Headlines News :
முகப்பு » , , , , » ஹென்றி மார்ஷல் : கண்டி வீழ்ச்சியின் சாட்சி! என்.சரவணன்

ஹென்றி மார்ஷல் : கண்டி வீழ்ச்சியின் சாட்சி! என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” - 5


இலங்கையின் புராதன வரலாற்றை இலங்கையர்கள் அல்லோதோர் எழுதியதையே இன்றும் நமது முக்கிய மூலங்களாக பயன்படுத்தி வருகிறோம். இப்படி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பின்புலங்களுடன் அவர்கள் எழுதி வைத்த காலத்தில் இலங்கையர்கள் அந்தளவு ஆளுமையை பெற்றிருக்கவும் இல்லை. அதற்கான தேவைகளை உணர்ந்தவர்களுமாக இருக்கவில்லை என்றே அறிய முடிகிறது. இந்த வரிசையில் ஹென்றி மார்ஷல் (Marshall, Henry, M.D. 1776–1851) பற்றிய குறிப்புகளை இம்முறை தொகுத்திருக்கிறேன்.

170 வருடங்களுக்கு முன் மார்ஷல் எழுதிய “இலங்கை : தீவும் அம் மக்களையும் பற்றிய விபரங்கள்” (Henry Marshall’s Ceylon, A General Description of the Island and its Inhabitants (1846)) என்கிற நூல் முக்கிய பல அறிய சுவாரசியமான தகவல்களைத் தந்தது.

இலங்கை முழுமையாக இலங்கையர் கையை விட்டு நழுவியது 1815 இல். இந்த காலப்பகுதியில்  என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களுக்காக இரண்டு பேரின் நூல்களையே அதிகம் நாடுவது வழக்கம். அதில் ஒன்று ஜோன் டோய்லியின் நாட்குறிப்பு (Diary of Mr. John D'Oyly) இரண்டாவது ஹென்றி மார்ஷலின் மேற்படி நூல்.

ஹென்றி மார்ஷல் ஒரு தலை சிறந்த ஆங்கில வைத்தியர் என்று மட்டும் தான் பலர் அறிந்து வைத்திருப்பார்கள். கண்டி ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவதற்கான போரில் படையிலும் அவர் இருந்திருக்கிறார் என்பது தான் அதைவிட முக்கியமான தகவல். கூடவே அவர் இராணுவ வைத்தியசாலையின் பிரதி அதிபராக இருந்திருக்கிறார்.

1808 இல் இலங்கைக்கு வந்த அவர் 1814 கண்டி ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவதற்காக அமைக்கப்பட்ட முதலாவது படைப்பிரிவில் பணியாற்றினார். அதன் பின்னர் 1816 -1821 வரையான காலப்பகுதியில் அவர் வைத்தியத் துறையில் பணியாற்றினார். இந்த காலப்பகுதி இலங்கையின் வரலாற்றில் முக்கியமான காலப்பகுதி.

கண்டி ராஜ்ஜியம் 1815 இல் வீழ்ந்ததும், 1818 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட இந்த காலப்பகுதியில் தான் மார்ஷல் கடமையாற்றியிருக்கிறார். கூடவே 1818 கிளர்ச்சி பற்றிய விசாரணையில் முக்கிய சாட்சி அவர். இந்தக் கிளர்ச்சியின் போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்த தகவலையும் அவர் தருகிறார். கிராமங்ககளைக் கடந்து சென்ற படையினர் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிக்கொண்டு முன்னேறியதை விமர்சிக்கவும் செய்கிறார். கண்டி வெற்றி பற்றி எழுதிய முதலாவது ஆங்கிலேயர் அவராகத் தான் இருக்கும்.

25.11.1818 அன்று கெப்பட்டிபொல மற்றும் மடுகல்லே ஆகியோரின் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றிய வேளை அதனை நேரில் கண்டு அறிக்கை எழுதியவர் ஹென்றி மார்ஷல். அந்த நூலில் கெப்பட்டிபொல பற்றி குறிப்பிட்டிருந்த விபரங்கள்  இன்று வரை சிங்களத் தரப்புக்கு முக்கியமானவை.  கெப்பட்டிபொலவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பல தடவை சிறைக்குச் சென்று சந்தித்து உரையாடியிருக்கிறார். அதற்கு முன்னர் கெப்பட்டிபொல நிலமே எஹெலபொலவின் மாளிகையில் தங்கியிருந்த வேளைகளிலும் மார்ஷல் சென்று சந்தித்து இருக்கிறார். ஐரோப்பியர்களை சந்தித்து அவர்களை உபசரிப்பதில் மகிழ்ச்சியடைபவர் கெப்பட்டிபொல என்றும் ஹென்றி மார்ஷல் குறிப்பிடுகிறார்.

கெப்பட்டிபொல வீரத்துடன் தன் மரணதண்டையை எதிர்கொண்டார் என்று வீரப்பராக்கிரமத்தனமான புனைவுகளே இன்றைய சிங்கள வரலாறு முழுதும் கூறுகின்றன. ஆனால் ஹென்றி மார்ஷல் தனது நூலில் (277 வது பக்கத்திலிருந்து) கெப்பட்டிபொல தனக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்து நாடு கடத்தும்படி பலமுறை கெஞ்சியதாக குறிப்பிடுகிறார். மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அந்த இறுதிக் காட்சிகளை தனியான அத்தியாயமாக அவர் எழுதியிக்கிறார். இந்த கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டவர்களில் எஹெலபொல உள்ளிட்ட பலர் மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டு மொரிசியஸ் தீவுக்கு நாடுகடத்தப்பட்டு அங்கேயே அவர்கள் அனைவரும் இறந்து போனது பற்றிய  தகவலை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அவரது நூலில் கண்டி ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவதற்காக நடந்த போர் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. அப்போர் பற்றி ஏராளமானோர் எழுதியிருக்கிற போதும் ஹென்றி மார்ஷல் அப்போரின் நேரடி சாட்சி என்பதால் அவரது தகவல்கள் கவனத்துக்கு உரியவை. 334 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் உள்ளடக்கத்தை ஒரு நாட் குறிப்பு போன்று காலவரிசையுடன் கோர்த்து எழுதியிருப்பது அந்த நூலின் சிறப்பு.

இலங்கை பற்றி அவர் எழுதிய நூலில் “அரசரை பதவியிலிருந்து வீழ்த்த உதவி செய்த நீங்கள் மலைநாட்டை விட்டு வெளியேறுவது எப்போது” என்று ஆங்கிலேயர்களை நோக்கி மக்கள் கேட்ட வண்ணம் இருந்தார்கள் என்று அவரது நூலில் குறிப்பிடுகிறார். மக்களின் மனங்களை வென்றெடுக்க ஆங்கிலேயர்கள் தவறியிருந்தார்கள் என்றும் அவரது நூலில் குறிப்பிடுகிறார்.

கண்டி மாவட்ட திறைசேரி ஆணையாளர் சாவேர்ஸ் (Simon Sawers – பிற்காலத்தில் நீதித்துறை ஆணையாளராக 1927 வரை கடமையாற்றியவர்) கெப்பட்டிபொல “திசாவ” யாக இருந்த போதுஅரசாங்க அதிபராக இருந்திருக்கிறார். எனவே அவர்களுக்கு இடையில் சிறந்த நட்புறவும் இருந்திருக்கிறது. 

கெப்பட்டிபொலவின் மரண தண்டனை சாவேர்சின் தலைமையில் தான் நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றும் இடத்துக்கு சாவேர்ஸ்சை கெப்பட்டிபொல அழைத்தபோதும் சாவேர்ஸ் மிகவும் உருக்கமாக மறுத்துவிட்டதாக ஹென்றி மார்ஷல் குறிப்பிடுகிறார். துண்டிக்கப்பட்ட கெப்பட்டிபொலவின் உடலை இரகசியமான இடத்தில் புதைத்து விட்டபோதும் தலையைத் தனியாக பத்திரமாக பிரித்தானியாவுக்கு எடுத்துச் சென்று எடின்பேர்க் மியூசியத்திடம் பரிசோதனைக்காக கையளித்தவர் ஹென்றி மார்ஷல். இந்த மண்டையோடு 1954இல் கெப்பட்டிபொலவின் குடும்பத்தினரால் இலங்கைக்கு திருப்பி கொணரப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் பின்னர் தலதா மாளிகையின் முன் நினைவுத் தூபியின் அடியில் புதைக்கப்பட்டது. கெப்பட்டிபொலவின் கைதுக்கு முன் அன்றைய ஆளுநர் சேர் ரோபர்ட் ப்ரவுன்றிக் கெப்பட்டிபொலவின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு 2000 பொற்காசுகள் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

13ஆம் நூற்றாண்டில் மன்னர் 1ஆம் எட்வர்டுக்கு எதிராக போராடிய ஸ்கொட்லாந்து கெரில்லா வீரர் வில்லியம் வெல்லஸ் என்பவருக்கு நிகரான போராளி கெப்பட்டிபொல என்கிறார் ஹென்றி.

1921 இல் இலங்கையை விட்டுச் சென்றதன் பின்னர் 30 ஆண்டுகாலம் மருத்துவத் துறையில் வேறுநாடுகளில் பணியாற்றினார். இந்த இடைக்காலத்தில் அவர் பல்வேறு நூல்களை எழுதினார். 05.05.1851 இல் கடுமையான நோயினால் இறந்துபோனார்.

இலங்கை பற்றி அவர் எழுதிய முக்கிய நூல்கள் இவை:
  1. ‘Notes on the Medical Topography of the Interior of Ceylon,’ London, 1821
  2. Ceylon: A General Description of the Island and its Inhabitants, With an Historical Sketch of the Conquest of the Colony by the English,’ London, 1846
  3. Contribution to a natural and economical history of the coco-nut tree, Henry Marshall, 1836
நன்றி - வீரகேசரி - சங்கமம்

“இலங்கை : தீவும் அம் மக்களையும் பற்றிய விபரங்கள்” (Henry Marshall’s Ceylon, A General Description of the Island and its Inhabitants (1846)) என்கிற நூலை உங்கள் பார்வைக்காக இங்கு இணைத்திருக்கிறேன்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates