(கால்நூற்றாண்டில் கால்பதிக்கும் கர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயம் "முகிழி" மலருக்கு எழுதப்பட்ட செய்தியிலிருந்து...)
இலங்கை மலையகத்தின் வரலாறு என்பது வித்தியாசமானதும் விசித்திரமானதுமான ஒன்று. அண்டைய நாடான இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து இலங்கை மண்ணுக்கு'கூலி'என்ற பெயரோடு பிரித்தானியரால் அழைத்து வரப்பட்ட இந்தமக்கள் கூட்டம் இன்று தன்னை'மலையகத்தமிழர்'எனும் தனித் தேசிய இனமாக பிரகடப்படுத்திக்கொள்வது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவளர்ச்சி. இந்த வரலாற்றுப்பணியில் பெரும்பாலானவர்களின் பெரும் உழைப்பு விதைக்கப்பட்டிருக்கின்றது. தான் வழங்கும் உடல் உழைப்புக்கானமொத்தக் கூலியை'பெரியாங்கங்காணி'எனும் முகவர் ஊடாக (எஜன்ட்) பெற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட, அவர்களின் அடிமைகளாக வாழ்வை ஆரம்பித்தசமூகம் இற்றைக்கு சரியாக இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த வாழ்க்கைப் போராட்டம் பலகோணங்களில் கூர்மையடைந்து வர்க்கப்போராட்டமாக, குடியுரிமைக்கானபோராட்டமாக, வாக்குரிமைக்கானபோராட்டமாக, கல்விக்கானபோராட்டமாக, காணியுரிமைக்கானபோராட்டமாக, வீட்டுரிமைக்கானபோராட்டமாக பலதளங்களைக் கண்டு இன்று தன்னைத் தனியான தேசிய இனமாக அரசியல் ரீதியாக அங்கீகரிக்கக் கோரும் இனத் தேசியத்துக்கான போராட்டமாக ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த போராட்டங்களுக்கு மத்தியில் கல்விக்கான போராட்டத்தை இந்தமக்கள் கூட்டம் முன்னெடுத்திருக்காத பட்சத்தில் இன்றும் கூட ஒரு கொத்தடிமைச் சமூகமாகவே வாழ்ந்திருக்கக் கூடும். எனினும் காலத்திற்கு காலம் கல்விக்கான தேவையை உணர்ந்து மலையக சமூகத்துக்குள் நடந்த கல்விப் புரட்சியானது இந்த நாட்டில் இன்னோரன்ன ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் தம்மை ஒரு தனித்துவமான இனமாக அடையாளப்படுத்தும் வல்லமையை வழங்கியிருக்கின்றது.
'கூலிகளாக வந்தவர்களுக்கு படிப்பு எதற்கு?'என்ற நிலையில் இருந்து பெற்றோரின் உழைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் ஒருநிலையமாக உருவாக்கப்பட்ட' பிள்ளைக்காம்பராக்கள்' (Creach) எனும் கொட்டகைகள் தான் பரிணாம வளர்ச்சிபெற்று இன்று மலையத் தோட்டப்பாடசாலைகள் (Plantation Schools) எனும் பெயருடன் இயங்கிவருகின்றன. மறுபுறத்தில் 'பிள்ளைக்காம்பரா'கலாசாரத்தில் இருந்தும் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. அதன் தேவை தேவையின்மை வேறாக ஆராயப்படவேண்டிய ஒன்று.
அதேநேரம் இந்த தோட்டப்பாடசலைகளை உருவாக்குவதில் மலையகமக்களை அழைத்துவந்த பிரித்தானியர் பரித்தானிய பாராளுமன்றில் விவாதித்திருக்கிறார்கள்,அதன் பயனாகவே இங்கு பாடசாலைகள் உருப்பெறத் தொடங்கியுள்ளன என்பதும் அவதானத்துக்குரியது. இது பற்றியபதிவுகளை இப்போது இங்கிலாந்தில் வசிக்கும் மு.நித்தியானந்தன் ஆதாரங்களுடன் பதிவுசெய்துள்ளார்.
இலங்கையின் இலவசக்கல்வி பெரிதும் போற்றி புகழப்படுகின்ற போதும் அது இலவசக்கல்வியாக இருந்ததே தவிர 'சமத்துவகல்வியாக' இருக்கவில்லை என்பதற்கு இன்றும் கூட தோட்டப்பாடசாலை எனும் வகையறாவில் இலங்கைகல்வி அமைச்சின் கீழ்,கல்வித் திணைக்களத்தின் கீழ ஒருதுறை இருக்கின்றது என்பது சான்று. இன்றைய திகதியில் 844 பாடசாலைகள் தோட்டப்பாடசாலைகள் கொண்ட ஒரு பிரிவு தனிப்பிரிவாககல்விஅமைச்சில் ஒரு அலகாக (Unit) தொழிற்படுகின்றது. தோட்டப்பாடசாலைகளை விருத்திசெய்யும் நோக்கோடு அந்த அலகு செயற்படுவது வாய்ப்பானது எனினும் அதன் மறுவடிவமாக தோட்டப்பாடசாலைகள் தேசிய கல்வித்துறை நீரோட்டத்திற்குள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்பதற்கான குறியீடும் அதுவாகவே இருக்கின்றது. எனவேதான் இலவசக்கல்வி–சமத்துவக்கல்வியாக இருக்கவில்லை என்கிற கருத்தை வலியுறுத்த வேண்டியிருக்கின்றது.
1948 ல் சுதந்திரத்தின் தொடர்ச்சியாகவே இலங்கையில் இலவசக்கல்வி எனும் கோட்பாடு சி.டபிள்யு.டபிள்யு.கண்ணங்கர அவர்களினால் முன்வைக்கப்படும்போது 1972 ம் ஆண்டு காணி சுவீகரிப்புச்சட்டத்தின் பின்னர் தோட்டங்களை அரசு பொறுப்பேற்ற பின்னர்தான் படிப்படியாக தோட்டங்களுக்குள் இயங்கிய தோட்டப் பாடசாலைகள் அரசாங்க பாடசாலைகளாக மாற்றம் பெற்றன. அதுவரை தோட்ட முகாமையாளரின் சம்பளத்திற்கு வேலைசெய்யும் அவர்களின் பாடத்திட்டத்தைப் போதிக்கும் ஒரு நிறுவன மயபட்ட முதலாளித்துவ தோட்டநிர்வாகத்துக்கு தேவையான ஒருதனியான கல்விமுறைமையிலேயே மலையகப் பெருந்தோட்டமக்கள் வைக்கப்பட்டார்கள். எனவே இலவசகல்வி இலங்கையில் சமத்துவக்கல்வியாக இருக்கவில்லை என்பது கண்கூடு.
மறுபுறத்தில் இலவசகல்வியின் தந்தை சி.டபிள்யு.டபிள்யு.கண்ணங்கரதான் இலவசக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும்போது மலையகப் பெருந்தோட்டத்தில் இயங்கிய பாடசாலைகள் குறித்த கவனத்தை செலுத்தாமலும் இல்லை. அவ்வாறு இந்த தோட்டப்பாடசாலைகளை அரச இலவச பாடசாலைகளாக உள்வாங்குவதென்னால் அவற்றை சிங்கள மொழிமூல பாடசாலைகளாக செயற்படவைப்பதற்கான ஒரு முயற்சியையே அவர் மனதில் கொண்டிருந்தார் எனவும் அறியக்கிடைக்கின்றது. அப்படி பார்க்கும் போதும் தமதுதாய் மொழியில் கல்விகற்கும் உரிமையை மறுக்கும் 'இலவசக்கல்வி'–சமத்துவக்கல்வியாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
எதுஎவ்வாறாயினும் இன்றைய இருநூற்றாண்டு கால மலையக வரலாற்றில் நூற்றாண்டு கடந்த வரலாற்றைக்கொண்ட பல பாடசாலைகள் மலையகத்திலே நாம் காணலாம். எனவே மலையக கல்விவரலாறு என்பது மலையகமக்களின் வாழக்கை வரலாற்றுடன் ஒன்றித்தே பயணித்துள்ளது.
மலையகம் கல்வியில் பின்தங்கிய சமூகமோகல்விக்காக பின்நிற்கும் சமூகமோ இல்லை. ஆனால் அந்ததொழில் துறையின் அந்த நிர்வாகமுறையில் உள்ளகட்டமைப்பு அவர்களுககான கல்விவாய்ப்பை குறைத்திருக்கிறது என்பதே உண்மையாகும். இந்த கல்வி வரலாற்று பின்பலம் தான் இன்று இலங்கையின் சட்டதுறையில் நீதிபதிகளாகவும்,சட்டவாக்கத்துறையில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், நிவாகத்துறையில் ஆணையாளர்களாகவும்,அதிகாரிகளாகவும் ஊடகத்துறையில் பரவலாக பணியாற்றுபவர்களாகவும் பணிபுரியம் ஆற்றலை மலையகத்துக்கு வழங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக 'மலையகத் தமிழ் இலக்கியம்' எனும் ஒன்றை ஈழத்து இலக்கியபரப்பில் வேரூன்ற செய்வதிலும் மலையக சமூகம் வெற்றி கண்டிருக்கின்றது.
மலையகத்தில் நூற்றாண்டைக் கடந்த அல்லது அதனை எட்டும் பாடசாலைகளின் வரலாற்று பின்புலத்தை அவதானித்தால் அவையெல்லாம் கத்தோலிக்க அல்லது கிறிஸ்தவ மிஷனரிகளால் நிர்வகிக்கப்பட்டவவை என்பது தெளிவாகும். நுவரெலியா திரித்துவகல்லூரி (175 ஆண்டுகள்),இறக்குவானை பரியோவான்கல்லூரி (130 ஆண்டுகள்), ஹட்டன் ஹைல்ன்ஸ் கல்லூரி (125 வருடங்கள் - இது முன்பு மெதடிஸட் கல்லூரி என்றே இயங்கியது. அப்போதுகவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை இங்கேகல்வி கற்றிருக்கின்றார்), நுவரெலியா சென்சேவியர் கல்லூரி (97 ஆண்டுகள்), ஹட்டன் புனிதபொஸ்கோ கல்லூரி (83ஆண்டுகள்)கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி (ஆண்டு), இரத்தினபுரி சென்.ஜோக்கிம் தோட்டப் பாடசாலை (80 வருடங்கள்), தலவாக்கலை சென்.பெட்ரிக்ஸ்கல்லூரி (80வருடங்கள் - இது யாழ்ப்பாண பெட்ரிக்ஸ் கல்லூரியின் கிளையாக இயங்கியது),நுவரெலியா நல்லாயன் பெண்கள் கல்லூரி (80 ஆண்டுகள்) பொகவந்தலாவை சென்மேரிஸ (80)ஆண்டு ஹொலி ரோசரி மகா வித்தியாலயம் (80 ஆண்டு), மஸ்கெலியாசென். ஜேசாப்கல்லூரி (80ஆண்டுகள்) போன்ற பாடசாலைகளின் வரிசையை அடையாளப்படுத்தலாம். இந்தபாடசாலைகளின் பெயர்களுக்கு முன்னால் கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க பெயர்கள் இடம் பெறுவது ஒருதற்செயல் நிகழ்வன்று.இந்தப் பாடசாலைகள் இன்று அரசாங்க பாடசாலைகளாக மாற்றம் பெற்ற போதும் கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க சபையினரது செல்வாக்கும் வரலாறும் இங்கு உண்டு.
ஆக,ஒரு புறம் மத நிறுவனங்களாலும் மறுபுறம் தோட்ட கம்பனிகளாலும் பராமரிக்கப்பட்டு வந்த மலையக பெருந்தோட்ட மக்களின் கல்விப் பாரம்பரியம் விதிவிலக்காக சில தன்னார்வ சுயமுயற்சி பாடசாலைகளாக வரலாற்றில் இடம்பிடிக்கின்றன. அவையம் பின்னாளில் அரசாங்க பாடசாலைகளாகியுள்ளன. அவற்றுள்,முன்னாள் நாவலப்பிட்டி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (1947-1952) அமரர் கே.ராஜலிங்கம்,அவர்களது குடும்பச் சொத்தை நன்கொடையாகவும் ஊர் ஊராக அலைந்து நிதிதேடியும் உருவாக்கிய புசல்லாவை சரஸ்வதி தேசியபாடசாலை,பதுளை மூன்றாம் கட்டையில் அமைந்துள்ள பாரதி தமிழ் வித்தியாலயம் (இதனைஉருவாக்கியதிரு.கந்தசாமி இன்றும் பதுளையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பாரதி கந்தசாமி எனறே விளிக்கப்படுகின்றார். இர.சிவலிங்கத்திற்கு பிறகு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்க தலைவராக இவர் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) பூண்டுலோயா தமிழ் மகாவித்தியாலயம் (இது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கந்தசாமி வித்தியாலயம் என்றே அழைக்கப்பட்டது. அமரர்.கந்தசாமி (பூண்டுலோயா மோட்டர் ட்ரான்ஸ்போர்ட்) எனும் பெரியவர் தமது குடும்ப சொத்தை வழங்கி இந்த பாடசாலையை அமைத்துள்ளார்) போன்ற பாடசாலைகளை இந்தவரிசைக்குள் அடக்கலாம். மேலும் ஆய்வு செய்தால் இந்தவரிசை இன்னும் நீளமானதாகவும் அமையலாம்.
அத்தகைய ஒருவரிசையின் நீட்சியாகவே நான் பொகவந்தலாவை, கேர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் உருவாக்கத்தைப் பார்க்கிறேன்.
கர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயம் கால்நூற்றாண்டில் கால்பதிக்கிறது. இதனை உருவாக்கியவர்கள் யார் என்பது இந்த'முகிழி' சஞ்சிகை அதனை பதிவுசெய்யும்.
எனவே மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளின் தோற்றம் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்குகையில் நமது காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு எழுதப்படும் வரலாறாக இந்த கர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலய கால்நூற்றாண்டு நிறைவு அமைகிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...