Headlines News :
முகப்பு » » அனுஷாவின் அரசியல் பிரவேசம் - ஜீவா சதாசிவம்

அனுஷாவின் அரசியல் பிரவேசம் - ஜீவா சதாசிவம்


இந்தவாரம் முதல் பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரவுள்ள இந்த அரசியல் பத்தி'யின் முதலாவது அங்கத்தில் ஒரு பெண் அரசியல் ஆளுமையாக தன்னை அரசி யலில் கால்பதிக்கச் செய்திருக்கும் இளம் அரசியல்வாதி பற்றி ஆராய்கின்றது.

மகளிர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது அரசியலில் பெண்கள்', 'பெண்களின் அரசியல் பிரவேசம்' பற்றி ஆழமான கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல்லின மக்கள் வாழ்கின்ற அரசியல் சூழல் சற்று வித் தியாசமானதே.

மகளிருக்கான மாதமாக மார்ச் மாதம் அமைவது புதிதான விடயம் அல்ல. என்றாலும் கூட இம்மாதத்தில் அரசியலில் பெண்களின் நிலை பற்றி குறிப்பாக மலையக அரசியலின் நிலை பற்றி இந்தப் பத்தி பேச விழைகிறது. 

சுமார் 15 இலட்சம் மக்கள் கூட்டத்தினரை கொண்ட மாபெரும் பிரதேசமாக மலையகம் இருக்கின்றது. உலகத்திலேயே தொழிற்சங்க - அரசியல் முரண்நிலைத் தன்மை கொண்டதாக இலங்கை மலையகத்தின் 'தொழிற்சங்க அரசியல் செல்நெறியைக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் என பிரதிபலிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழிற்சங்கக் கட்ட மைப்பையே அவை பிரதிபலிப்பனவாக உள்ளன. அவ்வாறு பிரதிபலிக்காத நிலையில் மலையகக்கட்சி அரசியலை மலையகத்தில் முன்னெடுக்க முடியாது என் - பதுதான் நிதர்சனம்.

அந்த வகையில், இந்த தொழிற்சங்கம் சார் அரசியலின் ஊடாக பெண்கள் எவ்வாறு தங்கள் அரசியல் பிரவேசத்தை முன்னெடுப்பார்கள் என்பது சிந்தித்துப்பார்க்க வேண்டியதொன்று. இலங்கையில் ஏனைய p கட்சிகள் மூலமாக பெண்கள் தேசிய அரசியலில் பிரவேசிக்கின்ற பின்புலத்தில் மலையகத்தை பொறுத்த வரையில் அரசியலில் பெண்களின் இ பிரவேசம் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அது மீனாட்சியம்மை ஆரம்பித்து வைத்த பாதையில் செல்லவில்லை என்பது கசப்பான உண்மை. இந்த நிலையிலேயே மலையக அரசியலில் ஆர்வத்துடன் பிரவேசித்துள்ளார் செல்வி அனுஷா சந்திரசேகரன்.

ஆம் மலையக பிரதான தொழிற்சங்கம் சார் அரசியல் கட்சிகளில் ஒன்றாக விளங்கும் மலையக மக்கள் முன்னணியில் ஒரு பெண் ஆளுமை அரசியலில் பிரவேசித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்க விடயம் தான். தனது தந்தை இந்த கட்சியின் ஸ்தாபகத் தலைவர் என்ற நிலையிலும் அவருக்குப்பின்னர் அவரது தாயார் அந்த கட்சியில் தலைவராக செயற் பட்டார் என்ற அடிப்படையிலும் இவரது பிரவேசம் இலகுவான ஒன்றாக அமைந்துவிட்டது. ஆனால், இந்த பிரவேசத்தின் பின்னர் வரும் சவால்களுக்கு அனுஷா எவ்வாறு முகங்கொ டுக்கப் போகின்றார் என்பதுதான் அவருக்கு இப்போது இருக்கின்ற முக்கிய கேள்வி!

மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவுக்கு நேரடியாக உள்வாங்கப்பட்ட இவர் மிகவும் குறுகிய நாட்களில் மிகப்பொறுப்பான பிரதிப் பொதுச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.


கல்விப்புலமையும் அரசியல் அறிவும் செயற்பாடும் கொண்டு நீண்டகாலம் கட்சியில் பணியாற்றிவரும் அனுபவமிக்க பொருளியல்துறை விரிவுரையாளர் (பேராதனைப் பல் கலைக்கழகம்) எஸ். விஜயசந்திரன் வகித்து வந்த பதவியே இப்போது அனுஷாவிற்கு கைமாற்றப்பட்டுள்ளது. அவர் நிதிச்செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே அனுஷா சந்திரசேகரன் அடையப்போகும் அடுத்த பதவி நிச்சயமாக கட்சியின் செயலாளர் நாயகம் என்பது கண்கூடு.

இதற்கு முன்னதான கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்தவர்களைப்பார்த்தால் பி.ஏ.காதர், மு.சிவலிங்கம், எஸ். விஜயகுமார், அ. லோரன்ஸ் ஆகிய நால்வரும் முக்கிய ஆளு மைகள். இதனை நோக்கும் போதே அந்த பதவியின் பெறுமதியை புரிந்து கொள்ளலாம்.

இதில், பி.ஏ.காதர் மலையக பண்பாட்டு இயக்கத்துடன் இயங்கி வந்து அந்த கட்சியை உருவாக்குவதற்காக முன்வந்த ஒருவர். கட்சிக்காக சிறை சென்று பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்டவர். ஸ்தாபக செயலாளர். மு.சிவலிங்கம் எழுத்தாளராகவும், சமூக ஆய்வாளராகவும் இருந்து இப்பதவியை வகித்தவர். எஸ். விஜயகுமார் பெரிய ஆளுமையாக இல்லாத பட்சத்திலும் கூட அமரர் சந்திரசேகரனின் பக்கத்தில் இருந்து அதனுடாக கிடைத்த அனுபவத்தின் ஊடாக செயலாளர் நாயகம் பதவிக்கு வந்தவர். ஒரு அரசியல் சமூக ஆய் வாளராக இருந்து கொண்டே அந்தனி லோரன்ஸும் இப்போது கட்சியின் செயலாளர் நாய கமாக விளங்குகின்றார்.

அனுஷா தற்போது பெற்றுக் கொண்டுள்ள பிரதிப்பொதுச் செயலாளர் பதவி ஒரு பட் டதாரி, சட்டத்தரணி, ஒரு விரிவுரையாளர் என்பதற்கு அப்பால் தந்தை சந்திரசேகரனின் மரபு வழியான அந்தஸ்து மூலம் கிடைத்திருக்கின்றது என்றே கொள்ள வேண்டும். மேற் குறிப்பிட்ட நான்கு ஆளுமைகளும் வைத்திருந்த பெரும் கனதியான பதவியாகவே இது இருக்கின்றது.

தலைமைகளில் இதுவரையில் மூன்று பேர் வரையிலானோர் மாற்றம் பெற்றுள்ளனர். தந்தை சந்திரசேகரனுக்குப் பின்னர் தாயார் திருமதி சாந்தினி சந்திரசேகரனும் இப்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனும் அந்த பதவிக்கு உரியவர்கள்.

அனுஷாவிற்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பதவி, அமரர் சந்திரசேகரனின் மகள் என் பதால் வழங்கப்பட்டுள்ளதே தவிர வேறு எந்தவொரு தகுதியும் மேலதிகமானதாக உடன டியானதாக இல்லை என்றும் கூறலாம்.

இளம் வயதுடையவராகவோ, பட்டதாரியாகவோ இருக்கலாம். ஆனால், அமரர் சந்திரசேகரனின் மகளாக அல்லாத போது இத்தகைய வாய்ப்பைப் பெறுவது சாத்தியமில்லாதது. இத் தகைய அரசியல், குடும்பப் பின்னணி இல்லாத பெண்ணொருவர் கட்சி அரசியலுக்குள் கால்பதித்தால் உடனடியாக இவ்வாறானதொரு பதவிநிலை கிடைக்கப்போவதில்லை.

எனவே அமரர் சந்திரசேகரனின் பின்னணியை நம்பியே இப்பதவி ஒப்படைக்கப்பட்டுள் ளது. அந்த மரபு வழியான ஆளுமையை உறுதிப்படுத்துவதும், ஒரு பெண்ணாக தனது தகுதியை நிலைநிறுத்திக்கொள்வதும் ஒரு பெரிய சவால்தான். அதுவும் மலையக அர |சியல் சூழலில் இ.தொ.கா. போன்ற பாரம்பரிய அரசியல் கட்சியின் ஆதிக்க நிலையினை கருத்தில் எடுக்கையில் இது பாரிய சவாலாகவே அமையும்.

இ.தொ.கா. தவிர மலையகத்தின் ஏனைய பிரதான கட்சிகள் மலையக மக்கள் முன்ன ணியின் தோழமைக் கட்சிகளாக இருப்பது அனுஷாவிற்கு கிடைத்திருக்கும் முக்கிய பலம். அவர் பலமுனை எதிர்ப்புகளை இப்போதைக்கு சந்திக்க நேராது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியில் மலையக மக்கள் முன்னணி பிரதான கட்சி. இங்கு கூட்டணி என்று வரும் போது இந்த மலையக மக்கள் முன்னணியின் ஆளுமைகளை கடந்து அதே போல பலமானவர்களுடன் இணைந்து சமத்துவமாக இயங்க வேண்டிய கட்டாயம் அனுஷாவுக்கு இருக்கின்றது. அதனால் பலத்தை நிரூபிக்கவும் திறமையை காட்டவும் வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்துகின்றது. ஒரு வகையில் இவருக் கான பலவீனத்தைத் தருவதான சூழலும் இந்த கூட்டணியில் நிகழக்கூடும்.

ஏனெனில், மலையக மக்கள் முன்னணியில் உள்ளது போன்ற இன்னும் இரண்டு மடங்கு ஆளுமைகளை அவர் உட்கட்சி சூழலில் சந்திக்க நேரிடுகின்றது. மூன்று கட்சிகளையும் சேர்ந்த அமைச்சர்களான திகாம்பரம், மனோகணேசன், இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினரும் நீண்டகாலமாக மலையக மக்கள் முன்னணியில் பொறுப்பான அரசியல் துறைப் பதவி வகித்து வருபவருமான அ.அரவிந்தகுமார் ஆகியோருடனும், இளம் அர சியல் ஆளுமைகளாக தம்மை வெளிப்படுத்திவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜ், வேலுகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினர் இரா.இராஜாராம் போன்றோரை மூத்த அரசியல்வாதிகளாகக் கொண்டு களத்தில் பணியாற்ற வேண்டிய பொறுப்பு இவருக் குண்டு. எனவே, அப்பாவின் ஆளுமை பலம், அரசியல் கட்சியின் பலம் , அந்த கட்சியில் இருக்கக்கூடிய பதவிநிலை, கூட்டணியின் பலம், கட்சியிலும் கூட்டணியிலும் இருக் கக்கூடிய அரசியல் அனுபவசாலிகளின் பலம் ஆகிய அனைத்தையும் ஒட்டு மொத்தமாக திரட்டி மலையக மக்களுக்கான ஒரு அரசியலை முன்வைத்து செயற்படக்கூடிய பாரிய பொறுப்பும் கடமையும் வாய்ப்பும் அமையப்பெற்றிருக்கின்றது.

தனது தந்தையான அமரர் சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றிய சரத் அத்து கோரள, கே.சுப்பிரமணியம், ஜெயபாரதி, கிருஷ்ணன் போன்ற அரசியல் தொழிற்சங்க அனுபவசாலிகளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புகிடைத்திருப்பதும் பெரியதொரு சந்தர்ப்பமாக உள்ளது. ஒரு சட்டத்தரணி என்கின்ற வகையில் வழமையாக இருந்த மரபு சார்ந்த மலையக அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபட்டதனித்துவம் ஒன்று அனுஷாவிடம் இருக்கின்றது. அவ்வாறான வழியில் வந்தவர்கள் ஒரு சிலர் மாத்திரமே. ஆக, படித்தவர்களின் அரசியல் முன்வைப்பு இப்பொழுது மலையகத்தில் நிகழ்கின் றது, புதிய சிந்தனைகளுடனான அரசியல் வீச்சு வந்திருப்பதாக சொல்லப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் அனுஷாவின் அரசியல் பிரவேசம் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மலையக இளம் சந்ததி பெண்கள் மத்தியில் உருவாகி யிருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் அனுஷாவை நோக்கிக் காத்திருக்கின்றது.

அதனை நிறைவேற்றுவாரா என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும். அந்த இலக்கினை அடைய இந்த ஆரம்ப அரசியல் பத்தி அவரை வாழ்த்துகிறது.

நன்றி - வீரகேசரி

வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஜீவா சதாசிவம் இன்றிலிருந்து வீரகேசரியில் எழுதத் தொடங்கியிருக்கும் அரசியல் பத்தி "அலசல்". வீரகேசரி சங்கமம் பகுதிக்கு பொறுப்பு வகித்து வந்த ஜீவா மலையகத்தில் இருந்து வந்த சிறந்த இளம் ஆளுமை என்றே கூற வேண்டும். இந்த பத்தி அவரது ஆளுமை மிக்க எழுத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.
மலையகத்திலிருந்து ஊடகத்துறைக்கு சமீப காலமாக நிறைய பேர் பங்களிப்பு செய்கிறார்கள். அதுவும் ஆளுமை பெண்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates