99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 8
யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடந்த வரலாற்றுக் கொடுமைகளைப் பற்றி அதிகமாகப் பேசுபவர்கள், இலங்கைவாழ் இந்தியர்களுக்கு நடந்த கொடுமையை அறியாது, அறிந்தாலும் அது குறித்து பேசாது இருக்கின்றனர். என்றார் போல் கெஸ்பஸ் (Frontier 10.09.1983)
இலங்கையின் வரலாற்றில் ஈழத் தமிழர், மலையகத் தமிழர் ஆகிய இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து தமிழர்களின் போது அரசியல் பிரச்சினையாகவே முன்வைத்து வந்த காலமொன்று இருந்தது. அடிப்படையில் புவியியல் ரீதியில் இருந்த இடைவெளியும், பிரச்சினைகளின் வடிவமும் வெவ்வேறாக இருந்த போதும் பொதுவாக கோரிக்கை வைத்து வந்த காலமொன்று இருந்தது. சனத்தொகையில் தமிழ் மக்கள் 30 க்கும் அதிகமாக இருந்த அந்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் குறைக்க வேண்டுமெனில் அவர்களது பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும். அப்படியாயின் அதற்குரிய குறுக்கு வழியாக சிங்களத் தரப்பு கையாண்டது மலையகத் தமிழரின் அடிப்படை அரசியல் இருப்பில் கைவைப்பது தான். அது வெறும் அரசியல் இருப்பு மாத்திரமல்ல, அவர்களின் வாழ்வாதார பிரச்சினையிலும் தான் அவர்கள் கைவைத்தார்கள்.
1911, 1921, 1931, 1946, 1953, 1963 ஆகிய காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணிப்பீட்டில் இலங்கை தமிழ் மக்களினதும், மலையகத் தமிழர்களினதும் எண்ணிக்கை சமனாகவே இருந்தது. 1911 இல் 1931 இல் மொத்த சனத்தொகையில் 15.4 வீதமாக இருந்த மலையகத் தமிழர் எண்ணிக்கை 1981 இல் 5.5. ஆக ஆகிய அவல நிலையை புரிந்து கொள்வது அவசியம்.
எங்களுக்கு இந்த மக்கள் தேவை இல்லை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கையும், அவர்கள் இலங்கையர்களாக ஆகிவிட்டார்கள் எங்களுக்கும் தேவையில்லை என்று இந்தியாவும் மாறி மாறி சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை அறியாமல் பந்தாடினார்கள்.
“இலங்கையில் பிறந்த இவர்களுக்கு இந்தியாவில் போக்கிடமில்லை. அரை மில்லியன் மக்கள் அரசியல் அதிகாரத்துக்கான விளையாட்டில் பகடைக்காயாக ஆக்கப்பட்டார்கள்.” என்றார் தந்தை செல்வநாயகம்.
சுதந்திரத்தின் பின்னர் டீ.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, ஜோன் கொத்தலாவல, சிறிமா பண்டாரநாயக்க என அனைவருமே இந்திய வம்சாவளியினர் பற்றிய பிரச்சினையில் அவர்களை நாட்டிற்குள் வைத்திருக்க முடியாது என்பதில் மும்முரமாக இருந்தனர், அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தப் பிரச்சினை இலங்கை-இந்திய இராஜதந்திர உறவில் வலுவான பாத்திரமாற்றியது.
இந்தியா வம்சாவளியினரை நாடு கடத்துவதற்கான சிறந்த ஏற்பாடாகவே நேரு - கொத்தலாவல ஒப்பந்தத்தை சிங்களத் தரப்பு பார்க்கின்றது. அது மட்டும் நிகழ்ந்திருக்குமானால் அதன் பின் வந்த விளைவுகளை தவிர்த்திருக்கலாம் என்று சிங்களத் தரப்பு புலம்புவதை ஆங்காங்கு காண முடிகிறது.
நேரு உயிருடன் இருக்கும் வரை அந்த ஒப்பந்தம் உரியபடி நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தப்பட்டது.
1963 இல் சிறிமா சீனாவுடன் செய்துகொண்ட கடற்படை ஒப்பந்தம் இந்தியாவை முகம் சுளிக்கச் செய்தது. இந்திய – சீன எல்லைச் சண்டையிலும் சீன ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை எடுத்திருந்தது. இந்தியாவின் எதிரியை தனது காலடியிலேயே கொண்டு வந்து சேர்த்தது போன்ற சம்பவங்களால் இலங்கையை சரிகட்டும் தேவை இந்தியாவுக்கும் இருந்தது.
நேரு 27.05.1964 இறந்து போனார். அடுத்த ஐந்தே மாதத்தில் அந்த ஒப்பந்தத்துக்கு உயிர்கொடுக்க அதாவது 22.10.1964 இல் சிறிமாவும் டி.பி.இலங்கரத்ன, பீலிக்ஸ்.ஆர்.டி.பண்டாரநாயக்க, என்.கியூ.டயஸ் ஆகிய அமைச்சர்களுடன் இந்தியாவுக்கு விரைந்தார். ஒருவார காலம் அவர்கள் தங்கியிருந்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தி 29.10.1964 இல் செய்துகொள்ளப்பட்டது தான் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம்.
இலங்கையில் நாடற்றவர்களான 9,75,000 பேரில் 525,000 லட்சம் பேருக்கு இந்தியாவும், 300,000 பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 150,000 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என கையெழுத்தானது. உயிரும் உணர்வும்மிக்க மனிதர்கள் வெறும் எண்களாக பங்கிடப்பட்டனர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அவர்களை
என மூக்கூறாக பிரித்து வீசியது.
- இந்தியக் குடியுரிமை பெறுவோர்,
- இலங்கை குடியுரிமை பெறுவோர்,
- நாடற்றவர்கள்
என மூக்கூறாக பிரித்து வீசியது.
ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட இரண்டே மாதங்களில் அரசாங்கம் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் ஆதரவுடன் தோற்கடிக்கபட்டதில் ஆட்சி கவிழ்ந்தது. வாக்களிப்பு நிகழ்வதற்கு சற்று முன்னர் வரை ஆட்சியைக் கவிழ்த்தி விட வேண்டாம் என்று கண்ணீர் மல்க பல உறுப்பினர்களை மன்றாடியவர் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வில்லியம் பெர்னாண்டோ. இப்படி செய்துவிட்டால் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது போய் விடும் எனவே தோற்கடித்து விடாதீர்கள் என்று கெஞ்சியவர் அவர்.
வில்லியம் பெர்னாண்டோ |
வில்லியம் பெர்னாண்டோ
வில்லியம் பெர்னாண்டோ மலையகத்தில் மீண்டும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தொடக்கி விரிவாக்கி மலையக வாக்குகளை பலவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தை 1956 இல் ஆரம்பித்தவர். அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கும் அப்படி குடிஎற்றப்பட்டவர்களின் வாக்குகள் தான் அவருக்கு கைகொடுத்தன. அவர் மலையகத்தில் தொடங்கிய முதலாவது சிங்களக் குடியேற்றம் கிகிலியாமான மலையில் உள்ள “ஷாந்திபுர” கிராமம். அடுத்ததாக “கலாபுரய” என்கிற குடியேற்றத்தை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் சிறிமாவை அவர் வரவழைத்தார். அங்கு பேசிய சிறிமா பண்டாரநாயக்க “மலைநாட்டில் சிங்களவர்களின் எதிர்காலம் நாசமடைந்து போனதன் காரணம் அவற்றில் பெரும்பகுதி அந்நியர் கைக்கு சென்றது தான். அந்த பயங்கரத்திலிருந்து விடுவிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் டி.வில்லியம் பெர்னாண்டோவால் உருவாக்கப்பட்டதால் இந்த விவசாய குடியேற்றத் திட்ட அன்குரார்ப்பனத்தில் கலந்துகொள்வதில் பெருமையடைகிறேன்” என்றார். வில்லியம் இந்த குடியேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டதுடன் அந்தக் குடியேற்றங்களைச் சுற்றி சிங்கள பாடசாலைகள், பௌத்த விகாரைகள், அரச அலுவலகங்கள் என உட்கட்டமைப்பு வேலைகளை அதிகரித்ததுடன் அவற்றுக்கென மேலும் பல சிங்களவர்களை பெருக்கினார். அவர் மேற்கொண்ட குடியேற்றங்கள் பற்றிய பல விபரங்களை கடந்த ஆண்டு 29.02.2016 “திவய்ன” சிங்கள பத்திரிகையில் விரிவான கட்டுரையொன்று வெளியாகியுள்ளது.
அவர் மலையக மக்களுக்கு எதிராக எழுதிய நூல்களில் இரண்டு முக்கியமானவை
- “சிங்களவர்களின் நிலக்கொள்ளை” (සිංහලේ ඉඩම් කොල්ලය)
- “சிங்களவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் மலைநாட்டுக் கனவு” (සිංහලයාගේ අතීතය වර්තමානය සහ අනාගතය සහ කඳු සීනය ) இந்த நூலின் அட்டைப்படத்தில் துட்டகைமுனு எல்லாளனை ஈட்ட்டியால் குத்திக் கொல்லும் காட்சியும், சுமங்கள தேரர் தலதா மாளிகையின் முன்னால் ஆங்கிலக் கொடியை இறக்கும் காட்சியும் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும்.
1960-1965 வரை மாத்திரம் தான் வில்லியம் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1965, 1970 ஆகிய தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 1970 உள்ளூராட்சித் தேர்தலில் நுவரெலிய மேயராக தெரிவு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியினர் தோட்டங்களை கொள்வனவு செய்யுமுன் அவற்றை அரசு சுவீகரிக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை இப்போதே தொடக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இன்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் சிங்களவர்கள் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் கூட மலையக மக்கள் மீது வன்செயல்கள் அடிக்கடி தூண்டிவிடப்படுகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் அவற்றைக் கண்டுகொள்வதுமில்லை. மலையகத்தவர் பீதியுடனும் அச்சதுடனும் வாழும் பல பகுதிகளை இன்னும் பல இருக்கின்றன.
இடதுசாரிக் கட்சிகளின் பல்டி
1965 இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐ.தே.கவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட வேளை முக்கிய இடதுசாரிக் கட்சிகளும் மலையக மக்களுக்கெதிரான இனவாத நிலைப்பாட்டை எடுத்தன. நாடு கடத்துவதை ஆதரித்தன. சிறிமா சாஸ்திரிஒப்பந்த ஏற்பாட்டின் படி தோட்டத் தொழிலாளர்கள் திரும்பிப் போதல் தடைப்பட்டிருக்கிறது என்று விசனப்பட்டு தமது பத்திரிகைகளில் எழுதினர். “மீனாட்சியை வெளியேற்றுமுன் சிறிமாவோ துரத்தப்பட்டுவிட்டார்” என்றும் “இலங்கையை வெற்றி கொண்ட சோழ அரசர்கள் திரும்பிப் போனது போல் தொண்டமானும் இந்தியாவுக்கு திரும்புகிறார்” என்றும் அதே பத்திரிகையில் எழுதின. (ல.ச.ச.க வின் “ஜனதின்” பத்திரிகை 30.03.1965). “டட்லியும்-தொண்டமானும் இரகசிய ஒப்பந்தம்”, “விரும்பியவர்கள் மட்டுமே நாடு திரும்பலாம் என்று உடன்பாடு” என்றெல்லாம் அப்பத்திரிகையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மலையகத்தவர் விடயத்தில் இடதுசாரிக் கட்சிகளின் இந்த அரசியல் திருப்பம் குறித்து குமாரி ஜெயவர்த்தனாவும் தனது “இன வர்க்க முரண்பாடுகள்” நூலில் விளக்கியுள்ளார்.
மலையக மக்கள் தமது அரசியல் இருப்புக்கான வாக்கு வங்கியாக இருக்கும் வரை அவர்களுடன் இருந்த இந்த கட்சிகள் அம்மக்கள் தமது கையைவிட்டு நழுவிய வேளை அம்மக்களின் அடிப்படை இருப்புக்கே உலை வைக்க துணை போனார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துகொள்கிறது.
சிங்கள இனவாதமயப்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் இன்னமும் மலையக மக்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதின் சினத்துடன் தான் இருக்கிறார்கள். மலையகத்தவர் மீதான வெறுப்புணர்வு உரிய தருணங்களில் வெளிப்பட்டும் வருகிறது. சிங்கள இனவாத சக்திகளும் அவ்வப்போது இத விவகாரத்தை தங்கள் அரசியல் லாபத்துக்காக கூர்மைப்படுத்தவும் தவறுவதில்லை. அப்போதே முழுமையாக அனுப்பியிருக்கவேண்டும் என்கிற புலம்பலை இனவாதத் தரப்புக்கு சித்தாந்தத் தலைமை கொடுத்துவரும் நளின் டீ சில்வா, ஹரிச்சந்திர விஜேதுங்க, எஸ்.எல்.குணசேகர போன்றோர் இன்றும் மேற்கொண்டபடி தான் இருக்கிறார்கள். மலையக மக்களுக்கு எதிரான நூல்கள், கட்டுரைகளும் தாராளமாக வெளிவந்தவன்னமும் தான் இருக்கின்றன.
விளைவு
ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே போன்று சாரை சாரையாக கப்பலில் ஏற்றி தூத்துக்குடியிலும் சென்னையிலும் படகு மூலம் இராமேஸ்வரத்திலும் கைதிகள் போல் இந்திய மணலில் இறக்கி விடப்பட்டனர். அப்படி வந்து இறங்கியவர்களுக்கு இந்தியா, தொடர்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையரின் மண்ணில் திக்கு தெரியாமல் திகைத்துத் திரிந்தனர். புதிய சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லால் திண்டாடினர். மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தனர். சிலர் துயரம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
இலங்கையில் இம்மக்களை எப்படி வந்தேறி குடிகள் என்றும், ஆந்நிய இந்தியர்கள் என்றும் பார்த்தார்களோ அதுபோல தமது மூதாதையாரின் தேசத்தில் இலங்கையிலிருந்து வந்த சிலோன்கார வந்தேறிகளாக பார்க்கப்பட்டார்கள். இந்தப் பிரிவினால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பைத்தியக்காரர்களான கதைகளும் உண்டு. இந் நிலைமை இன்னமும் தொடர்கிறது.
லட்சக்கணக்கான மக்களின் குடியுரிமை இல்லாமலாக்கிய சிறிமா நினைத்திருக்க மாட்டார் 1980 இல் தனது குடியுரிமை பறிக்கப்பட்ட வேளை அதுபோன்ற வலியை தானும் தாங்க வேண்டியிருக்கும் என்று. ஆனால் சிறிமாவுக்கு அவரைத் தாங்க மண் இருந்தது. மலையகத்தவர்களைத் தாங்க; வாழ வந்த மண்ணுமில்லை, மூத்தகுடி பந்தமுமில்லை என்றானது.
இலங்கைத் தமிழர்கள் பற்றிய விவகாரங்களைப் பொறுத்தளவில் நேரடியாக சம்பந்தப்பட்ட அம்மக்களின் தலைவர்களுடன் உடன்பாடு காண்பதும் பின்னர் மீறுவதுமாக தொடர்ந்தது. ஆனால் மலையகத் தமிழர் விடயத்தில் அம்மக்களின் தலைவர்களுடன் பேசவே தேவையில்லை என்று கருதினர் சிங்கள ஆட்சியாளர்கள். அம்மக்களுடன் கலந்தாலோசிக்காமல், அவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தியாவுடன் சேர்ந்து சரிகட்டுவதில் ஈடுபட்டது.
துரோகங்கள் தொடரும்...
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்
இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பான கடிதப் பரிமாற்றம்.
இந்தியப் பிரதமர் கடித எண். 446/PMO/64
புது தில்லி
அக்டோபர் 30 1964
மேதகு பிரதமருக்கு
தங்கள் கடித எண் CIT/ICP/62 கிடைக்கபெற்றேன் .கடந்த அக்டோபர் , 1964 , 24 முதல் 30 வரை தினங்களில் நமக்கிடையில் நடந்த இந்திய வம்சாவளி மக்களின் நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பான நமது உரையாடல் சார்ந்து வந்த தங்கள் கடிதம் கண்டேன். அதன் அடிப்படையில் பின்வரும் முக்கிய தலைப்புகளின் கீழ் இணக்கம் தெரிவிக்கிறேன்.
மேற்கண்ட பகுதிகள் நம்மிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை சரியாக விளக்கியுள்ளது. எனது கடிதமும், உங்களது பதிலும் இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அங்கமே.
- இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக அங்கீகாரம் பெறாத, இந்திய வம்சாவளி அனைவரும் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகும்.
- இந்த வகையில் அடங்குவரின் எண்ணிக்கை 1964 இல் 975,000 பேர். இது சட்டவிரோதமாக குடியேறிவர்களையும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர்களையும் உள்ளடக்காது.
- இவர்கள் அனைவருக்கும் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக அங்கீகாரம் வழங்கப்படும். இவர்களுள் 3 லட்சம் பேருக்கு, இயற்கையாக அதிகரிக்கும் மக்கள் தொகை சேர்த்தும், இலங்கை ஏற்றுக் கொள்ளும். இந்தியா 525,000 பேரை இயற்கையாக அதிகரிக்கும் மக்கள் தொகை சேர்த்தும் இந்தியா , இந்திய குடிமக்களாக அங்கீகாரம் வழங்கும்.
- எஞ்சியுள்ள 150,000 பேருக்கு, இரு தரப்பு அரசும் இணைந்து தனியாக வேறு ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தீர்வு வழங்கும்.
- இந்திய அரசு இவர்களை 15 ஆண்டு கால கட்டத்துக்குள் பல கட்ட நிலைகளில் ஏற்றுக்கொள்ளும்.
- மேற்படி பந்தி 3 மற்றும் 5 இன் படி இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரே கால அட்டவணையின் கீழ் குடியுரிமை வழங்கல் மற்றும் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நபர்களின் எண்ணிக்கை சம அளவில் இருக்குமாறு இரு நாடுகளும் பார்த்துக் கொள்ளும்.
- இந்த வகையில் தாய் நாடு திரும்பும் மக்களின் வசதி வாய்ப்புக்களும், வேலை வாய்ப்புக்களும் மற்ற மானிலங்களை ஒத்திருக்க இலங்கை அரசு ஒத்டுழைப்பை வழங்கும். திரும்பிச் செல்லும் காலம் வரை , அவர்கள் பணி வயது எல்லை 55 ஐ எட்டும் வரை அவர்கள் வேலை நீகம் செய்யப் பட மாட்டர்கள்.
- இலங்கை அரசின் பண மாற்றீட்டு வரம்பிற்கு உட்பட்டு அவர்கள் இறுதியாக நாடு திரும்பும் போது அவர்களின் பணியில் கிட்டும் ஓய்வூதியம், நலன் நிதி உட்பட அனைத்து சொத்துக்களையும் இந்தியாவுக்கு கொண்டு செல்ல இலங்கை தடை விதிக்காது. இந்த தொகை ரூபா 4,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று இலங்கை நிர்ப்பந்திக்காது.
- உடனடியாக இரு பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு ஒன்று நாடு திரும்புவோர் பட்டியலையும், மற்றது இலங்கை குடியுரிமைப் பெறுவோரையும் உள்ளடக்கும். ஆனாலும் இதனைத் தயாரிக்க எடுக்கும் காலம் நாடு திரும்புவோர் மற்றும் இலங்கை குடியுரிமைப் பெறும் முன்னதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.
- இந்த ஒப்பந்தம் இந்த நாள் முதல் அமுலுக்கு வருவதுடன் இது தொடர்பாக சிறந்த செயல்பாட்டு முறைகளைக் கொண்ட அரசு இயந்திரத்தினை உருவாக்க இரு தரப்பு அரசு அதிகாரிகளும் உடனடியாக சந்தித்து பேசுவார்கள்.
தங்கள் மேலான கவனத்திற்கு இதை எடுத்துக் கொண்டு, ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.
உங்கள் உண்மையுள்ள
லால் பகதூர் சாஸ்திரி – இந்தியப் பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்க / இலங்கைப் பிரதமர்புது டில்லி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...