Headlines News :
முகப்பு » , , , , , » மலையகத்தவர்களை சிங்களவர்களாக மாறக் கோரிய "நேரு – கொத்தலாவல" ஒப்பந்தம்? - என்.சரவணன்

மலையகத்தவர்களை சிங்களவர்களாக மாறக் கோரிய "நேரு – கொத்தலாவல" ஒப்பந்தம்? - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 7

மலையகத் தமிழர்களுக்கு எதிராக இரு நாடுகள் சேர்ந்து மேற்கொண்ட ஒப்பந்தங்களில் நேரு – கொத்தலாவல ஒப்பந்தத்தின் பாத்திரத்தையும் சற்று நோக்க வேண்டியிருக்கிறது. சிங்களத் தரப்பு தமிழர்களின் பிரதிநிதித்துவம் சிங்களவர்களின் பெரும்பான்மை பலத்தை பலவீனப்படுத்திவிடும் என்று அச்சமுற்றது. தமது ஏகபோக அரசியல் அதிகாரத்தை ஆட்டுவித்துவிடும் என்று பயந்தனர்.

திட்டமிட்ட குடியேற்றங்களுக்கூடாக செயற்கையாக வாக்காளர்களின் சமநிலையை மாற்றியமைத்ததோடு மட்டும் நிற்கவில்லை மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிப்பு, நாடுகடத்தல் சிவில் உரிமைகளை பலவீனப்படுத்தல் என தொடர்ந்தனர்.

மலையகத்தவர் மீது முதல் பாய்ச்சல்.
முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு பிரச்சினையும் தோன்றியது. ஏ.ஈ.குணசிங்க, அநகாரிக்க தர்மபால போன்றோர் இந்தியர்களின் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்கள். "இந்நிலை நீடித்தால் தேவைக்கு அதிகமான இந்தியர்கள் நாட்டில் காணப்படுவார்கள்" என்று டீ.எஸ்.சேனநாயக்க இலங்கை தேசிய காங்கிரசின் தலைமை உரையில் கூறினார்.

வேலையில்லாத் திண்டாட்டத்துக்குக் காரணம் இந்தியத் தொழிலாளர்களே என்று கருதிய சிங்களவர்கள் 1930 களில் இந்தியர்களில் குடிவரவைத் தடை செய்ய வேண்டும் என்கிற சுலோகத்தை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கினர்.

அது பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சிக்கு வித்திட்டு மேலும் பொருளாதார நிலைமையை மோசமாக்கிவிடும் என்று பிரதம செயலாளரும் அறிவித்தார். இந்த நிலைமையை ஆராய்வதற்காக நிமிக்கப்பட்ட ஜெக்சன் குழு தனது அறிக்கையில் இந்தியர்களின் வருகையால் இலங்கையர்களின் பொருளாதரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றது மட்டுமன்றி புதிய கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். 

அப்போது வியாபாரத்துறையில் பெருமளவு இந்தியர்கள் ஈடுபட்டிருந்தார்கள். இந்த தோட்டத்துறை சாராத இந்தியர்களின் மீதான வெறுப்புணர்ச்சி சாதாரண இந்திய வம்சாவளியினர் மீது திரும்பியது. 1930 களில் இந்தியர்கள் அதிகம் இருந்த துறைகளில் இலங்கையர்மயமாக்கும் வேலைகள் ஆரம்பித்தன.  இலங்கையர்கள் கிடைக்கும் பட்சத்தில் இலங்கையர் அல்லாதவர்கள் சேவையில் அமர்த்தப்படக் கூடாது என்று பிரதம செயலாளர் ஆணையிட்டார். அரசாங்க சேவையில் இந்தியத் தொழிலார்களின் தொகை வீழ்ச்சியுற்றது. 1939 இலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் பலர் இருந்த வேலையிலும் இருந்தும் நீக்கப்பட்டனர். இன்னும் வேறு பல திட்டங்களின் மூலம் மேலும் வீழ்ச்சியுற்றது. இந்த கட்டாய விலக்கல் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்தத் தான் நேரு இலங்கை வந்தார். பல அமைச்சர்களைச் சந்தித்து உரையாடினார். அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 

உலக தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிமுறைகளுக்கு முரணாக இனப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று சாடினார்.  

இந்திய வம்சாவளியினரின் தலைவர்களுக்கு நேருவின் இந்தத் தோல்வியால் துவண்டு போனார்கள். ஆனால் நேரு இதனை வேறு வழியில் ஆலோசனை வழங்கினார். நேருவின் வழிகாட்டலின் பேரில் கொழும்பு, டீ பொன்சேகா பிளேசில் ஜூலை 25 ஆம் திகதி இலங்கை-இந்திய காங்கிரஸ் உதயமானது. அப்போது சாத்திய ரீதியில் தொழிற்பட்ட பரத சேவா சங்கம், நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வெள்ளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம்போன்ற சங்கங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வந்தன.

இலங்கையர் அல்லாதவர்களுக்கு நிலங்கள் வாங்குவது 1935 இல் நில அபிவிருத்திச் சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது. இலங்கையர்களுக்கு முன்னுரிமை என்கிற நடைமுறை சகல அரச இயந்திரத்திலும் வியாபித்தது. இதன் காரணமாக பயிற்சியற்ற தொழிலாளர்களை குடியகல்வதை இந்தியாவும் தடை செய்யத் தொடங்கியது.

இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். இந்தியர்களின் உழைப்பு என்பது பிரித்தானிய ஏகாதிபத்திய நலன்களுக்குப் பயன்பட்டனவேயன்றி இந்நாட்டிற்கு அதிகம் பயன்படவில்லை என்கிற இலங்கை தரப்பு வாதமொன்றும் வலுத்தது.

“இந்தியத் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை பெரும் நோக்கத்துடனேயே இலங்கையில் பெருந்தோட்டங்களுக்குச் சென்றனர் என்று கூறப்படுவது வரலாற்றின் உண்மைகளுக்கு முற்றாகவே முரணானது என்று சுட்டிக்காட்டவில்லையாயின் நான் எனது கடமையிலிருந்து தவறியவனாவேன்”  என்று நேரு சேனநாயக்கவுக்கு எழுதினார்.

“உள்ளூர் மக்களுக்குரிய அத்தனை உரிமைகளும் அவர்களுக்கும் வழங்கப்படும் என்று” அவர்களுக்கு வழங்கப்பட்ட “தகவல் திரட்டில் அதற்கு முன்னர் இருந்தது. அது முற்றிலும் மீறப்பட்டது. எனவே இந்தியாவில் ப்.எஸ்.சர்மா இது குறித்த சட்டமொன்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போது "உள்ளூர் மக்களுக்கு உரிய அதே அந்தஸ்து இந்தியர்களுக்கு வழங்குவதாக சட்ட ரீதியில் உத்தரவாதம் வழங்காதவரை இனி குடியகல்வு பற்றிச் சிந்திப்பதற்கில்லை” என்றார்.

இந்தியாவுக்கு இலங்கையின் வாக்குறுதி
இந்த கொள்கையின் காரணமாக இலங்கை அரசாங்கம் இது குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள தூதுக்குழுவொன்றை அனுப்பியது. அவர்கள் முழுமையான சமத்துவத்துடன் நடத்தப்படுவார்கள் என்கிற உத்தரவாதம் இலங்கை தரப்பில் வழங்கப்பட்டது. அதன் பேரிலேயே மீண்டும் குடியகன்று செல்ல இந்தியா அனுமதித்தது.

1922 இல் குடியேற்ற நாட்டுச் செயலாளர் இந்திய அரசாங்க செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர்களுக்கு வாக்குரிமையும் உண்டென்றும், தேவைபட்டால் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகவும் ஆகும் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றார். ஆனால் 1930 களில் இதிய வம்சாவளியினரின் அரிசயல், குடியுரிமைகளைக் கட்டுப்படுத்தும் நடவைக்கைகளின் மூலம் முன்னைய வாக்குறுதிகள் அலட்சியம் செய்யப்பட்டன.

இங்கிலாந்து மேற்கொண்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் போதெல்லாம் இந்தியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லாத நிலையில் இவர்களின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு எனையோரிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. அப்போது அரை மில்லியனுக்கும் மேற்ப்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருந்த இவர்களுக்கு 1923 சீர்திருத்தத்தின் போது தான் இந்தியர் சமூகத்தின் பிரதிநிதிகளாக இருவர் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

1931 டொனமூர் திட்டத்துடன் இந்த நிலைமை மாறியது. அதுவரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சுதேச உறுப்பினர்களையும் கொண்டிருந்த சட்ட சட்டசபையில் சுதேசிகள் ஆட்சியதிகாரமற்று விளங்கியதால் இந்தியர்களுக்கு பிரதிநிதிதிதுவம் இல்லாத போதும் பாதிக்கப்படவில்லை. எப்போது சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு சுதேசிகள் போதியளவு பிரதிநிதித்துவம் பெறத் தொடங்கினார்களோ அப்போதிருந்து இந்திய வம்சாவளியினருக்கு அநியாயம் தொடங்கியது. டொனமூர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வாக்குரிமையின் விளைவாக இந்தியாவம்சவளியினரும் தேர்தலில் போட்டியிட்டு அப்போது நிரந்தரமாக வசித்து வந்த 7 லட்சம் இந்திய வம்சாவளியினர் தமக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுகொண்டது தான் புதிய சுதேசிய மேட்டுக்குடி அரசியல் குழாமினருக்கு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.

டொனமூர் திட்டம் பற்றிய சட்டசபை விவாதத்தில் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று சிங்களத் தலைவர்கள் பலர் கடுமையாக வாதிட்டனர். இறுதியில் இந்திய வம்சாவளியினர்  வாக்குரிமை பெறுவதற்கென்று சில மேலதிக தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டன. சட்டபூர்வமான நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ், எழுத்தறிவு, சொத்து, வருமானத் தகுதி என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதில். ஏறத்தாழ ஒரு லட்சம் இதியர்கள் மாத்திரமே வாக்குரிமைக்கு தகுதி பெற்றனர். இந்த சிங்களத் தலைவர்களுடன் சமரசம் செய்து தான் அந்த வாக்குரிமை கிடைத்தது.

1939 இல் ஏழு லட்சம் இந்தியர்களில் 225,000 பேர் வாக்குரிமைக்கு தகுதி பெற்றனர். இந்த வளர்ச்சியை கட்டுப்படுத்த சிங்களத் தலைவர்கள் முயன்றனர். 1940 களில் வாக்காளர்களாகப் பதிவுசெய்வதில் மேற்கொண்ட கடுமையான விதிமுறைகள் காரணமாக 1943 இல் வாக்காளர்கள் எண்ணிக்கை 168,000ஆகக் குறைந்தது. ஐம்பது உறுப்பினர்களில் மூவரே இந்திய பிரதிநிதிகளாக இருந்தனர். 1940 இல் டில்லியில் நடந்த இலங்கை – இந்திய உறவுகள் மாநாட்டின் போதும் “இந்தியவம்சாவளியினர் நிரந்தரக் குடிகள் இல்லையென்று இலங்கைத் தலைவர்கள் வாதிட்டனர். இரு தரப்பிலும் இந்த விடயத்தில் முரண்பட்டுக்கொண்டனர்.

1947 சோல்பரித் திட்டத்தின் மூலம் நிலைமை சற்று சீரானது என்றாலும் இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

இந்த பிரச்சினையில் நேரு முக்கிய பாத்திரமாற்றினார். 1947 இல் இலங்கை - இந்திய பிரதமர்களான டீ.எஸ்.சேனநாயக்காவும், நேருவும் டில்லியில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஆனாலும் இந்த ஒப்பந்தத்திற்கான வரைவிலக்கணத்தை இரு தலைவர்களும் முரணாகவே வெளியிட்டு வந்தார்கள்.

இலங்கைக்கு சுந்ததிரம் கிடைத்ததும் டீ.எஸ்.சேனநாயக்க முதலில் செய்த வேலை இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையை பறித்தது தான். 1952இலிருந்து 1977 வரை இந்தியர்கள் ஒருவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ய முடியவில்லை.

அடுத்த 6 ஆண்டுகளுக்குள் நாடு கடத்தும் “நேரு – கொத்தலாவல” ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து கொண்டது. அடுத்த பத்தே ஆண்டுகளுக்குள் அதனை நாடுகடத்தும் நடைமுறையை தீவிரப்படுத்தும் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தமும் 1964 அக்டோபர் 30 ஆம் திகதி கொண்டுவரப்பட்டது.

ஒப்பந்தம்
30.10.1953 அன்று இந்தியப் பிரதமர் நேருவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இந்திய-இலங்கைப் பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்கான அழைப்பு அது. அதன்படி 1954 ஜனவரி சந்திக்கலாம் என்று முடிவானது.

இது குறித்து கொத்தலாவல தனது சுயசரிதையில் (1956) இப்படி எழுதுகிறார்.
“துரதிர்டவசமாக அந்நிய முதலாளிகள் எங்கள் செலவிலேயே பெருமளவு எங்கள் நிலங்களைக் கொண்டு பொருளீட்டியுள்ளனர் . எங்கள் அனுமதியின்றி இந்திய தொழிலாளர்களை இறக்குமதி செய்திருக்கின்றனர்.
இலங்கையிலிருக்கும் 9 லட்சம் இந்திய பிரஜைகளை குறைக்காவிட்டால் எங்கள் மக்கள் பிச்சையெடுப்பதிலிருந்தும், இலங்கையர் என்கிற அடையாளத்தை இழப்பதிலிருந்தும் மீட்க முடியாத அபாயம் இருக்கிறது.
இந்தியத் தொழிலாளர்களை நாடு கடத்தவேண்டும் என்று அன்றைய அரசாங்க சபையின் தலைவர் சேர் பாரொன் ஜெயதிலக்கவுடன் உரையாடினேன். அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. பின்னர் திறைசேரிக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அதிகாரியான எச்.ஜே.ஹுக்ஸ்ஹம் (H. J.Huxham) என்னுடைய திட்டத்துக்கு ஆதரவளித்தார்.  14 வருடகாலமாக சாத்தியமாகாத எனது திட்டத்தை நான் பிரதமாரானதும் நேரு/கொத்தலாவல ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்.”

இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கான குழுவில் முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்காவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவும் இருந்தார்கள்.

நேரு - கொத்தலவாலா ஒப்பந்தத்தின்படி, மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது.

சிங்களவர்களாக மாற வேண்டும்?

நேரு-கொத்தலாவல ஒப்பந்தத்தின் பிரகாரம் மலையகத் தமிழர்கள் சிங்கள் கற்று சிங்களவர்களோடு ஒன்று கலந்திட வேண்டும் என்று ஒரு ஏற்பாடு இருந்ததாக இன்றும் பல சிங்கள தேசியவாதிகள் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.  இது பற்றி பலர் கட்டுரைகளையும், நூல்களையும் சிங்களத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஹரிச்சந்திர விஜேதுங்க முக்கியமானவர்.

அவர் எழுதிய நூல்களில் ஒன்று “நேரு - கொத்தலாவல ஒப்பந்தத்தை அமுல்செய்” නේරු-කොතලාවල ගිවිසුම ක්‍රියාත්මක කරමු (1993) என்கிற நூல். இந்த நூல் அடிப்படையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக எழுத்தப்பட்ட வன்மம் நிறைந்த நூல். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியர்களை விரட்டும் கருத்தை மீள அரசியல் தளத்தில் பேசுபோருளாக்கியவர்.

நூல்களை எழுதிய ஒருவர். “சிங்கலயே மகா சம்மத்த பூமி புத்திர பக்சய” (சிங்கள மண்ணின் மைந்தர் கட்சி) என்கிற கட்சியை 1994 இல்ஆரம்பித்து இன்று வரை அதன் தலைவராக இருந்து வருபவர். 1977 ஆம் ஆண்டு கலவரம் பற்றி ஆராய்ந்த சன்சோனி கொமிசன் முன்னாள் தமிழர்களுக்கு எதிரான சாட்சிகள் வழங்கியவர். அநகாரிக தர்மபாலவால் தொடக்கப்பட்ட “சிங்கள பௌத்தையா” பத்திரிகைக்கு 1980 களில் பிரதம ஆசிரியராக இருந்தவர். ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டவர்.

இதே கருத்தை மேலும் பலர் இன்னமும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் ஒப்பந்தத்தில் அப்படி ஒரு ஏற்பாடும் இல்லை என்பது தான் உண்மை.

நேருவும் இலங்கையும் (Nehru and Sri Lanka) என்று 2002 இல் வெளியான ஒரு நூலில் இலங்கையுடன் அவர் மேற்கொண்ட பெரும்பாலான ஆவணங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் நேரு-கொத்தலாவல ஒப்பந்தம் மட்டுமன்றி அதனோடு சம்பந்தப்பட்ட இன்னும் பல கடிதங்களும், இந்திய அரசாங்க அறிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன. அதில் எங்கும் இப்படி ஒரு ஏற்பாடு பற்றி குறிப்பிடப்படவில்லை.

மலையகத் தமிழர்கள் தமது நிலங்களையும், தொழில் வாய்ப்புகளையும் பரித்துக்கொண்டார்கள் என்கிற புனைவையும் ஐதீகத்தையும் தொடர்ச்சியாக பரப்பி வந்ததில் இன்று வரை அவர்களுக்கு எதிரான பாரபட்சமும் வெறுப்புணர்ச்சியும் பல்வேறு வடிவங்களில் நீடிக்கவே செய்கிறது.

துரோகங்கள் தொடரும்..,


நேரு-கொத்தலாவல ஒப்பந்தம் - 1954

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் புதுடில்லியில் வெளியிடப்பட்டது (பெப்ரவரி 3, 1954)
இந்தியர்களின் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சிலோனில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கான பிரஜாவுரிமை தொடர்பிலான சில முன்மொழிவுகள் ஆவணமாக்கப்பட்டு, புதுடில்லியில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு ஜனவரி பதினெட்டாம் நாள் இந்திய அரசாங்கம் மற்றும் சிலோன் அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மதிப்புக்குரிய இராஜதந்திரிகளால் புதுடில்லியில் கைச்சாத்திடப்பட்டு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக முறையாக அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆவணம் வார்த்தைக்கு வார்த்தை வருமாறு :-  
சிலோன் மற்றும் இந்திய பிரதம மந்திரிகள், அவர்களின் சகபாடிகள் சிலர் புதுடில்லி மாநாட்டி ஜனவரி 16, 17 மற்றும் 18 1954ல் சந்தித்து, சிலோனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களின் முழுமையான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தினர். இச்சந்திப்பின் பிரதிபலனாக குறிப்பிட்ட சில முன்மொழிவுகள் அவர்களால் கட்டமைக்கப்பட்டன, அவை தற்பொழுது அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ளன. 
இந்த முன்மொழிவுகள் ஆவன :
சட்டவிரோத குடியேற்றம் 1. இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் சட்டவிரோத குடியேற்ற வியாபாரத்தை ஒடுக்கவேண்டும் என்பதில் இரு அரசாங்கங்களும் உறுதியாக காணப்பட்டதுடன், இது முடிவுக்கு வரும்வரை ஒருவருக்கு ஒருவர் நெருக்கமான ஒத்துழைப்புடன், இதற்காக சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கும். பாக்கு நீரிணையின் எதாவதுதொரு பக்கத்தில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் குறித்தகால இடைவெளியில் சந்திப்பொன்றை நடத்தி, சட்டவிரோத நடமாட்டங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளல். 
2 தேர்தல் இடாப்பில் ஏற்கனவே பதிவுசெய்யப்படாத வயதுவந்த குடியிருப்பவர்களைப் பதிவுசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக சிலோன் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதுடன், அந்தப் பதிவுகள் இன்றுவரை பேணப்படும். பதிவுகள் பூரத்திசெய்யப்படும்போது யாராவது ஒரு நபர் அதில் பதிவுசெய்யப்படவில்லையாயின், அவருடைய தாய்மொழி இந்திய மொழியாக இருக்கும்பட்சத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் எனக் கருதப்பட்டு, நாடு கடத்தலுக்கு உட்படுத்தப்படுவார். அவ்வாறான நாடுகடத்தலை நடைமுறைப்படுத்தவதற்கான சகல வசதிகளையும் இந்திய உயர்ஸ்தானிகர் ஏற்படுத்திக்கொடுப்பார். 
3. சிலோன் அரசாங்கம் குடிவரவு குடியகல்வுத் திருத்தச்சட்டதை தொடர்ந்து ஒருவர் மீது குற்றச்சாட்டை சுமத்தும்போது, அவர் ஒரு சட்டவிரோத குடியேற்றவாசி இல்லையென ஆதாரச்சுமை இருந்தால், அத்தகைய வழக்கு விசாரணையின் முதல் தோற்றத்திலேயே இந்திய உயர்ஸ்தானிகர் தன்னை திருப்திப்படுத்திக் கொள்வதற்கு சிலோன் அரசாங்கமானது சந்தர்ப்பமொன்றை வழங்கவேண்டும், இறுதி முடிவானது இலங்கை அரசாங்கத்திலேயே தங்கியிருக்கும்.  
பிரஜாவுரிமை 4. இந்திய பாகிஸ்தான் (பிரஜாவுரிமை) சட்டத்தின் கீழ் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்வது துரிதப்படுத்தப்படும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை இரண்டு வருடங்களுக்குள் முடிப்பதற்கு சகல முயற்சிகளும் எடுக்கப்படும்.  
5. குறிப்பாக பெரும்பாலான பிரஜைகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குரிய மொழியை பேசமுடியாதவர்கள் என்ற பார்வையில், இந்த சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைவரும் சிலோன் அரசாங்கத்தினால் தனியான வாக்காளர் இடாப்பில் பதியப்படலாம்.  இந்த ஏற்பாடு 10 வருடங்களுக்கு மாத்திரமே நீடிக்கும். சில தொகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட பிரஜாவுரிமையடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 250ற்கு மேற்படாது காணப்பட்டால் அவர்களை தேசிய பதிவில் சேர்க்க முடியும் என சிலோன் அரசாங்கம் இணங்கியது.  
6 தனியான வாக்காளர் இடாப்பில் பெயர்களைக் கொண்டுள்ள பிரஜைகள், பிரதிநிதிகள் சபைக்கு குறிப்பிட்ட உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கு உரித்துடயைவர்கள், இந்திய பிரதம மந்திரியுடன் கலந்துரையாடிய பின்னர் அந்த எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். சிலோன் அரசாங்கம் இந்த அம்சம் தொடர்பான நடவடிக்கைகளை தற்போதைய பாராளுமன்றம் 1957ல் கலைக்கப்படுவதற்கு முன்னர் பூர்த்திசெய்ய எதிர்பார்த்துள்ளது.  
7. பதிவுசெய்யப்படாத நபர்கள் சம்பந்தமாக, அவர்கள் தம்மை இந்தியப் பிரஜைகளாக பதிவுசெய்வதற்கு முடியும், அவர்கள் அதனை தெரிவுசெய்யும் பட்சத்தில், இந்திய அரசியலமைப்பின் 8வது பிரிவிலுள்ள ஏற்பாட்டின் கீழ் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவகத்தில் மேற்கொள்ளலாம். அவ்வாறான பதிவுகளை ஊக்குவிக்க விசேட ஊக்குவிப்புக்களை முன்மொழிவதாக சிலோன் குறிப்பிட்டதுடன், இந்த ஊக்குவிப்புக்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும், இந்திய அரசியலமைப்பின் கீழ் தம்மை இந்திய பிரஜையாக பதிவுசெய்த சகல இந்திய வம்சாவளியினருக்கும் இந்திய அரசாங்கம் நிர்வாக மற்றும் அதற்கு ஒத்த வசதிகளை வழங்கும். அவர்கள் தெரிவுசெய்தால், அவ்வாறு கிடைக்கக்கூடிய வசதிகள் பற்றிய பிரசாரம் வழங்கப்படும்.
8. தமது பரஸ்பர நன்மைகளை பாதிக்கும் விடயங்களில் இரு நாட்டு அரசாங்கங்களும் தற்போதைய நெருக்கமான கலந்துரையாடல் நடைமுறையை தொடர்வதற்கு இருநாட்டு பிரதம மந்திரிகளும் ஆவலாய் இருக்கின்றனர்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates