தோட்டத்தொழிலாளரின் சம்பளத்தை உடனடியாக உயர்த்திக்கொடுங்கள் இல்லையென்றால் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளியுங்கள் என்று பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களைக் கேட்டிருக்கிறார் உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல.
இது கம்பனி உரிமையாளர்கள் மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்த்திராத ஒரு அதிரடி எச்சரிக்கையாகும். கண்டி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றபோது அங்கு தோட்டத்தொழிலாளரின் சம்பளப்பிரச்சினை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய அரசின் வேலைத்திட்டங்களுக்கமைய அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே தனது நிலைப்பாடு எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தையும் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார். அவ்வாறு அதிகரிக்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசிடம் கையளியுங்கள் என்றும் கம்பனிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் பொய் கூறுகின்றன. தோட்டங்கள் இலாபத்திலேயே இயங்குகின்றன. தோட்டங்களை எடுத்து நடத்துவதற்கு பல உள்நாட்டு, வெளிநாட்டு கம்பனிகள் தயாராக இருக்கின்றனதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அமைதியான முறையில் பங்களிப்புச் செய்து வரும் தொழிலாளர்களுக்கு தோட்டங்களை கையேற்றபோது வழங்கிய உறுதி மொழிகளை கம்பனிகள் நிறைவேற்றியதில்லை எனவும் அடிப்படை வசதிகள், வீடு, சுகாதாரம் போன்ற எதுவும் செய்யப்படவில்லையெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் உண்மையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை இன்று தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஒரு குறித்த சமூகத்தைச் மட்டும் சார்ந்ததல்ல. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் நடைபெற்ற பல பேச்சுவார்த்தைகள் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி 20132015 காலப்பகுதிக்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியானது. எனவே, புதிய கூட்டு ஒப்பந்தம் ஏப்ரல் முதலாம் திகதி நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 9 மாதங்களாகியும் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை.
இதனால் தோட்டத்தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியும் அவர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கு தோட்டக்கம்பனிகள் முன்வரவில்லை. பிரதமர் தொழிலமைச்சர்கள் உள்ளிட்ட பல அரச தலைவர்கள் தலையீடு செய்தும் கூட சம்பள உயர்வுக்கான தீர்வு காண முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஒரு காலமும் இல்லாமல் இம்முறை பாராளுமன்றத்திலும் தோட்டத்தொழிலாளரின் சம்பளப்பிரச்சினை எதிரொலித்தது. மலையகப் பிரதிநிதிகளின் குரல்கள் பலமாக எதிரொலித்தன.
பதுளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஒரு படி மேலே போய் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்காக தீக்குளிக்கவும் முற்பட்டார். 'தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தீக்குளித்து தற்கொலை' என்ற அவரது அணுகு முறை தவறானதாக இருந்தாலும் அவரது நடவடிக்கை மறுபுறத்தில் ஒரு சாதகத்தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளரின் சம்பளத்தை முன்னர் சம்பளச்சபையே தீர்மானித்தது. கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதனூடாகவே தீர்மானிக்கப்படுகிறது.
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கமே தீர்மானிக்கின்றது.
அவ்வாறான நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கும் தனியார் துறையினருக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று கூறப்பட்டிருப்பதே அந்த சாதகத்தன்மையாகும்.
மலையக வரலாற்றில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், அப்துல் அஸீஸ் போன்றவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் முக்கியமானவை. வேலை நிறுத்தங்கள் பேரணிகள் உண்ணாவிரதம் போன்ற முறைகளில் அப்போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சில வருடங்களுக்கு முன்னர் சம்பள உயர்வு கோரி ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் நடத்தப்பட்ட நீண்ட சத்தியாக்கிரகப்போராட்டம் இன்றும் ஞாபகப்படுத்தப்படுகிறது.
அண்மையில் நள்ளிரவு வேளையில் அதே ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் சிலர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில மணி நேரங்களில் அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதேபோன்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் சில கட்சித்தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறான போராட்டங்கள் சத்தியாக்கிரகங்கள் எல்லாம் எதற்காக நடத்தப்பட்டன? மக்களுக்காகவா? அல்லது தலைவர்களின் சுயநலன்களுக்காகவா? அல்லது நாடகமா? அவரவர் செய்யும் போராட்டங்கள் அவரவர் பார்வையில் சரியானவையே!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பிரச்சினைகளின் தீர்வுக்காக முன்னெடுக்கப்படும் இவ்வாறான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது சரிதானா என்பதை சிந்திக்க வேண்டும்.
''தான் நடத்தினால் போராட்டம் மற்றவர்கள் நடத்தினால் அது நாடகம்'' என்று விமர்சிப்பது ஒரு தலைப்பட்சமான நிலைப்பாடாகும்.
யார் போராட்டம் நடத்தினாலும் அதன் மூலம் மக்கள் நன்மையடைவார்களெனில் அதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
தற்போது தள்ளிப்போய்க்கொண்டிருக் கும் கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக செய்து கொள்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டியதே அரசியல்வாதிகள் தொழிற்சங்கவாதிகளின் முன்னுள்ள பிரதான கடமையாகும். எனவே அதற்கான செயற்பாடுகளை ஒற்றுமையாக ஓரணியில் நின்று முன்னெடுக்க வேண்டும். தோட்டத்தொழிலாளர்களின் மீது உண்மையான பற்று இருந்தால் அதனை உடன் செய்யுங்கள்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...