Headlines News :
முகப்பு » » மீனாட்சியம்மாள் நடேசய்யர்: இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல் லெனின் மதிவானம்

மீனாட்சியம்மாள் நடேசய்யர்: இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல் லெனின் மதிவானம்

திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர் மறைந்து சுமார் எழுபத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த கால இடைவெளியில் மலையக சமூகத்திலும் இலங்கையிலும் உலகிலும் எண்ணரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது என்றும் இல்லாதவாறு வரலாற்று ஆய்வும் விஞ்ஞானபூர்வமான பார்வைகளும் பல்வேறு விதங்களில் வளர்ந்துள்ளன. ஆயினும் இலங்கை சமூக அரசியலில் - இலக்கிய வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய: இலங்கையில் சமூக மாற்றத்தின் முதல் பெண்குரலாக விளங்கும் மீனாட்சியம்மாள் குறித்த ஆய்வுகளும் தொகுப்புகளும் மிக குறைவாகவே காணப்படுகின்றன. 

அம்மையாரின் சமூக பணிகள் பற்றியும் கோ. நடேசய்யரின் சமூக அரசியல் பணிகளுக்கு அம்மையார் ஆற்றிய பங்களிப்புகள் பற்றியும் கட்டுரைகளும் குறிப்புகளும் ஓரளவு வெளியாகியுள்ளன என்பது உண்மையே. கலாநிதி குமாரி ஜயவர்தனா அவர்களே நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதியினரின் பங்களிப்பை முதன் முதலாக வெளிப்படுத்தியர் என்பதை அறிய முடிகின்றது.  மலையக இலக்கிய முன்னோடியான ஸி. வி. வேலுப்பிள்ளை தினகரனில் (1958-1959) மலைநாட்டுத் தலைவர்கள் பற்றிய தொடரான விவரணத்தை எழுதி வந்திருக்கின்றார். அவ்விவரணத்தில் கோ. நடேசய்யர், சிவபாக்கியம் குமாரவேல், கோகிலம் சுப்பையா முதலானோர் பற்றி எழுதியிருப்பினும் மீனாட்சியம்மாள் பற்றி அவ்விவரணத் தொடர் அக்கறை செலுத்தாமை ஒரு துரதிஸ்டவசமானதொரு அம்சமாகவே படுகின்றது. அண்மையில் மு. நித்தியானந்தன் எழுதிய கூலித்தமிழ் என்ற நூல் வெளிவந்தது. மலையகத்தின் வேர்களைத் தேடிப் பயணிக்கின்ற அந்நூலில்; கணிகையர் குல வரலாற்றை எழுதிய அஞ்சுகத்தை மலையகத்தின் முதல் பெண் ஆளுமையாக குறிப்பிடுகின்றார். அஞ்சுகம் கொழும்பில் வாழ்ந்தவர். அவ்வாறே  சில காலம் யாழ் - கைதடியில் வாழ்ந்ததாகவும் அறிய முடிகின்றது. இவரை பெண் முன்னோடியாக முன்னிறுத்தும் பார்வை, மலையகத்தில் சமூகமாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்துத் தந்த  மீனாட்சியம்மாள் அம்மையாரின் சமூக பங்களிப்புக்களை நிராகரிப்பதாக அமைந்து காணப்படுகின்றது. திரு. சாரல் நாடன் கோ. நடேசய்யரின் பங்களிப்புகள் பற்றி ஆய்வு செய்த சந்தர்ப்பங்களிலும் சரி மற்றும் மீனாட்சியம்மாள் குறித்து எழுதிய 'மலையக விடிவெள்ளி கோ.நா.மீனாட்சியம்மாள்" என்ற நூலிலும் சரி  ஒரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னால் இருக்கும் பெண்ணாகவே அம்மையாரை  நோக்குகின்றார். அம்மையாரின் தனித்துவமான ஆளுமை வெளிக்கொணரப்பட்டதாகத் தெரியவில்லை. பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அம்மையாரின் ஆளுமையை பெண்ணிய நோக்கில் ஆராய்ந்து வெளிக் கொணர்கின்றார் என்ற போதினும், சமூக விடுதலையை  விட்டுப் பிரிந்த பெண்ணிய நோக்கு இவ்வாய்வை பலவீனப்படுத்தவும் தவறவில்லை என்பதனையும் அறிய முடிகின்றது. பேராசிரியர். செ. யோகராசா அம்மையாரின் கவிதைகளை ஒப்பியல் நோக்கில் அணுகி இலங்கையின் முதலாவது பெண் கவிஞர் எனக் குறிப்பிடுகின்றார். இதற்கான ஆதாரங்களையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இவ்வாறே திருவாளர்கள். மு.நித்தியானந்தன், அந்தனி ஜீவா, லெனின் மதிவானம்  திருமதி. பத்மா சோமகாந்தன்  ஆகியோர் இவர் பொறுத்த முக்கியமான தகவல்களை வெளிக் கொணரும் வகையிலான கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

காலத்தின் பின்னணியில் அம்மையாரை ஆராயவும் மதிப்பிடவும் அம்மையாரின் பங்களிப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் முதலில் அவரது ஆக்கங்கள் யாவும் முறையாக தொகுக்கப்படல் வேண்டும். அது இலகுவான காரியமன்று. மலையகம் தொடர்பிலான ஆவணக் காப்பகம் ஒன்று இல்லாத நிலையில் வெறும் சுவடிகள் திணைக்களத்தை மாத்திரமே நம்பியிருக்க வேண்டியதாகின்றது. இத்திணைக்களத்தில் மிகப் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற ஆவணங்களை பரிசிலிப்பதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் மற்றும் சில ஆவணங்கள் இல்லாதிருப்பதில் ஏற்படக் கூடிய தவறுகள் அனைத்தும் இந்தச் சேகரிப்பு முயற்சியில் தாக்கம் செலுத்தக் கூடிய காரணிகளாக அமைந்திருக்கின்றன. இந்நிலையில் மீனாட்சியம்மாளின் எழுத்துக்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அதுவரை நாம் காத்திருக்கவும் முடியாது. எனவே இருப்பவற்றை வைத்துக் கொண்டு இவ்வாய்வுகளை செய்ய வேண்டியுள்ளது. மேலும் தகவல்கள் கிடைக்குமாயின் அவற்றை அடுத்து வரும் ஆய்வுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டியே உள்ளது. எல்லாவற்றையும் தொகுத்த பின்னர்தான் இது பற்றிய ஆய்வுகளையே தொடர வேண்டும் எனச் சட்டம் போடுவது, இருப்பதையும் இல்லாதாக்குகின்ற முயற்சியாகவே படுகின்றது. அவ்வாறே திரும்பத் திரும்ப ஒன்றையே செய்யும் முயற்சியாகவும் அவ்வாய்வுகள் அமைந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். 

இலங்கையின் மலையகத்தில் சமகால நிகழ்ச்சிப் போக்குகளை அவதானிக்கின்ற போது ஈழத்தவரின் நவீன இலக்கியங்களுக்குப் பின்னணியாக நிற்கும் வரலாற்றை நோக்கும் பொழுதும், அதற்குப் பின்னணியாக இருக்கும் வரலாற்றை நோக்கும்பொழுதும், இந்நாட்டின்; சமூக பொருளாதார அரசியல் கலாசார எழுச்சிகளை நோக்கும் பொழுதும் மீனாட்சியம்மாள் பற்றிய சிந்தனைகள் எழுவது தவிர்க்க முடியாததொன்றாகின்றது. அம்மையார் அரசியலிலும் பண்பாட்டுத் தளத்திலும் இயங்கிய காலம் நமது அரசியல் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் கடும் சோதனைக்குட்பட்ட காலமாக இருந்தது. 

இலங்கையின் வட-கிழக்கில் இலங்கைத் தேசியமே முக்கிய செல்நெறியாக காணப்பட்டது. பிரித்தானிய காலணித்துவம் யாழ்ப்;பாண சமூகத்தினரிடையே கல்விக்கான வாய்ப்பை விரிவுப்படுத்தி இருந்தமையால் நிர்வாக உத்தியோகத்தில் பெரும் பகுதியை யாழ்ப்பாணத்தவர்களே தமதாக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. பிரித்தாளும் தந்திரோபாயத்துடன் இத்தகைய வாய்ப்புகள் விஸ்தரிக்கப்பட்டமையால் இவர்களிடையே இலங்கைத் தேசிய உணர்வே மேலோங்கியிருந்தது. அதேவேளை, சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் வட-கிழக்குச் சார்ந்து எழுந்த இலங்கைத் தமிழ்த் தேசியம் ஏகாதிபத்தியத்திற்கு காட்டிக் கொடுக்கும் குணாதிசயத்துடன் வளர்ந்தது. மறுப்புறமாக, தமிழ் இடதுசாரிகள் பண்னை அடிமைத்தனமான சாதிய முறைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இவ்வம்சம் அன்றைய வரலாற்றுத் தேவையை நிறைவு செய்யும் ஒரு அம்சமாகக் காணப்பட்டது.  அன்றைய காலப் பகுதியில் முனைப்புற்று வந்த தமிழின ஒடுக்கு முறை குறித்து மார்க்சிய இடதுசாரி முற்போக்கு சக்திகள் கவனத்திலெடுக்கத் தவறியமை வரலாற்றில் ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்பதன் மறுப்பக்கத்தில் தமிழின ஒடுக்கு முறைக்கு எதிராக போராடுதல் என்ற அம்சத்தினையும் இணைத்து முன்னெடுத்திருப்பார்களாயின் தமிழ் ஜனநாயக சக்திகளின் ஒரு பகுதியேனும் வென்றெடுத்திருக்க முடியும்.  இது இவ்வாறிருக்க தமிழரசுக் கட்சி தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான விழிப்புணர்வை கொண்டிருந்த போதினும் - முற்போக்கான பார்வையை கொண்டிருந்த போதினும்,   அதில் அங்கம் வகித்த தலைவர்களின் பழைமைவாதச் சிந்தனைகளின் காரணமாக சாதியத்திற்கு எதிரான விழிப்புணர்வைக் கொண்டிருக்கத் தவறிவிடுகின்றனர். இதன் காரணமாக இவ்வகையான அமைப்புகள் பிற்போக்குவாதிகளின் கூடாரமாக மாறி இறுதியில் சிதைந்து சின்னா பின்னமாகியது.

இந்நிலையில் சிங்கள இடதுசாரிகளின் நிலைப்பாடு எத்தகையதாக இருந்தது என்பதும் சுவாரசியமான கேள்விதான். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வைக் காத்திரமாக முன்னெடுத்த சிங்கள இடதுசாரிகள் தமிழின ஒடுக்குமுறைக்கெதிரான உருப்படியான எந்த விமர்சனத்தையும் முன்வைக்கத் தவறியிருந்தனர். இத்தகைய ஒரு வரலாற்றுச் சூழலில்தான் அம்மையாரின் அரசியல் பிரவேசமும் இடம்பெறுகின்றது. 

மலையக மக்களிடையே பாரதியாரின் பாடல்களையும் கூடவே தாம் மலையக மக்களின் விடுதலை சார்ந்து எழுதிய பாடல்களையும் பாடி தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தம்மை இணைத்துக் கொண்டு செயற்பட்ட அவர் பேரினவாதத்தை அரசியல் அரங்கில் சரியாக அடையாளம் கண்டு அதற்கு எதிராகவும் போராடத் தொடங்கினார். மேல்வரும் வரிகள் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும்.

லங்கா மாதா நம்ம தாய் தான் - இந்த 
நாட்டினி லெல்லோரும் அவளுக்குச் சேய் தான்

என மலையகத்தவர்களை இம்மண்ணுக்குரிய மைந்தர்களாகப் பார்க்கின்ற அவர் இம் மக்கள் மீதான பேரினவாத அடக்கு முறைகளுக்கு எதிராகவும் அவர் கவித் தீ உமிழத் தவறவில்லை என்பதை மேல்வரும் வரிகள் உணர்த்தி நிற்பதைக் காணலாம். 

சிங்கள மந்திரிகள் கூற்று மிக 
சீருகெட்டதென்று சாற்று
சங்கடமே நேருமென தோற்று திந்திய 
சமூகம் நெருப்பாய் வரும் காற்று 

நன்றிகெட்டு பேசும் மந்திரி மாரே உங்கள்
நியாயமென்ன சொல்லு வீரே
இன்றியமையாத வொரு போரே செய்ய
இடமுண் டாக்குகிறீர் நீரே

இவ்வகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் இனவாதியாக அல்லாமல், சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான சிந்தனையை அரசியல் தளத்தில் முதன் முதலாக முன்வைத்தவர்கள் கோ. நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளாவர். 

இத்தகைய தெளிவான -தீட்சண்யமான பார்வையைக் கொண்டிருந்த அம்மையாரின் செயற்பாடுகள் குறிப்பிட்ட மத்தியதர வர்க்கத்தோடு மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் பரந்துபட்ட மக்கள் குறித்ததாக வேர் கொண்டு கிளைபரப்புவதாக அமைந்திருந்தமை அவரது தனித்துவமான அம்சமாகும். 
டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட விவாதத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு எதிரான கருத்துக்கள் சேர்.பொன்.இராமநாதன் முதலானோரால் முன்வைக்கப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பெண்களின் வாக்குரிமைச் சங்கம் என்ற அமைப்பு லேடி டேஸி  பண்டாரநாயக்காவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பில்  திருமதிகள். நல்லம்மாள் சத்தியவாகீஸ்வர ஐயர்,  ஈ.ஆர். தம்பி முத்து முதலிய தமிழ் பெண்களும் அங்கம் வகித்தனர். மீனாட்சி அம்மையார் இவ்வமைப்பில் அங்கத்துவம் பெறவில்லை என்ற போதினும் பெண்களின் வாக்குரிமையை ஆதரித்து பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இச்சங்கம் குறித்த அம்மையாரின் பார்வை இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தது.

“இச்சங்கமானது டொனமூர் கமிஷன் இலங்கைக்கு வந்த காலத்தில் ஆரம்பிக்கப் பெற்றதெனினும் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இச்சங்கத்தினர் இதுவரை செய்துள்ள வேலை எப்படியிருந்த போதிலும் இனித்தான் அதிக வேலைசெய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேற்படி சங்கத்திற்கு வருஷ சந்தா ரூபா 50 ஆக வைத்திருக்கின்றபடியால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் சேர்ந்துழைக்க வசதியிராது. பணம் படைத்தவர்கள் மாத்திரம் தங்கள் காரியத்தைச் செய்துமுடிப்பது போதுமானதாகாது. எல்லாச் சகோதரிகளும் கலந்துழைக்க வேண்டிய வேளையில் பணம் படைத்தவர்கள் மாத்திரம் தலையிடுவதைக் கொண்டு அதிக பலன் கிடையாது. ஆகவே சகோதரிகள் தாங்கள் கொண்ட காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால் ஆங்கிலம் தெரியாத சகோதரிகளிடத்தும் பிரச்சார வேலைகளைத் துவக்க வேண்டும்" (தேசபக்தன் 26-01-1929).

அம்மையார் பெண்களின் வாக்குரிமைச் சங்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதுடன், அவ்வியக்கம் உழைக்கும் மக்களிலிருந்தும் அவர்களின் நலன்களிலிருந்தும் எந்தளவு அந்நியப்பட்டிருந்தது என்பதனையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை. இவ்வியக்கத்தின் சிந்தாந்தத்தளம், செயற்பாடு என்பன அம்மையாரின் சிந்தாந்தத்தளம் நடைமுறை என்பனவற்றிலிருந்து முரண்பட்டிருந்தமையும் அவர் இவ்வியக்கத்தில் அங்கம் வகிக்காதற்கு ஏதுவான காரணமாக அமைந்திருக்கும் என எண்ணத்தோன்றுகின்றது. இவ்வாறே பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதைக் கடுமையாக எதிர்த்த சேர். பொன்.இராமநாதன் போன்றோரை கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்துகின்ற அதே சமயம் பெண் ஆளுமையின் மகத்துவம் குறித்துச் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றார். 
அவ்வாறே அரசியலில் பெண்களின் பங்கு எந்தளவு முக்கியமானது என்பதையும் அவர்கள் ஆண்களுக்குச் சமனாக நின்று தமது பணிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அம்மையார் அழகுற எடுத்துக் காட்டுகின்றார். ஸ்திரீகளுக்கு சுதந்திரம் என்ற கட்டுரையில் 

'ஸ்திரீகளுக்கு ஓட்டு சுதந்திரம் தேவையில்லை யென்றும் அவர்கள் இராஜிய விஷயங்களில் நடந்துக் கொண்டால் வீட்டுக் குடும்பக் காரியங்கள் கெட்டுப் போகுமென்றும் இன்னமும் பல படித்த மேதாவிகளே பிரசுரம் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் படிப்பில்லாத நிலைமையிலுள்ள புருஷர்கள் ஸ்திரீகளை எந்த முறையில் நடத்துவார்கள் என்று யோசிக்க வேண்டியதாய் இருக்கின்றது. குடும்ப காரியங்களை நடத்தாமல் விட்டு விட்டு ஸ்திரீகள் இராஜிய விஷயங்களில் பிரவேசித்து வேலை செய்ய வேண்டுமென்று எந்த ஸ்திரீயும் கருதவே இல்லை. குடும்ப காரியங்கள் எல்லாம் தமக்குச் சொந்தமானவைகள். அதிலுள்ள சங்கடங்களை நீக்கி செவ்வனே அதை நடத்துவதற்கு இராஜிய விசயங்களும் அவசியம்... குடும்பமென்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து நடத்தும் இல்வாழ்க்கை. அதைப்போலவே பல குடும்பங்கள் சேர்ந்து தான் ஒரு இராஜாங்கமாக வேண்டும். குடும்பத்தை சரிவர நடத்த இருதரத்தாரும் எப்படி ஒற்றுமையாய் நடத்த வேண்டியிருக்கிறதோ அதைப்போல இராஜிய விசயங்களுக்கும் ஸ்திரீகளின் துணை அவசியம் வேண்டும். 

அரசனுக்கு மந்திரி என்று ஒருவர் இருந்து இராஜாங்கத்தை நடத்த வேண்டுமென்ற முறை ஏற்பட்டது போல் புருஷனுக்கு மனைவியே மந்திரி என்ற முறையும் தொன்று தொட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பண்டைய காலத்தில் ஸ்திரீகள் அரசாò இருந்தது. சமீபத்தில் நமது விக்டோரியா மகாராணியார் சர்க்கரவர்த்தினியாய் ஆண்டு வந்தார்கள் என்பது யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் அரசாண்ட காலத்தில் எவ்வளவு அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருந்தது என்பதை ஒவ்வொருவரும் உணராமல் இல்லை. இன்னம் இந்திய முகமதிய பெண்மணிகளிலும் பலர் அரசிகளாகவிருந்து இராஜிய பரிபாலனம் செய்து வந்திருக்கிறார்கள். அங்ஙனமிருந்த ஸ்திரீகள் குடும்ப காரியங்களைத் தவிர மற்ற காரியங்களை கவனித்ததேயில்லையென்னும் மனப்பாண்மையை நாம் என்னவென்று கூறுவது. ஸ்திரீகள் விஷயத்தில் புருஷர்கள் கொண்டுள்ள தாராளப்புத்தி வெளியாகிவிட்டது (தேசபக்தன்-05.04.1929). என கூறுகின்றார்.

அவ்வாறே  பெண்களின் நிலை குறித்தும் தேசிய சர்வதேச கண்ணோட்டத்துடனும் பல கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார் என்பதும் அவதானத்திற்குரியது. சமூக பாராம்பரிய முறை, சமூக வழக்காறுகள் என்பவற்றினடியாகத் தோன்றிய தேவதாசி முறை.  மிகவும் பழமையான சமய நடைமுறைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தேவதாசி என்பதற்கு இறைவனின் அடிமை என கற்பிதம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் இப்பெண்கள் கடவுளுக்கு மணப்பெண்ணாக தாரைவார்ப்பு செய்யப்பட்டனர். இப்பெண்களின் திருமண உரிமையோ தமது குடும்பத்தினருடன் உறவு வைத்துக்கொள்ளும் உரிமையோ மறுக்கப்பட்டது.  ஆலயக் குருக்கள், கிராம தலைவர்கள், நிரப்பிரபுக்கள் மற்றும் பொருளாதார பலம் படைத்தவர்களுக்கு சேவகம் செய்வதற்காகவும் அதற்கும் மேலாக அவர்களின் பாலியல் உணர்வுகளை தீர்ப்பதற்கும் இப்பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். இப்பெண்கள் மீதாக திணிக்கப்பட்ட பொருளாதார சுரண்டல், ஆணாதிக்கம் சார்ந்த பாலியல் உறவுகள், இவையாவும் தெய்வத்துக்கு செய்கின்ற தொண்டாகவே கருதப்பட்டது.; இந்நிலையிலிருந்து இவர்கள் விடுபட முடியாத வகையில் சமூக பொருளாதார கட்டமைப்பு முறைகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இத்தேவதாசியினரிடையும் வர்க்க ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன. ஓரளவு வசதி வாய்ப்புடன் வாழ்ந்தவர்களும் உள்ளனர். அதே சமயம்  சமுக ரீதியாக பின்தங்கிய அதிலும் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களும் இருந்தனர். இவர்கள் கடினமான வாழ்வை அனுபவிக்க நேர்ந்துள்ளமையை அறிய முடிகின்றது. காலப்போக்கில் ஏற்பட்ட பெண்விடுதலை சார்ந்த சிந்தனைகளுடன் இணைந்து தேவதாசி முறை ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வுகளும் எழுந்தது. தேவதாசி சமூக வாழ்க்கை முறையிலிருந்து தோன்றிய இராஜம்அமிர்தம்மாள், மணியம்மை (ஈ.வே.ரா.பெரியாரின் மனைவியல்ல) முதலானோரின் போராட்டங்கள் முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டியவைகளாகும். இவ்வகையில் தேவதாசிகள் தொடர்பில் டாக்டர் முத்துலெட்சுமி அம்மாள் அவர்களின் பங்களிப்புகள் பற்றிய அம்மையாரின் பின்;வரும் கூற்று அவதானத்திற்குரியதாகும்.

'டாக்டர் முத்துலெட்சுமி அம்மாள் கொண்டு வந்த தேவதாசிகளிற்கான சட்டம் சென்னை சட்டசபையில் நிறைவேறியது நமக்குச் சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோவில்களில் தேவதாசிகள் இருக்க வேண்டும் என்ற வழக்கம் எக்காரணம் பற்றி ஏற்பட்டிருந்த போதினும், தற்காலம் அவ்வழக்கம் அடியோடு நின்று போக வேண்டியது அவசியம். இச்சட்டத்தை எதிர்த்துப் பேசிய சில சுயராஜ்ஜியக் கட்சிக்காரர்களுடைய மனோப்பாண்மையை நாம் என்னென்று சொல்வது. இந்தியாவில் தேவதாசிகள் இல்லாமல் போனால் விபச்சாரம் குறைந்து போகும் என்று சொல்லிவிட முடியாது. விபச்சார தொழிலையே தண்டனைக்குள்ளாக வேண்டிய அம்சமாகச் செய்துவிட வேண்டியது அவசியமானதாகும். இது தொடர்பாக டாக்டர் முத்துலெட்சுமி அம்மாள் முயற்சியெடுப்பாராக...

கோயில்களில் தேவதாசிகளை ஏற்படுத்தியது எதற்காகவெனில் அங்கு உத்தரவான திருப்பணிகளைச் செய்வதற்காகவேதான். அப்படியிருக்க நாளடைவில் சில சுயநலப் பிரியர்கள் தங்கள் சொந்தமான எண்ணங்களைப்  பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டும், அப்பேதையர்களை மயக்கி தேவதாசிகள் விபச்சாரத்தை கைக்கொள்ள வேண்டிய நிலைமையில் கொண்டுவந்து  விட்டுவிட்டார்கள். நமது பாரத தேசத்தில் அனேக குடும்பங்கள் கெட்டு பல கொலை களவுகள் ஏற்பட்டு நமது நாடு அவமதிக்கப்பட்டிருப்பது விவசாரத்தின் காரணத்தையே முதன்மையாகக் கூறலாம்.  தவிரவும் பல பெண்களை ஒரு புருஷன் மணப்பது தனக்கு இஷ்டமானவளுடன் உல்லாசமாய் இருப்பது மற்ற மனைவிகள் கெட்ட கொள்கையை மாற்றி ஸ்ரீகளுடைய மனதை குளிர பண்ணுவதற்கு வேண்டிய ஏற்பாட்டினையும் சட்டபூர்வமாய் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொள்வதாகும். அவ்வாறு செய்யாதவகையில் ஸ்ரீகளின் நிலைமை ரொம்பவும் சீர்கேடான நிலையில் வந்து முடியும்(08.02.1929). 

இவ்வாறு தேவதாசிகள் கொடூரம் நிறைந்த வாழ்வு குறித்தும் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த ஆளுமைகள் குறித்தும் சுட்டிக்காட்டுகின்ற அம்மையார், பெண்களின் சுகாதார நலன் பற்றியும் அது தொடர்பில் கவனமெடுத்த சமூக செயற்பாட்டாளர்கள் பற்றியும் குறித்துக் காட்டத் தவறவில்லை. அவரது மேல்வரும் கூற்று அதனை அழகுற எடுத்துக் காட்டுகின்றது.

'சென்னை சட்டசபையில் ஸ்திரீகளின் வைத்திய வசதிக்காக வேண்டிய சில முக்கியமான விஷயங்களைக் குறித்து ஸ்ரீமதி டாக்டர் முத்துலெட்சுமியம்மாள் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் தோற்றுப் போனது மிகவும் வருந்தத்தக்கது. இந்தியாவிலுள்ள இதர இடங்களில் சரியானபடி சிகிச்சை செய்வாரில்லாமல் எழுத்து வாசனையறியாத நாட்டு மருத்துவச்சிகளைக் கொண்டு சிகிச்சை செய்து கொள்ளும் நமது சதோதரிகள் எவ்வளவு பேர் உயிர் விடுகின்றார்கள். எத்தனை சிசுக்கள் மரணமடைகின்றன என்பதை ஒவ்வொருவரும் அறிந்தும் அத்தீர்மானத்தை ஆதரிக்காமல் போனது அவ்ஸ்திரீகளுக்குச் செய்த தீங்கென்றே சொல்ல வேண்டியதாக இருக்கின்றது. நமது மந்திரி டாக்டர் சுப்பராயனவர்கள் இத்தீர்மானத்தை எதிர்த்தது மிக விசனிக்கத்தக்கதாகும்'; (தேசபக்தன்29.03.1929).

அம்மையாரின் பார்வை பரந்துப்பட்ட அவரது இதயத்தை எமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அதேசமயம், பெண்களின் உடைகள் எவ்வகையில் ஆண்களை திருப்திபடுத்துவதற்காக உள்ளது என்பதனையும் தேவதாசிகளின் பாவாடைகள் மற்றும் சட்டைகளின் கைகளின் நீளமும் எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் தமது கட்டுரைகளில் பதிவாக்கியிருக்கின்றார். அதேபோன்று காலத்திற்குக் காலம் பெண்கள் விழிப்புக் கொள்ளத் தொடங்கியதும் ஆடைகளில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.  பல உயர் பதவிகளில் பெண்கள் வகித்த இடம் குறித்தும் குறிப்பிடுகின்றார். எடுத்துக் காட்டாக சட்டசபையில் ஸ்திரீகளுக்கு இடம் வேண்டுமென்பதற்காக போராடிய பெண்கள் பற்றியும் அவர் பல இடங்களில் எடுத்துக் காட்டுகின்றார். ஸைமன் கமிசன் ரங்கூனில் விசாரணை நடத்தியபோது மிஸ். சந்திரா என்ற பெண்மணி பரிஸ்டர் சட்டசபையில் பெண்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பெண்களின் உரிமை தொடர்பில் குரல் கொடுத்ததையும் அம்மையார் வலியுறுத்திக் கூறத்தவறவில்லை.

மேலும் மாணவர்கள் அரசியல் அறிவுபெற வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் கவனமெடுக்கின்றார். பெண்களின் வாக்குரிமை சங்கம் (ஸ்ரீகளின் வாக்குரிமை சங்கம் என்றே அம்மையார் குறிப்பிடுகின்றார்) தமது செயற்குழு கூட்டம் ஒன்றில் மாணவர்களுக்குச் சுகாதார நூலைக்காட்டி அதனைப் பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதன் பிரதியை சகல சட்டசபை அங்கத்தினருக்கும் அனுப்பியுள்ளனர். இது குறித்து அம்மையார் எழுதுகின்ற போது சுகாதார பாடம் மட்டுமல்ல அரசியல் பற்றிய ஞானமும் மாணவர்களுக்கு அவசியம் என்பதை சுட்டிக்காட்டி இலங்கை நிர்வாகம் பற்றியும் அது எவ்வாறு இயங்குகின்றது குறித்தும் பொதுமக்கள் தொடர்பில் அவர்களின் கடமைக் குறித்தும், குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களுக்கு எஜமானாக அல்லாமல் ஊழியர்களாக கடமையாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு தெளிவு பெற வேண்டியுள்ளது எனக் குறிப்பிடுகின்றார். விடேசமாக பொது சனங்கள் அரசின் இலட்சியங்கள் பற்றி தெளிவு பெற வேண்டியதுடன் பெண்களிடத்தே புத்தெழுச்சிகளை ஏற்படுத்தி அவர்களையும் நிர்வாக அம்சங்களில் பங்கு பெற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துகின்றார். பெண்கள் குறித்து தேசபக்தனில் வெளிவந்த  இந்தியாவின் முன்னேற்றம் (03.09.1929-இதழ் 192, 11.09.1929 இதழ்-199, 25.09.1929 இதழ்-207), ஸ்ரீகளுக்குச் சமசுதந்திரம் (28.09.1929-இதழ் 209,30.09.1929- இதழ் 210)  ஆகிய கட்டுரைகள் முக்கிய கவனிப்புக்குரியவையாகும். இத்தகவல்கள் சாரல் நாடனின் நூலில் குறிப்பிடப்பட்டிருப்பினும் சில தவறுகளையும் கொண்டிருக்கின்றன என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 'இந்தியாவின் முன்னேற்றம்' என்ற தொடர் கட்டுரை இரண்டு தொடர்கள் மட்டுமே வெளிவந்திருப்பதாக குறிப்பிடுகின்றார். உண்மையில் அத்தொடர் கட்டுரை மூன்று தொடர்களாக வெளிவந்திருப்பதாக அறிய முடிகின்றது. மூன்றாவது தொடரின்; இறுதியில் 'தொடரும்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் தொடர்ச்சியை அடுத்துவந்த பத்திரிகைகளில் காணமுடியாதுள்ளது. அதேசமயம் கட்டுரையை முழுமையாக வாசிக்கின்றபோது கட்டுரை முற்றுப் பெற்றுள்ளதாகவும் எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறே இக்கட்டுரையின் தலைப்பை மட்டுமே மையமாக கொண்டு  இந்திய சுதந்திரம் சமத்துவம் பற்றி பேசுவதாகவே குறிப்பிடுகின்றார். அக்கட்டுரை முற்று முழுதாக பெண்களின் நிலை குறித்துதான் பேசுகின்றது. மேலும் சாரல் நாடன் தமது நூலில் ஸ்ரீகளுக்குச் சமசுதந்திரம் என்ற கட்டுரையை 'பெண்களுக்கு சம சுதந்திரம்" எனக் குறிப்பிடுகின்றார். இத்தலைப்பு மூல பதிப்பிலிருந்து மாறுப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது.

1929 ஆண்டில் தேசபக்தன் பத்திரிகை தினசரியாக வெளிவரத் தொடங்கியது. நடேசய்யரின் அரசியல் தொழிற்சங்க பொறுப்பு அதிகரித்ததால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று வந்தார். இதன் காரணமாக பத்திரிகைப் பொறுப்பினை ஏற்க வேண்டிய நிலை அம்மையாருக்கு ஏற்பட்டது. அம்மையார் இப்பொறுப்பினை ஏற்று செயற்பட்ட காலத்தில் அதிகமான பெண்கள் இவரோடு இணைந்து செயற்;பட்டமை பற்றி சாரல் நாடன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இக்காலத்தில் தேசபக்தன் பத்திரிகையில் அம்மையார் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். சில பத்திரிகைகளுக்கு ஆசிரியர் தலையங்கமும் எழுதியுள்ளார். “ஸ்த்திரி பக்கம்" என்ற பகுதிக்குத் தானே பொறுப்பாயிருந்து பெண்கள் தொடர்பில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும்.
மீனாட்சி அம்மையாருக்கு முன்னரும் அவரது காலத்திலும் பல பெண்கள் இயங்கியுள்ளனர். அவர்களில் அம்மையாருக்கு முன் வாழ்ந்த  சுன்னாகம் செல்லாச்சி அம்மையார், மங்கம்மாள் மாசிலாமணி முதலானோர் ஆன்மீகத் துறையில் ஈடுப்பட்டு கொண்டு சமய பணிகளை முன்னெடுத்துள்ளனர். மங்கமாள் மாசிலாமணி அம்மையார் தமிழ் மகள் என்ற பத்திரிகையை வெளியிட்டு பத்திரிக்கை முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளார். அவ்வாறே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்ற கருத்துக்கள் பிற்போக்கு நிலைப்பட்டவர்களால் முன்வைக்கப்பட்டபோது அதற்கு எதிராக பெண்களின் வாக்குரிமை சங்கம் என்ற அமைப்பை உருவாக்குவதில் திருமதி  டேஸி  பண்டாரநாயக்கவின் பங்கு கனிசமானது.  அதேபோல்  தமிழ் மக்கள் மத்தியில் நல்லம்மாள் சத்தியவாகீஸ்வர ஐயர், ஈ.ஆர். தம்பிமுத்து முதலானோர் இவ்வமைப்பு சார்ந்து இயங்கியுள்ளனர். அவர்களின் பங்களிப்புகள் யாவும் குறிப்பிட்ட வர்க்கத்தினரை பிரதிபலிப்பதாக அமைந்திருந்ததுடன் குறித்த எல்லைக்குள்ளேயே முடங்கி விடுவதாகவும் அமைந்திருந்தமை துரதிஸ்டவசமானதாகும். அம்மையாரின் செயற்பாடானது- சமூக பங்களிப்பானது  பரந்துப்பட்ட வெகுசனத்தை அடிப்படையாக கொண்டமைந்திருந்தது. அவர் பெண்கள் பொறுத்தும் அவர்களின் விடுதலை பொறுத்தும் அதிக கவனமெடுத்திருந்த போதினும் முழு சமூக விடுதலையே அதனை சாத்தியப்படுத்தும் என்ற சிந்தனையே  அவரில் முனைப்புற்றிருந்ததை அவரது எழுத்துக்களில் காணக்கூடியதாக உள்ளது. அவரது கட்டுரைகளோ அல்லது கவிதைகளோ துரைத்தன மனோபாவத்துடன் சமூகத்தில் கற்றவர்களை மாத்திரம் இலக்காக கொண்டு எழுதப்பட்டவை அல்ல. அவை பரந்துப்பட்ட மக்களை தழுவியதாக அமைந்துள்ளமையினால் தான் எளிய பதம், எளிய நடை, பொதுசனங்கள் விரும்பும் மெட்டு ஆகிய பண்புகள் இயல்பாக வந்தமைந்து விடுகின்றன. அவரது கட்டுகைளில் அவர் பொதுசனம் என்ற சொல்லை மிக வலிமையுடனே பாவிக்கின்றார். இந்தவகையில் ஓர் ஒப்பியல் நோக்கில் அக்கால பெண் ஆளுமைகளுடன் பொருத்தி பார்க்கின்ற போது, இலங்கையில் எழுந்த சமூக மாற்றத்திற்த்திற்கான முதலாவது பெண் குரல் மீனாட்சியம்மாள் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை எனலாம்.

தனது காலத்து சின்னஞ்சிறிய மனிதரிலிருந்து வேறுப்பட்டு, சமூக விடுதலைக்கான மரபை தேற்றுவித்ததில் அம்மையாருக்கு முக்கிய இடமுண்டு. அவரில் வெளிப்பட்டிருந்த ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் பண்பாட்டு நோக்கு, மக்கள் சார்பு, நாட்டு நல நாட்டம் என்பன சிறப்பானதாயும் தனித்துவமாயும் அமைந்திருக்கின்றது. அவ்வாறு இயங்கி வந்ததொரு வரலாற்றினையும் தொடர்ச்சியினையும் நன்கு விளங்கிக் கொள்வதற்கு அம்மையார்; பற்றிய முழு நிறைவாக ஆய்வு அவசியமாகும். அவ்வாறே அவரது ஆக்கங்கள் தொகுக்கப்பட்டு அடக்கத் தொகுப்பொன்று வெளி வரவேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

நன்றி- ஜீவநதி( பெண் ஆளுமைகள் பற்றிய தொகுப்பு)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates