Headlines News :
முகப்பு » » கூட்டு ஒப்பந்தம் பற்றிய இ.தொ.கா. பிந்திய அக்கறையும் தோட்டத் தொழிலாளர்கள் நிலையும் - சுகுமாரன் விஜயகுமார்

கூட்டு ஒப்பந்தம் பற்றிய இ.தொ.கா. பிந்திய அக்கறையும் தோட்டத் தொழிலாளர்கள் நிலையும் - சுகுமாரன் விஜயகுமார்

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட பொருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்கள் 2013ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தினூடாக பெற்றுவந்த சம்பளத்தையும் குறைத்துள்ளது. இதனை தொழிலாளர்கள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களான இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு சம்மேளனம் என்பவற்றின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அத்துடன் அவற்றின் மீது அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந் நிலையிலேயே இ.தொ.கா. கூட்டு ஒப்பந்தம் நம்பிக்கை அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் கம்பனிகள் அந்த நம்பிக்கையை காப்பாற்ற தவறியுள்ளனர் என்றும், அதனால் தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மீளாய்வு சாத்தியமில்லையெனில் கம்பனிகளுக்கெதிராக வழக்கிடவுள்ளதாகவும் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து வெளிப்படுத்தியுள்ளது. 

இந்த ஊடக சந்திப்பில் இ.தொ.கா. தலைவர்களால் கூறப்பட்ட மேற்குறிப்பிட்ட கருத்துக்களுக்கு தமிழ் அச்சு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தன. இ.தொ.கா. இந்த காலங்கடந்த ஞானம் எதனால் ஏற்பட்டது என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும். 

2016ஆம் செய்யப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தில் உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு சேர்க்கப்பட்டமையின் விளைவாக தொழிலாளர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்ற 620 சம்பளத்தை விட குறைவாக சம்பளத்தை பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அடிப்படை சம்பளமாக உள்ள 500, வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவு 60 மற்றும் விலைக்கேற்ற பங்கு கொடுப்பனவு 30 உள்ளடங்களாக 590 சம்பளமே தற்போது தொழிலாளர்களினால் பெறக் கூடியதாக உள்ளது. 140 உற்பத்திக கொடுப்பனவு தொழிலாளர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. குறிப்பாக தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் இறப்பர் பால் வெட்டு தொழிலாளர்கள் இந்த கொடுப்பனவை இழந்துள்ளனர். 

ஒப்பந்தங்களில் வாசகங்களை உள்ளடக்கும் போது அதன் தார்ப்பரியங்களை ஆராயமலே இதொ.கா. உட்பட தொழிற்சங்கங்கள் செயற்பட்டுள்ளன என்பது அவர்கள் சொல்லும் விளக்கங்களில் இருந்து தெரிகிறது. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள வருகை ஊக்குவிப்பு தொடர்பான வாசகமானது பின்வருமாறு அமைந்துள்ளது. “A productivity incentive of Rs. 140/- per day shall be paid to a worker on the days norm/task has been achieved. Norms/Task shall be those currently in place. Any revision shall only be done in consultation and in agreement with the Union Action Committee at estate level based on past practices.” இந்த வாசகத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஏற்கனவே தோட்டங்களில் இருந்த வேலை அளவு பூர்த்தி செய்யப்படுமாயின் உற்பத்திக் கொடுப்பனவாக ரூபா 140 கிடைக்க வேண்டும். வேலை அளவில் மாற்றம் செய்யப்படுமாயின் தோட்ட மட்ட தொழிற்சங்க செயற்பாட்டுக் குழுவின் ஆலோசனையின் பேரில் செய்யப்பட வேண்டும். எனினும் நடைமுறையில் தோட்டங்களில் தொழிற்சங்க செயற்பாட்டுக் குழுக்கள் இயங்குவதில்லை. அவ்வாறு இயங்கினாலும் தோட்ட முகாமையாளர்கள் வேலை அளவை அதிரிக்கும் போது அவர்களின் அலோசனைகளை பெறுவதும் இல்லை. இந்த நடைமுறைப் பிரச்சினையை உணராமலேயே தொழிற்சங்கங்கள் கையொப்பமிட்டுள்ளமையை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே இதனை பயன்படுத்தி தோட்ட முகாமையாளர்கள் உற்பத்தி திறன் கொடுப்பனவுக்கான அதிகரித்த வேலை அளவு புதிய கூட்டு ஒப்பந்தத்தம் அமுலுக்கு வந்த பின்னர் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

140 கொடுப்பனவை ஏற்கனவே உள்ள வேலை அளவை விட மேலும் ஒரு வேலை அளவு எல்லை நிர்ணயிக்கப்பட்டு அது பூர்த்தி செய்யப்பட்டாலே அக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. எனவே நடைமுறையில் தொழிலாளர்கள் முன்னர் 620 சம்பளத்தை பெறுவதற்காக செய்த வேலை அளவு வேலை செய்யும் போது 590 மாத்திரம் சம்பளமாக பெற்று வருகின்றனர். 
எனவே, இதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும். தாம் தொழிற்சங்கம் நடத்தும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் கம்பனிகளின் நடத்தை பற்றிய அடிப்படை அறிவு இன்மையின் விளைவே இந்த பிரச்சினைக்கான காரணமாகும். 

இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் 'பிராந்திய கம்பனிகள் தொடர்ந்து தோட்டங்களை பராமரிப்பதற்கும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்' (The RPCs shall continue to maintain fields and keep them cleaned) என்ற வாசகமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாசகம் கம்பனிகள் தோட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதனை உறுதி செய்யுவதற்கான நடைமுறை சாத்தியமான ஏற்பாடல்ல. இந்த வாசகம் அமுலுக்கு வந்த பின்னர் தோட்டங்களை முறையாக பராமரிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என கூறமுடியாது. தோட்டங்கள் காடாக ஆக்கப்பட்டுள்ளனர் என தொழிலாளர்கள் தொடர்ந்து கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வாசகத்தை பிராந்திய கம்பனிகள் தோட்டங்களை பராமரிப்பதனையும் சுத்தமாக வைத்திருப்பதனை உறுதி செய்யும் வகையில் குறிப்பான ஏற்பாடுகளை கொண்டதாக அமைத்திருக்க முடியும். அதாவது ஒரு தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வேலை நாட்கள் தோட்டங்களை பராமரிப்பதற்காக ஒதுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருக்கலாம். அத்துடன் அதனை தொழிற்சங்கங்கள், தொழில் ஆணையாளர் அலுவலகம், பொருந்தோட்ட அமைச்சு என்பன கண்காணிக்கும் வகையிலான ஏற்பாடுகளையும் செய்திருக்கலாம். எனினும் அந்த வகையான நோக்கம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இல்லாமை என்பது கம்பனிகள் எழுதும் வாகங்களை ஏற்று தொழிற்சங்கங்கள் கையொப்பமிட்டு வருகின்றன என்ற பொது அபிப்பிராயத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. 
இதற்கு முன்னைய கூட்டு ஒப்பந்தங்களில் இடம்பெற்ற சம்பள அதிகரிப்பு போதாது என்ற போதும், ஒரு குறைந்த அளவு சம்பள அதிகரிப்பு இருந்தமையினால் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப் பின்னர் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கிடைத்த அந்த சம்பள உயர்வை எற்றுக் கொண்டு வேலை செய்து வந்திருந்தனர். எனினும் இம்முறை அவர்கள் ஏற்கனவே பெற்ற சம்பளம் குறைக்கப்பட்டுள்ளமையானால் அவர்களிடத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சங்கங்கள் மீதான வெறுப்பும் அதிருப்த்தியையும் வெளியிட்டு வருகின்றனர். இதனை அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்கள் செய்திகள் காணக்கூடியதாக உள்ளது. 
அதேநேரம் மக்கள் தொழிலாளர் சங்கம் மேன்முறையீட்டு நீதினமன்றத்தில் தாக்;கல் செய்துள்ள ரிட் மனுவும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு தலையிடியை கொடுத்துள்ளன. குறிப்பாக எந்த காரணங்களுக்காக 18 மாத நிலுவை சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்காமல் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம் என்பதை நீதி மன்றத்திற்கு சொல்ல வேண்டிய நிலை அவற்றுக் காணப்படுகின்றன. கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ரிட் மனு மீது எதிராளிகள் தமது நியாயங்களை எடுத்துக்கூறுவதற்கு 21ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தன. இதன் போது இ.தொ.கா. உட்பட அனைத்து தப்பினரும் பதிலளிக்க கால அவகாசம் கேட்டுக் கொண்டமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த பின்னணியிலேயே இ.தொ.கா. கடந்த 20ஆம் திகதி ஊடக சந்திப்பினை நடாத்தி கூட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, இ.தொ.கா. தற்போது அவர்களின் தொழிசங்கத்தின் மீது அவர்கள் அங்கத்தினர்கள் கொண்டுள்ள அதிருப்தியை தனிப்பதற்காகவும், அத்தோடு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் வழக்கு நடவடிக்கைக்கு மாற்றான தனது நடவடிக்கை என்ற வகையிலேயே கூட்டு ஒப்பந்த மீளாய்வு என்ற விடயத்தை முன்வைத்துள்ளனர். அத்தோடு, வரப்போவதாக சொல்லப்படும் உள்ளுராட்சி தேர்தலுக்கு மக்கள் முன் செல்ல வேண்டும் என்பதால் தான் விட்ட பிழைகளை திருத்த முயற்சிப்பதாக ஒரு தோற்றப்படாட்டையும் வெளிப்படுத்த முயற்சிப்பதாக இது உள்ளது. 

எது எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கமே அதனை மீளாய்வு செய்ய தயாராக நடவடிக்கை எடுக்க போவதாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். எனினும் இ.தொ.கா.வின் முன்னைய நடத்தைகள் தொழிலாளர்கள் அவர்களின் வாக்குறுதிகள் மீது அதிக நம்பிக்கையை கொள்வதற்கு ஏதுவானதாக இல்லை. எனவே, இ.தொ.காங்கிரசானது நாங்கள் நெருக்கடிகளை சமாளிக்காக கூட்டு ஒப்பந்தம் பற்றிய மீளாய்வு பற்றி பேசவில்லை, மாறாக உண்மையில் கூட்டு ஒப்பந்ததை மீளாய்வு செய்வதற்காகவே என்பதை அதன் நடவடிக்கைகள் ஊடாகவே வெளிப்படுத்த வேண்டும்.

05.03.2017 ஞாயிறு தினக்குரலில் வெளியான கட்டுரை
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates