வந்தது. காலப்போக்கில் இது அசௌகரியமாக இருந்தது. ஆங்கிலச் சூழலில் பணிபுரிவது தான் உசிதம் என்று முடிவுக்கு வந்தோம். அதன் படி கணவருடன் நியுசீலாந்துக்கு இடம்பெயர்ந்தோம்.”
பறங்கி வம்சாவளியைச் சேர்ந்தவரான புரோஹியர் தான் பிறந்த இலங்கை மண்ணை அதிகம் நேசித்தார். தனது வாழ்நாளுக்குள் அவர்  இலங்கையர்களின் எதிர்காலத்துக்காக ஆற்றிவிட்டுச் சென்ற பணிகள் மகத்தானது.

இலங்கையின் பண்டைய கால வாழ்க்கை முறை, பண்பாட்டுமுறை என்பவற்றை அவர் சார்ந்த துறையின் வழியாக ஆழ்ந்தாய்ந்து நமக்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு வழி காட்டியவர் புரோஹியர்.

14.02.1980 இல் தனது 88 வது வயதில்புரோஹியர் காலமானார். 1987 ஆம் ஆண்டு அவரின் நினைவாக இலங்கை அரசு அவரின் முகம் பதித்த முத்திரையை வெளியிட்டது.

கீழே அவர் எழுதிய நூல்களின் பட்டியல் உண்டு. அவர் எழுதியா பல நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு ஆங்கில வெளியீடுகளில் உள்ளன.


  1. The golden age of military adventure in Ceylon : an account of the Uva rebellion 1817-1818 in 1933
  2. The Ancient Irrigation Works of Ceylon in three parts (1934/35), which was reprinted in 1949 and 1979.
  3. De Wolvendaalsche Kerk in 1938 and reprinted in 1938 and 1957.
  4. History of Irrigation and Colonisation in Ceylon in 1941.
  5. Lands Maps and Surveys Vol I and Vol II in 1951.
  6. The Gal Oya Valley Project in Ceylon in 1951.
  7. Seeing Ceylon in 1965 reprinted in 1971 and reprinted in 1981.
  8. Furniture in Dutch Ceylon in 1969 and reprinted in 1978.
  9. Discovering Ceylon in 1973 and reprinted in 1982.
  10. Food and the People in 1975
  11. Links between Sri Lanka and the Netherlands in 1978
  12. Changing Face of Colombo in 1984 (Posthumously)
  13. The Golden Plains in 1992 (Posthumously)
நன்றி - வீரகேசரி - சங்கமம்


"இலங்கையைக் காணல்" நூலை pdf வடிவில் இணைத்திருக்கிறேன்.
முழுமையாக வாசிக்க முடியும்.

Seeing Ceylon - Brohier R. L by SarawananNadarasa on Scribd
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates