Headlines News :
முகப்பு » » ஊழலற்ற அரசியலை உருவாக்க ஊடகங்களும் பங்களிக்க வேண்டும் மார்ச் 12 இயக்க கூட்டத்தில் திலகர் எம்.பி

ஊழலற்ற அரசியலை உருவாக்க ஊடகங்களும் பங்களிக்க வேண்டும் மார்ச் 12 இயக்க கூட்டத்தில் திலகர் எம்.பி


(சிங்கள மொழியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)

ஊழல் மோசடியற்ற அரசியல் கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்பும் நோக்கோடு மார்ச் 12 இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இதில் சிவில் சமூகங்களே அங்கம் வகிக்கின்றபோதும் ஒழுக்கமான அரசியலை காட்சிப்படுத்தி ஊழலற்ற அரசியல் கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்ப இந்த நாட்டின் ஊடகங்கள் அதிகம் பங்களிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். 

ஊழல் மோசடியற்ற அரசியல் கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்கோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவரும் மார்ச் 12 இயக்கத்தின் மூன்றாவது ஒன்று கூடல் சுதந்திர சதுக்கத்தில் மார்ச் 13ஆம் திகதி இடம்பெற்றது. சர்வோதய, பெபரல், சனச வங்கி, போன்ற தன்னார்வ நிறுவனங்கள் முன்னெடுப்பில் பல்வேறு சிவில் சமூக அமைப்பினர் ஒன்று சேர்ந்து முன்னெடுத்துவரும் இயக்கத்தில் ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்குதவற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் பிரதிநிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே திலகர் எம்.பி மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.

தேசிய நல்லெண்ணத்துக்கான இயக்கம் ஒன்று முன்னெடுக்கும் இந்த சுதந்திர சதுக்க மேடையிலே உரையாற்றும் வாய்ப்பினை வழங்கிய மார்ச் 12 இயக்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மங்கல விளக்கேற்றும்போது சரவோதய அமைப்பின் தலைவர் ஏ.டி.ஆரியரத்ன அவர்கள் எங்கள் காதுகளில் ஒரு சேதியைச் சொன்னார். இந்த சுதந்திர சதுக்க திறந்த வெளி மண்டபம் திறந்து வைத்த நாளில் தனது பதினாறாவது வயதில் தான் கலந்துகொண்டதாக. அத்தகைய ஒரு மூத்த பிரஜையின் முன்னிலையில் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் மலையகத் தோட்டத் தொழிலாளியின் பிள்ளையான நான் உரையாற்றுவது எனது பாக்கியமே. 

'மார்ச் 12' இயக்கத்தில் நாங்கள் 26 உறுப்பினர்கள் இப்போதைக்கு ஒன்று சேர்ந்துள்ளோம். 225 பேரில் 26 பேர்தான் ஊழலற்ற அரசியல் கலாசாரத்துக்காக ஒன்று சேர்வார்கள் என்றில்லை. அதைவிட அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் முன்வராமைக்கு காரணம் இருக்கின்றது. ஏனெனில் இத்தகைய பொதுமேடைகளில் அரசியல்வாதிகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகுவார்கள். எனக்கு முன்னர் பேசிய பெல்லன்வில தேரர், அருட்திரு. குனகபை அடிகளார், எஸ்.ஜி. புஞ்சிஹேவா ஆகியோரின் உரைகளில் கூட அது தொணித்தது. அதனைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்துதான் நான் இப்போது உரையாற்றுகின்றேன். இந்த சூழ்நிலையை கையாள பொறுமையும்அரப்பணிப்பும் வேண்டும். எல்லா அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊழல் அரசியல்வாதிகள் இல்லை. பாராளுமன்றில் எந்நாளும் சண்டை மட்டுமே இடம்பெறுவதில்லை. எங்களை பலரும் கேட்கும் கேள்வி ஏன் பாராளுமன்றில் சண்டை பிடிக்கின்றீர்கள் என்று? நான் அவர்களுக்கு கூறும் பதில் 'நாங்கள் மக்களின் பிரதிநிதிகள்' என்பதுதான். 

இந்த மக்களுக்குள் இருந்து சென்ற 225 பேர்தான் அங்கே பாராளுமன்றில் அங்கும் வகிக்கின்றார்கள். அவர்கள் வேற்று கிரக மனிதர்கள் அல்ல. எனவே 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்க சீலர்களாக ஆகிவிட்டால் ஊழலற்ற அரசியல் கலாசாரம் உருவாகிவிடாது. அது சமூக மட்டத்தில் இருந்து ஏற்பட வேண்டும். அந்த வகையில் மார்ச் 12 இயக்கம் சமூக இயக்கமாக செயற்படுவதன் காரணமாகத்தான். ஊழலற்ற தூய அரசியலை முன்னெடுக்க சமூக மட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ வேண்டும். அதற்கு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும். 

பாராளுமன்றில் ஒரு சண்டை எற்றால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்டும், எழுதும், பேசும் ஊடகங்கள் அங்கு நடக்கும் கல்லவற்றுக்கு வழங்குவதில்லை. என்னை இந்த கூட்டத்தில் இருக்கும் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால், நாளை ஒரே நிமிடத்தில் இந்த நாட்டு மக்கள் அனைவருமே அறிந்த பிரபலமான ஒருவனாக என்னால் வரமுடியும். அதற்கு பாராளுமன்றில் தகாத முறையில் பேசி நடந்துகொண்டால் போதும். ஊடகங்கள் அதனைப் பெரிதாகக் காட்டும். இந்த பிரபலத்தை அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார். இந்தியாவில் நடிகர்கள் அரசியல்வாதிகளானபோது அரசியல்வாதிகள்; நடிகர்களாக மாறியது போன்று இலங்கைக்கும் அந்த கலாசாரம் வருகிறது. ஊடகங்களில் பிரபலமாக அரசியல்வாதிகள் நடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஊடகங்கள் அத்தகைய மலிவு விளம்பரத்தை தேவையற்ற சண்டைகளை காட்டுவதில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சினை ஒன்று எழுந்தால் கூட அந்த பிரச்சினை பற்றிய வியாக்கியானங்களைக் குறைத்து இறுதியில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பதை மாத்திரம் வெளிப்படுத்த முன்வருதல் வேண்டும். 

அதேபோல,  அரச நிறுவனங்கள் பொது அமைப்புகளும் உரிய முறையில் செயற்பட்டு புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்ப துணை நிற்க வேண்டும். நான் ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக எங்களது கட்சியை அங்கீகரிக்கக்கோரும் விண்ணப்பத்தை 2009 லும் சமர்ப்பித்தேன் 2017 இலும் சமர்பித்துள்ளேன். அப்படியென்றால் அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் 2009 இல் யுத்தம் முடிவற்றதும் ஆயுதம் எந்தி போராடியவர்கள் யுத்தத்திற்கு தலைமை தாங்கிய படைத்தளபதி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியுடன் அரசியல்வாதியாக செயற்பட முடிகின்றது. இங்கு தேர்தல் திணைக்களத்தனைக் குறை கூறுவதைவிட அத்தகைய வழி முறைகள் இந்த நாட்டில் இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால், கட்சி ஒன்றை விலைக்கு வாங்கி தங்களது பெயருக்க மாற்றிக்கொள்ளும் கலாசாரம் நிலவுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் அரசியலின் அடுத்த கட்ட செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்க முடியும். ஆரம்பமே ஊழல் என்றால் எஞ்சியதை எண்ணிப்பார்க்க வேண்டும். தற்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இது குறித்து விழிப்புடன் செயற்படும் என எதிர்பார்க்கிறேன்.

பாரளுமன்றில் நிலையியற் குழுக்கள், மேற்பார்வைக்குழுக்கள் , இதர குழுக்களில் கட்டாயத்தின்பேரில் பராளுமன்ற உறுப்பினர்கள் இணைக்கப்படுகின்றார்கள். ஆனால், மார்ச் 12 இயக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் சுயேட்சையாகவே இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளோம். இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடத்திற்கு உள்ளாக 26 உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள் எனில் இன்னமும்  பத்து வருடங்களில் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து நல்லதோர் அரசியல் கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்ப முடியும் என நாம் நம்பிக்கை கொள்ள முடியும். பாராளுமன்றிற்குள் மாத்திரம் அல்லாது மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றத்திலும் ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க இந்த இயக்கத்துடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில் ரவோதய அமைப்பின் தலைவர் ஏ.டிஆரியரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி பெல்லன்வில தேரர்,, அங்லிக்கன் திருச்சபையின் பிஷப் அருட்திரு. லெபோராஜ் கனகசபை, எஸ்.ஜி புஞ்சிஹேவா, பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் திருமதி கமலா, பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி உட்பட பலர் உரையாற்றியதுடன் பெருமளவான பல்கலைக்கழக சமூகத்தினர், கலைஞர்கள், அரச உயர்அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கூட்டத்தினைத் தொடர்ந்து  சுதந்திர சதுக்கத்தில் இருந்து நாடாளாவிய  பிரசார நடவடிக்கைகளுக்கான வாகனப்பேரணி ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதுமாக மவாட்டம் தோறும் தூய அரசியலுக்கான பிரச்சாரப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  
Share this post :

+ comments + 1 comments

நல்லதொரு உரை,தாங்கள் எதிர்காலத்தில் நல்ல ஒரு அரசியல் தலைவனாய் வர வேண்டும். வாழ்த்துக்கள்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates