Headlines News :
முகப்பு » , , , , » டட்லி – செல்வா ஒப்பந்தம்: சந்தர்ப்பவாத ஒப்பந்தம் - என்.சரவணன்

டட்லி – செல்வா ஒப்பந்தம்: சந்தர்ப்பவாத ஒப்பந்தம் - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 9

1960 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பின்னர் இடதுசாரிக்கட்சிகளும் வந்து இணைந்ததும் மேலும் பலமடைந்தது.  அதன் பின் அவர்களின் ஆட்சியிருப்புக்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவு கூட தேவைப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் வழமைபோல காற்றில் பறக்கவிதுவதற்கு அரசாங்கத்துக்கு எளிமையாக இருந்தது.

சிறுபான்மை இனங்களின் உரிமைகளை எப்போதும் வற்புறுத்தி வந்த இடதுசாரி இயக்கங்கள் இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும், தமது அரசாங்கத்தில் தமது இருப்பை தக்கவைத்திருப்பதற்காகவும் தமிழர் விரோத போக்குகளை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமன்றி பல இடங்களில் சிங்கள இனவாத போக்கையும் கடைபிடித்தது.

இராணுவச் சதி
இன்றளவும் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் சிங்கள பௌத்தர்களல்லாதோர் இலங்கையின் மீது தேசப்பற்றில்லாத சதிகாரர்கள் என்கிற அபிப்பிராயத்தை வளர்த்து வைத்திருக்கிறார்கள். இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவமொன்றும் இதற்குக் காரணம்.

27.01.1962 நிகழவிருந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை சிறிமா அரசாங்கம் முறியடித்தது. இந்த இராணுவச் சதியில் பல கேர்னல்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். குறிப்பாக கடற்படை, தரைப்படை மற்றும் பொலிசைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இதன் பின்னணியில் இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் சிங்கள கிறிஸ்தவர்களாகவும், தமிழர்களாகவும் இருந்தது தெரியவந்தது. இது சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான சதி என்று வியாக்கியானபடுத்தினாளும் இந்த சதியின் பின்னணியில் சேர் ஜோன் கொத்தலாவல உள்ளிட்ட ஐ.தே.க தலைவர்களின் ஆசீர்வாதம் இருந்தது. இதனை கே.எம்.டீ.சில்வா எழுதிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வாழ்க்கைச் சரிதத்தில் விளக்கிச் செல்கிறார்.

இந்த சதி நிகழும் முன்னரே தகவல் கசிந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். சிறிமா அரசாங்கம் அதிர்ந்து போயிருந்தது. பிற் காலத்தில் அதே சிறிமா 1971 இல் ஜே.வி.பி கிளர்ச்சியை இந்தியப் படைகளையும் அழைத்து  மோசமாக அடக்கியதன் பின்புலத்தில் இருந்த பீதியும் இந்த சதி அனுபவம் தான்.

லேக் ஹவுஸ் கவிழ்த்திய ஆட்சி
சிறிமா அரசாங்கத்துக்கு இருந்த இன்னொரு தலையிடி லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனம். அது ஐ.தே.க வுக்கு ஆதரவாகவும் சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து இயங்கி வருவதாக கருதியது. ஐ.தே.கவுக்கும் லேக்ஹவுசுக்கும் இடையில் இருந்த குடும்ப உறவும் ஒரு காரணமாக அமைந்தது. லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரச உடமையாக்கும் முடிவு தனது ஆட்சிக்கே முடிவைத் தேடித்தரும் என்று சிறிமா அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.

இந்த தீர்மானத்துக்கு உடனடிக் காரணமாக இருந்தது ஒப்சர்வர் பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரம். சமசமாஜ கட்சி அப்போது சுதந்திரக் கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பம் அது. அது பற்றிய கேலிச்சித்திரத்தில் என்.எம்.பெரேராவால் பிரதமர் சிறிமா  கர்ப்பிணியாக ஆக்கப்பட்டிருப்பதாக அந்தக் கேலிச்சித்திரம் அமைத்திருந்தது. இந்த கார்ட்டூன் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பத்திரிகையின் அறம் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இடது சாரிக் கட்சிகளுக்கும் லேக் ஹவுஸ் பற்றிய நீண்ட கால பகை இருந்தே வந்தது.

03.12.1960 இரவு சிம்மாசனப் பிரசங்கத்தின் போது லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரசுடமையாக்கும் சட்டமூலத்தை பிரேரித்தது அரசாங்கம். இதே காலத்தில் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் செய்துவிட்டு வெற்றியுடன் திரும்பிய சிறிமாவுக்கு பெரும் வரவேற்பு கிட்டியிருந்தது. அதே வெற்றிக் களிப்பிலேயே ஒரே மாதத்துக்குள் இந்த லேக்ஹவுஸ் தீர்மானத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட முயற்சிக்கு பலத்த அடி விழுந்தது.

இந்த வாக்களிப்புக்கு முன்னர் கொல்வின் ஆர்.டீ .சில்வா அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், துரைரத்தினம் ஆகியோரை பிரதமரின் அறைக்கு அழைத்து தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும்படியும் கோரியிருந்தார். தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு கூடி இது குறித்து ஆராய்ந்தபோது அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிப்பது என்று பெரும்பாலோனோர் எடுத்த முடிவின் படி எதிர்த்து வாக்களித்தனர்.

பலி தீர்த்த சாதியம்
சிறிமா அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சீ.பீ.டீ.சில்வா தலைமையில் 13 பேர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தனர். ஆதரித்து 73 பேரும் எதிர்த்து  74 பேரும் வாக்களித்தனர். ஒரே ஒரே ஒரு மேலதிக வாக்கினால் அரசாங்கம் கவிழ்ந்தது. பண்டாரநாயக்காவின் மறைவின் பின்னர் சுதந்திரக் கட்சியின் தலைவராக வரவேண்டிய தலைவர் சீ.பீ.டீ. சில்வா. அவரின் சாதி காரணமாக அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். அன்றைய தினம் அவர் உரையாற்றும் போது. “முதுகில் குத்தி விட்டார்கள்” என்று வேதனையுடன் உரை நிகழ்த்தினார். சுதந்திரக் கட்சியில் இருந்து அவருடன் வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் அவரது சாதியைச் சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும். இதன் போது குடும்ப உறவு எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பது பற்றி திவிய்ன (14.01.2014) பத்திரிகையில் அனுர யசமின் சுவாரசியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

இந்த தோல்வியைத் தொடர்ந்து சிறிமா அராங்கம் உடனடியாக இராஜினாமா செய்யவில்லை மீண்டும் பெரும்பான்மை பலத்தைக் காட்டுவதற்காக ஆதரவு தேடி கொல்வின் ஆர்.டீ.சில்வா அமிர்தலிங்கத்தை சந்தித்தார். உங்கள் கோரிக்கைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறோம் அரசாங்கத்தைக் காப்பற்றுங்கள் என்றார். சிரேஷ்ட அமைச்சரொருவர் அதற்கான உத்தரவைக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். சுதந்திரக் கட்சியை நம்ப நாங்கள் தயாரில்லை என்று அமிர்தலிங்கம் உறுதியாக பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 7 அன்று பிரதமர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 22.03.1965 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது.
எஸ்மண்ட் விக்கிரமசிங்க
எவருக்கும் பெரும்பான்மை இல்லை
1965 மார்ச் 22 தேர்தலில் தமிழரசுக் கட்சி 20 தொகுதிகள் போட்டியிட்டது.  யு. என். பி. 66, எஸ். எல். எவ், பி. எஸ். ஏஸ். பி. 10, கம்யூனிஸ்ட் கட்சி 5 தமிழரசு 14 தமிழ் காங்கிரஸ்-3 ஏனையோர் 5 மொத்தம் 151. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. லேக் ஹவுஸ் எடிட்டோரியல் இயக்குனராக இருந்த  எஸ்மண்ட் விக்கிரமசிங்க யு. என். பி. யின் ஆலோசகராக இருந்தார். ஆட்சியமைப்பது பற்றிய இடைத்தூதராக அவர் செயற்பட்ட அவர் தமிழரசுக் கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலம் வந்திறங்கிய தந்தை செல்வா தன் வீட்டுக்குப் போனதும் விக்கிரமசிங்க அவரை சென்று சந்தித்தார். விக்கிரமசிங்கா தந்தை செல்வாவின் கீழ் வழக்கறிஞர் தொழில் பழகியவர். எனவே. அவரிடம் தந்தை செல்வா நேரடியாகச் சொன்னார். “உதவி தேவைப்படும் போது உதவியைப் பெற்று விட்டு பின்பு கைவிடுவது சிங்களத் தலைவர்களின் வழக்கம் இப்பொழுதும் அதையே செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேட்டார். இந்த முறை அப்படி நடக்காது என்று நான் உத்தரவாதமளிக்கின்றேன் என்றார் விக்கிரமசிங்க. டட்லியின் சார்பில் பேச விக்கிரமசிங்க அதிகாரம் பெற்றுள்ளார் என்பதை உறுதி படுத்திய பின் தமிழரின் முக்கிய நான்கு பிரச்சினைகளுக்கும் தீர்வு" டட்லி உதவுவாரா என்று கேட்டார். அதற்குரிய உத்தரவாத விக்கிரமசிங்க தந்தைக்குக் கொடுத்தார். அவர் கிளப்பிய பிரச்சினைகளும் இவை:
1.மொழிப் பிரச்சினை தமிழ் மொழி வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும்.
2 நீதிமன்ற மொழி வடக்கு கிழக்கு மாகாணங்கவில் நீதிமன்றங்கள் தமிழ் மொழியில் இயங்க வேண்டும்.
3. மாவட்ட சபைகள் நிறுவப் படவேண்டும் அவற்றின் அதிகாரங்களை யு.என். பி. தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டும்.
4.குடியேற்றப் பிரச்சினையும் தமிழ் அரசாங்க ஊழியர் பிரச்சினையும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வதியும் பகுதிகள் சிங்களவர் மயமாக்கப்படலாகாது.
ஒப்பந்தம்
இந்த நான்கு விடயங்களிலும் தீர்வு காண விக்கிரமசிங்க இனங்கியதன் பின்புதான் டட்லி தந்தை செல்வா சந்திப்பு டாக்டர் எம். வி. பி. பீரிசின் வீட்டில் இடம் பெற்றது. தந்தை செல்வாவுடன் நாகநாதன், இராசமாணிக்கம், திருச்செல்வம். வி. நவரத்தினம் ஆகியோர் பேச்சில் கலந்து கொண்டனர். டட்லிக்கு ஜெயவர்த்தன. சுகதாச, விக்கிரமசிங்க ஆகியோர் உதவினர். முதல் மூன்று விடயங்களிலும் அதிகம் விவாதம் இடம் பெறவில்லை. குடியேற்றத் திட்டம் பற்றிய விடயத்துக்கு வந்ததும் டட்லி இணங்க மறுத்தார். இந்த சர்ச்சை நள்ளிரவு வரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது டெலிபோன் மணி ஒலித்தது. கவர்னர் ஜெனரலைச் சந்திக்க திருமதி பண்டாரநாயக்கா போய்க் கொண்டிருக்கிறார் என்கிற செய்தி எட்டியது.. தமிழரசுக் கட்சியினர் தன்னை ஆதரிக்கப் போவதாக சிறிமா கூறப் போகிறாராம் என்று சொன்னார். திருமதி பண்டாரநாயக்காவை ஆதரிப்பதாகச் சொன்னீர்களா என்று டட்லி கேட்டார். அப்படி ஒரு உடன்பாடும் இல்லை என்பதை உறுதிபடுத்தினர். ஆனால் டட்லியை அந்த செய்தி சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. தமிழரசுக் ஆதரித்தால் சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு இருந்தது டட்லிக்குத் தெரியும்.

இறுதியில் தமிழ்ப் பிரதேசங்களில் இனிமேல் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதில்லை என்கிற வாக்குறுதியைக் கொடுத்தனர். அதன்படி விக்கிரசிங்கவும், நவரத்தினமும் சேர்ந்து வாசகங்களைத் தயாரித்தனர். விக்கிரமசிங்கவே அதனை அங்கிருந்து தட்டச்சு செய்தார். அது தான் டட்லி – சேனநாயக்க ஒப்பந்தம். டட்லியும் – செல்வநாயகமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு எழுந்து நின்று கை குலுக்கி பரிமாறிக்கொண்டனர்.
தம்மை ஆதரிப்பதாக கவர்னரிடம் ஒப்படைப்பதற்கான ஒரு கடிதத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க செல்வநாயகம் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தையும் பெற்றுக்கொண்டனர். டட்லியின் கண்களைப் பார்த்து “நான் உங்களை நம்புகிறேன்” என்று சொன்னார். அதற்கு பதிலளித்த டட்லி “மூன்று தசாப்தங்களாக நான் அரசியலில் இருக்கிறேன் . கொடுத்த வாக்குறுதியில் என்றுமே பின் வாங்கியதில்லை” என்றார்.
கூடவே டட்லி ஒரு கோரிக்கையை வைத்தார். தேசிய அரசாங்கத்தை அமைக்கப்போவதாகவும் அதில் தமிழரசுக் கட்சி அங்கம் வகிக்க வேண்டும் என்றும் கூறினார். “சமஷ்டி ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தான் அமைச்சில் பங்கு பெறுவதாக முடிவு செய்துள்ளபடியால் அதனை மீற முடியாது” என்றார்.

அமைச்சில் பங்குபெற வேண்டும் என்று டட்லி தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து இறுதியில்; ஒருவரைத் தருகிறோம். அவருக்கு மாவட்ட சபைகளை உருவாக்குவதற்கான பொறுப்பைக் கையளியுங்கள் என்றார். டட்லி அதற்கு இணங்கினார்.

இது நிகழ்ந்து அடுத்த நாள் மார்ச் 25 அன்று சிறிமா சார்பில் என்.எம்.பெரேராவும் அனில் முனசிங்கவும் தந்தை செல்வாவின் வீட்டுக்குச் சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தை அமுல்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் சிறிமாவுக்கு ஆதரவளிக்கும்படியும் கோரினார்கள். 1960 இலும் இதே வாக்குதியைத் தான் தந்தார்கள் அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று திருப்பி அனுப்பினார்.

கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தில் டட்லி, செல்வநாயகம், சீ.பீ.டீ.சில்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம், பிலிப் குணவர்த்தன ஆகியோர் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.  அதனைத் தொடர்ந்து டட்லியை ஆட்சியமைக்கும்படி கவர்னர் அழைத்தார்.

“சமஷ்டிக்குப் பின்பே பங்கு”
தமிழரசுக் கட்சி மந்திரிப் பதவிக்காக தம் தரப்பில் மு.திருச்செல்வத்தை
தெரிவு செய்தது. உள்நாட்டு அமைச்சர் பதவியைக் கோருவது என்று முடிவானது. ஆனால் அதனை தஹாநாயக்கவுக்கு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக உள்ளூராட்சி பதவியை எடுக்கச் சொன்னார்கள். அதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டது. கூடவே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் தொண்டமானை நியமன எம்.பி யாக நியமிக்க வேண்டும் என்ற தந்தை செல்வாவின் கோரிக்கையும் டட்லி ஏற்றுக் கொண்டார்.

பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கும் டட்லி – செல்வா ஒப்பந்தத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் போது ஸ்ரீ.ல.சு.க தரப்பில் இடதுசாரிக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு பெரும் எடுப்பில் எதிர்த்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா, பீட்டர் கெனமன், என்.எம்.பெரேரா போன்ற இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தனர். இடது சாரிக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, இனப் பாரபட்ச போக்கும் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டப்பட்ட சந்தர்ப்பம் இது.

“டட்லியின் வயிற்றில் மசலே வடை”
தனிச்சிங்கள சட்டத்துக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்துக்காகவும் அன்று குரல் கொடுத்த அதே இடதுசாரிக் கட்சிகள் பின்னர்; தமிழ் மொழி பாவனை குறித்து டட்லி சேனநாயக்க உடன்பட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து “டட்லியின் வயிற்றில் மசலே வடை” (“டட்லிகே படே மசல வடே”) என்று கொசமெழுப்பியபடி தொழிலார் தினத்தில் ஊர்வலம் சென்றார்கள்.

டட்லி – செல்வா ஒப்பந்தமும் ஒரு சந்தர்ப்பவாத ஒப்பந்தம் என்பது குறுகிய காலத்தில் வெளிப்பட்டது. கூட்டரசாங்கத்தில் இருந்த கே.எம்.பி.ராஜரத்னா வின் ஜாதிக விமுக்தி பெரமுன (JVP - தேசிய விடுதலை முன்னணி), பிலிப் குணவர்த்தனவின் ‘மக்கள் ஐக்கிய முன்னணி” உள்ளிட்ட 7 அமைப்புகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து இருந்தன. அவை மோசமான சிங்கள தேசியவாத கட்சிகளாக இருந்தன. டட்லி ஆட்சியில் அடுத்தடுத்து நிகழ்ந்த வாக்குறுதி மீறலை அடுத்த இதழில் காண்போம்.

துரோகங்கள் தொடரும்...
டட்லி - செல்வா   ஒப்பந்தம் - 1965 மார்ச் 24

(மாவட்ட சபைக்கான ஒப்புதல்)
திரு. டட்லி சேனநாயகா அவர்களும், திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களும் 2431965ஆந் திகதி சந்தித்துத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக நடாத்திய பேச்சுவார்த்தைகளுக்கமைய, ஒரு நிரந்தர அரசாங்கத்தை அமைக்கும் நிமித்தம் - கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள வற்றிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று - திரு. சேனநாயக்கா ஒப்புக்கொள்கின்றார். 
1. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும், அவற்றைத் தமிழிலேயே பதிவதற்கும் தமிழ்மொழி விஷேட விதிகளுக்கமைய - உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் - நாடு முழுவதிலும் தமிழிலேயே காரியமாற்ற உரிமையுள்ளவன் என்பதே - தன் கட்சியின் கொள்கை என்பதையும் திரு. சேனநாயக்கா விளக்கினார். 
2. வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள சட்டபூர்வமான நடவடிக்கைகளை நடாத்தவும், அவற்றைப் பதிவதற்குத் தமிழே நீதிமன்ற மொழியாக இருப்பதுதான் - தன் கட்சியின் கொள்கை என்று திரு. சேனநாயக்கா ஏற்றுக் கொள்கிறார். 
3. இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மதத்தின் பேரில், மக்கள்பாலுள்ள அதிகாரங்களுக்கேற்ப - இலங்கையில் மாவட்டசபைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் தேசிய நன்மை கருதி, சட்டங்களுக்கமைய - மாவட்டசபைகளுக்கு மேலான அதிகாரங்கள் அரசாங்கத்துக் குண்டென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
இலங்கைப் பிரஜைகள் காணிப் பங்கீடுகளில் காணி பெறும் வண்ணம் - காணி அபிவிருத்தி விதிகள் திருத்தியமைக்கப்படும். 
குடியேற்றத் திட்டங்களில் காணிகள் வழங்கப்படும்போது - வட, கிழக்கு மாகாணங்களில் கீழ்காணும் விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படும் எனவும் திரு. சேனநாயக்கா ஏற்றுக்கொண்டார். 
(அ) வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் - அம்மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கே முதலில் வுழங்கப் படல் வேண்டும். 
(ஆ) இரண்டாவதாக - வட, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ்பேசும் மக்களுக்கே வழங்கப்படல் வேண்டும். 
(இ) மூன்றாவதாக – இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கே முதலிடங்கொடுத்து ஏனையவர்களுக்கும் வழங்கலாம். 
(ஒப்பம்) டட்லி சேனநாயகா - 24-3-1965
(ஒப்பம்) எஸ்.ஜே.வி. செல்வநாயகம் - 24-3-965


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates