Headlines News :
முகப்பு » » படித்தவர்களும் - பாராளுமன்றமும் - ஜீவா சதாசிவம்

படித்தவர்களும் - பாராளுமன்றமும் - ஜீவா சதாசிவம்


இவ்வார பத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி நிலை பற்றி சில விடயங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 25பேர் மாத்திரமே பட்டதாரிகள் என்றும் 94 பேர்  சாதாரண தரத்தில் கூட சித்தியடையவில்லை என்றும் அண்மைய ஆய்வொன்றில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.ஓ.ஏ. டீ. சொய்ஸா இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு தொடர்பான விடயங்கள் வெளி வந்த பின்னர், ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை சீருடையில் மாணவர்களாக தம்மை உருவகித்துக்கொண்டு கடந்த வாரம் பாடசாலைக்கு சென்றிருந்தார்கள். இதனை முகநூலில் வெளியான சில புகைப்படங்கள் மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு சீருடையை அணிந்து விட்டால் மாத்திரம் தமது கல்வித்தரம் உயர்ந்து விடுமா?

 பாராளுமன்றத்தில், விமல் வீரவன்ச எம்.பி. தொடர்பில், பெரும் சர்ச்சையை கிளப்பிய தினேஷ் குணவர்த்தன  எம்.பி.க்கு  ஒரு வார கால தடை விதிக்கப்பட்டது. இது இம்மாத ஆரம்பத்தில் நடந்த சம்பவம். அன்றைய தினம் பொலிஸாரும் சபையின் உள்ளே பிரவேசித்தனர். பொலிஸார் உட்பிரவேசிக்கும் அளவுக்கு அமளி நிலவியது. இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் இரண்டாவது தடவையாக இடம்பெற்றிருந்ததாக சபாநாயகர் இதன்போது எச்சரித்திருந்தார் என்பது சகலரும் அறிந்ததே. 

இவ்வாறான கூச்சல் சம்பவங்கள் இடம்பெறும் போது,  பாராளுமன்றத்தில் படித்தவர்களாக இருக்கின்றார்கள். இப்படி ஏன் மோசமாக நடந்துகொள்கின்றார்கள் என்பது பலரது கேள்வியாகவே இருக்கின்றது. இவ்வாறான சம்பவங்களின் பின்னர் தான் மேற்படி ஆராய்ச்சி தகவல்களும் அண்மையில் வெளிவந்தன. இதனை பற்றி அலசுவதே இந்தப்பத்தியின் நோக்கமாகிறது.  பொதுவாக பாராளுமன்றத்தில் எல்லோரும் படித்தவர்களாக  இருந்துவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது மக்களின் பிரச்சினைகள் பற்றி முழுமையாக பேசப்பட்டுவிடுமா? 

பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் கல்வித்தரம் என்று பார்க்கும் போது... க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரம் என்பது   கல்விக்கான ஒரு அளவுகோல் அல்ல. அவை ஒரு தடை தாண்டல் மாத்திரமே.  தலைமைத்துவ  ஆளுமைகள் உரிய இடத்திற்கு வரலாம். ஆனால், அவ்விடத்திற்கு வந்தபின்னர் அவர்களது ஆளுமையை தக்க வைத்துக்கொள்ள மக்களின் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கான வழிவகைகள் பற்றிய 'கற்றல்' என்பது இங்கு மிகவும் அவசியப்படுகின்றது.  எனவே பாடசாலை கல்வியை பெறுதல் என்பதும் ஒரு விடயம் பற்றி கற்றல் என்பதும் வெள்வேறான விடயங்களாகும். இதனை ஆங்கிலத்தில் சொல்லும் போது நுனரஉயவழைn என்றும்டுநயசniபெ என்றும் வகைப்படுத்தலாம். எனவே மக்கள் சபைக்கு வருபவர்களிடம் எதிர்பார்க்க வேண்டியது கற்றலே அன்றி கல்வித்தகைமை அல்ல. 

இன்று பட்டதாரியான பாராளுமன்ற உறுப்பினர்களில் எல்லோரும் திறமையானவர்களாக இருக்கின்றார்களா?   சாதாரண தரம் இல்லாதவர்கள் கூட சிறந்த அமைச்சர்களாக இல்லையா? ஒருவர் ஒரு துறைக்கு  வந்த பின்னர்  அதற்குத் தேவையான அறிவைப் பெற்றுக் கொள்ளத் தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.  இது எந்தவொரு  தொழில்துறைக்கும் பொதுவானதே.

அதேநேரம், அரசியலுக்கு இது மிகவும் பொருத்தமான விடயம். ஏனெனில், மக்கள் செல்வாக்கு பெற்ற எவரும், அரசியலுக்கு வரலாம் என்பதுதான் எமது   அரசியலின் தன்மையாக  இருக்கின்ற நிலையில் இங்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் எவரும் தெரிவு செய்யப்படுவதில்லை என்பதை நாம் அவதானித்து வருகின்றோம்.  தேர்தல் வேட்பு மனுவிலும் கூட கல்வித்தகைமை ஒரு கேள்வியாக முன்வைக்கப்படுவதில்லை.  இது ஒரு ஜனநாயக பண்பும் கூட. பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க சபை என்கின்ற வகையில் அங்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அத்துறை சார்ந்து பக்குவப்படுத்திக் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

 உதாரணமாக பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் உயர் தரத்தில் தேர்ச்சிபெற்றவர்களாக இருக்கின்றனர்.  ஆனால், அங்கு கூச்சல் குழப்பம் இல்லையா? குழுமோதல், சண்டை, சச்சரவுகள் இல்லையா?  அவ்வாறு இயங்குகின்றது என்று உத்தரவாதம் தரமுடியுமா? கடந்தவாரம் 'தூய்மையான அரசியல் ' பிரசார வார முன்னெடுப்பு ஆ12ஆ நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஏ ன்அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் சண்டை பிடித்துக்கொள்கின்றார்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் பாரhளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்பதாகும். 

இதன் மூலம் தெரியவருவதாவது, இவ்வாறு தெரிவாகின்ற 225 பேரும் படித்தவர்களாக ஒழுக்க சீலர்களாக இருந்து விடுவதனால் மாத்திரம் முழுநாடும் தூய்மையாகிவிடுமா?

கடந்த பாராளுமன்றத்தில்  இருந்த பட்டதாரியொருவர் அரசியல் நிகழ்ச்சியொன்றை தொகுத்தளித்து வருகிறார். அதில் உள்ள அரசியல் நாகரிகம் ஊடக விழுமpயங்கள் தொழில் வாண்மையானதா?
பாராளுமன்றம் என்றால் என்ன? அங்கு தெரிவாகி சென்றுள்ள மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று  அங்குள்ள கட்டமைப்புக்களை அறிந்து அதற்கேற்றாற்போல செயற்பட வேண்டும். தாம் தெரிவு செய்த துறை தொடர்பில் தேர்ச்சி பெறாத போதே அங்கு பிரச்சினை தலைதூக்குகிறது. 

பிரதேச ரீதியாக சற்று நோக்கும் போது, வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அங்குள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் படித்தவர்களாக இருக்கக் கூடும் ஆனால், அத்தனை பேரும் சேர்ந்து முன்வைக்கின்ற அரசியலின் ஊடாக பல வருடங்களாக   பேசப்படுகின்ற அவர்களின் மையச் சரடான  இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடிந்ததா? அண்மைய தீர்வுகாண கூடிய சாத்தியம் இருக்கிறதா? முஸ்லிம் தரப்பிலும் இதே  நிலை.

இன்று மலையகத்தை பொறுத்தவரையில் படித்தவர்களின் அரசியல் பாராளுமன்றத்தில்  ஓரளவு பிரதிபலிப்பதாக சொல்லப்படுகின்றது. உண்மைதான். ஏனெனில் கடந்தகால பாராளுமன்றங்களைவிட இப்போது இடம்பெறுகின்ற காத்திரமான உரைகள் மூலம் இதனை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இதற்கு முன்னரான பாராளுமன்றத்தில் பட்டதாரி பாராளுமன்ற உறுப்பினர்கள்  இருக்கவில்லையா? கடந்த பாராளுமன்றத்திலும் கூட சட்டத்தரணியொருவர் எம்.பி.யாக இருந்தார். அவரால் உருப்படியாக எதையாவது செய்யக்கூடியதாக இருந்ததா?

உதவி தொழில் ஆணையாளராகவும் சட்டத்தரணியாகவும் இருந்தவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரும் தொழிலாளர் பற்றியதான சட்டரீதியான விடயத்தை முன்வைத்திருக்கின்றாரா?  

 இவ்வளவு காலமாக மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைபற்றிப் பேசப்படுகின்றது.   கடந்த காலங்களில்  பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்து நீண்ட அரசியல் பரம்பரையில் வந்த ஆங்கிலப்புலமை கொண்டவர்கள் முன்வைத்த தீர்வு  என்ன? தற்காலத்தில் தொழிலாளர் பரம்பரையில் இருந்து வந்த ஒருவர் வீட்டுரிமை, காணியுரிமை விடயத்தில் முன்னெடுத்திருக்கும் அரசியல் முனைப்புகள் என்ன?

பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் நடத்தைகள் ' மக்கள் பிரதிநிதிகள்' என்ற அந்தஸ்துக்கு பொருத்தமற்றவையாக இருந்து வருகின்றன. இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகள் அவர்களின் கல்வி நிலை பற்றியதாகவே அறிய வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமா? எதிர்கால சந்ததியும் அதனை மோசமாக பார்க்கும் சூழல் கூட உருவாகின்றது. 

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பின்னர் அவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டு பெரும் பணம் சம்பாதித்து பின்னர் பாராளுமன்றத்திற்கு சென்று விட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சில வருடங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றி இருந்தமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.  
இதே கருத்தினை இப்போதைய ஜனாதிபதியும் வலியுறுத்தி வருகின்றார். இதற்காக மதுஒழிப்பு, சூழலியல், போன்ற பல தேசிய சமூக விழிப்புணர்வுத் திட்டங்களை  தனது நிர்வாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்திவரும் இவர் தனது வாழ்வை ஒரு கிராம சேவகராகவே ஆரம்பித்திருக்கின்றார். இதிலிருந்து அவரது பாடசாலைக் கல்வி எத்தகையானதாக இருக்கின்றது என்பதை ஊகிக்க முடியும். ஆனால், அதிக மக்கள் விருப்பில் தெரிவுக்குள்ளான ஜனாதிபதியாகவே இவர் திகழ்கின்றார்.  

இலங்கையில் ஜனாதிபதிகளாக இருந்தவர்களில் முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாஸவைப்பற்றி இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். கல்வித்தகுதி பற்றி பேசினால் அதற்குரிய தகைமை கொண்டவராக இருந்தாரா? இவர் தேர்ச்சிபெற்ற கல்வியியலாளராக இல்லாத போதும் அவரது தலைமைத்துவம் ஏனைய தலைவர்களை விட ஒப்பீட்டளவில் சிறப்பாக அமைந்திருந்ததை யாவரும் அறிவர்.  

தீய பிரகிருதிகளுக்கு வேட்பாளர் நியமனங்களை வழங்குவதில்லையென்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் பாராளுமன்றத்தில் பல துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் தோன்ற வாய்ப்பே இல்லை. 

எனவே பாராளுமன்றத்தில் படித்தவர்கள் என்று வரும்போது பாடசாலைக்கல்விக்கும் அதன் அடைவு மட்டங்களுக்கும் பொருத்தி பார்ப்பதல்ல முக்கியம். அது தனிப்பட்ட தலைமைத்துவப் பண்பு, வாழ்க்கை விழுமியங்கள், கற்றுக்கொள்ளும் ஆர்வம், நன்னடத்தை என்பதிலேயே தங்கியுள்ளது. 

நன்றி வீரகேசரி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates