“அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசக்கூடியவர்கள். தந்திரமும் வஞ்சகமுமுடையவர்கள். அவர்கள் பவ்வியமாகப் பேசுவதைப் பார்த்து அவர்களை சரியாக அறியாதவர்கள் எளிதில் விழுந்துவிடுவார்கள். பொய் கூறுவதும் அதை மற்றவர் அறிந்துகொள்வார்களே என்று பொறுப்பற்று இருப்பதில் மனசாட்சியோ, வெட்கமோ கிடையாது...”
350 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்களைப் பற்றி இப்படி கூறியவர் ரொபர்ட் நொக்ஸ். இலங்கையைப் பற்றி முதலில் வெளிவந்த ஆங்கில நூலில் அவர் அப்படித் தான் குறிப்பிட்டிருந்தார். An Historical Relation of the Island of Ceylon by Robert Knox – 1681)
நொக்ஸ் பொத்தம் பொதுவாக இப்படி கூறியது சிங்கள மக்களையே. இது சிங்கள மக்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ. சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியே வந்திருக்கிறது. அந்த வரலாற்றைத் தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையின் வரலாற்றில் சிங்கள தரப்பு எப்போதெல்லாம் நெருக்கடிகளை எதிர்நோக்குக்கின்றனவோ அப்போது மட்டும் தான் பேச்சுவார்த்தைகளையும், சமர முயற்சிகளையும், வாக்குறுதிகளையும் மேற்கொள்ள முன்வந்திருக்கிறது. சிங்களத் தரப்புக்கு அந்த நெருக்கடிகள் எப்போதெல்லாம் தணிகிறதோ அப்போதெல்லாம் தமிழர்களை பொத்தென்று கைவிட்டிருக்கிறது. ஒரு போதும் தாமாக நீதி வழங்க முன்வந்ததில்லை.
“நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறனுமின்றி - வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்சொல்லில் வீரரடி” என்ற பாரதியின் பாடலை அப்படியே நினைவுக்கு கொண்டு வரும்; வரலாறு முழுதும் தரப்பட்ட வாக்குறுதிகள்.
1950களின் இறுதிப் பகுதியிலும் 1960 களிலும் மொழியுரிமையே போராட்ட களங்களில் பிரதான கோரிக்கையாக இருந்து வந்தன. பிரதான – நீண்டகால பிரச்சினையை குறுங்கால - சமகால பிரச்சினைக்குள் சுருக்கி கவனப்புள்ளியை அதில் தொக்க வைத்ததில் சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு புறம் வெற்றி கண்டே வந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. சமகாலம் வரை அதற்கான உதாரணங்களைக் காணலாம். இந்த ஒப்பந்தங்களைப் புரிந்துகொள்வதற்கு அந்தந்த காலத்து அரசியல் நிலைமைகளையும், அடக்குமுறைகளையும் சுருக்கமான சம்பவங்களாக விளங்கிக் கொள்வதன் பொருட்டு சிலவற்றைப் பார்ப்போம்.
1960கள் அகிம்சாவழி சத்தியாக்கிரகப் போராட்டங்களாலும், அடக்குமுறைகளாலும் நிறைந்தது. 1961இன் ஆரம்பத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டம் தீவிரம் பெற்ற நிலையில் 04.04.1961 அன்று நான்கு மணித்தியாலங்களாக ஆராய்ந்த மந்திரிசபை அவசரகாலசட்டத்தைப் பிரகடனபடுத்தி, தமிழரசுக் கட்சித் தலைவர்களை தடுப்புக்காவலில் வைக்க வேண்டும் என்று பீலிக்ஸ் ஆர்.டயஸ் பண்டாரநாயக்க வலியுறுத்தினார். அதற்கு முன்னர் ஒரு பேசித் தீர்ப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த அழைப்பு குறித்து செல்வநாயகத்திடம் தெரிவித்த நிலையில் அதுகுறித்து அவர் ஏனைய தலைவர்களுடனும் கலந்தாலோசித்தார். இந்த பேச்சு வார்த்தைக்கு கட்சியில் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் அவர்..
“பேச்சுவார்த்தைக்கு எந்தச் சந்தப்பம் கிடைத்தாலும் அதைத் தவற விடலாகாது. பேச்சு வார்த்தை தோல்வியில் முடியும் என்பது தெளிவாகத் தெரியும் சந்தர்ப்பங்களிலும் கூட பேச்சுவார்த்தைக்குப் போய் அது தோல்வியில் முடிவடையவதைக் காண்பதே சிறந்தது”என்று கூறியதில் பொறுமையும், சாணக்கியமும் மாத்திரம் அல்ல நம்பிக்கைத் துரோகங்களையும் தாண்டிய எதிர்பார்ப்பு இருந்ததை கூறியாக வேண்டும்.
ரோஸ்மீட் பிளேசிலுள்ள திருச்செல்வத்தின் வீட்டில் பீ.சீ.பெர்னாண்டோவுடன் இந்த சந்திப்பு ஏற்ப்பட்டது. “சிங்களம் மட்டும்” சட்ட அமுலாக்கம் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள கஷ்டங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் ஏனையவை பின்பு பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று செல்வநாயகம் குறிப்பிட்டார். நான்கம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவை அமுல்படுத்தும்வரை சத்தியாக்கிரகமும் த்டரும் என்று அறிவித்துவிட்டார். அக்கோரிக்கைகள்.
- வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும்.
- அந்த இரு மாகாணங்களிலும் தமிழ் மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும்.
- உத்தியோக மொழிச் சட்டம் தொடர்பாக தமிழ் அரசாங்க சேவை ஊழியர்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்
- வடக்கு கிழக்கு மாகானகளுக்கு வெளியே வசிக்கும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தெளிவாக்கப்படவேண்டும்.
நான்கு மணித்தியாலங்கள் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கத்தை மந்திரிசபையில் பெர்னாண்டோ சமர்ப்பித்தார்.
மூன்று மணித்தியால ஆய்வின் பின்னர் அதை நிராகரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேச்சுவார்த்தை முடிந்ததை ஏப்ரல் 11 அன்று நல்லூர் கூட்டத்தில் அறிவித்த செல்வநாயகம் சத்தியாகிரகத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 14 ஆரம்பிக்கும் என்று அறிவித்தார்.
அதன்படி ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்டப் போராட்டத்தை தமிழரசு முத்திரையை வெளியிட்டு தொடக்கப்பட்டது. அந்த முத்திரை அரசாங்க தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பட்டது. இரண்டாவது நாளான ஏப்ரல் 15 “தமிழரசுக் காணிக் கச்சேரி”யை நடத்தினார்கள். அதன்படி முடிக்குரிய காணிகளை கொடையாகவும், குத்தகையாகவும் பகிர்ந்தளிப்பதற்கான விண்ணப்பங்களை அங்கு ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அரசாங்கம் அதுவரை காணிக்கச்சேரிகளை நடத்துவதுமில்லை. பதிலாக தமிழ் பேசும் மக்கள் காணி கோரி விண்ணப்பிப்பதில்லை என்று அரசாங்கம் கூறிவந்தது. தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து தாம் நினைத்ததை மேற்கொள்ள இந்த அணுகுமுறை அரசாங்கத்துக்கு வசதியாக இருந்துவந்தது.
எங்கள் மொழி, எங்கள் நிலம்
தபால் சேவையைக் கூட பொறுத்துக்கொண்ட அரசாங்கத்தால் நிலம் பற்றிய இந்த பிரச்சினையை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எனவே ஏப்ரல் தமிழ் பிரதேசங்களுக்கு இராணுவத்தை அனுப்பியது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிரவாகத்தை இராணுவம் பொறுப்பேற்கும் என்றும் தமிழரசுக் கட்சி தடை செய்யப்படுவதாகவும், அதன் தலைவர்கள் கைது செய்வதற்கும் மந்திரி சபைக் கூட்டம் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி 1961 ஏப்ரல் 17 அவசரகால சட்டம் அமுலுக்கு வந்தது. தமிழரசுக் கட்சியும் தடை பற்றிய வர்த்தமானிப் பத்திரிக்கை பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டது. ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் தடைசெய்யப்பட்டதுடன் பத்திரிகைத் தணிக்கையும் அறிவிக்கப்பட்டது. அக் கட்சியின் பத்திரிகையான “சுதந்திரன்” பத்திரிகையும் தடை செய்யப்பட்டு சுதந்திரன் அச்சகத்திற்கு முத்தரை வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு கேர்னல் ரிச்சர்ட் உடுகம பொறுப்பாக அனுப்பப்பட்டார்.
சத்தியாக்கிரகப் போராட்டத்திலிருந்து பின்வாங்கியபோதும் தடை செய்யப்பட தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட 68 பேர் கைது செய்யப்பட்டு பனாகொடையில் அடைக்கப்பார்கள். ஆனாலும் வேறு பக்கங்களில் கொதித்தெழுந்த இளைஞர்கள் கல்லெறிந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
தமிழ் மக்களின் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு மலையகத்திலிருந்து பெரும் ஆதரவு வழங்கப்பட்டது. தொண்டமான் நேரடியாக சென்று ஆதரவளித்ததுடன் 5 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் பூரண வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சத்தியாகிரகத்திற்கு ஆதரவு வழங்கியதால் ஏப்ரல் 24 தோட்டத் தொழிற்துறையை அத்தியாவசிய சேவையாக்கி பிரகடனம் செய்தது அரசாங்கம். தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த அதே நான்கம்சக் கோரிக்கையை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருந்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இதன் காரணமாக தோட்டப் பகுதிகளுக்கும் இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.
6 மாதங்கள் சிறையில் தடுத்துவைக்கப்பட்ட தமிழரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஒக்டோபர் 4 அன்று தான் விடுவித்தனர். செல்வநாயகத்தின் உடல்நிலை காரணமாக அவர் அதற்கு முதலே விடுவிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்காக லண்டன் அனுப்பிவைக்கப்பட்டார்.
1962 ஓகஸ்ட் 31 இலிருந்து செப்டம்பர் 2 வரை நடந்த தமிழரசுக் கட்சியின் எட்டாவது மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முக்கியமானவை. எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்று வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் பேசும் மக்களுக்கும், மலை நாட்டுத் தமிழ் மக்களுக்கும் இடையில் அமைப்பு ரீதியான ஒற்றுமையும் சமூகக் கட்டுக்கோப்பையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது.
அதன்படி ஹட்டனில் 22.12.1962 இலங்கைத் தொழிலாளர் கழகம் என்கிற பெயரில் ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான கிளைகள் பலவும் மலையகப் பகுதிகளில் உருவாக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் இனப்பற்றுள்ள சங்கங்கங்களாக வடிவமெடுத்தன.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964-10-30) |
1962இன் இறுதியில் சீனா இந்தியாவின் எல்லையோரங்களில் படையெடுத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கியபோது சிறிமா அரசாங்கம் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. சீன சார்பு கொள்கையில் இருந்தபடி அமைதிகாத்தது. அந்த வேளை சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது தமிழரசுக் கட்சி. இந்தியாவின் உண்மை நண்பர்கள் தாமென காட்டியத் தமிழ் மக்களை இந்தியா அரவணைக்கவில்லை. சிறிமாவுடன் இந்தியப் பிரதமர் சாஸ்திரி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் லட்சக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழ் மக்களை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை செய்து பேரவலத்தை ஏற்படுத்தினர். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964-10-30) கொண்டு வரப்பட்டு இந்திய வம்சாவழி மக்கள் பலாத்காரமாக நாடு கடத்தப்பட்டனர். இந்தியா எப்போதுமே தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே இருந்து வந்திருக்கிறது என்பதற்கு வரலாறு நெடுகிலும் பல உதாரங்களைத் தர முடியும் சமீபத்தேய சாட்சி முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கூறியது. இறுதி யுத்தத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவளித்த பிரதானமான நாடு இந்தியா என்று கடந்த பெப்ரவரி மாதம் பகிரங்கமாக கோத்தபாய அறிவித்திருந்ததை இந்த இடத்தில் கூறி வைப்பது தகும்.
ரி.பி.இலங்கரத்தின, பதியுதீன் முகம்மத் |
1963 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் ரி.பி.இலங்கரத்தின, பதியுதீன் முகம்மத் ஆகியோர் விஜயம் செய்தபோது அவர்களுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த பலர் போல்சாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். அந்தத் தாக்குதலில் காயமுற்ற இருதய நோயாளியான ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வெ.அ.கந்தையா படுக்கையானார். 04.06.63 அவர் இறந்துபோனார்.
சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும் தமிழ் மக்களை அரசுடனான தம் கருமங்களை தமிழில் ஆற்றத் தூண்டுவதற்குமாக “எல்லாம் தமிழ் இயக்கம்” என்கிற ஒரு இயக்கத்தைத் தொடக்கி தீவிரமாக செயற்படத் தொடங்கியது. இது ஒரு சட்ட மறுப்பியக்கமாகவும் வடிவமெடுத்து இயங்குகையில் 1964 ஜனவரி 1 தொடக்கம் தமிழ் பிரதேசங்களில் மீண்டும் தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்துவதில் மேலும் தீவிரம் காட்டப்போவதாக அரசாங்கம் அறிவித்தது. இந்த சிங்கத் திணிப்பை மறுத்து எதிர்ப்பியங்கள் பல செயற்பட்ட நிலையில் சிங்களத்தில் வேலை செய்யக்கூடிய அரசாங்க ஊழியர்களை தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பி சிங்களம் தேர்ச்சி பெற மறுத்த தமிழ் உத்தியோகத்தர்கள் பதவியிழக்கும் நிலையை ஏற்படுத்தியது. சிங்களத்தைத் திணிக்கும் பொருட்டு 2000 சிங்கள ஆசிரியர்களையும் வடக்கு கிழக்குக்கு அனுப்பியது.
தனிச் சிங்கள சட்டத்தின் மோசமான பக்கம் இது தான். தமிழ் பிரதேசங்களில் பணியாற்றுவதற்காவது சிங்கள ஊழியர்களுக்கு தமிழை சித்தியடையச் செய்து அனுப்பாமல், தமிழ் ஊழியர்களை சிங்களம் கற்க நிர்பந்திப்பதும், மறுத்தால் பதவியிலக்கச் செய்வதும் இந்த சிங்களம் மட்டும் சட்டத்தால் தான் மேற்கொள்ளப்பட்டது. இதன் பாரதூரத்தின் காரணமாகவே சிங்களமொழி மீது தமிழர்கள் வெறுப்புணர்ச்சிக்கு தள்ளப்பட்டார்கள்.
இலங்கையில் அனைத்து அரசியல் யாப்புகளையும் தமிழர்கள் நிராகரித்தும், எதிர்த்தும் வந்திருக்கிறார்கள். 1931டொனமூர் தொடங்கி, 1972, 1978 என வரிசையாகக் குறிப்பிடலாம். அதன் தொடர்ச்சி இன்னும் சில மாதங்களில் நடக்கவிருப்பதையே சமகால அரசியல் போக்கு நிரூபித்து வருகின்றன.
டட்லிக்கும் செல்வநாயகத்துக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தத்தையும் மீறலையும் அடுத்த இதழில் பார்ப்போம்.
துரோகங்கள் தொடரும்...
1918-1962 நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
08.12.1918 அருணாசலத்துக்கும் - ஜேம்ஸ் பீரிஸ், சமரவிக்கிரம ஆகியோருக்கிடையில் மேல் மாகாணத்தில் தமிழருக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதற்கு உடன்பாடு.
11.12.1919 இல் நடந்த இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கம். தலைவராக அருணாசலம் நியமனம்.
1921 தேர்தலின் போது வாக்குறுதி மீறல்
1923 இல் இலங்கை தமிழ் மக்கள் சங்கத்தை அருணாசலம் உருவாக்கி தமிழ் ஈழம் என்கிற சொல்லை முதலில் பயன்படுத்தல்.
18.06.1925 யாழ்ப்பாணத்தில் “மகேந்திரா ஒப்பந்தம்” செய்து கொள்ளப்பட்டது. ஒரு சில மாதங்களிலேயே அந்த உறுதிமொழியை இலங்கை தேசிய காங்கிரஸ் கைவிடல்.
17.01.1926 யாழ்ப்பாணத்தில் சமஸ்டியை வலியுறுத்தி பண்டாரநாயக்க உரை
1931 டொனமூர் குழு வருகையும், டொனமூர் அரசியல் யாப்பு நிறைவேற்றமும்
1944 சோல்பரி விசாரணைக் குழு வருகை
1947 தேர்தல்
02.04.1948 இலங்கைக்கு “சுதந்திரம், சிங்கக் கோடி ஏற்றல்
15.11.1948 பிரஜாவுரிமைச் சட்டம் நிறைவேற்றி பல லட்சம் மலையகமக்களை நாடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
18.12.1949 தமிழரசுக் கட்சி தோற்றம்
1950 ஜனவரி – யாழ்ப்பாணத்தில் சோல்பரிப் பிரபுவின் வருகைக்கு பகிஷ்கரிப்பு போராட்டம்
1950 பெப்ரவரி தேசியக் கொடி உருவாக்கக் குழு அமைக்கப்படல். கொடி உருவாக்கத்தில் இனப் பாரபட்சம்
12.008.1952 ஹர்த்தால்
30.10.1954 மலையகத்தவர்களை நாடுகடத்தும் நேரு-கொத்தலாவல ஒப்பந்தம்
18.02.1956 ஐ,தே.க களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரச கரும மொழி தீர்மானம்.
5,7,10 ஏப்ரல் 1956 – பொதுத் தேர்தல்
05.06.1956 தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றம், இதற்கு எதிரான சாத்வீக எதிர்ப்பை மேற்கொண்டவர்கள் மீது மோசமாக தாக்கி படுகாயப்படுத்தினர்.
06.06.1956 அம்பாறைக் கலவரமும், அவசரகால சட்டப் பிரகடமும்
11.06.1956 கல்லோயாக் கலவரமும் படுகொலைகளும். பல அழிவுகளும், 150 க்கும் மேற்பட்டோர் படுகொலை
15.06.1956 சிங்களம் மட்டும் சட்டத்தையும், அடக்குமுறையையும் எதிர்த்து தமிழரசுக் கட்சியின் திருமலை யாத்திரை
ஜன.1957 வாகன இலக்கத்தகடுகளுக்கு சிங்கள "ஸ்ரீ" புகுத்தல்.
17.01.1957 சிங்கள "ஸ்ரீ" மறுப்பியக்கம் தமிழர் பிரதேசங்களில் ஆரம்பம்.
04.02.1957 தமிழர் பிரதேசங்களில் சுதந்திர தினத்தை கறுப்பு கொடியேற்றி துக்க நாளாக அனுஷ்டித்தல். திருகோணமலையில் மணிக்கோட்டுக் கோபுரத்தில் கறுப்புக்கொடியை ஏற்றிக்கொண்டிருந்த இளைஞன் நடராஜனை பொலிஸ் சுட்டுக் கொன்றது.
26.07.1957 பண்டா - செல்வா ஒப்பந்தம்
03.10.1957 பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர்.தலைமையில் ஐ.தே.க கண்டி யாத்திரை.
மார்ச் -1958 தமிழர் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் நடத்திய சாத்வீக ஆதரவுப் போராட்டத்தில் பிரான்சிஸ், ஐயாவு ஆகிய இரு மலையகத் தொழிலாளர்களை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
08.04.1958 பிக்குமார்களின் நிர்ப்பந்தத்தினால் பண்டா- செல்வா ஒப்பந்தத்தை தனது ரோஸ்மீட் பிளேஸ் இல்லத்தின் முன் கிழித்தெறிந்தார் பிரதமர் பண்டாரநாயக்க
10.04.1958 சிங்கள “ஸ்ரீ” பொறித்த பச வண்டிகள் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படல்
22.05.1958 - மே தொடங்கிய கலவரம் யூனும் தொடர்ந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளானார்கள். 300 க்கும் மேற்பட்டோர் கொள்ளப்பட்டு பலர் சொத்துக்களை இழந்தார்கள்.
05.06.1958 பழியை தமிழரசுக் கட்சியினர் மீது சுமத்திய அரசு அதன் தலைவர்கள் பலரை கைது செய்தது.
03.09.1958 இவற்றை சமாளிக்க கண்துடைப்புக்காக தமிழ்மொழி உபயோகச் சட்டம் கொணர்தல்
25.09.1959 பண்டாரநாயக்க சுட்டுக் கொலைசெய்யப்படல்
19.03.1960 பொதுத் தேர்தல்.
22.04.1960 தமிழரசுக் கட்சியுடன் கண்ட உடன்பாட்டின் அடிப்படையில் சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஐதேக. சிம்மாசனப் பிரசங்கத்தில் தோற்கடிக்கப்பட்டதால் ஜூலை தேர்தலுக்கு வித்திட்டது.
20.07.1960 பொதுத் தேர்தல் சுந்தந்திரக் கட்சி வென்றது. வென்றதும் தமியால்றசுக் கட்சியுடனான உடன்பாடுகளை கைவிட்டது.
15.04.1961 - தமிழரசுக் கட்சி "தமிழரசு முத்திரை"யை வெளியிடல்
15.04.1961 தமிழரசுக் கட்சி "காணிக் கச்சேரி"யை நடத்தி விண்ணப்பங்கள் கோரல்
17.04.1961 அவசர கால சட்டம் அமுல். இராணுவம் அனுப்பப்படல். "சுதந்திரன்" பத்திரிக்கை தடை, தணிக்கை அமுல், 68 தமிழ் தலைவர்கள் கைது.
24.04.1961 மலையகத் தமிழர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆதரவளித்ததால் தோட்டத் தொழிற்துறை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்.
22.12.1962 மலையகத்தில் "இலங்கைத் தொழிலாளர் கழகம்" ஆரம்பம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...