Headlines News :
முகப்பு » » உள்ளூராட்சி மன்ற சட்ட ரீதியான தடை நீக்கப்பட்டமை தோட்டங்கள் கிராமமாவதன் முதற்படியாகும் - துரைசாமி நடராஜா

உள்ளூராட்சி மன்ற சட்ட ரீதியான தடை நீக்கப்பட்டமை தோட்டங்கள் கிராமமாவதன் முதற்படியாகும் - துரைசாமி நடராஜா


உள்ளூராட்சி முறைமையை கீழ் மட்டக் குடியரசு என்று கூறுகிறார்கள். இந்த வகையில் உள்ளூராட்சி முறைமை முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக பெருந்தோட்ட மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதில் இது வரை காலம் கதவடைப்பு நிலையே இருந்து வந்துள்ளது. இந்தக் கதவடைப்பு நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களின் ஊடான சேவையை பெருந்தோட்ட மக்களும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கிக் கொடுத்துள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:  உள்ளூராட்சி நிறுவனத்துக்கு நீண்ட வரலாறு காணப்படுகின்றது. நாட்டின் நிர்வாக முறைக்கு வலுச்சேர்த்து அபிவிருத்திக்கு இந்நிறுவனங்கள் வித்திடுகின்றன. இந்நிலையில் 1937 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி திருத்தச்சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் ஊடாக தோட்டத்தில் இருக்கின்ற மக்களுக்கு வாக்குரிமை இல்லாது ஒழிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதே முதல் சந்தர்ப்பம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனினும் இது உண்மையல்ல. உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் எம்மவர்கள் ஏற்கனவே வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டதே முதலாவது சந்தர்ப்பமாகும்.

இந்நிலைமை பிற்காலத்தில் மாற்றம் பெற்ற போதிலும் கூட இது காலவரை எமது மக்கள் உள்ளூராட்சி நிறுவனங்களின் பயன்களையும் சேவைகளையும் மு.ைறமையாகப் பெற்றுக்கொண்டு முன்னேறுகின்ற ஒரு நிலை ஏற்படவில்லை. 1987 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்ற திருத்தச்சட்டமானது பெருந்தோட்ட மக்கள் இந்நிறுவனங்கள் ஊடான சேவையினை பெற்றுக்கொள்வதற்கு முட்டுக்கட்டையாக விளங்கியது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். தோட்டங்கள் தனியார் துறையினரை சார்ந்த ஒரு விடயமாக கணக்கிலெடுக்கப்பட்டது.

எனவே, அரசாங்க நிதியை பயன்படுத்தி தோட்டங்களில் அபிவிருத்தி சேவைகளை செய்யக்கூடாது என்றும் கருதப்பட்டு வந்தது. 1987 ம் ஆண்டின் 15ம் இலக்க திருத்தச்சட்டம் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்த வரையில் ஓர் இருண்ட சட்டமாகவே கருதப்படுகின்றது.

ஏனைய பகுதிகளுக்கு எவ்விதமான தடைகளும் இல்லாத நிலையில் தோட்டப்பகுதிகளுக்கு மாத்திரம் உள்ளூராட்சி நிதிகளை பெற்றுக்கொள்வதில் தடை இருந்தமை பிழையான ஒரு செயலேயாகும்.

உடபளாத்த பிரதேச சபையானது கலைக்கப்பட்ட சம்பவம் உங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கக்கூடும். இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும்.

மலையகத்தைச்சேர்ந்த ஒருவர் உடபளாத்த பிரதேச சபை தலைவராக அப்போது இருந்தார். அந்தப் பிரதேச சபையின் தலைவர் பிரதேச சபையின் நிதியினை பயன்படுத்தி தோட்டப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனை அடிப்படையாக வைத்து உடபளாத்த பிரதேச சபையினை கலைக்கும் நடவடிக்கைகளும் அப்போது மேற்கொள்ளப்பட்டமையும் தெரிந்த விடயமாகும்.

எனினும், நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இம்மாவட்டத்தில் எம்மவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்து வருகின்றார்கள். இவர்களின் மூலமான நிதிகள் தோட்ட அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் இது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

உள்ளூராட்சி மன்றங்கள் இம்மாவட்டத்தில் சில சந்தர்ப்பங்களில் தோட்டப்புறங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த போதும் அது பூதாகரம் எடுக்கவில்லை.

ஆனால், நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே பதுளை, கண்டி, மாத்தளை என்று எம்மவர்கள் செறிந்து வாழும் எந்த ஒரு மாவட்டமாக இருந்தாலும் பெருந்தோட்டப்பகுதிகள் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக உரியவாறு நிதியினை பெற்றுக்கொள்வதில் முற்றிலும் தடையான ஒரு நிலையே காணப்பட்டமை யாவரும் அறிந்த குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இதனை யாரும் மறுப்பதற்கில்லை.

உள்ளூராட்சித் தேர்தல்களில் எமது மக்கள் வாக்களிக்கின்றார்கள். எமது பிரதிநிதிகளையும் வெற்றிபெறச் செய்கின்றார்கள். ஆனால் இதனால் பூரணமான பலன் எதுவும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. வெறுமனே வாக்களித்து பிரதிநிதிகளை தெரிவு செய்வது மட்டும்தான் மிச்சம்.

இவர்களால் தோட்டப்புறங்கள் எழுச்சி பெறுவதற்கு தடைக்கற்கள் இருந்தன. இந்நிலையில் இதனை மாற்றியமைத்து உள்ளூராட்சி நிதியினை எமது தோட்டப்புற சகோதரர்களும் பெற்றுக்கொள்ள மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒருமித்து குரல் கொடுத்தனர். இது பாராட்டத்தக்க காலத்திற்குத் தேவையான ஒரு விடயமாக அமைந்தது.

இத்தோடு நகல் யாப்பு ஒன்றையும் இது தொடர்பில் எம்மவர்களே தயாரித்து அழுத்தம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் அடிப்படையில்தான் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளூராட்சி நிதியினை தோட்டங்கள் பெற்றுக்கொள்வதை சட்டமாக்குவதற்கான ஒரு அனுமதியும் கிடைத்திருக்கின்றது.

விரைவில் பாராளுமன்றத்தில் இது சட்டமாக கொண்டு வரப்படுவதோடு 1987 உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தில் இருந்து அந்த தடை நீக்கப்படும் வாய்ப்பு கிட்டியுள்ளது.


இது மிகப்பெரிய ஒரு வெற்றி என்றே கூறுதல் வேண்டும்.

இதன் மூலமாக தோட்டங்கள் பல வழிகளிலும் மறுமலர்ச்சி பெறும் நிலைமை ஏற்படும். உள்ளூராட்சி மன்றங்களின் சேவை தோட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படுவது ஒரு வரலாற்று நிகழ்வாகும். கிராமங்களை போன்று சேவைகளை எமது பெருந்தோட்ட மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உரித்து நிலையும் ஏற்படும். இதனால் தோட்டங்கள் ஒரு தனியார் துறையைச் சார்ந்த விடயமாக கணிக்கப்படாமல் தோட்டங்கள் கிராமங்களைப் போன்று புது வடிவம் பெறும். பெருந்தோட்டக் கைத்தொழிலும் தோட்டமும் இப்போது உள்ள நிலையில் ஒன்றாக இருக்கின்றது. எனினும் இனிமேல் தோட்டக்கைத்தொழில் என்பது தனியாகவும் தோட்ட மக்கள் அரசாங்கத்தின் ஊடான சேவைகளை பெற்றுக்கொள்வது என்பது பிறிதொன்றாகும். இனிமேல் நிலைமைகள் மாறுபடும்.

தோட்டங்களை கிராமங்களாக மாற்றியமைக்கும் நிலைமை தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. தோட்டங்களை கிரமமாக மாற்றியமைக்கப்படும் பட்சத்தில் இம் மக்கள் பல்வேறு நன்மைகளையும் பெற்றுக்கொள்வர் என்பது உண்மையே. இதன் முதற்கட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் நிதி தோட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படுவதனை எம்மால் அடையாளப்படுத்தப்பட முடியும். தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களின் தேவையறிந்து காத்திரமான காய்நகர்தல்களை மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். உள்ளூராட்சி மன்றம் குறித்த தடைகள் நீக்கப்பட்ட போதும் கூட உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை எமக்கு போதாதுள்ளது. சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவழி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் நுவரெலியா, அம்பகமுவ, தலவாக்கலை, ஹட்டன் என்ற ரீதியில் இரண்டு பிரதேச சபைகளும் இரண்டு நகர சபைகளும் மட்டுமே எமக்குள்ளன. சனத்தொகைக்கேற்ப சுமார் முப்பது உள்ளூராட்சி நிறுவனங்களாவது இருக்க வேண்டும் என்பதே உண்மை நிலையாகும். எனவே உள்ளூராட்சி மன்ற சேவையினை பெருந்தோட்டங்கள் பெற்றுக் கொள்வதில் இருந்த தடையினை நீக்குவதற்கு மலையக கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து குரல் எழுப்பி அதே போன்று உள்ளூராட்சி நிறுவனங்களின் தொகையினை அதிகரிப்பதற்கும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதிய எல்லை மீள் நிர்ணயத்தின் ஊடாக வட்டாரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதே தவிர உரியவாறு உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்படாமை பெரும் குறையாகும். கம்பகமுஸவினை மூன்று பிரதேச சபைகளாக பிரிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. நுவரெலியாவையும் மூன்றாக பிரிக்கலாம். வலப்பனை கொத்மலை என்பவற்றை தலா இரண்டு பிரதேச சபைகளாக பிரிக்க முடியும். திருகோணமலை மாவட்டத்தில் பத்தாயிரம் வாக்காளர்களுகக்கு ஒரு பிரதேச சபை உள்ளது. ஆனால் நுவரெலியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளருக்கே ஒரு பிரதேச சபை உள்ளது. இந்நிலை கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளூராட்சி நிறுவனங்களின் தொகை மலையகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசாங்க நிதியினை அதிகமாகப் பெற்று பெருந்தோட்டங்களின் அபிவிருத்திக்கு வித்திட முடியும். எனவே உள்ளூராட்சி நிறுவன அதிகரிப்புக்கு சகலரும் குரல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.




Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates