எதிர்வரும் ஆம் திகதி மகளிர் தினம்
மார்ச் 8 மகளிர் தினம் என்பது எல்லோருக்கும் தெரியும். எதற்காக இந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கூறுவார்கள். நவீன மனிதனின் அசைக்கமுடியாத ஆதாரம் என்று நம்பப்படும் இணையத்தில் மார்ச் 8 க்கு நூறுவீதமான வரலாறுகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் எது சரி என்று தெரியாததால்தான் மகளிர் தினத்தைக் கொண்டாட பொருத்தமில்லாத வர்கள் எல்லாம் அதனைக் கொண்டாடுகிறார்கள். இலங்கையிலும் கூட அனைத்துத் தரப்பினரும் மார்ச் 8 ஐ கோலாகலமாகக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம்.
இன, மத வேறுபாடின்றி எல்லோருமே எதற்காகக் கொண்டாடுகிறோம் என்பதை அறியாமல் கொண்டாடுகிறார்கள். தொழிலாளர் உரிமை தினமான மே தினத்தை எவ்வாறு முதலாளித்துவ கட்சிகளும் சக்திகளும் தொழிற்சங்கங்களும் குடியும் கூத்துமாகக் கொண்டாடுகிறார்களோ அவ்வாறே மகளிர் தினமும் மாறி விட்டுள்ளதைக் காணலாம்.
உண்மையிலேயே மகளிர் தினத்தைக் கொண்டாடும் அருகதை மலையகப் பெண்களுக்கே உண்டு. தங்கள் உதிரத்தையும், உழைப்பையும் தந்து நாட்டுக்காக தங்களுயிரைத் தாரை வார்க்கும் ஒரு கூட்டமாக மலையக மகளிர் விளங்குகிறார்கள். மகளிர் தினத்தின் மகிமையைத் தெரிந்து உணர்ந்து கொள்ளும்போது இவர்களின் போராட்டம் இன்னமும் அர்த்தமுள்ளதாக மாற இடமுண்டு.
மார்ச் 8 இன் தாற்பரியத்தை இவர்களுக்கு எடுத்துக் கூறும் நிலையில் எமது தலைமைகள் இருக்கிறதா என்பதே பெரும் கேள்விக் குறியாகும். ஆண்டுதோறும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அத்தினத்தின் வரலாறு தலைமைகளுக்குத் தெரியுமா? அடுத்து வரும் ஜூன் மாதம் தொழிற்சங்கங்களுக்கு பலன் தரும் மாதமாகும். சந்தாவுக்கு ஆள் பிடிக்கும் மாதம் ஜூனாகும்.
ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்கள் தான் தொழிற்சங்கங்களுக்கு அறுவடை மாதங்கள். எனவே தத்தமது பலத்தைக் காட்டி தொழிலாளர்களை கவர்ந்திழுக்க மே தின கூட்டத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். அதேபோல்தான் இந்த மகளிர் தினமும் மாறிவிட்டிருக்கிறது. ஏமாறும் அந்தக் காலம் மலையேறிவிட்டது. இன்று மலையகப் பெண்களும் ஆண்களுக்கு நிகராக அறிவில் மேலோங்கி இருக்கிறார்கள். எனவே அவர்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து தங்கள் வாக்கு வேட்டையை நடத்திவிடும் ஒரு வாய்ப்பாகவே தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்கின்றன. கடந்த கால மகளிர் தினங்களின் போது நடந்த கூத்துகளையும் கும்மாளங்களையும் மீட்டுப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பதை உணர்த்தத்தான் சிவனும் சக்தியும் ஓருடலாக காட்சியளிப்பதாகக் கூறுவார்கள். மேலும் கல்வி, நிதி, பாதுகாப்புக்குப் பொறுப்பாக சரஸ்வதி, இலட்சுமி, சக்தி என பெண் தெய்வங்களை உருவகப்படுத்தினார்கள். பெண் தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட எமது சமூகத்தில் எத்தனைபேர் தொழிற்சங்கங்களிலோ அல்லது அரசியல் கட்சிகளிலோ பொறுப்பு வகிக்கிறார்கள். ஓரிருவரை சுட்டிக்காட்டினாலும் அவர்கள் தலைவர்களின் சொந்தக்காரர்களாகவே இருப்பதைக் காணலாம்.
பெண்ணடிமை குறித்துப் பாடிய பாரதியும் பாரதிதாசனும் பிறந்த தமிழ் நாட்டிலும் பெண் தலைமைக்கு இடமில்லை. அத்தி பூத்தாற்போல் ஒரு ஜெயலலிதா இருந்தார். அவரது சரித்திரமும் முடிந்துவிட்டது. மலையகத்தில் மகளிர் தினம் எப்படி கொண்டாடப்படுகிறது? பெண்களுக்கென பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. சமையல் போட்டி, கோலப்போட்டி, தேங்காய் துருவும் போட்டி, அழகு ராணிப் போட்டி, மெல்லிசைப் பாடல் போட்டி மற்றும் குத்தாட்டப் போட்டி என பெண்களுக்கென்றுதொன்று தொட்டு பிரித்தொதுக்கப்பட்ட செயல்களையே இந்த நவீன காலத்திலும் செயற்படுத்துகின்றனர்.
நாடகப்போட்டி, நடனப்போட்டி, கிரிக்கட் போட்டி, கரப்பந்தாட்டப்போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி, மரதன் போட்டி போன்றவற்றை ஒழுங்கு செய்தால் பெண்களும் கலந்து கொள்ள மாட்டார்களா? மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பிரதேச, மாகாண சபையில்
சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும்படி தலைமைகள் வேலை வாங்க முடியாதா? பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி வேலைகள் என்ற பெயரில் நிதிகளைப் பெற போராட்டம் நடத்துவது மட்டும் தான் மக்கள் பிரதிநிதிகளின் வேலையா? நாற்காலிகளையும் கூரைத்தகடுகளையும், தண்ணீர்க் குழாய்களையும் தங்கள் தோட்டக் கமிட்டித் தலைவர்களுக்கு வழங்கும் நிகழ்வுகளை படம் பிடித்து ஊடகங்களில் வெளிவரச் செய்வது மட்டுமே தங்கள் தொண்டாக அவர்களை நினைத்துக் கொள்ள விடக்கூடாது. தலைமைகளின் செலவில் செல்வாக்கைத் தேடிக் கொண்டவர்கள் தலைமை நிலைக்கு பயனுள்ளவற்றை செய்ய வேண்டும்.
மலையகப் பெண்களைக் காட்டி தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் பண்ணும் கோஷ்டிகளும் இருக்கின்றன. கரகாட்டம், காவடியாட்டம், காமன் கூத்து போன்றவைகளை ஆடவைத்து அவற்றை படம் பிடித்து வீடியோ செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி இலட்சக்கணக்கில் நிதி பெற்று சுகபோகம் அனுபவிப்பவர்களும் இருக்கிறார்கள். தலைநகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் உழைக்கும் வர்க்கத்தினருக்காக மகளிர் தினத்தைக் கொண்டாடி மகிழும் கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.
மகளிர் தின விழாக்களுக்கு கூட்டத்தை அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்வது, பகலுணவு வழங்குவது, பணப்பட்டுவாடா செய்வது என பல்வேறு குழுக்களின் திருவிளையாடல்களுக்கும் குறைச்சலில்லை. முதல் நாளே சமைத்த உணவு வழங்கப்பட்டு, பழுதாகி வீதியில் வீசியெறியும் சாட்சிகளையும் காணாலாம். வீடுகளில் சாப்பாட்டைக் காணாதவர்களைப் போல எண்ணி அங்குமிங்கும் அலையவிடுவது, சாப்பிட வசதியான இடமில்லாமல் தெருவோரங்களில் கூட்டம் முடிந்து செல்லும்போது அமர்ந்து சாப்பிட எண்ணுவது, குடிப்பதற்கு தண்ணிரே இல்லாமல் அவதியில் தவிக்கவிடுவது, ஆயிரக்கணக்கானவர்களுக்கு கழிவறை வசதிகளை ஏற்பாடு செய்யாமல் விடுவது என அத்தனை கன்றாவிகளையும் இந்த ஆண்டு விழாக்களிலும் நாம் காணலாம்.
மேடையில் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தலைநகரங்களில் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து கலைஞர்களை அழைத்து வருவார்கள். சினிமா நட்சத்திரங்களைப்போல் அவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டுவார்கள். அதே மேடையில் எமது தோட்டங்களின் பெண்களின் பயிற்சியில்லாத நிகழ்ச்சிகளையும் இடம்பெறச் செய்வார்கள்.
இரண்டையும் ஒப்பிட்டு எமது பெண்களின் திறமையினைக் கேலியும், கிண்டலுமாக மேடையிலேயே பேசுவார்கள். பெண்களின் பிரதிநிதிகள் என ஒருசிலரை சினிமா நடிகைகளைப் போன்ற மேக்கப்பில் கட்அவுட்களை சந்திகளில் நாட்டி வைத்து மகிழ்வார்கள். வருடக் கணக்கில் அந்த கட்டவுட்கள் காட்சியளித்துக் கொண்டிருக்கும். ஸ்ரீபாத யாத்திரை செல்லும் முழு நாட்டு மக்களும் தொழிலாளப் பெண்கள் இவ்வளவு சொகுசாகவா வாழ்கிறார்கள் என பொறாமைப்படும் அளவு இவர்களின் கூத்து அமைந்துவிடும்.
ரஷ்யாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தமை சரித்திரப் பிரசித்தி பெற்றது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் இந்த புரட்சியில் பங்கெடுத்தனர். ரஷ்யாவில் பெட்ரோகிறாட் நகரில் பெண் தொழிலாளர்கள் ஜார் மன்னனுக்கு எதிரான புரட்சியைத் தொடங்கிய நாள் 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும். இந்த நாளை மகளிர் தினத்துக்கான நிரந்தரத் திகதியாக 1921 ஆம் ஆண்டில் நடந்த உலக கம்யூனிஸ்ட் பெண்கள் மாநாடு அறிவித்தது. அதில் இருந்து மகளிர் தினம் மார்ச் 8 இல் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னால் 1908 மே 3 ஆம் நாளை மகளிர் தினமாக சிக்காகோவில் சோஷலிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவு கடைப்பிடித்தது எனவும் இதுவே முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மகளிர் தினம் என்றும் கூறப்படுகிறது.
சோவியத்தில் புரட்சி நடந்து அமைத்த சோஷலிஸ அரசில் பெண்களுக்கான பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்போது லெனின் “பெண்களைத் தாழ்வாக நடத்தும் இழிவான சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை நொறுக்கித் தள்ளிவிட்டோம். கட்டடம் கட்டுவதற்காக மனையைச் சுத்தப்படுத்தி இருக்கிறோமே தவிர இன்னும் கட்டடத்தைக் கட்டிவிடவில்லை” என்றார். இங்கு சட்டங்கள், நிறுவனங்கள் நொறுக்கப்படவில்லை. மனையும் சுத்தப்படவில்லை. எது களம் என்பதே நிர்ணயிக்கப்படவில்லை. அத்தகைய களத்தை உருவாக்குவதே மகளிர் தினத்தில் நாம் எடுக்கும் சபதமாக இருக்க வேண்டும்.
மலையகத்தில் ஜார் மன்னர்களும், ஹிட்லர்களும், இடியமீன்களும் இன்னமும் தங்கள் இராஜ்ஜியங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் கம்பனிகள் நிறுவன ரீதியில் சுரண்டலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக மலையகத்தில் கற்றுத் தேர்ந்த பெண்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொழிற்சங்க அரசியல் தலைமைகளைக் கையேற்க வேண்டும். குறைந்தபட்சம் தோட்டக் கமிட்டித் தலைமை, கோயில் கமிட்டி தலைமைகளையாவது கையேற்க வேண்டும். முன்னுதாரணங்களாக பல தோழியர் மலையகத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மீனாட்சி நடேசய்யர் நல்ல ஓர் உதாரணமாகும். 2017 இல் இருந்து சபதம் மேற்கொள்ள வேண்டும். சோற்றுப்பார்சலுக்கும் சோடாப் போத்தலுக்கும் ஏமாறுபவர்கள் நாங்கள் அல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...