(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 7)
வட்டுக்கோட்டைத் தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மானம் தொடர்பாக கடந்தவாரம் பேசியிருந்தோம். 70களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை வன்னி பெருநிலப்பரப்பில் குடியேற்றும் திட்டமிட்ட செயற்பாடு இடம்பெற்றது. ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா செல்வதா? இன வன்முறைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வன்னி பெரு நிலப்பரப்பில் இலங்கைத் தமிழர்களுடன் பாதுகாப்பாக சென்று வாழ்வதா? அல்லது எது நடந்தாலும் பரவாயில்லை மலையகத்திலேயே வாழ்வதா? எனும் தீர்மானங்களில் ஏதாவது ஒன்றை மலையகத் தமிழ் மக்கள் எடுத்தாக வேண்டும் என்ற நிலையிலேயே 'ஹட்டன் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னியில் இருந்து வருகை தந்த குழுவினர் ஆங்காங்கு மலையக தமிழ் மக்களிடம் உரையாடி வன்னி நோக்கி அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். டேவிட் ஐயா, சந்ததியார், டொக்டர் ராஜசுந்தரம் போன்றவர்கள் காந்திய இயக்கம் எனும் இயக்கத்தின் ஊடாக இந்த செயற்பாட்டினை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த குடிபெயர்வின் ஆபத்தினை எதிர்கொண்ட அப்போதைய மலையக இளைஞர்கள் இந்த வன்னி நோக்கிய நகர்வுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். இதன் விளைவாக வன்னிதரப்பில் சந்தததியார் டொக்டர் ராஜசுந்தரம் மற்றும் மலையக தரப்பில் பி.ஏ.காதர் ஆகியோருக்கு இடையில் இது தொடர்பாக ஒரு விவாதமே கூட ஏற்பாடாகியிருக்கின்றது. போக்குவரத்து தடங்கல் காரணமாக அந்த விவாதம் நடைபெறாதபோதும் இந்த விவாதத்துக்கு நிகரான பொதுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதாக பி.ஏ.காதர் கூறுகின்றார். அப்போதைய இளைஞர் அணிய தலைவராக இருந்த இப்போதைய தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் தானும் யாழ்ப்பாணத்தில் ஒரே மேடையில் இந்த குடிபெயர்வு குறித்து விவாதித்தததாகவும் பி.ஏ.காதர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையிலேயே ஹட்டனில் ஒன்று கூடிய அப்போதைய மலையக சமூக செயற்பாட்டாளர்கள் 'மலையகமே எமது தாயகம். எது நடந்தாலும் நாம் இங்கு தான் வாழந்தாக வேண்டும்' எனும் உறுதியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர். அது ஹட்டன், புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள 'சென்றர்' என அழைக்கப்படும் நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவே ஹட்டன் தீர்மானமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்த உரையின், உரையாடல்களின் தொகுப்பாகவே பி.எ.காதரின் முதலாவது நூல் வெளிவந்திருக்கின்றது. (நூல் பற்றிய விபரங்களை அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்) ஆனாலும், 'வட்டுக்கோட்டை' தீர்மானத்தின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமக்கான தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைத்து ஆரம்பத்தில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத போராட்டமாகவும் முன்கொண்டு சென்றனர். அதன் இறுதிவிளைவே 2009இல் முடிவுற்றதாக சொல்லப்படும் உள்நாட்டு யுத்தமாக மாறியிருந்தது. அதேநேரம் 'ஹட்டன்' தீர்மானத்தின்படி மலையகமே எமது தாயகம். எது நடந்தாலும் நாம் இங்கே வாழ்ந்தாகவேண்டும்' என்ற தீர்மானம் முழுமையாக செயற்பாட்டு வடிவம் பெறவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
காரணம், 1961 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் இரண்டாவது அதி கூடிய சனத்தொகையைக் கொண்டிருந்த இந்திய தமிழர் (மலையகத் தமிழர்) 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். இது மலையகத்தை தமது நிரந்தரமாக மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகின்றது. 1964இல் கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் 1990 கள் வரை கூட மலையகத்தவர்கள் தாயகம் (இந்தியா) திரும்பிக்கொண்டிருந்தனர். மறுபுறத்தில் மத்திய மலைநாட்டுப்பகுதிகளில் இருந்து வன்னிக்கான குடியேற்றம் குறைவாக இருந்தபோதும் கூட மாத்தறை, காலி, களுத்துறை, மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி போன்ற மாவட்டங்களில் இருந்து மக்கள் வன்னி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை அமைந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது. வன்னியில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் குறித்து உறுதியாக சொல்லக்கூடிய புள்ளிவிபரங்கள் இல்லை. ஆனாலும் இந்தியாவில் அகதி முகாம்களில் வாழும் 120000 இலங்கைத் தமிழ் அகதிகளில் ஏறக்குறைய 30000 பேர் வரையானவர்கள் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் என்பது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைப் பாராளுமன்றம் இவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்குவதற்கு என நியமித்த பாராளுமன்ற தெரிவுக்குழு அவர்களுக்கு பிரஜாவுரிமைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 2008 ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டது. இன்றும் கூட அவர்கள் இலங்கைப் பிரஜாவுரிமை பெற்ற போதும் இந்தியாவில் அகதியாகவே வாழ்கின்றனர்.
இந்த இந்திய அகதிகள் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடும் போது வன்னியில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறையாதவர்கள் 'மலையகத் தமிழர்கள்' என்ற கணிப்புக்கு வரமுடியும். வன்னியில் குடியேற்றம் செய்யப்பட்ட மலையகத் தமிழ் மக்கள் விவசாய பண்ணைகளில் தொழிலாளர்கள் ஆனார்கள். வட்டக்கச்சியில் அமைந்துள்ள விவசாயப் பண்ணையில் பெருமளவானோர் தொழிலாளர்களாக சென்று சேர்ந்தனர். முல்லைத்தீவு, கிள்நொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் காடுகளை அழித்து விவாசாய நிலங்களாக மாற்றியதில் இவர்களுக்கு பாரிய பங்களிப்பு உண்டு. ஆனாலும் இந்த நிலங்கள் இவர்களுக்கு உரித்துடையன அல்ல. நிலவுடமையாளர்களுக்காக அத்தகைய காணிகளை சுத்தம் செய்து விவசாயத்துக்கு தயார் செய்வதும் பின்னர்; அது நிலவுரிமையாளரின் பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதும் வழமையாக நிரந்தர ஒரு இடமில்லாமல் ஆங்காங்கே அலைந்து திரிந்து வாழக்கை நடாத்தும் போக்கே பரவலாகக் காணப்பட்டது. இது குறித்த பதிவுகளை பல இலக்கிய படைப்புகளில் காணலாம். 'ஸ்ரீதரன் கதைகள்' எனும் தொகுப்பு லன்டனில் தமிழியல் வெளியீடாக வெளிவந்துள்ளது. பொறியியலாளரான ஸ்ரீதரன் இப்போது வெளிநாட்டில் வசிக்கின்றபோதும் இலங்கையின் வாழ்ந்த காலத்தில் பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து தனது எழுத்துக்களில் பதிவு செய்தவர். இவரது தொகுப்பில் அடங்கியிருக்கும் 'ராமசாமி காவியம்' வன்னியில் வாழும் மலையகத் தமிழர்கள் பற்றிய கதை. இந்த தலைப்பு மலையகத்தின் முதலாவது சிறுகதையான கோ.நடேசய்யர் எழுதிய 'ராமசாமி சேர்வையின் சரிதம்' எனும் கதையை நினைவுபடுத்திச் செல்கின்றது. ராமசாமி சேர்வையின் சரிதத்துக்கும், ராமசாமி காவியத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்தியாவில் இருந்து இலங்கை வந்து அல்லல் படும் ராமசாமி சேர்வை பற்றி நடேசய்யர் விபரிக்கின்றார். மலையகத்தில் இருந்து வன்னி சென்ற அல்லல்படும் ராமசாமி பற்றி ஸ்ரீதரன் விபரிக்கின்றார்.
இதேபோல சயந்தன் எழுதியுள்ள 'ஆதிரை' இன்னுமொரு முக்கியமான பதிவு. வன்னியில் வாழும் மலையக மக்கள் மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் பிடிக்குள் அவர்கள் சிக்கிய முறைமை மற்றும் அவர்களது இழப்பு சம்பந்தமாக 'ஆதிரை' பேசுகின்றது. சயந்தன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். யுதத்ததால் இடம்பெயர்ந்து வன்னியில் வாழநேர்ந்த காலத்தில் அங்கு அவரால் மலையகத் தமிழர்களை அடையாளம் காண முடிந்திருக்கின்றது. அவர்களுடைய பேச்சு வழக்கு இன்னும் முழுமையாக மாறவில்லை. மலையகத்தில் கொண்டாடப்படும் பூஜை வழிபாட்டு முறைகளை அவர்கள் இன்னும் கைவிடவில்லை. ஒரு கலாசார தொடர்ச்சி அவர்களிடம் இருந்து வந்திருக்கின்றது. அவர்களிடம் இருந்தான அரசியல் குரல் இப்போது எழும்பத் தொடங்கியிருக்கின்றது. இது காலத்தின் தேவையும் கூட. மீள்குடியேற்றம், விவசாய காணி, கல்வியுரிமை போன்ற விடயங்களில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாக வன்னியில் இருந்து ஆங்காங்கே குரல்கள் எழும்பத் தொடங்குகின்றன.
அங்கிருந்து மட்டுமல்ல மலையகத்தில் இருந்தும் மலையகத்துக்கான காணி குறித்த புதிய குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. ஏற்கனவே தேயிலை, ரப்பர் பயிரிட்ட காணிகள் வெளியாருக்கு வேகமாக கைமாற்றப்படுவது தொடர்பாக சிவில் சமூக மட்டத்தில் உரையாடல்கள் இடம்பெற ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. மலையக காணிப்பிரச்சினை குறித்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கூடிப்பேசுவது முன்னேற்றகரமான ஏற்பாடுதான்.
மொனராகலையில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் பற்றி நெதர்லாந்தில் வாழும் இலங்கையரான கலையரசன் ஒரு குறிப்பினை முகநூலில் பதிவு செய்துள்ளார். இடதுசாரி சிந்தனையாளரான கலையரசன் இலங்கை வரும்போதெல்லாம் மலையகத்துக்கு பயணித்துச் செல்பவர். இதுபோன்ற மலையகம் குறித்த அக்கறையும், உரையாடலும் உலகமெங்கும் ஏற்படல் வேண்டும். மலையகம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது மலையக வம்சாவளி அல்லாத மலையகத் தமிழ் மக்களில் ஆர்வம் உள்ளோர் ஒரு ஆதரவுத்தளமாக இயங்க ஆரம்பிப்பது கூட மலையக மக்களின் இருப்பு குறித்த உரையடலுக்கான வெளியாக அமையமுடியும். இந்த மாதம் லன்டனில் மலையகத்திற்கான ஆதரவுத்தளம் (Solidarity for Malayagam) ஒன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெறவுள்ளதாக அறிய முடிந்தது. அது பற்றிய விபரங்ககைள அடுத்தடுத்த பத்திகளில் பகிர்ந்துகொள்ளலாம்.
அதுவரை மீண்டும் தலைப்பை வாசிக்க..
(உருகும்)
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...