Headlines News :
முகப்பு » » 'மலையக மக்கள் என்பதால்தான் எங்களின் விடயத்தில் அக்கறையில்லையா? - மல்லியப்பு சந்தி திலகர்

'மலையக மக்கள் என்பதால்தான் எங்களின் விடயத்தில் அக்கறையில்லையா? - மல்லியப்பு சந்தி திலகர்

 (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 10) 

பாகம் 9 'பின்னபாருங்கோ' பலரையும் பின்னோக்கிப் பார்க்கச் செய்திருக்கிறது. அந்த அத்தியாயத்திற்கு வந்த பதிற்குறிகளில் சிலதினை மீட்டிப்பார்த்துக்கொண்டே பத்தாம் அத்தியாயத்திற்குள் செல்வோம். 

இந்த தொடரை ஆவலுடன், ஆர்வத்துடன் பிரசுரித்து வரும் 'சூரியகாந்தி' பத்திரிகையின்  பொறுப்பாசிரியர் சிவலிங்கம் சிவகுமாரின் முகநூல் பதிற்குறி இது: 

'காடுகளை அழித்து உயிர்கொடுத்து, பயிர் நாட்டு மலையகம் எனும் தேசத்தை உருவாக்கியவர்கள் என்றுதான் இத்தனை நாளும் அறிந்திருந்தோம். இப்போது என்னவென்றால் இவர்கள் வடபகுதிகளிலும் காடுகளை அழித்து உயிரைக்கொடுத்து விவசாய நிலங்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற வரலாறு இளையோருக்குப் புதியது. வடபகுதியில் குடியேறிய இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய ஆவணம் இதுவரை எவராலும் எழுதப்படவில்லை. இது முக்கியமான தொடர் (முகநூல் மார்ச் 15)

அதேபோல 'கருடன்' இணையத்தள ஆசிரியர் வரதன் கிருஷ்ணா பதிவு செய்திருக்கும் குறிப்பும் இங்கே குறிக்கத்தக்கது. அவர் இப்படி கூறுகிறார்:

'ஒரு அருமையான சரித்திர தொடராக இருக்கிறது. இந்த பதிவில் எந்த மாற்றத்தையும் சொல்ல முடியாது. அந்த வன்னி நிலப்பரப்பில் நானும் நீண்ட பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன். உண்மையில் இந்த தொடர் ஒரு கருவாச்சி காவியமாக உருப்பெற வேண்டும். (முகநூல் மார்ச் 15). 

வரதன் மலையகத்தையும் தழுவியதான விடுதலை இயக்கமான ஈரோஸ் இயக்க செயற்பாட்டாளராக இருந்தவர். பி.ஏ.காதர் சிறையிலிருந்த காலத்தில் இவரும் சிறையிலிருந்தவர். எனவே இந்த வன்னி- மலையகத் தொடர்புகள் பற்றிய அவரது பதிவுகள் இந்த தொடருக்கு வலுசேர்ப்பன.

இதே கருத்தினை ஒட்டியதாக நமது மலையகம்.கொம் இணையத்தள ஆசிரியர் என்.சரவணன் மின்னஞ்சல் வழி செய்தியாக அனுப்பிய பதிற்குறியில் 'பல்வேறு புதிய தகவல்களுடன் தொடர் சென்றுகொண்டிருக்கிறது. இதனை நூலுருவாக்கும் எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள்' என அன்பாகக் கேட்டிருந்தார். 

உண்மையில்  இந்தத் தொடர் நூலுருவாக்கம் பெற வேண்டியது என்பதை மூன்று செய்தி ஆசிரியர்கள் அனுபவமிக்கவர்கள் பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தருகின்றது. ஆய்வுக்கட்டுரை என்ற அடிப்படையில் சில இடங்களில் விஞ்ஞானபூர்வ தன்மை குறைவாக இருப்பதாக நான் உணர்கிறேன். இருந்த போதும் ஆரம்ப கட்டத்தில் தகவல்களாகச் சொல்லிச் சென்று அடுத்து நூலுருப் பெறும்போது அந்த குறைபாடுகளை நீக்க எண்ணுகிறேன். அதற்கு வாசகர்களின் பதிற்குறிகளாக் நான் எழுதிச்செல்லும் விடயங்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் குறிப்புகள் இருந்தால் பகிர்ந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். (அத்தகைய ஆவணங்களை 'சூரியகாந்தி' அலுவலகத்திற்கே அனுப்பிவைக்கலாம். பிரதி செய்துகொண்டு மீளவும் கையளிக்கப்படும்)

உதாரணமாக வட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மானம் எனும் அத்தியாயத்தில் நான் குறிப்பிடுகின்ற 'ஹட்டன் தீர்மானம்' வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம். அது தொடர்பில் அந்த தீர்மானம் நிறைவேற்றுதலுடன் பங்கேற்றுக்கொண்ட சிலர் உயிரிழந்திருந்தாலும் பலர் வாழ்கிறார்கள். சமூக இயக்கத்தில் இணைந்திருப்பவர்களாகவும் உள்ளார்கள். அந்த மாநாடு இடம்பெற்ற இடமும் தெரிகிறது. திகதியும் ஆவணமும் மாத்திரமே அவசியமாகிறது. 

இதுதொடர்பில் நான் அறியக்கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் எழுத்தாளர் மு.சிவலிங்கத்திடம் இருந்து அவர் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் உப பீடாதிபதி வ.செல்வராஜாவும் அந்த தீர்மானம் நிறைவேற்றலில் பங்கேற்றுக்கொண்டார் என்கிற செய்தியையும் சொல்லியுள்ளார். இந்த இருவரும் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் என்ற வகையில் 'ஹட்டன் தீர்மானம்' குறித்த முக்கியமான பதிவினை அவர்களின் நினைவுப்பெட்டகத்தில் இருந்து எழுதவேண்டிய வரலாற்று கடமை இருக்கிறது. பல தடவை பகிரங்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்து வருகிறேன். 

அண்மையில் , லன்டன் சென்றிருந்த போது மலையக மக்கள் முன்னணி ஸ்தாபக செயலாளர் நாயகம் பி.ஏ.காதருடன் அதிகமாகவே உரையாடக் கிடைத்தது. அந்த உரையாடல் 'ஹட்டன் தீர்மானம்' தொடர்பில்  பல்வேறு முன்னேற்றங்களைத் தந்தது. அவர் பகிர்ந்துகொண்ட பல விடயங்களை இதற்கு முன்னதான அத்தியாங்களில் சேர்த்திருந்தேன். அவரும் நானுமாக லன்டனில் அவரது இல்லத்தில் இருந்த நூலகத்தில் ஒரு தேடுதலை நடாத்தியும் உரிய ஆவணம் கிடைக்கவில்லை. அவர் சிறைவாழ்வு புலப்பெயர்வு மாறிச்சென்றதில் கை நழுவியிருக்கலாம். 

ஆனாலும் தனது நினைவுப்பதிவுகளில் இருந்து அவர் கூறிய சில விடயங்கள் 'ஹட்டன் தீர்மானம்' தொடர்பிலான சில பெயர்களும் சம்பவங்களும் ஹட்டன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட  திகதியையும் ஆவணத்தையும் பெறுவதற்கான ஆர்வத்தைத் தந்துள்ளது. பி.ஏ காதரின் கூற்றுப்படி அ.லோரன்ஸ் (மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம்) ஆசிரிய போதனாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான தேவசிகாமணி ஆகிய இருவரும் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்வதில் தீவிர அக்கறை காட்டியதாக சொல்கிறார். 

அதேநேரம் பத்தனை பகுதி ஆசிரியர் சமூக ஆர்வலர் டேவிட் மற்றும் கண்டியில் இருந்து இடம்பெயர்ந்து  கொட்டகலையில் வாழ்ந்த பிரான்ஸிஸ் ஆகியோரிடத்தில் இந்த ஆவணம் இருக்கக் கூடும் என்பதாகவும் சொல்கிறார். அதேநேரம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸி ல் பிரசுர பகுதிக்கு பொறுப்பாக இருந்த நாகலிங்கம்   என்பவரால் தன்னார்வமாக இந்த கையேடு அச்சிடப்பட்டு பகிரப்பட்டதாகவும் காதர் தெரிவிக்கின்றார். 

தேவசிகாமணியும் பிரான்ஸுசும் மறைந்துவிட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினர் நான் குறிப்பிடும் இந்த ஆவணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அவர்களது நூல் சேகரிப்பில் சிறிது நேரத்தைச் செலவழிப்பார்கள் எனின் அது கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதேநேரம் அந்த ஆளுமைகளின் வரலாற்று முக்கியத்துவமும் பதிவுக்குள்ளாகும் என நம்புகிறேன். 

இந்த ஆவணம் மற்றும் விவாதங்கள் கூட்டங்கள் சம்பந்தமாக இடம்பெற்ற இன்னுமோர் சுவாரஷ்யமான நிகழ்வும் இங்கு எழுதிச் செல்வது பொருத்தமானது. ஹட்டன் தீர்மானம் தொடர்பான விவாதங்கள் பல இடங்களில் இடம்பெற்றபோது யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றமை பற்றியும் அதில் மாவை சேனாதிராஜாவும் (தற்போதைய தமிழரசு கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்) பி.ஏ.காதரும் விவாதித்திருந்தமை பற்றியும் கூட கடந்த அத்தியாங்களில் குறிப்பிட்டிருந்தேன். 

இந்த விவாதத்தின்போது காதர் என்பவர் மலையகம் குறித்தும் மலையகமே எங்கள் தேசியம் என்பது தொடர்பிலும் விவாதித்திருக்கிறார் என கேள்வியுற்று அப்போதைய இளம் அரசியல்வாதியான வீ.புத்திரசிகாமணி காதர் பற்றிய விபரங்களைக் கேட்டு யாழ்ப்பாணத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதன்படி நுவரெலியாவில் இடம்பெற்ற கூட்டத்திற்கு வருகைதந்த பி.ஏ.காதர் தான் ராகலையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும்  ராகலையில் இருந்துதான் யாழ்ப்பாணம் சென்று பேசியிருக்கிறார் என்கிற செய்தியும தெரியவந்திருக்கிறது. இந்த தகவலை இப்போதும் அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டில் பங்குகொள்ளும் முன்னாள் அமைச்சர் வீ.புத்திரசிகாமணியும் உறுதிப்படுத்தினார். 

அத்தகைய ஒரு கூட்டத்திற்காக புத்திரசிகாமணி ஏற்பாடு செய்திருந்த நுவரெலியா நகரில் இடம்பெற்ற பேரணி தொடர்பான நிழற்படங்கள் அவரிடம் இருக்கின்றது. அதில் நாம் மலையகத் தேசியத்துக்கு உரியவர்கள் என்கின்ற பதாகைகளை ஏந்திச்செல்வது போன்ற நிழற்படங்கள் மிக முக்கிய ஆவணமாகிறது. 

இந்த நிழற்படங்களுடன் வீ.புத்திரசிகாமணியின் அரசியல் பயணப்பதிவுகளைப் பதிவு செய்யும் பெ.ஸ்ரீதரன் தொகுத்த 'மலையக தேசியம்' எனும் பத்திரிகை செய்திகளின் தொகுப்பு நூல் முக்கியமானது. 

குறித்த காலப்பகுதிகளில்தான் இலங்கை ஆசிரிய சங்கத்தில் உப செயலாளராக பொறுப்பேற்றிருந்த பி.ஏ.காதர் அவர்களுக்கும் ஆசிரியராக இருந்த வி.டி.தர்மலிங்கம் அவர்களுக்கும் கூட தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் மலையக வெகுசன இயக்கத்தின் தேற்றமும் பின்னாளில் இந்த உரையாடல்களின் தொடர்ச்சி மலையக மக்கள் முன்னணி என்கிற கட்சியின் உருவாக்கத்தில் எத்தனை செல்வாக்கு செலுத்தி இருக்க முடியும் என்பதை உணரக்கூடியதாக இருந்திருக்கின்றது. 

இன்றைய நாளில் ஏன் வட்டுக்கோட்டை தீர்மானம்போல் அமைந்த ஹட்டன் தீர்மானத்தின் ஆவணம் அவசியமாகிறது எனில் மலையகத் தேசியம் கூர்மைப்பெற்று நாம் 'மலையகத் தமிழர்' எனும் அடையாளத்தை அரசியல் ரீதியாக உறுதி செய்யும் காலம் இப்போது சூழ்கொள்கிறது. ஆனால், அதனை ஏற்க மறுக்கும்,  மலையகத் தமிழ் மக்களை தனித்தேசிய இனமாக அங்கீகரிப்பதை தவிர்க்கச்செய்யும் தரப்புகள் தங்களது காழ்ப்புணர்வுகளை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் தமிழ் மிரர் ஆசிரியர் மதனின் 'தணிக்கை தகர்க்கும் தனிக்கை' நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்த 'இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிகராக மலையகத் தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான்.

 இதனை ஏற்றுக்கொள்கின்றபோதுதான் இலங்கையின் முழுமையான தேசிய பிரச்சினை சரியான தீர்வினை நோக்கியதாக இருக்கும்' என்கிற அவரின் கூற்றினை ஏற்றுக்கொள்வதில் சிலருக்கு சிக்கல் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் கடந்தவாரம் முழுவதும் அமைச்சர் மனோகணேசனின் பதிவுகளில் மலையக தேசியம் குறித்த விவாதத்தினை அதிகம் அவதானிக்கலாம்.

எனவே மலையகத் தமிழர் மலையகத் தேசியம் சம்பந்தமான உரையாடல் இன்று, நேற்று உருவானதல்ல அதற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது என்பதனைக் காட்ட வேண்டிய தருணத்தில் 'ஹட்டன் தீர்மானம்'  தொடர்பான ஆவணங்கள் அவசியமாகின்றன. ('வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான ஆவணம்' இங்கே இணைக்கப்படுகின்றது). 

எனவேதான் இந்த தொடரின் விஞ்ஞான பூர்வதன்மை தொடர்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தேன். ஆவர்வமுள்ள வாசகர்கள் யாராயினும் இதுவிடயத்தில் பங்கேற்க முடியும்.

எது எவ்வாறொனினும் வாழும் ஆவணங்களாக அவ்வப்போது சிலர் தங்களது பதிற்குறிகளை தருவது இந்த தொடரை இன்னும் விரிவானதாக எடுத்துச்செல்ல வாய்ப்பாக அமைகிறது. 

பழ.நாகேந்திரன் எனும் முகநூல் பதிவர் இந்தத் தொடரின் 'பின்னபாருங்கோ' பகுதியயை வாசித்துவிட்டு தன்னை மலையக வம்சாவளி தமிழராக வன்னியில் வாழ்பவராக அறிமுகம் செய்துகொண்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 

'காந்தியத்தின் மூலமாக குடியேற்றப்பட்டவர்கள் வடக்கு – கிழக்கின் எல்லைக்கிராமங்களில் யானைக் காவலாளிகளாகவும் குடியேற்றங்களைத் தடுக்கும் அரண்களாகவுமே தொடக்க காலங்களில் செயற்பட்டு வந்துள்ளனர். அவர்களைக் குடியேற்றிய பகுதிகளைப்பார்த்தால் வளமான நிலமாக இருந்தாலும் நீர்ப்பாசன வசதியோ நிலத்தடி நீர்வசதியோ இருக்காது. நீர் வசதி இருந்தால் பயிரச்செய்கைக்கு உதவாத மண்ணமாக இருக்கும்'. 

'மலையகத்தில் இருந்து செல்வச் செழிப்புடன் இங்கு குடியேறி காணிகளை வாங்கி விவசாயம் செய்தவர்களும் இருக்கிறார்கள். 
பல்வேறு கால கட்டத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு வடக்கில் குடியேறியவர்கள் பெரிய முதலாளிகளின் கூலிகளாகவே வாழ்வை ஆரம்பித்தனர். கூலிகளாக வேலை செய்துவிட்டு சம்பளம் கேட்டபோது 'கள்ளத்தோணி' என காவல்துறையில் பிடித்துக்கொடுத்த கதைகளும் உண்டு'. (முகநூல் மார்ச் 15) 

இந்த வாக்குமூலம் முன்னைய அத்தியாத்தில் இந்தியாவில் அகதியாக வாழும் செல்லையா கொடுத்த வாக்குமூலத்திற்கு சமமானது. அவரது வாக்கு மூலத்தின் வீடியோ பதிவு www.namathumalayagam.com  இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

இளம் சமூக ஆய்வாளரான ஏ.ஆர். நந்தகுமார் இதற்கு இவ்வாறு பதிற்குறியிட்டிருந்தார்:

'வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் தங்களுடைய தேவையை உணர்ந்து 'வடமாகாண மலையக மக்கள் ஒன்றியம்', 'கிழக்கு மாகாண மலையக மக்கள் ஒன்றியம்' என அமைப்பு ரீதியாக தற்போது தங்களுடைய பிரச்சினைகளை முன்வைக்கும் வேளை இவ்வாறானதொரு பதிவு மேலும் விழிப்படையச்செய்யும் என்பதில் ஐயமில்லை. இனமோதல்களில் இடம்பெயர்ந்த அவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்ததுடன் தங்களுடைய வாழ்வாதாரங்களுக்காக இன்றும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். நாங்கள் எங்கு இருப்பினும் எங்கள் இன இருப்பைப் பேண போராட வேண்டியிருக்கின்றது' ( முகநூல் மார்ச் 15)

நந்தகுமாரின் இறுதி வரிகளுக்கு கட்டியம் கூறுமாப்போல் 'மலையக மக்கள் என்பதால்தான் எங்களின் விடயத்தில் அக்கறையில்லையா? ' - அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் பன்னங்கண்டி (கிளிநொச்சி) மக்கள் கேள்வி எனும் தலைப்பில் தினக்குரல் நாளிதழ் 17-03-2017 செய்தி வெளிட்டிருக்கின்றது. (இணைக்கபட்டுள்ளது). 
பன்னங்கண்டி கிராமத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இதுபோன்ற பல வன்னிக்கிராமங்களில் மலையகப் பின்புலங்களையும் அறிந்துகொள்ள அடுத்து வரும் அத்தியாயங்களை வாசிப்போம்.

 மட்டக்களப்பில் பன்சேனை எனும் எல்லைக்கிராம பகுதிகளில் 350 மலையகத் தமிழ் குடும்பங்கள் அரண்களாக குடியேற்றப்பட்டு அப்படியே அத்திப்பட்டிபோல அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியையும் பொறுப்பு வாய்ந்த ஒருவரூடாக அறியக்கிடைத்தது. இதுபோன்ற இன்னும் பல கிராமங்கள் பற்றிய பதிவுகளை வாசிகக் காத்திருங்கள்.

 அதுவரை தலைப்பை மீண்டும் வாசிக்க... (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய்க்கு)


நன்றி - சூரியகாந்தி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates