எனது தந்தையின் இழப்பு நிகழ்ந்து 15 ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியாது இருக்கிறது. அந்த நினைவுகள் தினசரி என்னை அரித்துக்கொண்டிருக்கிறது. எனது தினசரி கனவுகளில் அவர் பல பாத்திரங்களில் வந்து போகிறார் என்றால் அவர் எத்தனை தூரம் உயிருடனும், உணர்வுடனும் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பதை அறியலாம்.
ஒஸ்லோ வீதிகளில் நடைபாதைகளில் அவருடன் நான் உரையாடிப்போவதைக் கண்டு எத்தனை பேர் எனக்கு பித்து பேதலித்துவிட்டது என்று இதுவரை நினைத்தார்களோ தெரியாது. ஆனாலும் அவர் என்னுடன் பயணித்துக்கொண்டே இருக்கிறார். தினசரி கனவுகளில் தவறாமல் ஒரு பாத்திரமாக வந்து போவதைப் பற்றி அம்மாவுடன் நிறைய பகிர்ந்திருக்கிறேன். அம்மாவும் "தீபாவளி வருகிறது தானே... அவரது நினைவு நாள் வருகிறது தானே... அவர் நிச்சயம் வருவார்" என்பது போன்ற காரணங்களைக் கூறி ஆறுதல் கூறிவார் அம்மா. சமீபகாலமாக அவர் இல்லாத தனிமையை அதிகமாகவே உணர்கிறேன்.
ஒரு தந்தையின் இழப்பின் கொடூர மனச் சித்திரவதை அனுபவித்தவன் நான், அனுபவித்து வருபவன்.
எனது தந்தையின் இழப்பின் போது அவரது 31 வது நினைவு நாளை ஒரு மதச் சடங்காக நடத்தவில்லை. பல்வேறு நிர்பந்தங்கள் இருந்தாலும் கூட நாங்கள் அந்த நாளை குடும்ப உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு நாளாகவே வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். வழமையான சமய கல்வெட்டாக வெளியிடப்படும் சிறு நூலைக் கூட சகலவித சமய உள்ளடக்கங்களையும் தவிர்த்துவிட்டு ஒரு பயன்மிக்க நினைவு நூலை உருவாக்கினோம். பல தோழர்கள் கூட அதில் எழுதியிருந்தார்கள்.
நினைவுகள் பசுமையானவை, சுவையானவை. அது போல அவை கொடுமையானவையும் சில வேளைகளில் அவலமானவையும் கூட அதன் உட்கிடக்கையைப் பொறுத்து உணர்ச்சிபூர்வமாக வினையாற்றக்கூடியவை. நினைவுகளின் பாதிப்பு என்பது காலம் செல்ல செல்ல இழப்புகளின் வலியாகவும் கண்டிருக்கிறோம், பெற்றவற்றின் பசுமையாகவும் கூட கண்டு கடந்து வந்திருக்கிறோம். நினைவுகள் அனைவரதும் வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக இருக்கிறது. அனைவரதும் வாழ்க்கையில் பிரிக்க முடியாத பதிவுகள் அவை.
நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
நினைவுகள் யதார்த்தமானவை. உண்மையானவை. கடந்த போனவற்றை பதிவுகளாக எம்முன் கொண்டு வந்து சேர்ப்பிப்பவை. உணர்வுகளோடு புரண்டெழுபவை. கனவுகளோ புனைவானது. மாயையானது. போலியானது. அவை உண்மையாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
நமது மனப்பதிவுகள் அனைத்தும் பசுமையானவை என்றில்லை. அப்பதிவுகளைத் தாங்கிய அந் நினைவுகளுக்கு வெவ்வேறு பரிமாணங்கள் உள்ளன. அது வளர்த்தெடுத்து வந்த பரிணாமத்தைப் பொறுத்தது அது.
நினைவுகள் ஒவ்வொரு மானுட ஜீவிக்குள்ளும் உறைந்து கிடப்பவை. ஆனால் உறங்காதவை உயிர்ப்புள்ளவை.
போரினால் சிதைவுற்றிருக்கின்ற நமது தமிழ் சமூகத்துக்கு பல இழப்புகளையும் கடந்து அவ் இழப்புகளும் துயரமும் அவலமும் மிக்க மனப்பதிவுகளையும் ஊடறுத்து அதனிடையில் தெரிகின்ற பசுமையான நினைவுகளையும் உள்ளத்தில் எற்றிருக்கவே செய்கிறது. சிலிர்க்கச் செய்யும் நினைவுகளாகவும் இருக்கத் தான் செய்கிறது. அந்த பசுமைகளின் இழப்புகள் குறித்த நினைவுகள் பெரும் ஏக்கத்தை ஒருபுறமும் இழந்த சந்தோசங்கள் குறித்த விரக்தி கலந்த தவிப்புகள் இன்னொரு புறமுமாக பெரும் துயரத்தையும் தந்துகொண்டிருக்கும்.
ஒன்றை இழக்கின்ற போது அல்லது பிரிகின்ற போது அவற்றுடனான முன்னைய அனுபவங்கள் நினைவுகளாக எஞ்சுகின்றன.
நினைவுக்கு கொண்டு வரும் காரணிகள் பல இருக்கின்றன நபர்கள், இடங்கள். இசை, மணம், காலநிலை போன்றனவும் அப்பேற்பட்ட நினைவூட்டலை ஏற்படுத்த வல்லவை.
சில நேரங்களில் சில மனிதர்கள் நமக்கு குறிப்பான நினைவுகளை ஏற்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். சில மணங்களானது; அதற்கு முன்னர் அப்படி மணம் நுகர்ந்த போது நிகழ்ந்த நிகழ்வு குறித்த மனப்பதிவை நினைவுக்கு கொண்டு வருவதை நாம் உணர்ந்திருப்போம். சில இசை அல்லது பாடல்கள். பாடல் வரிகள் அல்லது ராகம் குறிப்பான பசுமையான அல்லது சோகமான நினைவுகளுக்கும் கொண்டு செல்லக்கூடும். சில வகை காலநிலை மழை, இடி மின்னல், முகில் இருள். மந்தம் என்பன கூட இப்படியான நினைவுகளை ஏற்படுத்த வல்லவை. சில இடங்கள். அல்லது மண்,இதே பாத்திரத்தை ஆற்றும்.
நாம் கடக்கும் பல்வேறு பருவங்களும் பருவ கால பண்புகளும் பருவ கால வாழ்க்கை முறைகளும் நமக்கு நிறைய நினைவுகளை சொல்லும். ஒடித்திரிந்த காலம், பள்ளிக்காலம் தமது காதல் பருவ காவம். நண்பர்களுடன் கூடித்திரிந்த காலம் என்பன நம்மனைவருக்கும் நெஞ்சை விட்டகலா பசுமைகள். வயது கடந்த நிலையில் பலரின் எஞ்சிய காலத்தை அவர்களின் நினைவுகளே வாழச் செய்யும். தமது நினைவுகளை ஏனையோருடன் பகிர்ந்துகொள்வதில் அலாதியான சந்தோசத்தையும் ஆனந்தத்தையும் அடைவார்கள். அந் நினைவுகளை பகிர்ந்து கொள்ள கிடைக்கின்ற நபர்களில் அதிக விருப்பம் கொள்வார்கள்.
தேசப் பிரச்சினையின் விளைவாகவும். யுத்தத்தின் காரணமாகவும் இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்த அனைவருக்கும் தமது மண் குறித்தும் மண்ணின் வாசனை குறித்தும், சுற்றம், சூழல், அவர் தம் நினைவுகள் என அனைத்தும் பசுமையாகவே நிற்கும்.
தாயகத்திலிருந்து பிடுங்கப்பட்டு இத்தனை வருடங்களின் பின் அவர்களுக்கு எஞ்சியிருப்பது அந்த நினைவுகள் மாத்திரம் தான். உருக்குலைந்து போன ஊரும் உறவும் கண்டிருக்கிற புதிய கோலத்தை மனம் ஏற்றுகொள்ள மறுக்கின்ற துயரகரமாக தொடர்ந்து இருக்கும். பழைய ஊர் தமக்கு கிடைக்காதா பழைய பருவம் திரும்ப வாராதா? பழையவர்கள் உயிர்க்க மாட்டார்களா? பழைய குதூகலம் வந்து சேராதா? என ஏங்கும் நம்மவர்கள் எங்கில்லை?
ஒரு வகையில் எஞ்சிய வாழ்க்கையின் மீதான பற்றை இந்த நினைவுகள் தான் தாங்கிக் கொண்டிருக்கும். எஞ்சிய வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே இதில் தான் தங்கியிருக்கும். எண்ணிக்கையில் சிறிய அளவே இதற்கு மாறான நிலைமை இருக்கும்.
இப்படியாக ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுகின்ற போது அந் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு அந்த நினைவுகளும் கடத்தப்படுகின்றன. ஆனால் நினைவுகள் சந்ததிக்கு சந்ததி கடத்தப்பட முடியாவை. நினைவுகள் அத்தனை உயிர்ப்புள்ளவை உணர்வு பூர்வமானவை. அத்தனை அனுபவபூர்வமானவை.
ஓயா நினைவுகள்_அலையலையாய் களஞ்சியமாக இருப்பு கொண்டிருப்பவை. சமயத்தில் வெளிவந்து வலிமையையும் ஏற்படுத்தும். சிலவேளைகளில் வலியையும் ஏற்படுத்தும்.
அவரவர் தான் வாழும் வாழ்வின் மீதான பிடிப்பு மற்றும் பிரக்ஞையைப் பொறுத்து பண்பிலும் அளவிலும் நினைவுகளின் மீதான ஐக்கியமாதல் வேறுபடும்.
சிலர் அந் நினைவுகளுடன் சங்கமிப்பர். சிலர் அந்நினைவுகளிலிருந்து மீள வழி தேடுவர். சிலர் தன்னாலேயே சிரிப்பார். சிலர் தமக்குள்ளேயே அழுவர். சிலர் நினைவுகளால் ஆத்திர படபடப்புக்குள்ளாவர். இப்படி தனிமையிலேயே உணர்வு மேலிட ஐம் புலன்களும் தனக்குள் கதை பேசிக்கொள்ளும்.
நினைவுகள் ஒருவர் தான் கொண்டுள்ள ஆளுமை பிரக்ஞை உளப்பலம் என்பவற்றின் பண்பு. அளவு என்பனவற்றைப் பொறுத்து மனநோயாளியும் ஆகலாம். சிறந்த மனதிடம் கொண்ட போராளியும் ஆகலாம்.
நமது மரபில் “நினைவு கூருதல்” அல்லது “நினைவு கொள்ளல்” என்பதானது பண்பாட்டினதும், சமூக அமைப்பினதும் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. நமது கல்வி முறையில் மனனம் செய்யக்கோரும் நடைமுறை வழக்கில் உண்டு. புராணங்களைப் புனைந்து வழிவழியாக கடத்தி அதனை உண்மையாக நிறுவுவதிலும் நினைவு பங்காற்றுகின்றன. அது போல சமயச் சடங்குகளாகவும். மதம் சார்ந்த நாளாகவும் நினைவுகள் திகழ்கின்றன. சிறு தெய்வ வழிபாடு உள்ள சமூகங்களில் அவை ஒரு நினைவு நாள் எனும் சாராம்சத்தையே அதன் பின்புலமாக கொண்டிருப்பதை காணலாம்.
அனைத்துக்கும் மேல் இன்றைய தேசப் போராட்டம் பல இழப்புகளையும் சந்தித்துவிட்டுள்ள ஒன்று பலரது அர்ப்பணிப்புகள். தியாகங்கள் நிறைந்த வீரமிக்க போராட்டத்தில் நினைவுகள் என்பதானது மகத்தான பங்கை ஆற்றுகிறது.
அவை ஒரு அடக்குமுறையின் கொடுமையை நினைவூட்டுவதாகவும். அதற்கான வீரஞ்செறிந்த மரணங்களையும், மக்களதும், தேசத்தின் சொத்துக்களையும் சின்னங்களையும், குறியீடுகளையும் கூட நினைவு நாட்களாகவும். நினைவுக்குரியவர்களாகவும் நினைவுச் சின்னங்களாகவும். நினைவுப் பொருட்களாகவும் கொள்கின்ற ஒரு தன்மையை காண்கிறோம்.
இப்படியாக “நினைவு" என்பதானது சமூகத்திலும் தனி நபர்களிலும் ஏற்படுத்தும் தாக்கமும் ஆற்றும் பாத்திரமும்ம் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல. அந்த வகையில் நமக்கெல்லாம் இழப்புகள் சொல்லும் கதைகள் ஏராளம் இழப்புகளினால் நொந்து நொடிந்து போகிற போது அதன் மீது நினைவுகள் ஒரு எதிர்மறையான பத்திரத்தை ஆற்றுகின்றன. அதுவே மீளவும் எழுவதற்கு ஊக்கியாக இருக்கக்கூடியவையாக இருப்பின் அது நேர்மறையாக பாத்திரத்தை ஆற்றுகிறது. இழப்புகளோடு சேர்ந்து வரும் நினைவுகள் கொடுமையானவை. அது உன்னதமானது அல்ல. அது வேதனையும் விரக்தியும், சோகமும், அவலமும், துயரமும் நிறைந்த கொடுமை.
கடந்தவற்றையும், இழந்தவற்றையும், முடிந்தவற்றையும், முடியாமல் போனவற்றையும், பசுமையான எச்சங்களையும் உணர்ச்சிபூர்வமாக அணுகுவது யதார்த்தமானது. இந்த நினைவுகளை வெற்றிகரமான திசையில் நேர்மறையாக எடுத்தாள்பவர்களே வெற்றிபெறக்கூடியவர்கள்.
ஆக, நினைவுகள் அழிவதில்லை.
"நினைவுகள் அழிவதில்லை" நினைவு நூலில் இருந்து.
"நினைவுகள் அழிவதில்லை" நினைவு நூலில் இருந்து.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...