Headlines News :
முகப்பு » » வீதி அபிவிருத்தி கைவிடப்படல் : பஸ் கட்டணமும் இரு மடங்காக உயர்வு - பா.திருஞானம்

வீதி அபிவிருத்தி கைவிடப்படல் : பஸ் கட்டணமும் இரு மடங்காக உயர்வு - பா.திருஞானம்


புசல்லாவை நகரிலிருந்து பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் 26 கிலோமீற்றர் பிரதான வீதி சுமார் 15 வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியை பயன்படுத்தும் பதினைந்து தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்களும், இப்பகுதியிலுள்ள ஒன்பது பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களும் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன், இங்குள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை தம்புள்ள, கொழும்பு போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வோரும், தேயிலை உற்பத்திகளை கொழும்பு போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லும் தோட்ட நிர்வாகத்தினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வீதி திருத்தப்படாமையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 05 வருட காலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. பருவகால சீட்டைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் கூட குறிப்பிட்ட தூரம் நடந்து சென்று தனியார் வாகனங்களிலேயே புசல்லாவையில் உள்ள பாடசாலைக்கு செல்கின்றனர்.
இப் பிரதேசத்திலுள்ள 09 பாடசாலைகளின் ஆசிரியர்கள் போக்குவரத்து வசதியின்மையால் பாடசாலைகளுக்கு காலை 09, 10 மணியளவிலேயே செல்கின்றனர். காலை புசல்லாவை நகரத்திலிருந்து பெரட்டாசி பிரதேசத்திற்கு 08.15 மணியளவிலேயே தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கின்றது. அதே வேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 05 வருட காலமாக சேவையில்லை.

இதனால் இப்பிரதேசத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுடைய கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதுடன் ஆசிரியர்கள், அதிபர்கள் என அனைவரும் பல இன்னல்களை எதிர்நோக்கியும் வருகின்றனர். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் எவரும் இவ் விடயத்தைக் கண்டு கொள்வதில்லை.

வீதியின் இந்நிலை காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் அடிக்கடி பழுதடைகின்றன. சில நாட்களில் குறித்த நேரத்திற்கு பஸ் சேவையில் ஈடுபடுவதில்லை. பஸ் கட்டணங்களை பொறுத்தவரையில் இரு மடங்கான கட்டணம் அறவிடப்படுகின்றது.

அதாவது குறித்த தூரத்திற்கு செலுத்த வேண்டிய பஸ் கட்டணத்தில் இன்னு மொரு பங்கு சேர்த்தே அறவிடப்படுகின்றது. இதற்கும் வீதியின் மோசமான நிலையே காரணமாக இருக்கின்றது. இதனால் போக்குவரத்தை மேற்கொள்வதில் பெரும்பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாடசாலை மாணவர்களுக்கும் இந்நநிலையே காணப்படுகின்றது. சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூலமாக கல்வியை தொடரும் மாணவர்கள் இப்பிரதேசத்திலிருந்து நகர பாடசாலைகளுக்கும் வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்குள்ளாகின்றது. இதற்கு முன்னர் இரண்டு அரச இ.போ.ச வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அவை தற்போது சேவையிலில்லை. வீதியின் மோசமான நிலைமையே இப் பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டமைக்கும் பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்நிலைமை குறித்து கம்பளை பஸ் டிப்போ முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு பஸ் வண்டிகளும் பழுதடைந்து விட்டன. புதிய பஸ் வண்டிகளை பெற்றுக் கொள்ளும் வரை காத்திருக்கின்றோம். அத்துடன், வீதி பழுதடைந்ததால் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாமல் உள்ளதது என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இப்பகுதியிலுள்ள வீதிகளில் நான்கு முறை பஸ் விபத்துக்கள் இடம்பெற்றன. இவ் விபத்துக்களில் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அக்காலப் பகுதியிலும் இவ் வீதியை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் முறையாக அவை முன்னெடுக்கப்பட வில்லை. இதனால் இங்குள்ள மக்கள் சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து புசல்லாவை பிரதேசத்திற்கு வந்து நுவரெலிய பிரதான வீதியில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தினால் வீதி அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் மூலம் இந்த வீதி ஒரு காபட் பாதையாக மாற்றப்படும் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்தனர். ஆனால், தேர்தலுக்கு முன்னரே 03 கிலோ மீற்றர் மாத்திரம் இவ் வீதிக்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. வீதி திருத்தத்திற்கான கற்கள் கொண்டுவரப்பட்டு அவையும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இந் நிலையில் இந்த வீதியின் மிகுதியான தூரத்தை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக திருத்தி தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இங்கு வாழும் மக்களின் பிரதான பிரச்சினைகளில் வைத்திய சேவையும் ஒன்றாகும். அவசர சேவையின் போது 20 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் உள்ள புசல்லாவை மாவட்ட வைத்தியசாலையை நாட வேண்டியுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் முன்னர் முச்சக்கர வண்டி, தோட்ட லொறி போன்றவற்றில் இடையிலேயே குழந்தைகளை பிரசவிக்கின்றனர்.

சிலர் இறந்தும் உள்ளனர். விபத்துக்களுக்குள்ளானோரை நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமையினால் சிலர் இறந்தும் உள்ளனர். இம் மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட பல இலட்சம் பெறுமதியான வைத்தியசாலையில் முறையான வைத்தியர்கள் இல்லை. வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்குவதற்கு கட்டில் கூட இல்லை. வைத்தியர் தங்குவதற்கு விடுதி கட்டப்பட்ட போதும் அவை இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது. இதற்கும் வீதியின் மோசமான நிலையே காரணமாக இருக்கின்றது.

மேற்படி வீதி உடைந்துள்ளமையால் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி, வைத்தியசேவை மற்றும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவ்வாறான நிலையில் இவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates