Headlines News :
முகப்பு » » 'பின்னபாருங்கோ' (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 9) - மல்லியப்பு சந்தி திலகர்

'பின்னபாருங்கோ' (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 9) - மல்லியப்பு சந்தி திலகர்


கடந்த வாரம்  எட்டாம் பாகத்தின் இறுதியில் கூறியிருந்தவாறு இந்த முறை இந்தியா சென்றிருக்க வேண்டும். எனினும் இறுதியுத்தம் -2009 என்ற தலைப்பு ஏற்படுத்திய அதிர்வும் கேள்விகளும் இந்தவாரமும் வன்னியில் வாழும் மலையக மக்கள் பற்றி பேசிவிட்டே இந்தியா செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

ஊடகவியலாளரான சகோதரி ஜீவா சதாசிவம் மிக முக்கியமான கேள்வி ஒன்றை முன்வைத்தார். ' 'முள்ளுத்தேங்காய் எண்ணை' என 'பாம் ஒயில்' பற்றியதாகத்தான் தொடர் எழுதுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், தொடர் அந்த விடயங்களைத தொட்டவாறே அரசியல் சமூக பண்பாட்டு விடயங்களைப் பேசிக்கொண்டிருக்கின்றது. சுவாரஷ்யமும் அரிய தகவல்களும் நிறைந்ததாக  பாகம் எட்டில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 'தொழில்கள்' ஊடாக மேற்கொள்ளப்படும் 'அரசியல்' குறித்து இன்னும் விரிவாக எதிர்பார்க்கிறோம்.  ஏன்றார். 

உண்மைதான். பாகம் எட்டில் மலையக மக்கள் செய்யும் தொழில்களை மாற்றுவதன் மூலம் அல்லது சிதைப்பதன் மூலம் அவர்களின்  இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவது ஒரு நுண் அரசியல். அதனைப்பற்றி பேச விழைந்தபோதுதான் மலையகத்தில் இருந்து வன்னிக்கும், தமிழகத்துக்கும் சென்றபோது அவர்கள் செய்ய நேர்ந்த தொழில்கள் பற்றியும் அதனால் ஏற்பட்ட சமூக விளைவுகள் பற்றியும் ஆராய வேண்டியிருக்கின்றது.

1970களில் வன்னி நோக்கி நகர்ந்த மலையக மக்களுக்கு அங்கு நிரந்தரமான விவாசாய காணிகள் ஏதும் வழங்கப்படவில்லை. மாறாக தேயிலைத் தோட்டத்தில் பெரு முதலாளிகளுக்கு கூலிக்காக வேலை செய்தவர்கள் வன்னி மண்ணில் சிறு முதலாளிகளிடம் -காணி உரிமையாளர்களிடம் விவாசாயத் தொழிலாளர்களானர்கள். ஆனால், மலையகத் தோட்டத்தில் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு, 'செக்ரோல்' பதிவு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட சம்பள முறைமை தொழிலின் ஊடாக குடும்ப விபரப்பதிவு போன்ற விடயங்கள் வன்னியில் அமையவில்லை. வன்னியில் 'விவசாய தொழிலாளர்கள்' என்பது நிரந்தரமானதாகவும் இருக்கவில்லை. குடாநாட்டிலோ அல்லது வன்னியில் மக்கள் செறிவான பகுதிகளிலோ வாழ்ந்த நிலவுடமையாளர்களின் வன்னி வனப்பிரதேச காணிகளை சுத்தம் செய்து விவசாய காணிகளாக மாற்றும் பணியினையே மேற்கொண்டனர். இந்த வனப்பகுதி விசாய காணிகள் பூர்வீக வன்னி குடியிருப்பாளர்களின் எல்லைகளில் இருந்து தூரத்தில் அமைந்திருந்தது.  மக்கள் வாழும் குடியிருப்பு பிரதேசமாகவம் இருக்கவில்லை. அவர்களை விவசாயம்  செய்யுமாறு பணிக்கப்பட்ட அந்த வனப்பகுதி காணியின் ஓர் பகுதியில் வெட்டப்பட்ட கிணற்றை அண்டியதாக ஒரு ஓலைக் குடிசை அவர்களின் குடியிருப்பானது. 

மலையகத்திலே 'லயன்' அறையாயினும் கூட அது தோட்ட நிர்வாகத்தில் பதிவு பெற்று மலசலகூடம், அவற்றை சுத்தம் செய்வதற்கான தனியான தொழிலாளர்கள் வருடந்தோறும் அவற்றை வெள்ளையடிப்பதற்காக வழங்கப்படும் சுண்ணாம்பு, நீலம் தூரிகை வழங்குவது வடிகாலமைப்பை தோட்ட நிர்வாகம் கவனிப்பது என குறைந்த பட்ச பராமரிப்பு இருந்தது. ஆனால், வன்னியில் இவை அத்தனையும் கூட மறுக்கப்பட்டு கிணற்றடியை அண்டியதாக அமைக்கப்பட்ட அந்த ஒற்றைக் குடிசையில் முழுக்குடும்பமும் வாழ நேரந்தது. மலசலகூடம் இல்லாது வெட்டவெளி காட்டுப்பகுதிகளை பாவிக்க நேர்ந்தது. தகரக்கூரைக்கு பதிலாக சுவராகவும் கூட பனையோலைக் கொண்ட குடிசைகளில் வாழ நேர்ந்தது. எரிக்கும் வெயிலில் இந்த குடிசைகளில் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கும் மிளகாய் களஞ்சிய பகுதி எந்தநேரமும் ஒரு மிளகாய் நெடியை அந்த குடிசைக்கு வழங்கிக்கொண்டே இருக்கும்.

 ஒரு வகையில் முதலாளித்துவ தோட்ட நிரவாகக் கட்டமைப்பில் இருந்து விடுபட்டு சுயாதீன தொழிலாளர்கள் போன்று இவர்கள் தென்பட்டாலும் அந்த தோட்டக் கட்டமைப்பில் இருந்த நிரந்தரத்தன்மை அங்கே வன்னியில் மலையக மக்களுக்கு இருக்கவில்லை.

 இது பற்றி வன்னியில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக சென்று வாழும் செல்லையா எனும் பெரியவர் கூறிய வாக்கு மூலம் என்னிடம் வீடியோ பதிவாக உள்ளது. மதுரையில் மாநாடு ஒன்றிற்காக சென்றிருந்த வேளை என்னைச் சந்தித்த அவர் அவரது வாக்குமூலத்தை வீடியோ பதிவாக்கி வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். 'தமிழ்நாட்டின் சிலோன்காரர்கள்' தொடர் நூலுருப்பெறும் நாளில் அத்தகைய வீடியோ ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளியிடும் எண்ணம் உள்ளது. அதுவரை அவரது வாக்கு மூலத்தின் சுருக்கத்தை வாசியுங்கள்.


'தெற்கிலே வன்செயல் காரணமாகவும் ஜே.வி.பி கலவரங்கள் காரணமாகவும் தப்பிப்பிழைக்கலாம் என இங்கே வன்னிக்கு ஒடி வந்தோம். கொளுத்தும் வெயிலில் பிள்ளைக் குட்டிகளோடு வவுனியாவிலும், மாங்குளத்திலும் கிளிநொச்சியிலும் பரந்தனிலும் அலைந்து திரிந்து நகரத்தில் சிப்பந்தி வேலைகளை செய்து குடும்ப செலவுகளை சமாளிப்போம். யார் கண்ணிலாவது பட்டு தங்களுக்கு ஒரு விவசாய காணி இருப்பதாகவும் அதனைச் சுத்தம் செய்து விவாசயம் செய்துகொண்டு நீங்கள் அங்கேயே வாழலாம் என ஒரு அழைப்பு வரும். அப்போதைக்கு அது சிறந்த தெரிவாகவே தெரியும். நாங்களும் காணிக்கு போனால் அது காணியில்லை காடு என அப்போதுதான் தெரியும். அந்த காட்டினைச் சுத்தமாக்கி காணியாக்குவோம். கிணறு வெட்டுவோம் பின்னர் மிளகாய் நடுவோம்' 

தேயிலைத் தொழிலில் அல்லது ரப்பர் தொழிலில் இருந்த உங்களுக்கு எப்படி திடீரென மிளகாய்த் தோட்டம் செய்யும் அனுபவம் வந்தது என ஒரு குறுக்கு கேள்வியை கேட்டு வைத்தேன். அதற்கும் சேர்த்து அவர் அளித்த பதில்:

'நாங்கள் மாத்தறை பகுதியில் இருந்து வந்தவர்கள். ரப்பர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தாலும் பின்னேரங்களில் நாட்டுக்குப் (சிங்கள கிராமங்கள்) போய் விவசாய காணிகளில் வேலை செய்த அனுபவம் இருந்தது. வன்னிக்கு வந்ததும் கூட ஆங்காகங்கே அன்றாடம் விவாசாயத் தொழிலாளியாக நாள் கூலிக்கு வேலை செய்த அனுபவங்களும் எங்களிடம் இயல்பாக இருந்த உடல் உழைப்ப ஆற்றலும் கைகொடுத்தன. எரிக்கும் வெயிலைத்தான் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. இருந்தும் சுட்nரிக்கும் வெயிலையும் தாங்கிக்கொண்டு மிளகாய்த் தோட்டத்தை கட்டியெழுப்புவோம். அவ்வப்போது வரும் உரிமையாளர் சிறுதொகை பணத்தையும் குடிசை போட உதவிகளையும் செய்வார். அதே உரிமையாளர் மிளகாய் காய்த்து அறுவடைக்கு தயாராகும் நாட்களில் எங்களோடு முருகலுக்கு வருவார். தோழிலில் பிழை கண்டுபிடிப்பார். மிளகாய் முற்றும் காலத்தில் பிரச்சினையும் முற்றிவிடும். 'என்னிடமே நீ சண்டைக்கு வருகிறாயா... ஓடடா தோட்டக்காட்டான்... ' என ஏசி அந்தக் காணியில் இருந்து விரட்டியடிக்கப்படுவோம். நாங்கள் வளர்த்த அந்த மிளகாய்ச் செடிகளுக்குத் தவிர வேறு யாருக்கும் எங்கள் நியாயம் புரிவதில்லை. கிராம அதிகாரிகள், விவாசாய அதிகாரிகள் என யாரிடமாவது சென்று முறையிட சென்றால் அவர்கள் திரும்பவும் தோட்டக்காட்டான் முத்திரையை எங்கள் முகத்தில் ஆழமாக குத்தி துரத்திவிடுவார்கள்.  அடுத்த தொழிலை நோக்கி .. அல்லது ஏமாற்றப்படுவோம் எனத் தெரிந்தும் அடுத்த காட்டினை சுத்தமாக்கி விவாசாயக் காணியாக்க புறப்பட்டுவிடுவோம்'

இதுதான் செல்லையா எனும் வன்னிக்குப்போன மலையகத்தவரின் வாக்குமூலம். இத்தகைய காட்சிகளை 70 களின் பிற்கூறுகளிலும்  எண்பதுகளில் கிளிநொச்சியில் கல்வி கற்கும் காலத்திலும் நேரடியாக கண்ட அனுபவமும் எனக்கு இருக்கின்றது. 70 களின் இறுதியில் தாத்தாவையும் ஆச்சியையும் வட்டக்கச்சி குடிசையில் சந்தித்தபோது இருவரும் வட்டக்கச்சி அரசாங்க விவாசாய பண்ணையின் தொழிலாளர்கள். பின்னாளில் ஆச்சி 55 ம் கட்டை திராட்சைத் தோட்டம் ஒன்றில் பழத்தை பாதுகாக்க பறவைகளை  விரட்டும் வேலை செய்தார். 

 பெரிய அத்தை குடும்பத்தினர் 'பின்னபாருங்கோ' மாமா வீட்டில் பின்புறமாக அமைந்த காணித்துண்டில் ஒரு வீட்டில் வாழ்ந்தனர். அந்த மாமா ஒரு யாழ்ப்பாணத்தவர். அவருக்கு சொத்து குடும்பம் எல்லாமே குடாநாட்டில் இருந்தது.  மேலதிகமாக இருந்த வன்னி காணியைப் பராமரிக்கும் பொறுப்பு பெரிய அத்தை குடும்பத்தார்க்குரியது. அந்த காணியுரிமையாளர் பெயர் நினைவில்லை. ஆனால், நாங்கள் அவரை  'பின்னபாருங்கோ' என எங்களுக்குள் கிண்டல் செய்துகொள்வோம். காரணம், பேச்சின் இடையிடையே 'பின்னபாருங்கோ' என சொல்வது அவரது பாணி. அதனை கிண்டலாகப் பார்ப்பது எங்கள் பாணி. 91 ல் ஒருமுறை போயிருந்தபோது அத்தை வீட்டைத்தேடி அந்தக் காணிக்கு போனபோது அத்தைக்குடும்பம் அங்கே இருக்கவில்லை. மிளகாய் முற்றியிருக்கக்கூடும். 

ஆனால், 'பின்னபாருங்கோ' மாமா இருந்தார். நான் அப்போது வளர்ந்திருந்ததனாலும் 87ல் மலையகம் திரும்பி திரும்பவும் வன்னி சென்றிருந்த சமயம் என்பதனால் என்னை 'இன்னார்' என அத்தையைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன்.  'அப்படியா' என என்னைப்பார்த்து 'நீர் இப்போ என்ன செய்கிறீர்?' என்றார். நான் இப்போது ஓ.எல் எடுத்துவிட்டு வீட்டில இருக்கிறேன். ஏ.எல் படிப்பை இங்கை முரசுமோட்டை அல்லது கண்டாவளை பள்ளிக்கூடத்தில படிக்கிற யோசனையில்தான் வந்திருக்கிறேன்.... என்றவாறு 'நீர் இப்போது என்ன செய்கிறீர்' என அவரையும் கேட்டுவைத்தேன். அவரது முகம் மாறியது. என்னை ஏற இறங்க பார்த்தவர்.. 'பின்னபாருங்கோ' என பேச்சை நீட்டவில்லை. ஏதோ சொன்னவராக சைக்கிளை மிதித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். 

சின்னத்தை, பெரியப்பா குடுமபத்தினர் தாங்கள் முன்பு துப்பரவு செய்த காணிகளை தங்களது சொந்தக் காணிகள் போன்றே பராமரித்து வந்தனர். வீட்டு முற்றத்தில் நிற்கும் மாமரம் தரை தொட்ட காய்த்து தொங்கும். கிணற்றடியில் வாழை பழுத்த நிலையில் மரத்தில் தொங்கும். காலையில் சமைத்த பிட்டுக்கு இந்த மாம்பழமும், வாழைப்பழமும்தான் கலவை.    மீன்பிடிக்கு சென்று திரும்பவோர்  சைக்கிளில் மீன்களைத் தொங்கவிட்டுக்கொண்டு வருவார்கள். இரண்டு பெரிய மீன்களை தூக்கி அத்தை வீட்டு முற்றத்தில் போட்டுவிட்டு அங்கே குவிந்து கிடக்கும் தேங்காய்க் குவியலில் ஒரு சிலதை கைச்சிளில் எற்றிக்கொண்டு செல்வார். அதேபோல அந்தியானதும் 'கள்ளு' இறக்க வருபவர் அவர்பாட்டில் இறக்கும் வேலையை பார்த்துவிட்டு அப்படியே மாமாவுக்கு ஒரு குவளையில் கொஞ்சம் வைத்துவிட்டுப்போவார். அதனை புறம்பாக சைக்கிளில் கொண்டு வந்திருப்பார். இந்த பேரம்பேசுதல் இல்லா பண்டமாற்று பொருளாதாரத்தையும் சக சமூக உறவாடலையும் கூட வன்னியில் அப்போது அவதானிக்கலாம். அந்த சக சமூகம் யார் என்பதையும் புரிந்துகொள்ளல் வேண்டும்.  

காணிகளைக் கொண்டு விவாசாயம் செய்தவர்கள் கூட அடுத்தவர் காணிகளுக்கு கிணறு வெட்டுவது போன்ற தொழில்களுக்கு செல்வார்கள். அப்படியொரு முறை விசுவமடு, பிரமந்தலாறு கிராமத்தில் 'கிணறுவெட்டு' வேலைக்கு கூலியாளாக நானும் சென்றதுண்டு. அகலமும் ஆழமுமாக அமைந்த அந்த கிணறை வெட்டி மண் அள்ளி சுத்தமாக்குவது ஒரு பெருங்கலை. கிணற்றுக்கு இருபக்கமாகவும்  காய்ந்த மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தாங்கியின் குறுக்காக ஒரு மரம் போடப்பட்டு அதில் கப்பி மாட்டப்பட்டிருக்கும். கிணற்றுக்கு கீழே இறங்கியவர்கள்  மேலேயிருந்து கப்பியூடாக அனுப்பபப்படும் வாளியில் கிணற்றில் நிறைந்து கிடக்கும் மண்ணை அள்ளி போட்டு நிரப்புவார்கள். அதனை மேலே இழுக்க வாளி பொறுத்திய கயிறின் மேற்பாகம் மேலே தரையிலே ஒரு கம்புகொண்டு கட்டப்பட்டிருக்கும். கம்பின் நடுவில் கயிறு கட்டப்பட்டிருக்க இருவர் இரண்டு பக்கம் பிடித்து இழுத்துக்கொண்டு ஒரு திசை நோக்கி நடக்க வாளி மேலே வரும். கிணற்றடியில் நிற்பவர் அந்தவாளி மேலே தரைதொட்டதும் இழுத்து மண்ணை வெளியே வீசுவார். ஒரு நாற்பது அடிதூரம் நடந்தவர்கள் திரும்பவும் கிணற்றடியை வந்தடைய வேண்டும். இப்போது  வெற்று வாளி கிணற்றுக்குள் சென்றிருக்கும். இவ்வாறு  இறக்குவது சுலபமாக இருந்தாலும் மண்ணை மேலே கொண்டுவர இழுக்கும்போது இரண்டு மாடுகள் வண்டி இழுப்பது போன்ற பலத்தை கொடுத்தே இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும். கப்பி சுழலுவது வர்ப்பாக அமைந்தாலும் தண்ணீர் அள்ளும் வாளியில் மண்ணை இழுக்க வேண்டும்.  அதுவும் சேற்று மண்ணை இழுப்பது இலகுவானதல்ல. உச்சி வெயிலில் வியர்த்துகொண்ட வண்டி மாடாக இழுக்க வேண்டும். 

இப்படி ஒரு நாள் நாங்கள் இருவர் பின்வலமாக பிடியை பிடித்துக்கொண்டு முன்னேறி நடக்கையில் எனது இடதுபக்கம் வந்தவரின் பிடி தற்செயலாக விடுபட்டது. நாங்கள் பிடித்திருந்த பிடியில் ஒன்று விடுபட கம்பு ( ஒரு உlakkai மொத்தம் இருக்கும்) சுழன்று வந்து என் இடுப்பை பதம் பார்த்தது. அம்மா...  என அலறியபடி கதறித்துடித்தது இப்போதும் நினைவிருக்கிறது. இந்த கிணற்றுக்குள் இறங்குவதற்கும் வாளி தொங்கும் இடத்தில் மனிதர் தொங்கியே கீழ் இறங்குவார். நாங்கள் மண்ணை இழுக்கையில் கம்பின் கைபிடி விடுபட்டது போல மனிதர்கள் இறங்குகையில் அல்லது மேலே வருகையில் தரையில் இழுத்து  நடப்பவரின் பிடி விடுபட்டால் (மண்வாளி கிணற்றில் வீழ்வது ஒரு பக்கம் இருக்க)  மனிதர்கள் வீழ்ந்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள். விழும் மனிதர்களோ அல்லது மண்வாளியோ கீழே நிற்பவர் மீது விழுந்தால் அது எப்படியிருக்கும் என்பதையும் கற்பனை செய்துகொள்ளுங்கள். இவ்வாறு கிணற்றுக்குள் நானும் இறங்கியிருக்கிறேன். ஆனால், விழவில்லை. வேறு யாரும் இவ்வாறு விழாமல் இருந்திருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை. ஆனாலும், சின்ன அத்தையின் மகன் இத்தகைய கிணறு ஒன்றில் விழுந்து இறந்துபோனான் என்பதை மட்டும் நாங்கள் பின்னாளில் மலையகத்தில் இருந்தவாறு கேள்விபட்டோம். எப்படி என்று யாரும் அறியார்....

இப்படி பல தொழில்களை செய்த வன்னி வாழ் மலையக மக்கள் இன்றைய நிலவரம் என்ன? அவர்கள் வாழும் கிராமங்களின் பண்புகள் எவ்வாறு பூர்வீக வன்னி மக்களில் இருந்து வேறுபடுகின்றது. போன்ற விபரங்களை அடுத்துவரும் அத்தியாங்களில் பார்ப்போம். அப்படியென்றால் இந்தியா போன பெரியம்மா தாமதமாகத்தான் வருவார். அதுவரை தலைப்பை மீண்டும் வாசித்து காத்திருங்கள்... தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத் தேங்காய் எண்ணைக்கு.. 

(உருகும்)

நன்றி - சூரியகாந்தி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates